மரணக்குகை

முட்டுக்காடு மெயின்ரோட்டில் இருந்து பிரிந்து மேற்கே போகும் செம்மண் ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்தான் ராஜாத்தினம் .

‘முத்துவேலு வீட்டுக்குப்போய்ச் சேர எப்படியும் அரை மணி நேரமாகும் ‘ என்று நினைத்துக் கொண்ட ராஜரத்தினம் , ரோட்டில் மேற்குப் பக்கமாக வண்டிகள் வருகிறதா ? என்று கிழக்குப் பக்கம் திரும்பிப் பார்த்தான் .

‘ ஒரு சயிக்கிள்கூட காணோம் … இன்றைக்கு நடராசாதான் ‘ மனதில் எண்ணிக் கொண்டவன் வேகமாக நடந்தான் .

பத்து நிமிடம் நடந்து இருப்பான் ராஜரத்தினம் . தன்னைக் கடந்து போன ஒன்றிரண்டு டூவீலரைக் கேட்டுப் பார்த்தான் . யாரும் ஏற்றிக் கொண்டு போகிறவர்களாகத் தெரியவில்லை . மனசுக்குள் திட்டித் தீர்த்துக் கொண்டான் .

சூரியன் ஒரு பனை மர உயரத்துக்கு மேலெழுந்து விட்டான் . எட்டு மணிக்கு முத்துவேலு வீட்டில் ராஜரத்தினம் இருந்தாக வேண்டும் . தோப்புக்குப் போகிறவர்களை ஏற்றிக் கொண்டு டிரக்டர் எட்டரைக்குக் கிளம்பிவிடும் .

சட்டைப் பையில் இருந்த பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்ட ராஜரத்தினம் , வலக்கையில் இருந்த தீக்குச்சியை கீழும் மேலுமாக அசைந்து வீசியவன் ; கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சயிக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு பத்து பன்னிரண்டு வயது சிறுவனைப் பார்த்து உஷாரானான்.

“தம்பி நில்லு…, நானும் வாறன் ‘ என்ற ராஜரத்தினம் , சயிக்கிளின் ஹாண்டிலைப் பிடித்து நிறுத்தினான் . ‘ ‘இல்லை யண்ணே நான் உங்கள வச்சு ஓட்ட மாட்டேன் ” என்று கூறிய சிறுவன், ராஜரத்தினத்தின் பிடியில் இருந்து நழுவிக் கொள்ள சயிக்கிளை அழுத்தி மிதித்தான். ‘எப்படியும் இச்சந்தர்ப்பத்தை விட்டுடக்கூடாது ‘ என்பதில் ராஜரத்தினத்தின் பிடி இறுக்கமாக இருந்தது . சிறுவன் அழுத்தி மிதிக்க , இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான் .

‘ ‘நீ உட்காரு … நான் ஓட்டுறேன் ” என்ற ராஜரத்தினம் , கையில் இருந்த பீடியை ஒரு இழு இழுத்துப்போட்டு வீசினான் .

” தம்பி இறங்கு … நானும் சீக்கிரம் போகணும் ” என்று சயிக்கிளில் இருந்து சிறுவனை இறங்கச் செய்து தான் ஏறி உட்கார்ந்து கொண்டு , ” தம்பி பின்னால ஏறு . எனக்கு நேரம் போகுது . ‘ ‘ எனக் கூறியபடி சிறுவன் ஏறி உட்காருவதைத் திரும்பிப் பார்த்துக் கொண்டு மெதுவாக சயிக்கிளைச் செலுத்தினான் ராஜரத்தினம் .

சிறுவன் ஏறி உட்கார்ந்து கொண்டதும் , ‘ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்யம் இல்லை ஆள …” என்ற பாட்டைப் பாடியபடி சயிக்கிளை வேகமாக மிதித்தான்.

” டேய் உன்னுடைய பேரென்னடா ? ‘ ‘

‘ ‘விஜய் “

“எல்லாம் சினிமாதான்… சீட்டை இறுகப்பிடி, விழுந்து தொலைச்சிடாதே.”

