• April 18, 2023

தலைமை என்பது….???

தலைமை என்பது….???
இச்சையால் குதித்து
ஓடுவதில் முந்தி
முந்தியே ஓடி
முட்டையில் புகுந்து
வந்தவர் நாம்
ஆசையும் முந்தலும்
எமது பிறப்பின் ரகசியம்

ஓட்டமும் போட்டியும்
எமது இருப்பின் பிறப்பிடம்
தலைமை என்பது பொது 
இருப்பின் நிலைப்பிடம்.

பெரியதும் சிறியதும்
ஏற்றமும் தாழ்வும்
புனிதமும் தீண்டாமையும்
பிறப்பை அறியா
மாயைகள் இவையே
செல்வமும் அந்தஸ்தும்
இடையில் வருவது
எமது வரவுக்கும் மறைவுக்கும்.
இதற்கு இடமேது
ஆசையும் முந்தலும் 
போட்டியாகவே அமையும்.
முந்தி வந்தால் தலைமை ஆகுமோ....???

இயற்கை உணர்வில்
ஒன்று சேர்ந்து
முரண்கள் களைந்து
ஒன்று கூடி  ஒழுங்கமைத்து 
கூடி வாழ்ந்து 
வாழ்விடம் காப்பதன் 
தேவையே தலைமை.

தெளிவும் சிந்தையும்
அறிவும் ஆக்கத்தால்
முக்காலம் புரிந்து
ஆற்றலோடு வழி அமைப்பது தலைமை.

அன்புடன் அறமும்
அத்துடன் தியாகமும் கொண்டு
மக்களையும் மண்ணையும்
சமநிலை பேணிக் காப்பது தலைமை.

அறிவால் எதிரியை வென்று
ஆற்றலால் நண்பனாக்கி 
மூவாசையினால் அடங்க மறுக்கும்
பேராசை கொண்டோரை
வில்லால் அடக்குவது தலைமை.

தத்துவத்தால் பலரை எழுப்பி
சம தோழர்களாக்கி
தன்னைப்போல் பலரை செதுக்கி 
கருத்தாடலினால் ஒரு நிலை கொண்டு‌
மக்களை செம்மை படுத்தி
பகுத்தறிவுடன்
ஒழுக்கத்தை கொடுத்து
எதிர் காலத்திலும்
நிலைத்து நிற்க தடம் பதித்து செல்வது தலைமை

மேதகு என்பது
குருவை குறிப்பது
தத்துவம் தருபவர் குருவே ஆகும்
அதை செயலில் வெல்வது தலைமை ஆகும் 
தலைமை என்பது இயற்கையின் கொடையே
இயற்கை துணை இருந்தால் தோல்வி ஏது

ஆனால் இங்கு நடப்பது அரசுகளின் போட்டியே
அதிகாரத்தின் ஆசையே.
மாற்றம் கொண்ட தலைமை தேவை
இது நம் மண்ணின் மக்களின் ஏக்கமே. காலங்கள் கடந்தால் கரைந்தே போகும் , நம் வரலாற்றுச் சுவடுகள் மறைந்தே போகும்.

கவிதை : N.R.இராமன் / நம்மொழி

Leave a Reply