அந்தப் புள்ளியைச் சென்றடையுமா? ‘மேதகு’! – பகுதி XVI

அந்தப் புள்ளியைச் சென்றடையுமா? ‘மேதகு’!  – பகுதி XVI

மேதகு’ என்ற திரைப்படம் வியாபார ரீதியாக வெற்றியடைந்ததா? என்ற கேள்வியைவிட கருத்தியல் ரீதியாக, 12 வருடங்களுக்குப் பிற்பாடு தமிழீழத்தேசியமும் அதன் தலைமையும் எல்லாத் தரப்பினர்களால் அலசி ஆராயப்பட்டிருக்கிறது. இந்த சூழல் என்பது வெற்றியாகவே, ‘மேதகு’ திரைப்படம் மூலம் சென்றடைய நினைத்த தூரத்தை அந்த மறைமுகப் புள்ளி சென்றடைந்திருக்கிறது. முள்ளிவாய்க்காலில் ஏற்படுத்தப்பட்ட முற்றுப்புள்ளிக்கு, தமிழகத்தில் ‘நாம் தமிழர்’ சீமான் மூலம் ஓர் தொடர்ச்சியை ஏற்படுத்திய அந்த மறைமுகப்புள்ளி, தமிழகத் தேர்தலின் போக்கும் எதிர்காலமும் என்ற தொலைநோக்கில் தொடர்ந்தும் ‘நாம் தமிழர்’ சீமான் சூழலில் தாக்கு பிடிக்க முடியாத நிலையும், சர்வதேசத்தில் எழுந்திருக்கும் ‘சீனா’ எதிர்ப்புவாதத்தில் மீண்டும் ‘தமிழீழத்தேசியம்’ உயிர்ப்புப் பெறும் விடயமாகவே இந்த ‘மேதகு’ திரைப்படத் தாக்குதல்.

இந்த 40 வருட இலங்கைத் தமிழ், சிங்கள அரசியலை அங்குல அங்குலமாக சுடச்சுட தமிழகப் பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி, திரைப்படங்களென அனைத்து ஊடகங்கள் பிய்த்தெறிந்து தனது வாசகப் பரப்புக்குள் எறிந்திருக்கின்றன. ஆனால், இவையனைத்தும் வியாபார உத்தியாக தயாரிக்கப்பட்ட செய்தியாகவும், படைப்பாகவும் இருந்திருக்கின்றன. இதன் மூலமே தமிழக வாசகப் பரப்பின் ஊடாக தமிழீழத்தேசியம் மீதான தமிழக அரசியல் பார்வையும் கட்டமைக்கப்படுகிறது. இதைத்தான் தமிழீழத்தேசியமும், தலைமையும் விரும்பியிருந்தன. ஏனென்றால், தனிநபர் அதிகாரக் கட்டமைப்புக்கும், அதிவேக அமைப்பு வளர்ச்சிக்கும், ஆதரவுத் தள விரிவாக்கத்திற்கும் இதுவே தேவைப்பட்டது. இதற்கேற்பவே தளத்திலான செயல் வடிவமும் திட்டமிட்டே தயாரிக்கப்பட்டிருந்தன. அதுவே, இளையோர் மனங்களையும், ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களையும் இலகுவில் தன் சார்பு நிலைக்கு திரும்புவதற்கு தமிழீழத்தேசியத்திற்கு உதவியது. இந்தத் திட்டமிடலே இன்றும் வியாபார ரீதியான பார்வை கொண்ட தமிழக திரைப்பட ஆர்வலர்க்கான திரைக்கதை தேடலுக்குத் தேவையான நிறைய சம்பவங்களை தமிழீழத்தேசியத் தரப்பு கொண்டிருக்கிறது. தோல்வியைத் தொட்டிருந்தாலும் தமிழீழத்தேசியமும் அதன் தலைமையும் 32 தளபதிகளையும் தரை, கடல், ஆகாயமென படைக் கட்டுமானமும், அதன் வழியே கெரில்லா, மரபு சார்ந்த இராணுவத் தாக்குதலை செய்திகளாக கட்டமைத்திருக்கும் வரலாறும் அதில் இருந்து இந்த ‘மேதகு’ போன்ற திரைப்படத்திற்கான அடிப்படையான ஒரு வரிக்கதையை தமிழகச் சினிமாவால் உருவாக்குவதில் எந்த வியப்பும் எம்மிடமிருந்து வெளிப்படவில்லை.

