பாட்டுக்கு பாட்டெழுதி பாடல் வரி கேட்டாயா? ஊடகம் இங்கு ஏதும் செய்யலையா?

பாட்டுக்கு பாட்டெழுதி பாடல் வரி கேட்டாயா? ஊடகம் இங்கு ஏதும் செய்யலையா?

“ஒரு கூட்டு கிளியாக… ஒரு தோப்பு குயிலாக… பாடு பண்பாடு… இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு… என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்..” என்ற ‘படிக்காதவன்’ பாடல் வரிகளோடு, பசில் ராஜபக்ச, இலங்கை ஆளும் அரசில், நிதி அமைச்சாராக இணைந்து கொண்டதை, ஈழ மக்கள் சனநாயகக் கட்சி முகநூல் கொள்கைப் பரப்புச் செயலாளர் சகாதேவன் நித்தியானந்தன், தன் முகநூலில் பதிவு செய்கிறார். இந்த மனபோக்கென்பது இணைக்க அரசியலின் சித்தாந்த கோட்பாட்டின் உச்ச நிலை வெளிப்பாடாகும்.

1990 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அன்றைய உள்ளக தமிழ் அரசியலுக்குள் நிலவிய சனநாயக மறுப்புகளுக்காக கண்டடைந்த வழியாக பொது எதிரியுடான இணக்க அரசியலூடாக தமிழ் அரசியலுக்குள், தமிழ் நிலம் சென்றடைவது சந்தர்ப்ப காட்சிகளுக்கு நியாயமானதாக இருந்தது. அந்த வழியென்பது உதவியுடான பயணமாக இருக்க, முன்னரங்க நகர்வுக்கான ஆளணிப்பலமென்பது எமதாக வகுக்கப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட விடயமாக இருந்தது. ஆனால், இணக்க அரசியலில் இலங்கை இராணுவ பின்னரங்க செயல்பாட்டாளராகத் தொடரும் சூழலுக்கான ஆளணிப்பலத்தை மட்டும் சென்றடையும் சூழலில் பாராளுமன்ற இருக்கைக்கான சூழலுக்குள் பயண வழி சென்றடைகிறது. இந்த பயண வழி தொடரும் கால அளவிலான மதிப்பீட்டில் தனி நபர் சாதனையாக பிரமிப்பு, அதிசய காட்சிப்படுத்தலைத் தாண்டி ஆண்டவன் ஆண்டவனாக, அனுமான் என்ற பெரிய விம்பத்தில் சங்கமாகும் பொழுது மற்றதெல்லாம் பப்படமாக காட்சிப்படுத்தப்படும் மிதவாத, மேட்டுக்குடி அரசியல் சூழலைத்தான் இந்த ‘இணக்க அரசியல்’ கொண்டு வந்திருக்கிறது.

‘கிழக்கின் யுத்தம்’ என்ற சொல் கொண்டு கிழக்கிற்கான அதிகார அலகு பற்றி பேசும் அரசியலில், ‘இரணைமடு’ குளத்தின் நீரை யாழ் தாண்டி தீவகம் கொண்டேறிட தம் மக்கள் கருத்துக் கேட்கும் ‘இணக்க அரசியல்’, தலைநகருக்குப் பயணப்பட்ட அமைச்சருக்கு செய்தி கொடுத்தனுப்ப வழி நெடுக நெடுந்தொலை தூரம் ஆள் இல்லாப் பயண வழியாக, இணக்க அரசியலும், அபிவிருத்தியும் கானல் நீர்க் காட்சியாக வரலாற்றில் பதிவாகிறது.

விவாதங்களைச் சற்று ஆழமாக அவதானிக்கும் போது ஒரு சிறு குழுவினரின் சந்தர்ப்பவாத அரசியலை மறைத்துச் செல்லும் வகையிலான உணர்ச்சியூட்டும் தந்திரங்களாகவே அவை உள்ளன. ஒருவேளை இத்தகைய வாதங்கள் தேர்தல் அரசியலிற்கு அதாவது வாக்கு வங்கி அரசியலிற்கு உதவலாம். ஆனால் சமூக மாற்றத்திற்கு உதவப் போவதில்லை. பலமான ஜனநாயக வரலாற்றைக் கொண்டுள்ள நாட்டில் ஜனநாயக விழுமியங்களைப் பலப்படுத்திச் செல்லும் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்காமல்