விஜய் இரண்டு கைகளாலும் சீட்டின் பின் கம்பியை பிடித்துக் கொண்டான்.

ராஜரத்தினம் உயரம் சுமராகத்தான் இருப்பான் . சயிக்கிள் ஓட்டும்போது அந்தப் பக்கம் இந்தப் பக்கமெனச் சாய்ந்துதான் ஓட்டுவான் .

முத்துவேலு வீட்டுக்கு முன்னாலே டிரக்டர் தயார் நிலையில் நின்றது . தோப்புக்காட்டுக்குப் போக வந்தவர்கள் ரோட்டோரத்தில் உட்கார்ந்து பீடி பற்ற வைத்துக் கொண்டிருந்தார்கள் . தருமகுலம் மட்டும் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டிருந்தான் .

‘ ‘தருமகுலம் நீயும் முகாமில இருந்துதானே வாறாய் ? ….. இவன் ராஜரத்தினத்தை இன்னமும் காணோம். “

பெரிய இரும்புக் கேட்டைப் பிடித்துக் கொண்டு முத்துவேலு கேட்டதைப் பார்த்துக் கொண்ட தருமகுலம் சிகரெட்டைக் காலில் போட்டு மிதித்து அணைத்தான்.

முத்துவேலுவும் தருமகுலத்தோடு பேசும்போது மரியாதை கொடுத்துப் பேசுவான் . தருமகுலமும் முத்துவேலு மீது மரியாதை வைத்திருந்தான்.

காறித் துப்பிக் கொண்ட தருமகுலம் ரோட்டைக் கடந்து முத்துவேலு நிற்கும் கேட் பக்கம் நடந்து வந்தான் .

” தருமு வண்டியை எடுத்துக் கொண்டுபோய் பார்த்திட்டு வா ” என்ற முத்துவேலு புல்லட் மோட்டார் சயிக்கிளின் சாவியை எடுத்துக் கொடுத்தான்.

முத்துவேலு புல்லட்டை வேறு யாருக்கும் கொடுக்க மாட்டான். தருமகுலம் வேலைக்கு வந்த புதுசில் நடந்த ஒரு சம்பவத்துக்குப்பின் முத்துவேலுக்கு எல்லாமே தருமகுலம் தான்.என்றாகிவிட்டது .

முத்துவேலுக்கு இப்போது முப்பந்தைந்து வயசிருக்கும் . சாராயம் காய்ச்சுவது பிரதான தொழில் . சின்ன வயதில் சாப்பாட்டுக்கு ரொம்பவும் கஷ்டப்பட்டதாகச் சொல்லுவான் . இப்போது நல்ல வசதியாகி விட்டான்.

இரண்டு வருடத்திற்கு முன், ‘தொழில் ரீதியாக இருந்த போட்டியின் காரணமாக நடந்த சண்டையின் போது , கூட வந்த தருமகுலம் புகுந்து முத்துவேலுவை இழுத்துப் போட்டிருக்கா விட்டால் ….’  எப்பவும் முத்துவேலுக்கு நினைப்பு வரும்போது மனம் பகீரென்றிருக்கும் . அந்தச் சமயம் அந்த வாள் வெட்டு தருமகுலத்தின் முதுகை லேசாகப் பதம் பார்த்திருந்தது .

ராஜரத்தினத்தைத் தருமகுலம்தான் முத்துவேலுவிடம் வேலைக்குச் சேர்த்து விட்டவன் . இலங்கை அகதி முகாமில் இருக்கும் அனேகம் பேர் முத்துவேலுக்கு வேலைக்கு வருவார்கள் .

இரண்டு வருடத்தில் ராஜரத்தினம் முக்கியமான ஆளாகி விட்டான் . ராஜரத்தினத்தின் கதை சோகமானது . தொண்ணூறாம் ஆண்டு லண்டன் போவதற்காகச் சென்னைக்கு வந்து சேர்ந்தான். ராஜரத்தினத்தின் மாமா லண்டனில் இருந்தார் . அவர்தான் ஏஜன்சி ஒழுங்கு செய்ததில் இருந்து எல்லாமே.

