தனிமனித சுதந்திரமும் தமிழ் அரசியல் சட்டவாக்கக் கருத்தியலும்!

முகநூலில், கனடாவில் இரண்டு தமிழ்ப் பெண்கள் வாழ்விவ் இணையர்களாக இணைந்ததையிட்டெழுந்த வாதப்பிரதிவாதங்களுக்கான கருத்தியல் பதிவொன்றை, Hari Keerthana முன்வைத்திருக்கிறார். அந்தப் பதிவில் அவர் எழுப்பும் கேள்வியாக இந்தப் பந்தி அமைவதாகக் கருதுகிறேன்.

“இந்த வக்கிர சமூக மனநிலையை அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாது.இன, மத , பாலியல் ஒடுக்குமுறைகளோடும் , சமூக அநீதியோடும் ஒரு கலாச்சாரம் இருக்குமென்றால் அதை சீர்படுத்தி செப்பனிட வேண்டும் , இல்லை அந்த கலாச்சாரத்தை குப்பையில் போட வேண்டும் அது தான் அடிப்படை மனிதம்.

ஒரு மனிதர் , தனக்கான பால்நிலையை பால் அடையாளத்தினை, தனக்கான பாலீர்ப்பை தத்தமது தெரிவுகளுக்கு அமைய தேர்ந்தெடுப்பதிலும் நிலையில்லாத இந்த மனிதவாழ்வை தத்தமது இணைகளுடன் வாழ்ந்து விட்டு போவதில் அப்படி என்ன வக்கிரமும் , சீரழிவும் இருக்கிறது.”

மேலும், அந்தப் பதிவில் அவர் குறிப்பிடுகிறார், “1974 ம் ஆண்டே இது உளவியல் சார்ந்த நோய் அல்ல என்றும் , இயற்கைக்கு முரணானது அல்ல என்றும் நிறுவப்பட்டு உள்ளது. (Diagnostic and stastical manual of mental disorders )அதன் பிறகும் தொடர்ச்சியாக இது சம்மந்தமான ஆய்வுகள், கட்டுரைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. பல நாடுகளில் LGBTQIA+ மக்களின் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.”

தோள் மீது தலை சாய்த்து ஆறுதலடைய அல்லது ஆறுதல்படுத்த யாருடைய தோல் என்பது முக்கியமல்ல அதற்கான மனமும் தகுதியும் நம்பிக்கையுமே மிக முக்கியமாகும். இதொரு தனிமனித சுதந்திரம் பற்றியது. அந்த முடிவில் மூன்றாம் தரப்பு தலையிட முடியாது. அது சட்டரீதியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. நானும் அந்த இணையர்களை வாழ்த்துகிறேன்.

வாழ்வின் பங்குதாரர்களாக, தோழியாக, தோழனாக, நல்லது கெட்டதில் உற்ற நண்பனாக, மன இணைவு கொண்டவர்களாக இணையர்களாக இருந்திடுவதில் மாற்றுக்கருத்து வந்திடுமா? என்பது கேள்வியே.ஆனால், திருமணம் என்பதும், அம்மி மிதிப்பதுவும், அருந்ததி பார்ப்பதுவும், அய்யரின் வேத சொற்களும் எங்கனம் கேள்வியொன்றுக்குள் அழைத்துச் செல்கிறது. கட்டுரையாளர் Hari Keerthana, //…இன, மத , பாலியல் ஒடுக்குமுறை…// என ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறார். அய்யர் மந்திரம் ஓதி, மங்கல்யம் கழுத்தில் கட்டிவிட்டால் இணையர்களுக்கான வாழ்வு சிறப்பாகிடுமா? இங்கு அவர்களின் முடிவா? அல்லது அய்யரின் மந்திரமும் மதச்சடங்கா வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. சமூகச்சீர் திருத்தம் எங்கே நிற்கிறது? தங்களது தீர்மான முடிவு மீதான நம்பிக்கையும், அது சுமந்து செல்ல இருக்கும் இலக்குப்புள்ளித் தூரம் கேள்வி நிலைக்குத் தள்ளுப்படுகிறது. காலம் காலமாக பெண்கள் மீதான சமூகத்தின் சட்டவாக்கமும், அதனில் பயணிக்கும் ஆண் மேலாதிக்கப் போக்கும் ஏற்படுத்திய அடிமைத்தனமும் அதன் துரோகமும் வலியும் துயரங்களுமே பெண்களை சினம் கொள்ளவும் கோபம் கொள்ளவும் வஞ்சம் தீர்க்கவும் தள்ளப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம்.

