கிழக்கில் கருக்கொள்ளும் அதிகார அலகுக்கு சிநேகிதபூர்வமான கருத்தாடல்! – பகுதி XV

கிழக்கில் கருக்கொள்ளும் அதிகார அலகுக்கு சிநேகிதபூர்வமான கருத்தாடல்!  – பகுதி XV

‘தமிழ் அரசியலின் இன்றைய பிளவு நிலமைகள்’ என்ற தலைப்பில் தமிழ் அரசியலில் காணப்படும் இன்றைய உள் முரண்பாடுகளை அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் எழுதி ‘அரங்கம் செய்திகள்’ இணைய இதழில் வெளியாகியிருந்த கட்டுரைக்கு எழுந்த எழுவான் வேலனின், ‘மலையக மக்களுக்கு துரோகம் செய்த யாழ் மேலாதிக்கம்’ என்ற தொடர் கருத்தாடலும், அழகு குணசீலனின் ‘காலக்கண்ணாடி – 44’ இல் ‘கிழக்கு அரசியல் பிரதேசவாதமா?’ என்ற தலைப்பிலான எதிர்க்கருத்தாடலுக்குப் பின், ஆய்வாளர் வி.சிவலிங்கம் முன்வைத்த பதில் கருத்துக்கள், ‘கிணறு வெட்ட பூதம் வந்த கதை’ தலைப்பிலான கட்டுரையில் காத்திரமாக இருக்கின்றது. இன்று வந்தடைந்து நிற்கும் இலங்கை தேசிய அரசியலுக்கு தமிழ்த்தேசியம் எவ்வாறு முட்டுக் கொடுக்கும் குறுந்தேசியவாதமாக மாற்றமடைந்திருக்கும் சூழல் பற்றிக் கவலை கொள்ளும் தரப்பாக நாமும், தோழர் வி.சிவலிங்கம் அவர்களின் கருத்துக்களை எம் வாசகப் பரப்புக்குள் எடுத்துச் செல்வதற்காக இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நிலையில் நெருடலான இனம் புரியாத மனப்பயம் ஒன்று கேள்வியாக வடிவம் கொள்கிறது. குறுகிய தலைமைத்துவ எண்ணம் நோக்கிய குறுந்தேசியவாதிகள், நில அடிப்படைக் குறுகிய கண்ணோட்ட விமர்சனத்தை பொட்டில் போட்டுத் தள்ளிவிட்டுச் சென்ற மாதிரி எறிந்துவிட்டு கடந்து விடுவார்களோ? என்கிற சிந்தனைதான்.

கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியல் அணுகுமுறையின் அவசியம் மிகவும் உணரப்பட்ட போதிலும் அம் மாற்றங்களை நோக்கிய இந்த விவாதங்கள் அம் மக்களின் இன்றைய அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக எதிரிகளை உற்பத்தி செய்யும் விவாதங்களாக அல்லது மிகவும் குறுகிய அடிப்படைகளைக் கொண்டதாக அல்லது அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு முன்வைக்கும் நியாயங்களாகவும் அவை இல்லை

எனக் குறிப்பிடும் கட்டுரையாளர், எவ்வளவு நேர்த்தியாக அடுத்த தரவொன்றை முன்வைக்கின்றார். இந்த நேர்த்தியான தரவுக்காக, இன்றைய தேவையுமாக தமிழ் மக்களின் மரபு சார்ந்த பண்பாட்டு கலாசார விழுமியங்களை அறிவியல் மேம்பாட்டுக்குள் விஞ்ஞான ஆய்வில் மன உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளும் வாழ்வியலில் சனநாயகத்தின் இருப்பும் செழுமையும் வளர்ச்சியும் பாதுகாப்புமான அரசியலுக்கான அரசியல் வேலைத்திட்டத்திற்கான மக்கள் உழைப்பு, இலக்கு நோக்கி போராட்ட குணம் பற்றி ஓர் நிகழ்கால எடுத்துக்காட்டொன்றை முன்வைக்கிறார்; சிறப்பானது அது அவரின் அனுபவத்தையும் அதிலிருக்கும் பிசிறு அல்லாத தெளிவையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