லண்டன் போகவென்று இரண்டு தடவை மும்பைக்குப் போனவன். முதல் தடவை ஆறு மாதம் மும்பையில் தங்கியிருந்து முடியாமல் போக, திரும்பவும் சென்னைக்கு வந்து விட்டான். இரண்டாம் தடவை மும்பைக்குப் போய் ஏர்போட்டில் போர்டிங் கார்ட் எடுத்து இமிக்கிரேஷனில் மாட்டிக்கொண்டு, ஆறு மாதம் ஜெயில் இருந்துவிட்டு சென்னை திரும்பியவன் வாழ்வில் புயல்தான் .

ஏஜன்சியும் வாங்கிய காசுக்கு கணக்குவிட தொடர்ந்து மாமாவும் உதவி செய்ய முடியாமல் போய் விட்டது .

ராஜரத்தினம் அகதி முகாமிலுள்ள நண்பனைத் தேடிப் போய் வந்தவன் , நண்பனின் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள குடும்பத்துடன் பழக்கமாகி, அவர்களின் மூத்த பிள்ளையுடன் காதலாகி விட்டான் .

கலியாணம் முடிந்தவுடன் மாமாவின் உறவு முற்றிலுமாக நின்று போய் விட்டது . அகதி முகாமில் ராஜரத்தினத்திற்குப் பதிவு கிடையாது . அதனால் அகதிக் கொடுப்பனவு கிடைக்காது . முகாமில் இருப்பதற்கான ஒழுங்கை மட்டும்தான் ராஜரத்தினத்தால் செய்ய முடிந்தது .

தருமகுலம் தொண்ணூறாம் ஆண்டு இலங்கையில் இருந்து அமைதிப் படை திரும்பியபோது கூட இந்தியா வந்து . சேர்ந்தான் . அவன் இருந்த அமைப்பு அமைதிப்படைக்கு உதவியாக இருந்தது .

தருமகுலம் கலியாணம் பண்ணிக் கொள்ளவில்லை. திருமணத்தில் உடன்பாடு கிடையாது . அதற்காகப் பெண் வாடையற்றவனில்லை.

உள்ளே சென்று புல்லட்டை ஸ்டாட் செய்து கேற்றைத் தாண்டி வெளியே ரோட்டில் வண்டியை விட்டான் தருமகுலம். தூரத்தில் காற்றில் சட்டை பறக்க சயிக்கிளில் இராஜரத்தினம் வந்து கொண்டிருப்பது தெரிந்தது .

புல்லட்டை அரை வட்டமடித்துத் திருப்பிய தருமகுலம் , திரும்பவும் தன்னைக் கடந்து வீட்டுக்குள்ளே போவதைப் பார்த்த முத்துவேலு , ” என்ன திரும்பிட்டாய் ? ‘ என்று கேட்டான் .

” சயிக்கிளில் ராஜரத்தினம் வாறர் ” என்ற தருமகுலம் வீட்டு வாசலில் புல்லட்டை நிறுத்திவிட்டுத் திரும்பி ரோட்டுக்கு வந்தான் .

” டேய் தம்பி ரொம்ப நன்றியடப்பா ” என்றவாறு சயிக்கிளில் இருந்து குதித்து இறங்கிக் கொண்டு, விஜயிடம் சையிக்கிளைக் கொடுத்தான் .

“வாங்கண்ணே உங்களுக்காகத்தான் வண்டி பார்த்துக் கொண்டு நிக்குது. ‘ ‘

“என்ன செய்ய தருமு … இங்காலே வாறதெண்டால் உனக்குத் தெரியும்தானே! “

” இரவு தூக்கமில்லபோல இருக்கு . அதுதான் விடிய எழும்ப முடியல என்று சொல்லுங்கண்ணே ? ‘ ‘ என்று தருமகுலம் சிரித்தான் . ‘

“உனக்கெங்க எங்கட கஷ்டம் புரியப்போவுது.நீ தனிக்கட்டை ” என்ற ராசரத்தினத்தின் குரலில் கொஞ்சம் கோபம் கலந்திருந்தது .

