கோழிக்குழம்பும் அது சொல்லும் கதையும் நாங்களும்!

கோழிக்குழம்பும் அது சொல்லும் கதையும் நாங்களும்!

இன்று கோழிக்கறி வைப்பதற்காக, கடையில் இருந்து சின்னக்கோழி, அதாவது, முட்டைக்காலம் முடிந்த கோழி சின்னதாக இருக்கும். அதன் இறைச்சி ‘பிறையிலர்’ கோழி மாதிரி இல்லாமல் ஊர்கோழி மாதிரி இருக்கும். இதனால் ஊர்கோழி இறைச்சிக்கறிக்கு மாற்றீடாக இந்தக் கோழி பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்தக் கோழி இறைச்சி, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமானதாக இருப்பதில்லை. இதனுடன் ஐந்து தனிக்கோழிக்கால்களும் வாங்கி வந்திருந்தேன்.

அனேகமாக, வெளியூர் அதாவது அமெரிக்காவுக்கு கிழமைப்பயணம் சென்றுவிட்டு வந்த தருணங்களில் இந்தக்கோழியை கறிக்கு ஏற்றவாறு தயாரிப்பது நானாகத்தான் இருக்கும். இது ஒரு ஒத்துழைப்போ? அல்லது வேறொரு எதிர்ப்பார்ப்புக்காக செய்வதோ இல்லை. மாறாக, குடும்ப உறுப்பினர்களின் நலம் கருதியே செய்வதாக இருக்கிறது. இதைச் சமையல் அதிகாரப் பொறுப்பாளரும் செய்து கொள்வதும் நடைமுறையில் கவனமெடுப்பதுவும் சிறப்பான விடயமாகும். ஆனால், இன்று கோழி வெட்டத்துவங்கிய நேரம் வெறும் தேயிலைத் தண்ணியைத் தந்துவிட்டு, தொலைபேசியை எடுத்துக் கொண்டு உள்ளாற சோபாவில் உட்கார்ந்து கொண்டு யாருடன் கதையாடலுக்குள் மூழ்கிவிட்டாள். கொஞ்சம், யோசித்துப் பாருங்கள் என் மனநிலைமை எப்படி இருந்திருக்கும்? காலமும் அதன் முதிர்ச்சியும் வாழ்க்கையில் நிறையக் கற்றுத் தந்திருக்கிறது. அதுவும், இலங்கைத்தமிழ் அரசியலும் அதில் நானும் ஓர் பங்காளனாக இருந்து கற்றுக் கொண்ட அனுபவக்கற்றல் மனக்குதிரையின் கடிவாளத்தை இறுக இழுத்து வேறு திசைவழியே திருப்பியது. இதில் உதயமானதுதான் சமூக அக்கறைக் கட்டுரை எழுதுவதற்கான யோசனையாகும்.

முதல் படத்தில், கோழிக்கறி தயார் செய்த பின்னான நிலை. இடப்பக்கம் இருப்பது குழம்புக்கான கொழுப்பு நீக்கிய இறைச்சி, வலது பக்கம் இருக்கும் படத்தில் இருப்பது கொழுப்பும் ஐந்து காலிருந்து கழற்றிய தோலுமாகும். அந்தச் சின்னக்கோழியின் தோல் கழற்றிய நிலையில்தான் விற்பனைக்கு வருகிறது. இங்கு மிக முக்கியமானது இறைச்சிக்குள் இருக்கும் கொழுப்பு பற்றிய கதையாடல்தான்.

