கொத்துரொட்டியும் சமையலறை அரசியலும்!

இன்று மதியம் பூமி நிலத்தில் நடந்தேறிய மிக முக்கிய நிகழ்வொன்று, எம் வீட்டுச் சமையலறையில் கோழிக்கொத்துரொட்டி தயாரானதாகும். இன்றைய ஜெனீவா கூட்டத்தொடருக்கான வெக்கைச் சூழலிலும் எம் வீட்டு அடுப்பும் சூடேறியது.

முன்னம் ஒருநாள், நான் தயாரித்த கொத்துரொட்டி கொஞ்சம் கழித்தன்மையாக, குழைந்ததாக வந்ததின் காரணமாக, என் துணையாள் கொத்துரொட்டி தயார் பண்ணி முடிக்கும் வரைக்கும் அது பற்றிய செய்தி வெளிவராமல் பார்த்துக் கொண்டு, நன்றாக வந்ததின் பின் புகைப்படம் எடுத்து WatsAppஇல் அனுப்பிவிட்டு, தொலைபேசியில் தொலைத்தெடுத்தாள். இதுவொரு தமிழ் நவீன அரசியல் சாணக்கீயம். பொதுவாக, பார்த்திருப்பீங்கள், ஒன்றுமே சொல்லிச் செய்திருக்க மாட்டார்கள், சாத்தியமான ஒரு விசயத்தை எல்லாத் தேர்தல் காலங்களிலும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இந்த உத்தி எதிராளி மன மாற்றத்திற்குள் வந்தாலும் மாற விடாமல் தடுத்து நிறுத்திடும்.

மிக அண்மையில் என் பதிவுக்கான பின்னோட்டத்தில் ஓர் சிறு நேரக் காணொளி இணைக்கப்பட்டிருந்தது. அதில் மூன்று தமிழ்த் தலைவர்கள், ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ எனச் சொல்கிறார்கள். ஆனால், அந்த மூவரும் ஒன்றிணையவில்லை. ஒருமித்த செயல்பாட்டுக்கும் வரவில்லை. இதே மாதிரித்தான் என் துணையாளும் எனக்கு ஆப்பு வைக்கிறாள். இனிமேல் சமையலறைப் பக்கம் வந்து சமையல் பற்றி கருத்து சொல்லக்கூடாது. ஆனால், அவள் இப்பொழுது மறந்துவிட்டாள், பாராளுமன்றத்தில் சந்திப்பதற்கான ஒத்திகை சமையலறையில்தானே தொடங்குகிறது?

கிழக்கில் முகம் காட்டும் சூரியனின் தூரிகையில் அழகோவியமாய், புல்லின் மீதான பனித்துளியாய், மழைத்தூறலில் நனையும் இரு குருவிகளாய் காலைப்பொழுதும் கவிபாடும் கணமாய் மாற்றிடும் மந்திரம் அவளிடம் கண்டேன். மாரிக்கால தவளைபோலவே கத்தும் நிலை துறந்து குயிலின் குரலில் வானத்து மதி காண காரிருள் வையகம் வேண்டித் தவம் பரியும் முனிவனனேன். இரு தேசம் ஒரு நாடு என்னும் கோட்பாட்டுத் தத்துவம் யாதுதென புரிதலில் மத்தியில் கூட்டாட்சி கண்டேன். ஆனந்தம்! பரமானந்தம்!

Leave a Reply