“சரி… சரி எல்லோரும் வண்டியில ஏறுங்க… நேரத்தோட போயிடுவோம் . ” என்று முத்துவேலு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் தருமகுலம்.

“தருமு கொண்டுவாறதுக்கு ஆள் ரெடிதானே ? “

” எல்லாம் சொல்லியாச்சு…. மூணு நாள்ல முடியும்… இன்னைக்கு அமாவாசையண்ணே.”

எல்லோரும் ஏறிக்கொள்ள டிரக்டர் கிளம்பியது .

புல்லட்டை எடுத்து வந்த முத்துவேலு , தருமகுலத்திற்குப் பக்கத்தில் நிறுத்திக்கொள்ள , ஏறிக்கொண்டான் . தருமகுலத்தின் தோளில் பெரிய பை . அதன் கனம் தருமகுலத்தின் தோளில் தெரிந்தது .

முகாமிலுள்ளவர்களுக்குப் பக்கத்துக் கிராமங்களில் ஏற்ற வேலை கிடையாது . மழையும் பொய்த்துப்போய் வயல்களும் பாளமாய் வெடித்துப்போக அந்தக் கிராம மக்களுக்கு வேலை இல்லாமல்போய் விட்டது . அவர்களும் வேலை தேடி வெளியூர் போய்க்கொண்டிருக்கிறார்கள் .

பதினைந்து நாளுக்கொரு தடவை சம்பளம் போடும்போது முகாமில் எல்லோரும் இருந்தாக வேண்டும் . அடிக்கடி நடக்கும் செக்கிங் நேரத்திலும் முகாமுக்கு வந்து சேரக்கூடிய மாதிரிதான் வேலைக்குப் போக வேண்டி இருந்தது . இல்லையென்றால் முகாமில் பதிவு வெட்டுப்பட்டு விடும்.

மலைச்சரிவில் உள்ள தோப்புக்கு டிரக்டர் வந்து சேர மதியம் பன்னிரண்டு மணியாகிவிட்டது .

ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்து ஊறல் போட்டுவிட்டுப் போயிருந்தான் தருமகுலம் . ஊறல் அப்படியே பக்குவமாக இருந்தது .

அடுப்பு மூட்டி வேலையைத் தொடங்க அவசரப் படுத்தினான தருமகுலம்.

முத்துவேலு வேலை தொடங்கியபின் , ” வா , தருமு என்னை வீட்டில் விட்டுட்டு வந்திடு ” என்றவாறு கிளம்பி விட்டார் .

மூன்றாவது நாள் மதியம் ஒரு மணி.

தென்மேற்குக் குடாவில் இருந்து கருமேகக்கூட்டம் மேலெழுந்து கொண்டிருந்தது .

சூரியன் தன் பங்கிற்குச் சுட்டெரித்துக் கொண்டிருந்தது . மிகக்குறுகிய நேரத்தில் மேலெழுந்து வந்து கொண்டிருந்த கருமேகக்கூட்டம் சூரியனை சிறைப்பிடித்துக் கொண்டது .

காற்று மௌனமாகியது . மரங்களில் இலைகூட அசையவில்லை .

விலகிக்கொள்ளும் கருமேகக்கூட்டங்களுக்கிடையே ; சூரியன் தான் சிறைப்பிடிக்கப்பட்ட அபாயத்தைப் பூமிக்கு சொல்லிக் கொண்ட மாதிரி சூரியக்கதிர்கள் கோடுகளாக வந்து கொண்டிருந்தன.

கருமேகக்கூட்டத்தின் அரக்கத்தனமான போக்கு கண்டு காற்றும் காணாமல் போய்விட்டதாக உயரே வானத்தில் வட்டமிட்ட கருங்குருவியும் சத்தமிட்டது .

