கோட்டுபாட்டுத் தத்துவங்களும் அதன் மீதான பொருள் கோரலும்! பகுதி – I

கோட்டுபாட்டுத் தத்துவங்களும் அதன் மீதான பொருள் கோரலும்! பகுதி – I

பூமி நிலத்தில் ஏற்பட்டுவரும் கால அரசியல் மாற்றங்கள் புதிய வரலாற்றுக் கதையொன்றினை கொடுக்க முனைகிறது. இதில் இலங்கைத் தமிழர்கள் ஓர் கூறாகும். அந்த வரலாற்றுக் கதையில் தமிழர்களின் கதையென்பது பூமி நிலத்தின் கதையின் தொடர்பில் ஓர் பகுதியாகும். இச்சூழலில், பெரும் எழுச்சியும் பெரும் வீழ்ச்சியும் கொண்ட இலங்கைத்தமிழ்ச் சமூகம் உள் புற அழுத்தங்களினால் பன்படுத்தப்பட்ட, பதப்படுத்தப்பட்ட களிமண் நிலையில் இருக்கிறது. அந்த களிமண்ணில் இருந்து எந்தப் பொருளையும் நாம் நினைத்த மாதிரி செய்திட முடியும் யாதார்த்த தத்துவ தர்க்கத்தில் இருந்து அதற்கான சூழலை உருவாக்கிட இந்தக் கருத்தாடலை முன்வைக்கிறோம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்குப்பின் தமிழ்க்கட்சிகளின் கோட்பாட்டுத் தத்துவங்கள் மீதான விளக்கம் கோரல், பொருள் கொள்ளுதல் பற்றிய ஆய்வொன்றினை மேற்கொள்ளும் விதமாக இரு தமிழ்க்கட்சிகளின் கோட்பாட்டுத் தத்துவங்களை முகநூலில் பதிவு செய்திருந்தோம். அதனூடாக இன்றைய தமிழ்க்கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. இப்பதிவுக்கான பின்னோட்டக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, இப்பந்தியினை தயார் செய்யலாமெனத் தீர்மானிக்கிறோம்.

மிக மிக ஆபாயகரமான சூழலொன்று நாம் பதிவு செய்திருந்த கோட்டுபாட்டுத் தத்துவங்களின் பின்னோட்டப் பதிவுகளில் வெளிப்பட்டிருந்தது. ரெளடியிசத்தை முன்னிறுத்தும் அடியாள் நடவடிக்கையாக தனிநபர் மீதான இருட்டடி கொடுக்கப்படும் போக்கே மேலோங்கியிருந்தது. இது தமிழ் அரசியலில் புரையோடிப் போயிருக்கும் பல விடயங்களை அதன் இடத்தில் நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டுமென்பதை உணர்த்தியது. இக்கோட்டுப்பாட்டுத் தத்துவங்களைத் தாங்கி நிற்பதற்கான சித்தாந்தம் எதென்பதைப் பற்றியும் விவாதத்துக்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது பின்னோட்டப்பதிவாளர்களின் பதிவுகளில் பயன்படுத்தும் சொற்களில் இருந்தெழும் அரசியலே தீர்மானிக்க வைக்கிறது.

நாட்டு விடுதலை பற்றிப் பேச்செழுந்த பொழுது, அதற்காகத் தொடங்கம் கொண்ட அமைப்புக்களில் வெள்ளை, சிவப்புச் சித்தாத்தங்களில் ஒடுக்கப்பட்ட, அடிமைப்பட்ட, அடக்குமுறைக்குட்பட்ட இனத்தின் நாட்டு விடுதலையை மட்டுமே பேசினார்கள். அதற்குள் சாதீய, வர்க்க, பெண் விடுதலையைப் பற்றிப் பேசப்படவில்லை. இனத்திற்கான இராச்சிய கட்டுமானத்திற்குப்பின் இவை பற்றிப் பேசுவதாக, இவைகளை மெளனமாக கடந்து போனார்கள். இந்த நாட்டு விடுதலையில் சாதீய, வர்க்க மக்களின் பங்கு என்ன என்பது பற்றிய கேள்விகள் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களும், தொழிலாளர்களும் போர்க்களத்தில் குவிக்கப்பட்டனர். இதில் வாய்ப்பும் வசதியும் படைத்தவர்கள் ‘பாஸ்’ நடைமுறைக்கூடாக போர்க்களத்தைத் தவிர்த்து வசதி படைத்த மேற்குலக நாடுகளுக்கும், கடல் கரை சார்ந்த மக்களும், வசதியற்ற தொழிலாளர் வர்க்கமும் இந்தியாவின் தமிழகத்திற்கும் புலம்பெயர்ந்தார்கள். இவர்கள் தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களுக்குள் வாழ்ந்து வருகிறார்கள். அதன் பின்னான காலத்தில் புலப்பெயர்வென்பது தமிழ்ச்சமூகத்திற்காக அத்தியாவசியமான சூழலாக மாற்றமடைகிறது. புலம்பெயர்த் தமிழ்ச்சமூகம் தாம் சார்ந்த நிலம் சார்ந்த மக்கள் அதிகாரங்களைப் பெறத் தொடங்கின்றன. தனி நில அதிகாரத்திற்கான அரசியல் போராட்டம் இரு வேறு நில அதிகாரத்தை உருவாக்கிறது. இந்த இரு வேறு நில அதிகார முறை உரசலும் கட்டித்தழுவலுமாக ஒன்றின் மீது ஒன்று மேலாதிக்கம் செய்ய முயலும் போக்கைக் கொண்டிருக்கிறது.