இந்தியாவின் பிரச்சனைக்குரிய மாநிலமாக அமைந்துள்ள ஜம்மு – கஷ்மீர் பிரதேசம் ஏன் இன்று வரை போராடுகிறது? இந்திய மாநிலங்களில் பல விதங்களில் முன்னேற்றத்தை அடைந்திருக்கும் அம் மாநிலத்தில் இன்னமும் சுயாட்சிக்கான போராட்டமும், உயிரிழப்புகளும் தொடர்கின்றன. இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் பலவித அபிவிருத்திகளை அறிவித்த போதிலும் போராட்டங்கள் ஓயவில்லை. அம் மக்கள் அடிப்படை ஜனநாயக உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். இந்திய அரசு அங்கு பாரிய ராணுவத்தைக் குவித்துள்ள போதிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை. இந்திய அரசு அரசியல் அமைப்பின் 370வது பிரிவை இடைநிறுத்தி அதன் மாநில அந்தஸ்தை யூனியன் பிரதேசமாக மாற்றி எச்சரித்திருக்கிறது. ஆனால் போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்த இண்டு புள்ளிக்கும் இடைப்பட்ட அகல தூரத்தில் நின்றாட வேண்டிய தமிழ் பேசும் அரசியலுக்குள் தனித்த அபிவிருத்தி என்ற குறுகிய அரசியலுக்குள் அடிப்படை அரசியல் உரிமைகளை விட்டேந்தியாக விட்டுச் சென்ற முஸ்லீம் தலைமைகளின் போக்கால் இன்று எழுந்துள்ள நிர்க்கதி நிலைமைகளை தமிழ் பேசும் சிறுபான்மையினச் சமூகங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய நெருக்குவாரத்தை சிங்களப் பேரினவாதம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த காலாவதியாகிப்போன அபிவிருத்திக் கோஷ அரசியலை, தமிழீழத்தேசியத்தின் ஆயுதப் போராட்டக் காலத்திற்கு இணையாக கடந்திருக்கும் ஈழ மக்கள் சனநாயகக் கட்சியும் அதன் தலைமையும் வடக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அரசியலுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் கையேறு நிலையைத்தானே கண்டடைந்திருக்கிறோம். இதைக் கருத்தில் கொள்ளாமல் தமிழ் பேசும் தரப்பு தங்களுக்குள் பிளவுக்கும் சண்டைக்குமான காரணங்களைத் தேடி அலைகின்றன. இந்த இக்கட்டான தமிழ்ச் சூழலுக்குள் கிழக்கிலும் வடக்கிலும் சிங்களபேரினத்தேசியம் தனக்கான கட்டமைப்பை இறுக்கமாக தமிழ் தலைமைகளைக் கொண்டே நிறுவும் சூழ்ச்சி அரசியலை தனிநபர் நலன்களுக்கு ஊடாக கட்டமைத்து வருகிறது.