எட்டிப்பார்த்தது காற்று ; தடையேதுமில்லையென்றதும் மெதுவாக காற்று வேகமெடுக்கத் தொடங்கியது. காற்றின் புழுதி வாசனையும் மழை வரப்போகிறதென்பதைக் கட்டியம் கூறிச் சென்றது .

குடிசைக்கு மேல் போடப்பட்டிருந்த தார்சீட் தாளம் போட்டது. சமையல் வேலையில் இருந்த கண்ணகி வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.

காற்றின் வேகம் முந்தானையை அசைத்துப் பார்த்தது . கனமான … பெரிய திரட்சியான மார்பகத்தை தொட்டுத் தடவிச் சென்றது காற்று .

காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திரும்பிக் கொண்ட கண்ணகி , முகத்தில் வந்து விழும் முடியை அள்ளி இறுக முடிந்து கொண்டாள்.

கைகள் இரண்டும் உயர்ந்து தலை மயிர்களை முடிந்து கொள்ளும் போது காற்றின் வேகத்தில் முந்தானை ஒதுங்கிக் கொள்ள, வயிற்றுப்பகுதி பிரமாண்டமாகத் தெரிந்தது.

கண்ணகி மாநிறம் . கொஞ்சம் சதைப்பிடிப்பானவள் . வயிறும் முன் கொஞ்சம் பெருத்ததாகவே இருந்தது .

“கண்ணகி , என்ன மழை வருமா ? ” என்று கேட்டுப் பல்லிளித்தார் பரமசிவம் . பரமசிவத்திற்கு எழுபது வயதிருக்கும். எப்பவும் கையில் பொல்லுடன்தான் திரிவார் .

‘ ‘ என்ன தாத்தா அப்படிப் பார்க்கிறே ? மழை வரும்வராதென்பதெல்லாம் வானத்தைப் பார்த்தால்தானே தெரியும் …” என்று கண்ணகி கோபம் கலந்தாள்.

” இல்ல புள்ள எனக்குக் கழுத்துச் சுளுக்கிப்போட்டுது .. அண்ணாந்து பாக்க முடியாது? உப்ப உந்த மழையெல்லாத்தையும் நம்ப முடியாது .. வாற மாதிரி தெரியும் , பின்ன வாராமல் போயிடும் புள்ள … ” பரமசிவத்தின் பார்வை போகும் திக்கைப் பார்த்துவிட்டு சீலையை இழுத்து விட்டுக் கொண்டாள் .

“கட்டையில போற நேரத்திலயும் தேவையாய்க் கெடக்குது ‘ ‘ என்று முணு முணுத்தவாறு காயப்போட்டிருந்த விறகை எடுத்துவரப் போனாள் கண்ணகி .

காயப்போட்டிருந்த விறகைக் குனிந்து இடது கையில் அடுக்கிக் கொண்டிருந்த கண்ணகியைத் திரும்பிப்பார்த்த பரமசிவம் , ‘ இனிமேல் இதில நின்றால் விறகுதான் வரும்’ என்று நினைத்துக் கொண்டவர் கைத்தடியை முன்னெடுத்து வைக்க ஆரம்பித்தார் .

அடுக்கிக் கொண்டு நிமிர்ந்த கண்ணகியின் முகம் மட்டுமே விறகுக்கு மேலே தெரிந்தது .

மழை லேசாகத் தூறலாக விழத்தொடங்கியது .

விறகைப்போட்ட கண்ணகி கொடியில் காயப்போட்ட துணியை எடுத்து வந்தாள். மழையில் சிறிது நனைந்து விட்டிருந்தாள் .

கண்ணகிக்கு மூன்று குழந்தைகள். மூத்தவள் கல்பனா. பாலர் வகுப்பு படிக்கிறாள். இரண்டாவது சித்ராவுக்கு மூன்று வயது . மூன்றாவது பையன். பிறந்து ஆறு மாதம்தான் ஆகிறது .

