- June 18, 2023
கவிழ்ந்த அகதிப் படகும், காரணங்கள் சிலவும் .
“அகதிய நாமத்துடன் அன்று , நாமும் இடம் பெயர்ந்தோம் . இன்று, கடலினுள் மூழ்கின்றனர் பெருந்தொகை அகதிகள் ; வெறும் , இரங்கற் செய்தியை மட்டும் போப் ஆண்டவர் கூறி அமர்கிறார் , வற்றிக்கானில் !”
இந்த உலகின் “அழகிய” நகரங்களுக்கு ஒதுக்குப் புறமாக , ஆயிரக்கணக்கான குழந்தைகளும் ; வயதான மனிதர்களுமாக வீதிகளின் ஓரத்தில் மானுடர்கள் குப்பை கூழங்களாகக் கொட்டப்பட்டுக் கிடக்கிறார்கள் . வேலையின்மை , வறுமை-பசி , பட்டுணி ; நோய் , நொடி என்று , கசங்கிய உடல்களுடன் மானுடம் உயிர்கொண்டலைகிறது . இந்த அழகிய ஐரோப்பியத் தேசங்களது உற்பத்திப் பசிக்கு கச்சாப் பொருளாக மேற்சொன்ன மானுடரின் வாழும் வலையங்கள் பலியாகின .
அவர்களது மண்ணுள் புதைந்து கிடந்த மூலவளங்கள் திருடப்பட்டு , ஐரோப்பிய ஜந்திரங்களில் ஏற்றப்பட்டுக் கைத் தொலைபேசியாக , கனரக யந்திரங்காளாக , தொலைக்காட்சிப் பெட்டிகளாக , கணனிகளாக , போர்த் தளபாடாக நமக்குக் கிடைப்பதற்காக அவர்களை , அவர்தம் வாழும் வலயத்திலிருந்து துரத்தியடித்து வரும் இந்தப் பகாசூரக் கம்பனிகள் – தேசங்கள் இன்று , அகதியப் பெருகத்துக்கான மூலக் காரணியாகும் .
உலகமெங்கும் மக்கள் இங்ஙனம் நாளும் , பொழுதும் அகதியாகி , நாடோடிகளாய் அலைத்து , கடலிலும் , குளத்திலும் மாண்டுபோக , ஈழத்து அகதிகளோ ஐரோப்பாவிலிருந்து பணம் இலங்கைக்கு அனுப்பிவைத்துக் கோவில்கள் கட்டுகிறார்கள் . ஈழமெங்கும் தினவெடுத்து மக்களைக் கூறுபோடும் மதாலயங்கள் , பல பில்லியன் இரூபாய் பெறுமதிமிக்க கட்டடங்களாக எழுகின்றன . அவை , மனிதர்கள் வாழாத வலயங்களிற்கூடப் பாரிய பளிங்கு மண்டபங்களாகத் கோபுரத்தோடு எழுப்பப்படுகின்றன .
யாழ்ப்பாணத்துத் தீவுக்கூட்டங்களுள் ஒன்றான புங்குடுதீவு எனும் தீவின் 10’ஆம் வட்டாரக் கண்ணகி அம்மன் கோபுரத்தை அன்று ,இரத்கம ஸ்டோர் முதலாளி கட்டினான் . அதை மேம்படுத்தினான் என்.கே. மயில்வாகனம் என்ற முதலாளி . நான் பார்க்க அந்தக் கண்ணகியின் ஆலயம் பெரும் பதுக்கல் முதாலாளிகளின் கடைக்கண் பார்வைக்குட்பட்ட பேராலயம் . இன்று , அதை பெரும் இராட்ஷத ஆலயமாக ; இலங்கையிலேயே பேராலயமாகப் பல் கோடி இரூபாய்க்கு விரிவாக்கிக் கட்டுகிறார்கள் .
ஆனால், ஈழத்தின் மானுடன் கொட்டில் குடிசைகளிலும், வீதிகளிலும், கிடக்க இடமின்றி ஈழத்தில் சில்லறைகளுக்கு இரங்குகிறான்!
என்னடா நம் உலகம் ?