ஆணின் நுகர்வுக் கருத்தியலின் நுண்ணிய உணர்வுத் துகள்கள் இன்றும் பெண்கள் மீது மறுவடிவத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறதெனலாம். நாகரீகம், நவநாகரீகம், கட்டுடைப்பு என்ற சொல்லாடல்களுக்குக் கூடாக ஆண்தன் நுகர்வுக் கலாச்சாரத்தில் பண்பாட்டுக் கலாச்சாரக் காவலாளராக முகமூடி அணிகிறார்கள். இன்றைய அறிவியல் பாசிசம் பெண்கள் மீது தொடர்ந்தும் ஆணாதிக்க கருத்தியலை உட்கார வைத்தே தன் நுகர்வுத் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறது.

இந்த இணையர்களின் இணைவு குறித்து தமிழ் அரசியல் தலைமைகள் தரப்பின் பக்கமிருந்து எந்தவிதமான கருத்துக்களை காணவில்லை. ஆனால், அடுத்த படிநிலைக்குரிய கட்சி அரசியல் செயல்பாட்டாளர்களிடமிருந்து முகநூலில் கருத்துக்களைக் காணக் கூடியதாக இருக்கிறது. அவை கட்சி மட்டத்திலான பொதுக் கருத்துகளாக எடுத்துக் கொள்ள முடியுமா? என்பதும் கேள்வியாகவும் இருக்கிறது. ஆனால், இந்நிகழ்வின் இரு போக்காளர்களும் சமூகம் என்ற தளத்தில் பொதுப்புத்தியில், பொதுவெளியில் பொறுப்புக்கூற கடமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். மேலும், தமிழ் அரசியலுக்குள்ளே இந்நிகழ்வு அமைவதாகவும், அந்நிகழ்விற்குள் இருந்திடும் இணையர்களின் வாழ்வும், கெளரவமும், கண்ணீயமும், செவ்வனே அமைந்திடுவதற்கான பொறுப்பு இந்தத் தமிழ் அரசியலாளர்களுடையது. ‘ஒடிபஸ்’ கிரேக்க துன்பியல் நாடகம். அது உண்மையா? அல்லது உண்மைச் சம்பத்தின் தழுவலா? அல்லது நாடகத்திற்காக உருவாக்கப்பட்ட கதையென்பது தெரியாது. இணையர்களின் நிகழ்வானது நிஜமானது. இன்றென்ற நிகழ்காலத்தின் காட்சி. இதற்கான அரசியலென்ன? அரசியலாளராக இருப்பவர்கள் விடை கொடுத்தாக வேண்டும் அல்லது உலகப் பந்திலுள்ள சில நாடுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பையும் அதற்கான இடத்தையும் நாம் வாழும் சூழலில் கொடுத்தாக வேண்டும். மனதளவிலும் கொடுத்தாக வேண்டும். இங்கு ஆண் பெண் குடும்ப வாழ்வில் ஏற்பட்டிருக்கும் தன்மையே இதற்கான முதல் காரணமாக நோக்கிட விழைகிறேன்.

மனிதர்களின் வாழ்க்கையில் இரு உள்ளங்களை, இரு மனசுகளைத் தவிக்கவிட்டு உடல்கள் இரண்டும் இணைந்து கொள்வது என்பது முரண்கள் நிறைந்த நாட்களை சாத்தியமாக்கும். உணர்வும் உணர்ச்சியும் பொங்கும் மனங்களின் சங்கமம் கட்டிலைத் தாண்டியும் பால்நிலை தாண்டியும் சாத்தியமாகும். சமூக விதி, இயற்கையின் விதி எதுவெனக் கலாச்சார சீரழிவென காவலர்களாக விம்பத்துள் முகத்தை புதைத்தாலும் இந்நிகழ்வுக்கான தேடல் ஏன்? அவசியமாகிறதைச் சொல்லியாக வேண்டும்.