மழையோடு காற்றும் சேர்ந்து கொண்டது . தார்சீட்டில் தண்ணீர் ஓடத் தொடங்கியது .

‘ சித்ரா விளையாடப்போனவள் இந்த மழைக்குக்கூட வரயில்ல… எங்காவது ஒதுங்கியிருப்பாள் ? ” என்று நினைத்தவள் சமையலில் மும்முரமானாள் .

சமையல் முடித்த கண்ணகி ; ‘ என்ன இவன் இன்னமும் நித்திரை கொள்கிறானா ?’ நினைத்துக் கொண்டவள் ஏணையை விலக்கிப் பார்த்தாள் . முழித்துக் கொண்டவன் வாயில் விரலை வைத்துக் கொண்டிருந்தான் .

“என்டா பசிக்கலயா ? ‘ ஏணையில் படுத்திருந்த மகனைப் பார்த்துக் கேட்டாள் கண்ணகி , அவள் நெஞ்சு கனத்திருந்தது. சட்டையும் ஈரமாகியது.

காலை பத்து மணியளவில் பால் கொடுத்து நித்திரையாக்கியவள் , மகன் இவ்வளவு நேரமும் பாலுக்கு அழவில்லையென்ற நினைப்புத்தான் கண்ணகியை அப்படிக் கேட்க வைத்தது .

ஒரு விரலை வாய்க்குள் வைத்துக்கொண்டு , மறு கையால் இடதுகால் பெரு விரலை பிடித்துக் கொண்டிருந்தான் சுகந்தன் .

தாயின் குரல் கேட்டு , வாய்க்குள்ள கைவிரலை எடுக்காமல் வலப்பக்கம் இதழ்களைச் சின்ன நகர்வின் மூலம் சிரிப்பை உதிர்த்தான் .

ஏணையின் இருபக்கத்துணியை விலக்கிக் கொண்டு ; இரு கைகளையும் சுகந்தனைத் தூக்குவதற்காகக் கொண்டு போனாள் கண்ணகி .

காலைப் பிடித்திருந்த கையின் பிடியை விட்டும் , வாய்க்குள் இருந்த கையையும் எடுத்து கொண்ட சுகந்தன் , கைகளையும் ஒருசேர ஆட்டி தன் மகிழ்ச்சியை கால்களையும் வெளிக்காட்ட ட்டினான் .

சுகந்தனைத் தூக்கிய கண்ணகி , கன்னம் இரண்டிலும் மாறி மாறி முத்தமிட்டாள் .

“ எட ராசா உனக்குப் பசிக்கலயா ? ‘ என்ற கண்ணகி மூக்கில் தன் மூக்கால் தேய்த்துக் கொண்டவள் , மகனின் சிரிப்பை பார்த்துச் சந்தோசப்பட்டாள் .

நடு குடிசைக் கப்பில் முதுகைச் சாய்த்தவாறு உட்கார்ந்து கொண்ட கண்ணகி ; மடியில் மகனைக் கிடத்தியவள் முந்தானையை விலக்கி சட்டையின் கீழ் ஊசியைக் கழற்றினாள் . அவசரம் சுகந்தனுக்கு இடம் தெரியாமல் அலைந்தான் .

‘ ‘ டேய் பொறுடா …. ” என்ற கண்ணகி முலைக்காம்பை மகனின் வாய்க்குள் எடுத்து வைத்துக் கொண்டாள் .

இடது கையினால் மகனின் தலையைக் கோதிக் கொண்ட அவள் , வலக்கை ஆள்காட்டிவிரலாலும் , அடுத்த விரலாலும் இடப்பக்க மார்பகத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டாள் . மகனுக்கு மூச்சு முட்டக்கூடாது என்ற ஜாக்கிரதைதான் .

மழை ஓய்ந்திருந்தது . புழுதி அடங்கியிருந்தது . மண் நனையவில்லை .