புவிப்பரப்பெங்குந் தினமும்,பொழுதும் அகதிகள் பெருக்கமும், பட்டுணியும், மரணவோலமும்,நோயும் நொடியும் மனித வரலாற்றில் ஒரு செயலூக்கமிக்க நிகழ்வாக மாறி வருகிறது. எனவே , மானுடமே நீ , அகதி என்றே தெளிவாக-உரமாகப் பிரகடனப்படுத்து. இதிலிருந்துதாம் மற்றெல்லா உரிமைகளும் வென்று எடுத்தாகவேண்டும்.
உலகத்தின் திமிர்த்தனமான யுத்தங்கள் தினமும் பல நூறு மக்களைக் கொன்றும்,பல்லாயிரம் மக்களை அகதியாக்கியும் வருகிறது.எனினும் மக்கள் உயிர்வாழப் போராடியும்,கண்டம் தாண்டிக் கையில் பிடித்தவுயிருடன் அகதி நாமம் தேடிக் கொள்வதும்,துரத்தப்படுவதும் நிகழ்கிறது.
எனவே “அகதி” என்பது சர்வதேச அரசியல் முரண்பாட்டின் அதியுச்ச அரசியற் கோசமாகிறது.இது நமக்குக் கடந்த கால் நூற்றாண்டாகப் புதுப்புது அர்த்தங்களைச் சுட்டிக் கொள்கிறது!
“ASYLUM”-Asyl , இந்த வார்த்தைகள் உலகத்தில் பிரபலமான அளவுக்கு மற்றெந்த வார்த்தைகளும் பிரபலமடைந்திருக்க முடியாது! அவ்வளவுக்கு மனிதர்களின் இடப்பெயர்வு நிகழ்ந்து வருகிறது.
இன்று , இந்தக் கோணத்தில் இடப்பெயர்வு நிகழுந் தறுவாயில்,இத்தகைய இடப் பெயர்வுக்குக் காரணமான ஐரோப்பிய-அமெரிக்க அரசுகள் தமது எல்லைகளை இறுக மூடிவைத்துவிட்டு,அசூல் எனும் வார்த்தைக்குப் புதுப்புது அர்தங்களை அள்ளி வழங்குகிறார்கள்.
அகதி எனும் கோசம் “அரசியல் கோரிக்கையாக-உயிர்வாழ்வை காத்து,எம்மை வாழவிடு”என்ற மிக வலுவான மனிதாபிமானக் கோரிக்கையாக,மனிதவாழ்வின் அடிப்படையுரிமையாக விரிந்து செல்லும்போது,இத்தகைய நாடுகள் அதை மிகக் கேவலமாகத் தமது மக்களுக்குப் பரப்புரை செய்கிறது.
“Schein Asylanten “ —போலி அகதிகள் என்று ஜேர்மனிய ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இந்த மனித அடிப்படைய உரிமையைக் கேலிக்குள்ளாக்குகின்றனர். இவர்களே தமது தேவைக்காகவும், வசதிக்காகவும் உலக யுத்தங்களை நடாத்தியபோது,இவர்களுக்கு இந்த அரசியல் சட்டவுரிமைக் கோரிக்கை அவசியமானதாக இருக்கிறது.
இவர்கள் தமது நாடுகளை மீளக்கட்டியமைக்கும் தேவைக்காக தமக்குள் உடன்பாட்டுடன்-சமாதானத்துடன் மற்றைய கண்டங்களிலுள்ள நாடுகளை யுத்தத்தால்-கொடும் சுரண்டலால் அழிக்கும்போது, உயிர்ப்பலியெடுக்கும்போது,யுத்தத்துக்குள் சிக்கி உயிர்காக்கப் புலம்பெயரும் மக்கள் வெறும் போலி அகதிகளாகி விடுகிறார்கள், இந்த ஐரோப்பியத் திமிருக்கு.
16.06.2023 அன்றைய தினம் கிரேக்கக் கடற்பரப்பில் மிதந்த மீன்பிடி இழுவைப்படகு 700 அகதிகளுடன் கிரேக்க மண்ணில் கால்பதிக்க முனைந்தபோது (அரேபிய-ஆசிய-வடஆபிரிக்க அகதிகள்) கடலில் கவிழ , நீரில் மூழ்கிப் பலியானார்கள் . அதில் இருந்த 90 வீதமான மக்கள் நீரில் மூழ்கிச் செத்ததற்கான காரணம் , ஐரோப்பிய அரசியலின் சூதாட்டமே காரணமெனச் செய்திகள் கசிகின்றன . இதுள், கிட்டத்தட்ட 500 பேர்கள் பலியானதை மேற்குலக ஊடகங்கள் செய்தியாக அறிவித்தன.இந்தப் படகுப் பயணமானது ஐரோப்பாவை நோக்கி வாழ்சூழல் பாதிப்படைந்த பற்பல கண்டத்து மக்களால் தினமும் நடாத்தப்படுகிறது.