“வேதனை..! சிதைக்க நினைப்பனும்..! சிதையும் கலாச்சார பண்புகளும்..! இனத்தின் மாண்பைக் குறைத்து விடும்..! இன விருத்தி..! கேள்விக்குள்..! இது தேவையானதா என்பதை எமது சமூகம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்…!”

ஓர் அரசியல் பிரமுகரின் உள்ளக்குமறல் இது. நாட்டு விடுதலையைப் பற்றிப் பேசிய தமிழ் அரசியல் பெண் விடுதலையைப் பற்றி எந்தவொரு வார்த்தையும் பேச முற்படவில்லை. ஆணாதிக்க மேம்போக்கான ஆண் அரசியல் தலைமைகள், அரச அதிகாரம் பற்றி மட்டுமே கண்ணாய் இருந்தனர். பெண்கள் பயன்பாட்டுத் தளத்தில் உபயோகப்படுத்தப்பட்டார்கள். போர்க் களத்தில் முன்னரங்கத்தில் நிறைந்திருந்த பெண்கள், போர் நிறுத்தப்பட்ட பொழுது எங்குமே தமிழ் அரசியலில் காண முடியவில்லை. இது பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மனித உற்பத்தி என்றவுடன் பெண்கள் மீண்டும் வீட்டுச்சூழலில் குழந்தை வளர்ப்புத் தொழிலாளர்களாக குத்தகைக்கு இந்த ஆண் அரசியலாளர்கள் வேட்டியைத் தூக்கி மடிச்சுக் கட்டிக் கொண்டு கிளம்பிடுகிறார்கள்.

ஆயுதப் போராட்ட அரசியலுக்குள் உள்வாங்கப்படுகின்ற பெண்கள், ‘தோழமை’ மீதான நம்பிக்கையின் அடிப்படையில் வீட்டைவிட்டு வெளியில் வருகிறார்கள். அச்சூழலில் குடும்பக் கட்டுமான வாழ்வியலில் ஒடுக்கப்பட்ட மாந்தர்களாகவே பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் விடுதலைப் பற்றியும், அதற்கான வழி வகைகள் பற்றியும் பெரியார் தொடங்கி சமூக ஆர்வலர்கள் வரை குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள். இத்தருணத்தில் இலங்கையில் தமிழர் அரசியலில் மேலெழும் ஆயுதப் போராட்டத்திற்கான நாம், ‘மெழுகுவர்த்தித்தன்மை’ அற்றவர்களாக காணப்படுகிறோம். மெழுகுவர்த்தியானது தன்னை இழந்து மற்றவர்களுக்காக ஒளியூட்டுகிறது. ஆனால் நாம், அக்கினியில் இருந்து பிறப்பெடுக்கும் பீனிக்ஸ் பறவையை புரியாணி போட்டுத் தின்கிற உருத்திராட்சை மாலை அணிந்த பூனையாக இருந்து விடுகிறோம். ஊர்மிளா தொடங்கி கல்பனா வரை ஆயுதப்போராட்ட அரசியலில் மோசடி செய்யப்பட்ட, கபாளீகரம் செய்யப்பட்ட பெண்கள் நிறையவே. இச்சமூக மட்டத்தில் திக்குமுக்காடிய பெண்கள் ஆயுதப்போராட்ட அரசியலாலும் ஏறி மிதித்த கதையாகிவிட்டது. இந்தச் சூழலும் ஆயுதப்போராட்டத்தைத் தோல்வி நோக்கி தள்ளியதெனலாம். இந்தப் பெண்களுக்கு இருக்கிற போக்கிடமே சாமியாரவதைவிட வேறு என்ன வழியை நாம் சொல்லியிருக்கிறோம், விட்டு வைத்திருக்கிறோம். இந்நிகழ்வானது தமிழ்ச் சமூகக் கட்டமைப்பு மீதான, ஆண் வகையினரின் கருத்தியலுக்கும், நடைமுறைக்கும், அரசியலுக்கும் எதிரானதாக நாம் ஏன்? பார்க்கக்கூடாது.