என, ஆய்வாளர் வி.சிவலிங்கம், ‘கிணறு வெட்ட பூதம் வந்த கதை’ என்ற தலைப்பில், ‘அரங்கம் செய்திகள்’ இணைய பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இன்று இலங்கையில் ஆட்சியில் இருக்கும் பொதுஜன பெரமுனா கூட்டுக்குள் சரசரப்புக்கள் தொடங்கிவிட்டதாக அண்மைக் கால ஊடகச் செய்திகள் சுட்டி நிற்கின்றன. இந்தச் சூழலில் பசில் ராஜபக்சவின் ஆளும் அதிகார பரப்புக்குள் நுழைதல் என்பது பல விடைகளற்ற கேள்விகளை தோன்றுவிக்கிறது. இந்தச் சூழல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் அவர்களின் கட்டுரையில் வெளிப்படுத்தும் இலங்கையின் தேசியளவிலான சனநாயகத்தின் உயிர்ப்பு, இருப்பு பற்றிய பயமும் கவலையும் எம்மிலும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது. இந்தச் சூழலில் இலங்கையின் பொருளாதாரம் பற்றி, தமிழீழத்தேசியத்தின் இருப்பின்மைக்கும் பின் இராணுவத்திற்கான தேவையென்பது பற்றிய பேச்செழும் பொழுதுகள் தத்துவார்த்த தர்க்கங்களுக்கூடாக கடக்கின்ற தருணங்களில் இருந்தான் பொருளாதார மீட்சியெழும். சீனாவிடமிருந்து பெறப்படும் கடனும் அதனூடாக கட்டியெழுப்பப்படும் அபிவிருத்தியும் சீனாவுக்கானதாக இருக்கும். அதை நோக்கியே நகரும். உதாரணமாக, அம்பாந்தோட்டை துறைமுகம் என்ற அபிவிருத்தியின் இன்றைய நிலையும், அதற்கான ஆளுமைக் குத்தகையென்பது 100 வருடங்களுக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டிருப்பதை நாம் அரசியல்வாதியாக அல்லாமல் மக்கள் பக்கமாக யோசித்துப் பேசுவோமாயின், வருங்காலம் பற்றிய விவாதங்களில் சனநாயக விழுமியங்களை முன்னிறுத்தும் தேவைக்காக சட்டவாக்கத்திற்கு வெளியே சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அதனூடாக தோழமையையும் கொண்டுவர மக்களோடு சேர்ந்தொரு அரசியலுக்குள் செல்வோம். இந்த சூழலில் இலங்கை சீனாவிடமிருந்து சீனாவின் பொருளாதார வெற்றியின் சித்தாந்த அறிவியலைப் பெற்றுக் கொள்ள முற்படுவதே இலங்கையின் பொருளாதாரம் தன்னிறவை நோக்கி நகரும். சீனாவின் முதலீடு என்பது அதிகாரத்தோடு கூடிய பொருளாதாரமாக, சீனாவின் ஆளுமையை இலங்கை மீது நாளடைவில் கடன் மூலம் ஊர்ஜிதம் செய்யப்படும்.

அந்த ‘படிக்காதவன்’ படத்தில் இன்னொரு பாடலும் இடம் பெறுகிறது. அந்தப் பாடல் வரிகள்; “ஊரத் தெரிஞ்சிகிட்டேன்உலகம் புரிச்சிகிட்டேன் கண்மணிஎன் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிச்சிடுச்சு கண்மணி என் கண்மணி…” எனச் செல்கிறது. ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வுக் காலம் முடிவடைந்த பின்பு அதிகாரமும் ஆட்சியும் கைவிட்டுப்போன பின்பு அடுத்துவரும் தேர்தல் காலத்தில், மேலே உள்ள பாடல் வரிகளோடு மக்களோடு வழிப் பயணம் நெடுகிலும் துணை சென்ற தொண்டன், திரும்பவும் இந்தப் பாடல் வரிகளோடு திரும்பவும் அதே மக்களிடம் அதே தலைவனுக்காக வாக்கு கேட்கும் பொழுது யார் விழிகளிலிருந்து விழிநீர் வரும்?

Leave a Reply