இந்தச்சூழ்நிலையில், 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் தோல்வியில் முடியும் இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம், தமிழர்களுக்கான புதிய அரசியல் முறை பற்றிய அவசியத்தை வலியுறுத்தியே முடிவுக்குள் செல்கிறது. இங்கு நாம் ‘மெளனம்’ என்ற சொல்லாடலைவிட ‘தோல்வி’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் சூழலென்பது, அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றைக் காணும் வாய்ப்புக்களை போராட்ட வழி நெடுகிலும் வலிந்து உதாசீணப்படுத்திக் கொண்டு, இராணுவ பலத்தினூடாக யுத்த களத்தில் தீர்வு காணுவதை தமிழ்ச்சமூகம் சாத்தியமாக்கிய காரணமே ‘தோல்வி’ என்ற தார்மீகப் பொறுப்பாகும். தோல்விக்கான காரணம் பற்றிய கதையாடல் தமிழ்ச்சமூகத்தின் உள் கூறாகும். அது பற்றிப் பேசுவதும் அவசியமும்கூட, அதே சமயத்தில் பொதுவெளியில் பொதுப்புத்தியில் நாம் கதையாடும் விதம் வேறுவிதமாக இருக்கும். இன்று சிங்களத்தேசியத்தின் மேலாதிக்கம் தமிழ்த்தேசியத்தின் மீது எப்படி கட்டமைக்கப்படுகிறதென்பதைப் பேசிவதே கட்டுரையின் விரிவாக்கமாகும்.

90 களின் தொடக்கத்தில், மாகாண சபை என்ற தீர்வு என்ற தமிழர்களுக்கான அதிகார அலகொன்றினை மூன்றாம் தரப்பின் தலையீட்டில் கண்டடைந்த பின் தமிழ் அரசியலுக்குள் எழுந்த கோட்பாட்டுத் தத்துவம், ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ ஆகும். யுத்த தோல்வி ஒன்றுக்குப்பின், 2009 ஆம் ஆண்டிற்கு பின்னான காலத்தில் எழுந்த கோட்பாட்டுத் தத்துவம், ‘இரு தேசம் ஒரு நாடு’ ஆகும். இங்கு மிக கூர்மையாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய இரு புள்ளிகளுக்கு இடையில் அது வாழ்வும் இறப்புமான வேறு தெரிவுகள் அற்ற சூழலைக் கொண்டிருந்த தமிழ்ச்சமூகம் அவதானிப்பு இன்றி எதிர்வினைக்குள் சிக்கிக் கொள்கிறது. அதே சூழல் மறுதரமும் வேறு தெரிவுகள் இல்லாநிலையில் இவ்விரண்டு கோட்பாடுகளும் இலங்கைக்குள்ளான தமிழர்களுக்கான அரசியல் தீர்வைக் குறிக்கின்றன. இவை ஐக்கியத்தையும் பிரிந்து செல்லாத நிலைப்பாட்டையும் இறுக்கமாக, ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறது. இந்த இரு கோட்பாட்டுத் தத்துவத்தின் மீதான பொதுப்புத்தியில் மேற்கொள்ளப்படும் பொருள் கொள்ளல், விளக்கம் கோருதல் என்ற நிகழ்வின் இரு பக்க எதிர்வினையைத் திறனாய்வுக்குள் கொண்டு வர வேண்டியிருக்கிறது. அதே சம தளத்தில், இரு கட்சிகளுக்கும் உள்ளே இக்கோட்டுபாட்டுத் தத்துவ சொற்கள் மீதான புரிதலையும், தேசிய அளவிலான சிங்களத்தேசியத்தின் புரிதலையும் புரிய வைப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்ற கோட்பாட்டுத் தத்துவத்தில் வரும் ‘மாநிலம்’ என்பது இலங்கையைப் பொறுத்தமட்டில் இல்லாத சொல், அது கண்டடையாத தீர்வொன்றை சுட்டி நிற்பதான மயக்க நிலையைக் கொண்டிருக்கிறது. இந்த கோட்பாட்டுத் தத்துவ சொற்களுக்குப் பின்னாடி நடக்கின்ற கதையாடலில் 13வது திருத்தச் சட்டம் என்பதே தொடக்கமாக அக்கட்சியும் அதன் தலைமையும் கொண்டிருக்கின்றன. 13வது திருத்தச் சட்ட மூலத்தினூடாக மாகாண சபை அதிகார அலகு கண்டடையப்பட்ட தீர்வாகும். ஆகவே, மாகாண சபை அதிகார அலகை ஸ்திரப்படுத்தும் செழுமைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட கோட்பாட்டுத் தத்துவமாக, ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ இருக்குமாயின், அது, ‘மாகாணசபையில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்பதே காலமும் தமிழ் மக்கள் உணர்வும் நெருக்கமாக நிற்கும் கோட்பாட்டுத் தத்துவமாக பொருள் கொள்ளப்பட்டு, தமிழ் மக்கள் மனங்களில் நிரந்தர இடமொன்றை நோக்கும். அதில் இருந்து இந்த கோட்பாட்டுத் தத்துவமானது தேர்தல் அரசியலுக்குப் பயனுள்ளதாக மாற்றமடையும்.