ஆயுதப் போராட்டத்தில் சனநாயகச் சூழலை உள்ளேயும் வெளியும் தர்க்க ரீதியான கருத்தியலில் பேண முற்படாத தனிநபர் அதிகாரக் கட்டமைப்பு எவ்வாறு முள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளிக்கு பின்னானலும் தமிழ் அரசியலில் உள்ள கட்சிகளிலும் காணப்படுவதே இன்றைய தமிழ் அரசியல் நிர்க்கதியான நிலையாகும். சிங்களப்பேரினவாதத்தின் சூழ்ச்சியில் வடக்குத் தமிழ் அரசியலை ஒரு வழி செய்துவிட்டு இப்பொழுது கிழக்கு அரசியலுக்குள்ளும் புகுந்திருந்திருப்பதின் உச்ச நிலைதான் சுதந்திரத்திற்கு முன்னான காலத்தின் எச்ச சொச்சங்கள் பற்றிய கருத்தாடல்கள். ஆயுதப் போராட்டமும், புலப்பெயர்வும் யாழ்ப்பாணத்தில் இடதுசாரிகளால் அடித்து நொறுக்கப்பட்ட சாதீயக் கட்டமைப்பை வர்க்க தளத்திற்கு கொண்டு சென்றதை அருண் சித்தார்த் என்ற தனிநபர் அதிகாரக் கட்டமைப்புக்கு ஊடாக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்ட அரசியல் அஸ்திரம் சிங்களப்பேரினவாதத்தின் புதிய கண்டுபிடிப்பு. தமிழ் மக்கள் அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வு பற்றி பேச்செடுத்த காலமெல்லாம் தனிநபர் அதிகார, பொருளாதார நலன்களை நிறைவேற்றிக் கொடுப்பதன் ஊடாக பேச்சுவார்த்தையை சிங்களப்பேரினவாதம் காலம் கடத்தி வந்தது. இது வரலாறாக கண்டடைந்த குறுந்தேசியவாதம் மீண்டும் மீண்டும் தனது இருப்புக்காகவும், பாராளுமன்ற இருக்கைகளுக்குமாக சிங்களப்பேரினவாதத்தை நம்பியிருக்கும் போக்கையை கடைப்பிடிக்கிறார்கள். இதற்கொரு இன்னொரு காரணங்களும் இருப்பதாக கருத முடிகிறது. இந்த குறுந்தேசியவாதம் சிங்கப்பேரினவாதத்தோடு அனுசரிப்பதென்பது இவர்கள் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புகளாக இருந்து சனநாயகச் சூழலுக்குள் திருப்பியவர்களாவார்கள். இவர்களுக்கென்றும் அதிகாரம் தேவைப்படுகிறது அவர்களது மக்களிடம் செல்வதற்கு. இந்தப் பலகீனமான சூழல் வடக்கில் இருந்து கிழக்கிற்கும் சென்றடைந்திருப்பதே தமிழ் அரசியல் பற்றிக் கவலை கொள்ள வைக்கிறது.

இதற்காக குறைந்த பட்சம் தமிழ் அரசியல் அமைப்புக்களிடத்தில் அரசியல் உரிமைகள் பற்றிக் குறியீட்டளவிலாவது காணப்படுவதை அல்லது கடைப்பிடிக்கப்படுவதை ஊர்ஜிதப்படுத்தியே ஆக வேண்டியிருக்கிறது. பொதுவாக, அதிகாரப் பரவலாக்களைப் பற்றி பேசும் இச்சூழலில் அதிகாரம் பகிரப்பட்ட அமைப்புச் சூழலைக் கொண்டு வருதல். இதன் முதல் விளைவாக நாம் எதிர்பார்ப்பது உள் அதிகார முரண்பாட்டில் புதிய அமைப்பு உருவாகாமல் தடுத்தல். மேலும், அமைப்புக்குள் மாகாண ரீதியான சுயாதிக்கமுள்ள தலைமைக்கூடாக அம்மாகாண அதிகார பிரதிநிதித்துவத்தை ஊர்ஜிதப்படுத்துவதும், இந்த இரு மாகாண சுயாதிக்க அதிகாரக் கட்டமைப்பின் இணைவாக அமைப்பின் தேசிய அதிகாரக் கட்டமைப்பை உருவாக்குதலாகும். இதைத்தானே தமிழரசுக்கட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடங்கிய தேசிய அளவிலான கட்சியாக இருக்கிறதென்கிற கேள்வி எழும். ஆனால், இங்கு மாகாணத்திற்கான அதிகாரம் வரையறுக்கப்பட்டு, அந்த நிலம் சார்ந்த சூழலுக்குக் கொடுக்கிறதென்பதே இங்குள்ள சிறப்பாகும். இதன் மூலம் தொகுப்புத் தேசியத்திற்குள் தமிழ்பேசும் சிறுபான்மையின கூட்டிணைவு கட்சி அமைப்பை சென்றடைய முடியும். மேலும் சிங்களப்பேரினவாத பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இலக்காவதைத் தடுப்பதன் ஊடாக இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

தொடர்ந்தும், தமிழ் அரசியல் கட்சித் தலைமை அலுவலகம், தலைமை என்பன தமிழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மக்கள் அதிகார மையங்களில் பங்கெடுப்பதை, அங்கம் வகிப்பதை ஊர்ஜிதப்படுத்துவது போன்ற இனம் காணப்படும் அரசியல் விடயங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதே நாம் சுட்டி நிற்கும் ‘குறியீட்டு’ அரசியலாகும்.

Leave a Reply