இவர்களோ , தமக்குமுன் கடற்பயணம் போன பல படகுகள் கவிழ்ந்ததையறிந்தும் இந்தப் பயங்கரமான கடற் பயணத்தைத் தொடர்கிறார்கள் . காரணம் : வாழ்சூழல் பாதிப்படைந்து இனியும் தம் தாயகத்தில் வாழ்தல் சாத்தியமில்லையென அறிந்த மக்கள்கூட்டம் மரணம் நிகழினும் இடம்பெயரவே முனைகின்றனர் . எனினும் ஐரோப்பா தனது கதவுகளை இறுக மூடிக்கொண்டு மனிதாபிமானம் பேசுகிறது.
கடந்த காலத்துள் மொரோக்கோவுக்கும் இஸ்பெயினுக்குமான “போடர்”புலம்பெயரும் மக்களுக்கு மூடப்பட்டபின்,ஆபிரிக்க மக்கள் இத்தகைய கடற்பிரயாண விபத்துகளில் தினமும் பலியாகி வருகிறார்கள். தற்போது , கிரேகத்தில் ஆசிய மக்களின் படகு கவிழ்ந்து 500 பேர்கள் மாண்டு போயினர் . இந்தாண்டுக்குள்-இதுவரை அண்ணளவாக 15.000அகதிகள் இப்படி வந்து,மரணித்தும், அடித்தும் விரட்டப்பட்டுமுள்ளார்கள்!
16.06.2023 அன்று , கிரேக்கத்துக்கு அப்பால் எண்பது கிலோமிட்டர் கடற் தூரத்துள் கடலில் நிகழ்ந்த படகு விபத்தானது கடந்தகாலப் படகு விபத்துக்களைவிடக் கோராமானது .
கிரேக்க நாட்டின் அதிகாரிகளின் இப்போதைய கூற்றுப்படி 500’ க்கும் அதிகமான அகதிகள் (மரணித்தவர்களுள் அதிகமானவர்கள் குழந்தைகள் ) நீரில் மூழ்கி இறந்துள்ளனர் . இந்தத் தொகை உயிர் பிழைத்தவர்கள் வழங்கிய தகவல்கள் மூலம் உறிதிப்படுத்தப்படுகிறது . உயரற்ற சடலங்களை இதுவரை , இன்னும் ஒழுங்காக மீட்கவில்லை ! அத்தோடு , அகதிகள் கடல் கடந்து வந்த மீன்பிடி இழுவைப் படகினுள் எத்தனை பேர்கள் சேர்க்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர் என்ற கடலோர காவல்படையின் கணக்கெடுப்பு மதிப்பீடுகளின் அடிப்படையிலானது மேற்சொன்ன கணக்காகும் .
உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி கடந்த வியாழக்கிழமை இரவும் பலனளிக்கவில்லை. வியாழன் காலை அரசு வானொலியில் கிரேக்க கடலோர காவல்படையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இரவில் “ உயிர் பிழைத்தவர்களோ அல்லது, பாதிக்கப்பட்டவர்களோ கண்டு பிடிக்கப்படவில்லை.
மீட்கப்பட்ட அகதிகளின் கூற்றுப்படி, மூழ்கிய மீன்பிடி படகில் 700 க்கும் மேற்பட்டோர் இருந்திருக்கலாம். புதன்கிழமை காலை கிரேக்கத்தின் தென்மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 50 கடல் மைல் (சுமார் 92 கிலோமீட்டர்) தொலைவில் படகு கவிழ்ந்து மூழ்கியபோது அதுள் இருந்தவர்களிற் பெரும்பாலோர் 30 மீட்டர் நீளமுள்ள தாம் பயணித்த பழைய துருப்பிடித்த படகைவிட்டுச் சரியான நேரத்தில் விட்டு வெளியேற முடியவில்லை ,இதனால் பலர் உயிர் பிழைக்க முடியவில்லை . குறிப்பாகக் கப்பலில் இருந்தவர்களிற் பலர் குழந்தைகள் எனக் கூறப்படுகிறது.
