ஜெனிவா அறிக்கையும் : தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளும்!

இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாயவினால் அறிவிக்கப்பட்ட பொருளாதார அவசர காலநியைத் தாண்டி பெரிதும் தமிழ் அரசியல் பரப்பை, இந்த பெருந்தொற்று துயர காலத்தில் அதுவும் ஐ.நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலின் ஜெனிவாக் கூட்டத் தொடருக்கான சூழலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் கூட்டுறுப்புக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் கருத்து முரண் பிணக்கு பெரும் சலசலப்புக்குள், முணுமுணுப்புக்குள், கருத்துத் தெறிப்புக்குள் உட்படுத்தியிருக்கிறது. இந்தக் கருத்து முரண் பிணக்கானது, வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத் தொடரில் தமிழ்த்தேசியக்கட்சிகளினால் தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கத் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் மீதான கூட்டுக்கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட முரண் பிணக்கே இந்தப் பரபரப்பு அரசியல் சூழலுக்குக் காரணமெனச் செய்தி மேலும் கூறிச் செல்கிறது.

தமிழ் பேசும் மக்களின் அரசியல்த் தீர்வு தொடர்பாக, பொதுஜன பெரமுனா தலைமையிலான கூட்டுக்கட்சிகளின் அரசாங்கம் எந்தவொரு ஆக்கபூர்வமான நிலைப்பாட்டையும் இதுவரை வெளிப்படுத்தியதில்லை. 13வது திருத்தத்திலுள்ள அரசியல் அதிகாரங்களை தொடர்ச்சியாக கரைப்பதிலும், மாகாண சபை முறையையே இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளையே செய்வதாகவே இந்த அரசாங்கம் கொண்டுள்ளது. இந்த ஆளும் கூட்டுறவுக் கட்சிகளுக்குள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், வெளி ஆதரவு நிலையில் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் இருக்கிறது.

இந்த ஜெனிவாவில் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சின் கூட்டத் தொடரை எதிர்கொள்ளும் முகமாக இலங்கை அரசாங்கம், சில அதிரடி முடிவுகளை எடுத்திருந்தது. அதில் மிக முக்கியமானதாக வெளிநாட்டு அமைச்சர் மாற்றமாகும். இம்முடிவுக்குப் பின்னான இலங்கை அரசியல்க்களத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், அதனால் தமிழ்த்தேசிய, தமிழீழத்தேசிய அரசியல்ப் பரப்புகளில் நகர்த்தப்பட்டிருக்கும் பக்க விளைவுகளும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சராக ஜீ.எல்.பிரீஸின் இடம் மாற்றத்தின் இராஜதந்திரத்தின் வெற்றியாகவும் நோக்கப்படுகிறது. இதற்கான பலாபலனை அமைச்சர் ஜீ.எல்.பிரீஸ் அறுவடை செய்யத் தொடங்கியிருக்கிறார். அதற்காக, அமைச்சர் ஜீ.எல்.பிரீஸ் முதலில் தேர்ந்தெடுத்த புள்ளி, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உதவி வெளிவிவாகாரச் செயலாளர் எம்.ஏ.சுமத்திரன் ஆகும். இதனால் உள்நாட்டில் இருந்தெழும் ஜெனிவாவுக்கான எதிர் அலையை அடக்கியதாகக் காணப்படுகிறது. இந்த தெற்கு அரசியலின் மிகப்பெரிய சாதுரியமான அரசியல் சாணக்கியத்தினால் மீண்டுமொரு தடவை தமிழ்த்தேசியம் மீதான பலமான அரசியல்த் தாக்குதலாகக் கருதுகிறோம்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கூட்டுறுப்புக்கட்சிகளாக இலங்கைத்தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியவை இருக்கின்றன. இதைவிடுத்து தமிழ்த்தேசியக்கட்சிகளாக அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசியக்கட்சி ஆகியவை இருக்கின்றன. உண்மையில் இக்கட்சிகள் அனைத்தும் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்துகின்றன என்பதற்கான தர்க்க ரீதியான குறியீட்டு கருத்தியலை நடைமுறை செயல்பாட்டில் முன்வைத்திருக்கின்றன என்பதில் நீண்ட விவாதமாகும். இதைவிடுத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துவக்கட்சி போன்ற கட்சிகள் தமிழ்த்தேசியக்கட்சிகள் என்ற சொல்லாடலுக்குள் ஊடகங்களாலும், பிற கட்சிகளாலும் முன் நிறுத்தியதைக் காண முடியவில்லை.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலின் பொழுது முதலமைச்சர் வேட்பாளராக கொண்டு வரப்பட்ட முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனின் வருகைப் பின்னான காலங்களில் தமிழ்த்தேசியத்தின் பேரில் இணைக்கப்பட்ட, தமிழீழத்தேசியத் தலைமையினால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் சுனாமி, புயல், அடைமழையென பெரும் குழப்பமே நிகழத் தொடங்கியது. தமிழ்த்தேசியத்தின், தமிழரசுக்கட்சியின், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமையைக் கைப்பற்றுவதற்கான போட்டியே உள்ளாற எழுந்த சூறாவளி. இச்சூறாவளியே தமிழ்த்தேசியத்தை உடைவுக்குள் தள்ளியது.