“சிதையும் கலாச்சார பண்புகளும்..! இனத்தின் மாண்பைக் குறைத்து விடும்..! இன விருத்தி..!”

அரசியல்வாதியென்றால் அரசியல்வாதி என்பதனை நிருபிப்பதாகவே இந்த அரசியல்வாதியின் வார்த்தைகள். அழகாக இருக்கின்றன. ஆயுதப்போராட்ட அரசியலுக்குள் இருந்து யுத்த களத்திலும், தெருவோரங்களிலும் குற்றுயிராகவும், எரியும் தீயினில் சாகக் கொடுத்த தருணங்களில் மனித உயிர்களின் பெறுமதியும் உற்பத்தி பற்றியும் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்காத தமிழ் அரசியலுக்கும் தலைமைகளுக்கும் முட்டுக்கொடுக்கும் பிழைப்புவாதப் போக்காளர்கள், சுதந்திரம், தனிமனித சுதந்திரம், சமூகநீதி அரசியல் பற்றி தெளிவான கருத்தியல் கொண்டவர்களாக இருந்து விடுவார்களா?

பொதுவாக, இங்கு எல்லோரும் பாலுறவு / ஆழ்தல் பற்றிய புள்ளியில் இருந்து தொடங்குவதாக கருதுகிறேன். பல நேரங்களில் கணவன் மனைவியென்ற இணையர்களுக்குள் மனரீதியான தேடல்களும் அதன் அனுபவங்களில் இருந்தெழும் நிம்மதியும் சந்தோசமும் திருப்பதியும் சேர்ந்து ஓர் பாதுகாப்புச் சூழலைக் கட்டமைப்பதாக இருப்பதை காதலில் இருந்து கலியாணம் வரை பயணப்பட்டு குழந்தைகளோடு நரை கண்டு முதிர் வயது வரை வாழ்ந்த அனுபவங்களோடு இருப்பவர்களாக இருக்கும் நாம் இங்கு இதை விவாதப் பொருளாகக் கொள்ள மாட்டார்கள். இளவயதினர் மட்டுமே இந்நிகழ்வை விவாதத்திற்குள் கொண்டு வருவதற்கான மனநிலையில் இருக்கிறார்கள். கலியுக காலம், கலாச்சாரச் சீரழிவென உலகமே நடுக்கடலில் தாழ்வதாக குரலெழுப்புவார்கள். இவர்கள் பாலுறவு உணர்வுச்சூழலுக்குள் அடியெடுத்து வைத்த கணப்பொழுது தொடக்கம் மன அளவில், சிறு சிறு முயற்சிகள் தேடல்களை மறந்தே போய் தாம் கடந்து வந்த பாதையை மறைந்தே பேச அவர்களது சமூக அரசியல் சொல்லிக் கொடுத்த வெளிப்பாடு. முரண் பாலுறவு சமூகப் பயன்பாட்டு கலைச் சொற்களை கேட்டறியா மாந்தர்களென இவர்கள், தூய்மைவாதத்திற்கான சமூக காவலர்களாக நிறம் காட்டுபவர்கள்.

முக்கியமாக, இனவிருத்தியென்பதற்கும் இந்நிகழ்வுக்கும் என்ன தொடர்பு? எங்கப்பன் ஏழு பிள்ளைகளை தன் முதலீடுகளாக உண்டாக்கியவன் தனிநாட்டு அரசியலில் அவனில்லை. நாம் அனைவரும் நேரடி அரசியலில் ஈடுபட்டவர்கள், நாம் எத்தனை பெற்றுக் கொண்டோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். திருமணமாகாத கட்சித் தலைவனைப் பார்த்து இனவிருத்தி பற்றி என்ன கேள்வி வைத்திருக்கிறீர்கள்? அவரிடம் எதிர்பார்க்காததொன்றை மற்றவரிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம், அறமாக தமிழ் அரசியலில் இருக்குமென்பது கேள்வியாக எழுகிறது?

Leave a Reply