பொதுவாக, வெளியில் இருக்கும் கொழுப்பை இலகுவாக அகற்றிவிட முடியும். முழுக்கோழியை வாங்கும் கடையில் சின்னச்சின்னத் துண்டுகளாக வெட்டித் தரும்படி கேட்கிறோம். அவர்களும் வெட்டித் தருகிறார்கள். அவர்கள் அந்தக் கோழியை வெட்ட எடுக்கும் பொழுது பார்த்தீர்களானல் அந்தக் கோழியில் சில இடங்களில் கொழுப்பு படர்ந்திருப்பதை அவதானிக்க முடியும். அதை அவர்கள் வெட்டும் பொழுது தவிர்ப்பதில்லை. அதை அப்படியே எடுத்து வந்து கழிவிப்போட்டு குழம்பு வைப்பதைப் பல வீடுகளில் பார்த்திருக்கிறேன். அது கூடாதென்பதுதான் என் கருத்து.

அந்தக் கோழி இறைச்சித் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கொழுப்பு படிமானங்களை அகற்ற வேண்டும். இதொரு மெனக்கிட்ட வேலைதான். உங்கள் மனதின் குரல் கேட்கிறது. அந்தப் பழமொழியும் நாக்கு நுனிக்கு வந்திருப்பதுவும் புரிகிறது. பரவாயில்லை தொடர்ந்து என்னுடன் பயணியுங்கள். எப்படியும் அரசியல் தீர்வு வாங்கித் தருவேன். இந்தக் கோழிக்குழம்பு முடிகிறதென்றால் அதென்ன முடியாத விசயமா?

இந்தக் கோழிக்கால் விவாகாரம் வேறு விசயம். அது தமிழ்த்தேசியம் பேசுபவர்கள்போல் வெளியில் ஒரு மாதிரியும் உள்ளே வேறு மாதிரியுமாக இந்தக் கொழுப்பும் இருக்கும். வெளிக்கொழுப்பு அகற்றிய பின் இறைச்சியை கீறும் பொழுது உள்ளே சில இடங்களில் கொழுப்புப் படிமங்கள் இருப்பதை அவதானிக்க முடியும். இவற்றையும் அகற்ற வேண்டும். சில நேரங்களில் கோழிக்கால்களை துண்டாக வெட்டிக் கொண்டு குழம்பு வைக்கும் பொழுது இந்தக் கொழுப்பும் கறிச்சட்டிக்குள் கறியாக மாறி விடுகிறது. இதனால், இக்கொழும்புகளையும் நாங்கள் சாப்பிட்டுக் கொள்ளும் சர்ந்தப்பம் ஏற்படுகிறது. ஆகவே, கொழுப்புகளை அகற்றுவதற்கு செலவிடும் நேரம் பற்றிச் சிந்தனையைச் செலவழிக்காமல் அந்த நேரத்தை இந்தக் கொழுப்பு அகற்றுவதற்கு பயன்படுத்துங்கள் சிறப்பாக இருக்கும்.

பெண்களோடு சமையல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கான அரசியல் கதையாடல் எதற்கு என்பது இப்பொழுது புரிந்திருக்கும்? இந்தப் பெண்டாட்டிகள் கூடுதலாக சமயப் பற்றாளர்களாக இருந்து விடுகிறார்கள். அப்படியான சூழலில் பொதுவாக இறைச்சிக் குழம்பு வைக்க வற்புறுத்தாதீர்கள். அவர்கள் கொழுப்போடு கறியைத் தயார் பண்ணித் தருவார்கள். பின்னாடி கொலஸ்ரோல் அரசியல் பேச்செழும் பொழுது ‘கடவுள்’ தண்டித்துவிட்டதாக கதையும் விடுவார்கள். ஆகவே, வாழ்வும் இறைச்சிக் குழம்பும் வாழும் நாளும் எண்ணிக்கைக்கு மிக முக்கியமானது. எல்லாத் தயாரிப்புக்களுக்கும் தயாரிப்பாளர்களால் முடிவுத்திகதி கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், மனிதர்களுக்கு அப்படியில்லை. அந்த முடிவுத்திகதி என்பது அவரவர் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் தலையெழுத்து என்றும் ஓர் அடையாளத்தையும் ஒட்டி விடுகிறார்கள்.

Leave a Reply