” இந்தத் தூறல் மழையால் வருத்தம்தான் வரும் … கொஞ்சம் பெலத்து பெய்திருக்கலாம் ‘ என்று நினைத்தவளின் கழுத்தைப் பின்னால் வந்து கட்டிப்பிடித்துக் கொண்ட சித்ரா , ” அம்மா பசிக்குது … ‘ என்று தன் கன்னத்தைத் தாயின் கன்னத்தில் அழுத்திப்பிடித்து முன்னும் பின்னுமாக ஊஞ்சல் ஆடினாள் .

“ ஏடி சித்ரா கொஞ்சம் ஆடாத ! தம்பி பால் குடிக்கிறான் . ஊர் மேய்ஞ்சுட்டு
அம்மா வாறா … கொஞ்சம் பொறு . தம்பி பால் குடிச்சு முடிச்ச உடனே சோறு தாறன்… என்ர  செல்லமெல்ல ” என்ற கண்ணகி மகளின் கன்னத்தில் முத்தமொன்றைப் பதிந்தாள் .

‘அம்மா கேட்டவுடனே சாப்பாடு தரவில்லை ‘ என்று சித்ராவுக்கு மனசு சரியில்லை . தாயின் முதுகுப் பக்கம் தன் முதுகைச் சாய்த்தவாறு ; தாயின் தலைமுடியைக் கலைத்துக் கொண்டிருந்தாள் . புருவமும் சொண்டும் சுருக்கிக் கொண்டாள் சித்ரா.

மகனை இடப்பக்கம் இருந்து வலப்பக்கம் மாற்றிக் கொண்ட கண்ணகி ; குடிசைக்கு முன்னாடி அவசர அவசரமாக ஆள் போவதை அவதானித்தவள் , ‘ ‘ யாரு போறது பிரச்சினை ‘ என்று பொதுவாகக் கேட்டாள் .

“அக்கா உனக்குத் தெரியாதா ? குமரேசன் ரத்த வாந்தி எடுத்தாராம் … அதுதான் பார்க்கப் போயினம் ‘ ‘ என்றாள் எலிசபெத்.

“இரு , எலிசபெத் நானும் வாறன் ‘ என்ற கண்ணகி மகனைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு , ” கொஞ்சம் நிமிர் சித்ரா ” என்றவாறு எழுந்தாள் . சட்டை ஊசியை பூட்டக்கூட கால அவகாசமில்லாமல் முந்தானையை எடுத்து சரி செய்து கொண்டாள் .

தாய் சோறு கொடுக்காமல் போவதைப் பார்த்த சித்ராவுக்கு அழுகை வந்தது . வாசலில் உட்கார்ந்து அழுது பார்த்தாள் சித்ரா . தாய் கண்டு கொள்ளாமல் போவதை உணர்ந்து , எழுந்து தாயின் பின்னாடி ஓடினாள் .

குமரேசன் குடிசைக்கு முன்னாடி சனக்கூட்டமாக இருந்தது . கண்ணகியும் போய்ச்சேர ஆட்டோவும் வந்து சேரச் சரியாய் இருந்தது . 

ஆட்டோ குமரேசனை ஏற்றிக் கொண்டு சென்றது .

குடிசைக்குள் எட்டிப் பார்த்தாள் கண்ணகி . சிவப்பாய் . பெரிதான வட்டமாய் இரத்தம் .

கண்ணகிக்குத் தலை சுற்றுவதுபோல இருந்தது . குடிசையை விட்டு வெளியே தன் குடிசை நோக்கி நடந்தாள் .

‘ ‘ குமரேசன் பிழைக்க மாட்டான் . அவனுக்கு ஈரல் இல்லையாமே … “

‘ ‘ எல்லாம் உந்த காய்ச்சான் செய்யிற வேலைதான் சொன்னால் கேட்டால்தானே … முகாமே இதால செத்திட்டு இருக்கு ‘ ‘

இரண்டுபேர் பேசியது கண்ணகியின் காதுகளில் ஒலித்தது .

அமாவாசை வந்து மூன்று நாளாகிறது . மேற்காலே பிறைச்சந்திரன் இரண்டு பனை மர உயரத்தில் தெரிந்தான் .