தமிழீழத்தேசியத்தின் தயவில், தமிழ்த்தேசியக்கட்சிகளென தங்களால் கூவிக் கொள்ளப்படும் இக்கட்சிகள் பாராளுமன்றக் கதிரைகளைப் பங்கு போட்டுக் கொள்கின்றன என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது. இதில் இருந்து ஜெனிவாவில் நடக்கின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத் தொடருக்காக அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இக்கட்சிகளுக்கிடையே இந்தத் தடவை அறிக்கை தயாரிப்பதில் ஏற்பட்ட இழுபறியே முரண் பிணக்கொன்றை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு தமிழரசுக்கட்சியின் உதவி வெளிவிவாகாரச் செயலாளர் எம்.ஏ.சுமத்திரனின் போக்கும் செயல்பாடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் பெரும் சலசலப்பையும் அது கூட்டுறுப்புக்கட்சிகளுக்கிடையே முரண் பகை வரைக்கும் கொண்டு செல்கிறது. இந்தக் காரணமே, தமிழரசுக்கட்சியின் உதவி வெளிவிவாகாரச் செயலாளர் எம்.ஏ.சுமத்திரனை ஓரம் கட்டுவதற்கான சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து காய்கள் கூட்டுறுப்புக்கட்சிகளினால் நகர்த்தத் தொடங்கப்பட்டிருந்து. இதற்காக, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருந்து தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்து வெளியேறி தமிழ்த்தேசியக்கட்சி ஸ்ரீகாந்தாவையும் மீண்டும் இணைத்து தமிழீழ விடுதலை இயக்கம் தலைமையில் கூட்டணைவுக் கூட்டம் நடாத்தப்பட்டது. இதில் தமிழரசுக்கட்சியின் உதவி வெளிவிவாகாரச் செயலாளர் எம்.ஏ.சுமத்திரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். இப்படியே உடைவை நோக்கி நாட்கள் நகரத் தொடங்குகின்றன.

தமிழீழத்தேசியம் மெளன நிலைக்கும், உயிர்ப்புக்கான இயங்குவதற்கான பேச்சுக்குக்கூட நிர்கதி நிலையில் தமிழ்த்தேசியத்தின் மறைவில், நிழலில் நாட்களை நகர்த்த கடந்த தேர்தலில் ‘இரு தேசம் ஒரு நாடு’ கோட்பாட்டுத் தத்துவத்தின் மீதும், முள்ளிவாய்க்கால் சத்தியப்பிரமாணத்தின் வழியே தமிழ்த்தேசியத்தின் யாழ் மேட்டுக்குடி மேலாதிக்கத்தின் ஏக வாரிசு இலங்கைத்தமிழரசுக் கட்சியின் நம்பிக்கையற்றச் சூழலைக் கருதியே பாராளுமன்றத்திற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழீழத்தேசியம் அனுப்புகிறது.