வரலாற்றுத் தரவுகளில் இருந்து புனையப்பட்டு, தமிழக குருதி மரபின் மாண்பினை ‘கடல்புறா’, ‘வேங்கையின் மைந்தன்’ போன்ற நாவல்கள் மூலம் வாசகப்பரப்பில் ஓர் மறுமலர்ச்சி ஆளுமைகளை காட்சிப்படுத்திய கெட்டித்தனத்தை நினைவுக்குள் இருந்து நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. அந்த புனைக்கதை விம்பத்துக்கூடாக கண்டடைந்த வரலாற்றுக் காவியங்களில் இருந்து எழுந்த தனிநாட்டுக் கோஷம் வழி நடத்திய தடங்களில் நடந்த அனைத்து நிகழ்வுகளும், துரோகங்களும் கழுத்தறுப்புகளும் சதிகளும் காட்டிக் கொடுப்புகளும் கட்சி மாறுதல்களையும் கொண்டு வரப்படுமென்பதை எதிர்பார்க்கும் சூழல் வியாபாரக் கண்ணோட்டத்திலும், படைப்புக்கான அரசியலில் காணாமல் போய்விடும். அதே போக்கில் ‘மேதகு’ச் சூழலும் அது திரைப்படமாக மாற்றமடையும் பொழுது தமிழ் இரசிகர்களையும், உற்பத்திச் செலவுக்கான வருவாய் பற்றிய சூழலும் இணையும் பொழுது திரைப்படத்தின் சம்பவங்களின் உண்மைத் தன்மையில் கேள்வியெழும். இந்த தியரி ரசிகனுக்கு தெரிந்தது. திரையரங்குக்குள் ரசிகன் இருக்கும் இரண்டு மணி நேரத்தில் அவன் மனதை தன் கதை வசப்படுத்த இயக்குநரின் சிந்தனையைத்தாண்டி, அதில் ரசிகனின் மன உணர்ச்சி உயிர்ப்பை, நவரச உணர்ச்சிகளை திரையைத் தாண்டித் தக்க வைக்கிறது இந்த விமர்சனங்களும், வரலாற்றுத்திரிபுகளும் என்ற தேடலும். இதற்கு மேலே இந்த திரைப்படக்கதையின் வரலாற்றுத் திரிபைப் பற்றி ஆராய முற்படும் மாற்று அல்லது தமிழீழத்தேசியத்திற்கான எதிர்க்கருத்தாளர்களின் அரசியல் என்பது அத்திரைப்படத்தின் வெற்றிக்கான உழைப்பாகவே மாற்றமடைகிறது. இந்த எதிர்க்கருத்தாளர்கள், ‘மேதகு’ க்கு முற்பட்ட காலப்பதிவாக ‘தோழர் நாபா’ என பத்மநாபாவின் அரசியலை, அல்லது ‘தோழர்’ என்ற தலைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியலை கொண்டு வராவிடினும், ‘மேதகு’ க்கான சம காலப் படைப்பாக குறைந்த பட்சம் ஆவணப்படமாகக்கூட ஒரு வரிக்கதையை தேட முற்படுவதுதானே மாற்றுச்சூழலுக்குள்ளால் தமிழ் அரசியலை நிறுவுவது சரியாக இருக்கும்? இங்கு இன்றைவரைக்கும் அது நிகழவில்லை என்பது விடை தெரிந்த கேள்வியாகவே இருக்கிறது. அந்த விடையானது, தமிழீழத்தேசியத்தின் எதிர்ப்பக்கத்தில் பொருளாதார ரீதியான கட்டுமானங்களில் இருக்கும் தேக்க நிலையும், முயற்சியின்மையும் என தோல்விச் சூழலே காரணமாகிறது. ‘மேதகு’ வின் அரசியலோடு ஒட்டும் எதிர்க்கருத்தாளர் மனசுகள், தங்களுக்கெதிரான தாக்கியழிக்கும் நடவடிக்கை காரணமாகவே தமிழீழத்தேசியத்தோடு ஒத்துப் போக முடியாமல் மன ரீதியில் தவிர்க்கிறார்கள். இது பல இடங்களில் தடம் மாறிய பல சம்பவங்களை தலைமைகள் நிறுவிச் சென்றதையும், மாறும் தலைமைகளுக்கான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தமிழீழத்தேசியம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை இலங்கைத்தமிழ் அரசியல் கண்டிருக்கிறது.

