தமிழர்களின் தன்னாட்சிப் பிரதேசம் சிங்கப்பூர் தேசமாக மாறுவதற்கான முன் மாதிரி வரைபு!

தமிழர்களின் தன்னாட்சிப் பிரதேசம் சிங்கப்பூர் தேசமாக மாறுவதற்கான முன் மாதிரி வரைபு!

சிங்கப்பூர் நாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய பதிவொன்றை முகநூலில் பார்க்கும், அதை முழுமையாக வாசிக்கும் மன, சந்தர்ப்பத்தையும் கிடைக்கும் வாய்ப்புப் பெற்றிருந்தேன். அப்பொழுது என் மனதில், நான் கலந்து கொண்ட கதையாடல்களின் விளைவாக எழுந்த எண்ணங்களில் இருந்து இப்பதிவை உருவாக்கினேன்.

சிங்கப்பூர் முன்னுதாரணமாக இலங்கையில் தமிழர்களின் தன்னாட்சி பற்றிய அரசியல் கதையாடலில் முன்வைக்கப்பட்ட ஒன்றாகும். நாம், அப்பொழுது இளவயதினர், இருபது வருட வயதுக்குக் குறைவானவர்களாக இருந்திருக்கிறோம். இன்று நாம், தன்னாட்சி பற்றிய அரசியல் கதையாடலில் பயணித்தவர்களாக, சோர்வுற்றவர்களாக, தோல்வி கண்டவர்களாக, தொடங்கிய புள்ளிக்குக் கீழே இறங்கி நிற்கிறோம். எங்களில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது? நாங்கள் எதை மாற்ற முயற்சித்திருக்கிறோம்? ஏன், பிரச்சினையை நேரெதிராக சந்திக்க தயங்கிறோம்? எம் முன்னோர் தன்னாட்சிக்குள் சிறந்த வாழ்க்கையை, அதற்கான ஆளுமையைக் கொண்டிருக்கவில்லையா? தமிழர்கள் சரியான தலைமையை கண்டடையவில்லை? தமிழர்களின் அரசியல் பார்வை சரியானதாக இல்லையா? சரியான தலைமைகள் உருவாகவில்லையா? தமிழர்கள் வீரமறவர்கள் இல்லையா? தமிழர்களின் தத்துவார்த்தம் பிழையானதா? இப்படி ஏராளமான கேள்விகள்தான் 40 வருடங்களுக்கு பின்னாடி எம்மிடம் மிச்சமாக இருக்கிறது. திண்டோமா? படுத்தோமா? சொத்து சேர்த்தோமோ? என்ற தத்துவார்த்த பேச்சாடலுக்குள்ளாக நோயாளியாக, மனத்திருப்தியின்றி மரணமும் எங்களுடைய அனுமதியின்றியே அழைத்துச் செல்கிறது. நாம், நம் பயண வழி எங்கே செல்கிறது? சரியான தலைமையை கண்டடைவோம். அதனூடாக சிங்கப்பூரை ஒத்த எம் வாழ்வு நிலத்தை நோக்கி நகர்ந்திடுவோம். அது இலங்கைக்குள்ளும் இருக்கலாம் அல்லது வெளியிலும் இருக்கலாம். ஆனால், உள்ளே வெளியே ஆடு புலி ஆட்டம் வேண்டவே வேண்டாம்.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் நகர விரிவாக்கத்தை முன்வைக்கிறேன். மண்டைதீவுப்பகுதியும், அதன் சுற்றுப் பகுதியும் யாழ் மாநகர நிர்வாகத்திற்குள் இணைத்துக் கொள்ளல். யாழ் பொது மருத்துவமனையை மண்டைத்தீவுக்கு நகர்த்துவதும், வடமாகாணத்திற்கான தலைமை மருத்துவமனையாக, நவீன வசதிகள் கொண்டதாக கட்டமைத்தல். பண்ணைப்பாலம் போன்றே மெட்ரோ புகையிரத இணைப்பை, இப்போதைய யாழ் நகரத்திற்கு கொடுத்தல். பலாலி விமான நிலையத்தையும் மண்டைதீவுக்கு நகர்த்தி,யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக உருவாக்குதல் ஊடாக செம்மண் விளைநிலங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும். இதனூடாக மாநகரத்தைக் கட்டுவதனால் புறம்போக்கு பிரதேசமாக தீவுப்பகுதியை பார்க்கும் சூழல் மாற்றமாகி, மாநகர தொழிற்சாலைகளுக்கான வாய்ப்பையும் கொண்டு வருதல் என்பது எமது பார்வை. இக்கதையை காட்சியாக, விம்பங்களின் அசைவுகளுக்கூடாக புதிதாக விரிவாக்கம் செய்யப்படும் யாழ் மாநகரத்தின் அழகை, நாளாந்த செயல்பாட்டை ஒவ்வொருவரும் அவரவர் மனங்களுக்கூடாக கண்டடைய முயலுங்கள். பிரத்தியேகமாக, கீழ் பந்தியில் வரும் அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறு கணப் பொழுதை இதற்காக செலவிட வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

இவற்றிற்கான நிதி பற்றிக் கேள்வி எழும் என்பதையும் நாம் அறிவோம். அதற்கான நிதியை சீனாவிடமும், தொழில்நுட்பத்தையும் பெற்றுக் கொள்ளலாம். அப்படி நடைமுறைப்படுத்தினால், டக்ளஸ் தேவானந்தா சர்வதேச விமான நிலையம் அல்லது அங்கஜன் இராமநாதன் சர்வதேச நிலையமென பெயர் சூட்டுவது அவரவர் கையில் இருக்கிறது.

இப்போதையச் சூழலில், இந்தியா இத்திட்டத்திற்கு நிதியும் தொழில்நுட்பத்தையும் வழங்கினால், சித்தார்த்தன் தருமலிங்கம் சர்வதேச விமான நிலையம் அல்லது எம்.ஏ.சுமத்திரன் சர்வதேச விமான நிலையம் என்றோ பெயர் வைக்கலாம். இதற்குள் யாழ் மாநகர மேயர் மணிவண்ணனுக்கும் சான்ஸ்சும் சந்தர்ப்பமும் இருப்பதாகத் தெரிகிறது. எமக்கு இப்படியாவது மக்களுக்கான நல்லது நடக்குமா? என்பதை பார்ப்பதே எமது அரசியல் ஆகும்.

Leave a Reply