தமிழரசுக்கட்சியின் உதவி வெளிவிவாகாரச் செயலாளர் எம்.ஏ.சுமத்திரனால் தயாரிக்கப்பட்ட ஜெனிவாக்கூட்டத் தொடருக்கான அறிக்கை, போரில் ஈடுபட்ட இரு தரப்பினர், இலங்கைப் பாதுகாப்புப்படை, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதும் போர்க்குற்ற விசாரணையை கோருவதாக அமைந்திருப்பதாக தமிழீழத்தேசியத்தரப்பினால் குற்றம் சாட்டப்படுகிறது. இதனூடாக, வரும் தேர்தல்களை கருத்தில் வைத்துக் கொண்டும், தமிழரசுக்கட்சியின் நாட்டாண்மைத் தன்மைக்கும், எ.ஏ.சுமத்திரனின் மேலாதிக்கப் போக்கிற்கும் ஆப்பு இறுக்குவதான சந்தர்ப்பமாக இந்த ஜெனிவா அறிக்கைப் போர் மற்ற தமிழ்த்தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தமிழ்த்தேசியக்கட்சிகளை பழமைவாதக்கட்சிகளான அகில இலங்கை காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக்கட்சிகள் மேலாதிக்க போக்கில் தேர்தலில் தங்கள் கட்சியையும் சின்னத்தையும் பயன்படுத்துவதன் ஊடாக மக்கள் ஆதரவு தங்களுக்குத்தான் இருப்பதாகக் காட்டிக் கொள்ள முற்படுகின்றன. அகில இலங்கை காங்கிரஸ், தன் மாற்றுக்கட்சியானதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும், இலங்கைத்தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் பதிவு செய்யப்பட்டக் கட்சியாக மாற்றுவதற்கு எந்தவொரு முகாந்திரத்தையும் கொண்டிருக்கவில்லை. இச்சூழலில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள்ளும் ஜெனிவா அறிக்கை கொதிப்பையும் முரண் பிணக்கையும் தோன்றுவித்திருக்கிறது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கூட்டுறப்புக்கட்சிகளும், தமிழீழத்தேசியத்தரப்பும் வெளிச்சூழலில் இலங்கைத்தமிழரசுக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றன. இச்சூழலில், தமிழீழத்தேசியம், தமிழ்த்தேசியத்திற்கு அப்பால் இயங்குகின்ற தமிழ்க்கட்சிகளின் நிலை என்னவென்பது முக்கியமாகிறது. இக்கட்சிகள் ஆளும் தரப்பு ஆதரவு நிலையில் உள்குத்து வெளிக்குத்து காரணமாக சிதலமடைந்த போக்கில் இருக்கும் தங்கள் ஆதரவு தளத்தை மேலிழுத்து கட்டுவதற்கு மக்களின் இன்றைய வெதும்பல் மனப்போக்கைப் பயன்படுத்த தயாராக இருக்கின்றனவா? என்பதும் பெரும் கேள்விதான். இக்கட்சிகளின் கைகளின்தான் மீண்டும் நாட்டாண்மை மேலாதிக்க இலங்கைத்தமிழரசுக் கட்சியிடம் தமிழ்த்தேசியத்தின் பேரில் தமிழ் மக்களின் ஏகத்தலைமையை கையளிக்கும் நிலை தங்கியிருக்கிறது. இந்த உள் அரசியல் பகை முரண் பிணக்குகளுக்குள் சேதாரப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் அரசியலும் வாழ்வும் கரை சேரும் வழி தெரியாமல் கடலில் காற்றினால் அலைக்கழிக்கப்படும் ஓடம் போல் இருக்கிறது.

ஆளும் பொதுஜன பெரமுனாவுடான நெருக்கமொன்றை ஏற்படுத்தும் போக்கு, தமிழரசுக்கட்சியின் உதவி வெளிவிவாகாரச் செயலாளர் எம்.ஏ.சுமத்திரனால் முன்னெடுக்கப்படுவதும் அதற்கான காய் நகர்த்தலும் நெருங்கிப் போவதுமான அரசியல் ஆளும் தரப்பு தமிழ்க்கட்சிகளிடத்தில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜெர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டீன் ஜெயா, தன் முகநூல் பின்னோட்டமொன்றில்; //சுமந்திரனுக்கு தமிழ்மக்களை ஆட்சி செய்வதற்கு எந்த தகுதியும் கிடையாது..! முதலில் அவரை அரசியலில் இருந்து வெளியேற்றுங்கள்..!// எனக் குறிப்பிடுகிறார். ஆளும் தரப்போடான உறவுக்கான அரசியலை கண்டடைத்திருக்கும் தமிழ்க்கட்சிகள், தமிழ் மக்களின் அன்றாட வாழ்விலும், பாராம்பரிய வாழ் நிலம் குறித்தும் அரசியல் அபிலாசைகள் குறித்தும் ஆளும் தரப்பின் பாராமுகத்திற்கும் ஜனநாயக விரோதப் போக்கிற்குமான அறச் சீற்றத்தை வெளிப்படுத்தும் மக்கள் போராட்டங்களைப் பற்றி பேசக்கூட திரணியற்ற, கையாலகாதத்தனத்தையே கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களே! சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்தான்.

Leave a Reply