அரசியலும் வியாபாரமும் இரு வேறு விடயமாக, தன்னலம், பொதுநலமென அடிப்படை வரையறுத்துச் சென்றாலும் அமைப்பு, நிறுவன உள் நிர்வாக கட்டமைப்பென்பது பெரிதான வேறுபாடுகளை பார்க்க முடியாத சூழலில் இரண்டும் இணைந்தே தோழமையுடன் பயணிப்பதை காண முடியும். இந்த இலங்கைத் தமிழர்களின் அரசியலிலும் பொருளாதாரப் பெருக்கமும் அரசியலும் இணைந்தே காணப்படுகிறது. இந்தப் பொருளாதார இருப்பே இன்றும் தமிழீழத்தேசியத்தின் இருப்புக்கான சகல முயற்சிகளுடன் கலந்து நிற்கிறது. இந்தப் பொருளாதார இருப்புப் பற்றிய நீண்ட அகலமான உருவாக்கமோ? தேடலோ? அற்ற சூழலே தமிழீழத்தேசியத்தின் எதிர் அரசியல்த் தலைமைகளிடம் காணப்படுகிறது. இதுவே, இந்த எதிர்த்தரப்பு அரசியலாளர்களிடத்தில் காணப்படும் முக்கிய பலகீனமாகும். இங்கு ‘மேதகு’ திரைப்படத்தை வெறுமனே திரைப்படமாக கடந்து சென்றிருந்தால் எதிர்க்கருத்தாளர்களின் மனத் தையிரியம் மெச்சும் விடயமாக இருந்திருக்கும். இதிலும் தமிழீழத்தேசியம் எதிலும் தாங்கள்தான் முன்னோடி என்ற நிலைப்பாட்டில் இன்றும் ‘மேதகு’ திரைப்படம் மூலம் மீண்டும் ஒரு தடவை நிருபித்திருக்கிறார்கள். வரலாறு முழுக்க தமிழீழத்தேசியம் எதிர் அரசியலாளர்களின் கதையாடல் ஊடாகவே இக்கட்டான காலங்களைக் கடந்திருக்கிறார்கள் என்பது வரலாற்றுக் காட்சிப் பதிவாகும். தமிழீழத்தேசியத்தின் எதிர் அரசியாளர்கள், எதிர்க்கருத்தாளர்கள் வாழும் காலத்திற்கு பின்னான காலமென்பதில் யார் இக்கருத்தாடலைத் தொடர்வதென்ற கேள்வி எழுகிறதல்லவா? இந்த எதிர் தரப்புக்களின் குடும்ப, கட்சி, கருத்து ரீதியாக தொடர்ச்சி என்று யாரும் இந்தக் கதையாடலுக்குள் இல்லை. இது வருங்காலமென்பது முழுவதும் ‘மேதகு’ வின் ஆளுமை வரலாறுகளாகவே இருக்கும். எதிர் தரப்புகளின் தலைமைகளில் ஒரு பகுதியினர் ‘மேதகு’ க்குப் பின்னால் போன வரலாறும், சிங்களத்தேசியத்தின் தயவான அரசியலும், தமிழீழத்தேசியத்தை எதிர்க்கிறேன் பேர்வழியில் சிங்களத்தேசிய அரசியல்த் தலைமைகளை முன்னிறுத்துவதுமான போக்கும், இருக்கிற எதிர் தரப்புகளின் கட்சிகளுக்குள் இருந்த ஆளுமையுள்ளவர்களை வெளியேற்றிய வெற்றிடங்களில் தமிழீழத்தேசியத்தின் சிதறல்கள் இட்டு நிரப்படுவதால் இத்தலைமைகளுக்குப் பின்னால் அந்தத் தலைமைகளின் இடத்தை நிரப்புபவர்கள் தமிழீழத்தேசியத்தின் சிதறல்களே என்பதை அங்கு நிலவும் போக்கு முன்மொழிகிறது. இந்தச் சூழல் எல்லாப் பரப்புகளிலும் ‘மேதகு’ மெளனமாக நிறைந்திருப்பதாக நாம் கருதுகிறோம்.