மீன்பிடி இருவைக் கப்பல் மூழ்கிய பின்னர், கிரேக்க கடற்பிரிவு-சுங்க அதிகாரிகள் ஒன்பது பேரைக் கைது செய்தனர். கிரேக்கக் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பிரதிநிதி வியாழனன்று ரோய்ட்டருக்கு அளித்த பதிலுள் , இந்தப் பயணத்தை ஒழுங்பு செய்தவர்கள் , ஆட்களைக் கடத்தும் மாபியா பிரயாண முகவர்கள் எனக் குற்றஞ் சாட்டியுள்ளனர் .
இவ் விபத்துக்குள்ளான படகிலிருந்து உயிர் பிழைத்தவர்களோ வெறும் 104 பேர்கள்தாம் . மீதமான 600 பேர்களின் கதை முடிந்துவிட்டது . அதிகமான பெண்களும் குழந்தைகளுமே செத்தவர்களுள் அடக்கம் .
உயிர் தப்பியவர்களைக் கடந்த வெள்ளிக்கிழமை , ஏதென்ஸ் நகருக்கு அண்மித்துள்ள அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது .
கடலோரக் கண்காணிப்புக் காவல்படையின் கூற்றுப்படி, பெரும்பாலான பயணிகள் சிரியா, ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தானில் இருந்து மீன்பிடி இழுவைப்படகினுட் பயணித்துள்ளனர் . இவர்களுள் இறுந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கடந்த வியாழக்கிழமை ஏதென்ஸ் நகருக்குக் அனுப்பப்பட்டுள்ளது . அங்கு , டிஎன்ஏ (DNA) பரிசீலிப்பு மாதிரிகளைப் பயன்படுத்தி சடலங்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனாவம் .
இந்த விபத்தின் சூத்திரந்தான் என்ன ?
கிரேக்க அதிகாரிகளின் சமீபத்தியப் புலன் ஆய்வின்படி , சில நாட்களுக்கு முன்பு எகிப்தில் இருந்து இந்த மீன்பிடி படகுப் பயணம் தொடங்கியிருக்கிறது . பின்னர் இலிபிய தேசத்தின் ரோப்புரூக்கில்(Tobruk) நிறுத்தப்பட்டு அதிகமான அகதிகளை ஏற்றிச் சென்றுள்ளது . பின்னர் , ஆட் கடத்தல் காரர்கள் இப்படகை இத்தாலியை நோக்கிச் செலுத்தியுள்ளனர் , இடையில் , கிரேக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது .
ஆட் கடத்தல் கோஷ்டிக்கு (ஏஜென்சிக்காரர்) தலைக்கு —ஒரு நபருக்கு 5,000 யூரோ முதல் 6,000 யூரோக்கள் வரை வழங்கப்பட்டுள்ளது . இதன் தொகை 42 இலட்சம் யூரோக்களாகும் . இலங்கையிலிருந்து கோடிக் கணக்காய் செலவு செய்து ஐரோப்பாவுக்கு இடம் பெயர்பவர்கள் இந்தக் கப்பல் விபத்தைக் குறித்து அச்சப்பட வேண்டும் !
ஊடக அறிக்கைகளின்படி, இந்தப் பழைய துருப்பிடித்த படகின் இயந்திரங்கள் செயலிழந்ததால் கப்பலில் பெரும் பீதி ஏற்பட்டதாம் . அப்போது , படகு பூராகவும் நெருக்கமாக நிரம்பியிருந்த அகதிகளின் சலசலப்பால் கப்பல் சமநிலையை இழந்து கவிழ்ந்து கடலினுள் உடனடியாக மூழ்கியுள்ளது . உண்மையில் , இப்படகில் 50 பேர்களே பயணிக்கக் கூடியது . அதுள் , 750 பேர்கள்வரை ஏற்றப்பட்டு இங்ஙனம் கொல்லப்பட்டுள்ளனர் .
இந்த, அகதியப் பிரயாணமும் , இடப் பெயர்வுகளும் , உலகம் பூரான இந்த முதலாளிய அமைப்பின் எதிர் விளைகள் என்பதைச் சொல்லிவிட்டால் போதுமா ?
எனக்குப் பதில் தெரியவில்லை . பரிதாபகரமான மரணங்கள் ; இவை , படுகொலைகள் என்பதே என் முடிவு .
—ப.வி. ஶ்ரீரங்கன் 18.06.2023