மறுபுறத்தில், தேசிய அரசியலில் சிங்களத்தேசியத்தின் நம்பிக்கையையும், கூட்டாளித்தனம், சகோதரத்துவம் போன்ற கூறுகளில் அந்நியோன்யத்தை கட்டியமைக்கப்படும் என்பதை பொருள் கொள்ளப்படலாம். இந்தச் சூழலில் இந்தக் கோட்பாட்டுத் தத்துவம் தன் மீதான வாரிந்து நிற்கும் கட்சிக்கான சரியான விளைவைக் கொடுத்திருக்கலாம். ஆனால், சிங்களத்தேசியத்தின் எதிர்வினையாற்றம் ஏதுமற்று மெளனமாக காலங்கள் கடந்து செல்வதால் தமிழ் மக்களின் மனங்களில் எதிர்வினைத் தன்மையைக் இக்கோட்பாட்டுத் தத்துவமானது சேகரிப்பதாகக் கருத வேண்டியிருக்கிறது. இக்கோட்டுபாட்டுத் தத்துவத்தின் மீதான சிங்களத்தேசியத்தின் பொருள் கோரல் இல்லாமல் சிங்களத்தேசியம் தன் கிளைகளை தமிழ் நிலங்களில் ஸ்தாபிப்பதுவும் ஸ்திரப்படுத்துவதும் இக்கோட்டுபாட்டுத் தத்துவத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையின் மீதான கேள்வியை வலுவாக ஏற்படுத்துகிறது. இந்தச் சூழலில் இக்கோட்பாட்டுத் தத்துவக்குரிய கட்சி சிங்களத்தேசியத்தின் தேர்தல் சின்னங்களில் தேர்தல் போட்டிகளில் கலந்து கொள்வதும், இக்கோட்பாட்டுக் கட்சியில் இருந்து பிய்த்தெடுக்கப்பட்டவர்கள் பிரதேச சபை தேர்தலில் சிங்களத்தேசியத்தின் பெயரில் போட்டியிடுவதும், அவர்களின் வெற்றியில் பிரதேச சபை ஆளுமைக்கு வருவதும், அவ்வுறுப்பினர்கள் திரும்பவும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவதும் தமிழ் மக்களின் மனங்களில் நிலையான, ஸ்திரமான, நம்பிக்கை அளிக்கக்கூடிய கருத்தினை இக்கோட்பாட்டுத் தத்துவத்தின் மீது பொருள் கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்துகிறது.

‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ வார்த்தைக் கூட்டமைப்பை தமிழகத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்திடம் இருந்து கடனாகப் பெறப்படுகிறது. அதில் எந்தவித மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படாமல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வார்த்தைகள் கவனத்தில் கொள்ளப்பட்ட ஈர்ப்பு, தமிழகத்தில் ‘திராவிடம்’ என்பதில் தத்துவார்த்த உருவாக்கத்தையும் தொடர்ச்சியையும் இலங்கைத் தமிழ் அரசியல் கவனிக்க, பேண மறுத்து நிற்கிற சூழலைக் காண்கிறோம். அதுவும் குறிப்பாக, ‘ஈழம்’ என்ற சொல்லின் மீதான தொடர்ச்சியைப் பேணும் சூழல் கட்டமைக்கக்கூட இந்த கோட்பாட்டுத் தத்துவம் முயலாமல் தனிமையைப் பேண அது சிறுமையாக வலிமை குன்றியதாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் என்பது போலவே, இங்கும் வலிமைமிகு தொடர்ச்சியை கட்டமைத்திருக்க முடியும். (தொடரும்)

Leave a Reply