இந்தத் தமிழீழத்தேசியத்தின் எதிர் தரப்புகள் தாங்கள் ஆராதித்த, ஆராதிக்கின்ற தலைமைகளின் அரசியல் கதைகளை ஆவணப்படுத்தவும், பல தளங்களில் கதையாடவும், படைப்பிலக்கியமாகக் கொண்டு வரவும் முயல்வதே ‘மேதகு’ க்கு எதிர் நிலையாகும். அத்தோடு கட்சிகளுக்கான தொடர்ச்சியான தலைமை பற்றிப் பேசுவதற்கு ‘மேதகு’வுக்காக செலவிடும் நேரத்தை எடுத்துக் கொள்வதென்பது புத்திசாலி நகர்வாக இருக்கும். அதைவிடுத்து ‘மேதகு’க்கான படைப்புகள் பற்றிய திருத்தங்களை பற்றிப் பேசுவது அவர்களது அரசியலில் பங்கெடுப்பது, சேர்ந்தியங்குவதாகும். வருணகுலத்தான் பார்வையில் என்ற ‘மேதகு’ திரைப்படத்தின் திருத்தம் செய்யப்பட வேண்டிய வரலாற்றுப் பிழைகளை சுட்டி நிற்கும் விமர்சனக் காணொளி பார்க்க முடிந்தது. அந்தப் பகுதியினரே பல திருத்தங்களை முன்வைக்கிறது என்ற நேர்காட்டலுடன் முன் நகர்த்தப்படுகிறது. இது வியாபார ரீதியாகவும், அதனூடாக இந்து சமுத்திர பிராந்திய வல்லமையான இந்தியாவின் நாடி அறிதலுமாக கடக்கிற தமிழீழத்தேசியம் சீனாவுக்கெதிரான கூட்டணியில் மிக முக்கிய புள்ளியாக மீண்டும் நுழைவதற்கான அரசியலாக இன்றைய நகர்வை நாம் கருதுகிறோம். இந்த ‘மேதகு’ அரசியலில் கிழக்குத்தமிழீழத்தேசியம் தவிர்க்க முடியாத வரலாற்றுச் செறிவான திரைக்கதைக்குள் இருக்கின்றது. கடந்த வரலாற்றுத் தவறுகளில் இருந்து கற்றுக் கொண்ட அனுபவங்களினால் வடக்குத்தமிழீழத்தேசியம் புதியதோர் அரசியல் வியூகம் நோக்கி நகருமென்பது எமது எதிர்பார்ப்பாகும்.

Leave a Reply