‘ ‘ செவ்வாய் , புதன் .. இண்டைக்கு வியாழன் … மூணு நாள் ‘ ‘ மனசுக்குள் எண்ணிக்கொண்ட ராஜரத்தினம் , பிறைச் சந்திரனைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டான் .

கருவேலக்காடு . நிலவும் பட்டுப்போச்சு . கும்மிருட்டாகியது . மின்மினுப்பூச்சிகள் பறக்கும் போது தெரியும் வெளிச்சம் மட்டும் தெரிந்தது .

சாராயம் வடிக்க வந்தவர்கள் எல்லோரும் வேலை முடிந்து போய்விட்டிருந்தார்கள் . சாராயக் கான்களுக்குக் காவலாக ராஜரத்தினத்தை இருக்கச் சொல்லிவிட்டு , ஆட்களைக் கூட்டிவர முகாமுக்குத் தருமகுலம் போயிருந்தாள் .

கான் தூக்கிக் கொண்டு போக வருபவர்களுக்காகத் தண்ணி கலந்து தனியாக எடுத்து வைத்திருந்தான் ராஜரத்தினம் .

ராஜாத்தினம் சாராயம் குடிக்க மாட்டான் . கைக்கணக்கில் தண்ணி கலந்து கொள்வான் . இதனால்தான் தருமகுலம் கான் காவலுக்கு ராஜரத்தினத்தை நிறுத்திவிட்டுப் போயிருந்தான் .

ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்ட ராஜரத்தினம் , உள்ளங்கைக்குள்ளே பீடி நெருப்பு வரக்கூடியதாகப் பிடித்துக் கொண்டு புகையை உள்ளிழுத்தான் .

ஒரு பீடி … இரண்டாவது பீடியென நாலு பீடி பற்ற வைத்த பின்தான் தருமகுலம் ஆட்களுடன் வந்து சேர்ந்தான் . எல்லோரிடத்திலும் பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது .

“அண்ணே ராஜரத்தினம்! வந்த ஆட்களுக்குக் கொஞ்சம் கொடுங்கோ “

“சரக்கு கொஞ்சம் இறங்கி விட்டால் பயம் மனசில வராது” என்ற நினைப்பில்தான் தருமகுலம் அப்படிச் சொல்லியிருந்தான் . எப்பவும் கான் தூக்க முன் கொடுத்துத்தான் கூட்டிப்போவான் .

எல்லோருக்கும் ஊத்திக் கொடுத்துக் கொண்டு வந்த ராஜரத்தினம் , “டேய் தருமு இவனை எங்க பிடிச்சனி ” … என்று தருமுவைப் பார்த்து கேட்டான் . “

“இல்லயண்ணே சாயந்தரம் முகாமுக்கு போயிருந்தேனா … குமரேசன் இரத்த வாந்தி எடுத்து ஆசுபத்திரி கொண்டு போயிட்டினம்…
ஆள் குறைச்சது.அதுதான் இவனைப் போட்டுக் கொண்டு வந்திட்டன் . ‘ ‘

” தொழிலுக்குப்புதிசு… கானைத்தூக்கிக் கொண்டு இவ்வளவு தூரம் நடப்பானா ?’ ‘

“பார்ப்போம் அண்ணே எல்லாரும் வேலை பழகிக் கொண்டு வாறதில்ல …” என்ற தருமகுலம் சிகரெட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான் . 

” ‘ தருமு அமுக்கி இழு ! வெளிச்சம் தெரியும் “

“இஞ்ச பாரு அண்ணே … எனக்கில்லாத அனுபவமா ? ஆர்மிக் கேம்புக்ப் பக்கத்திலேயும் இந்தத் தருமு சிகரெட் பத்த வைச்சவன் அண்ணே “

‘ ‘ சரி … சரி தூக்கச் சொல்லு தருமு … இப்ப கிளம்பினால்தான் விடிய நாலு மணிக்குப் போய்ச் சேரலாம் ” என்றான் ராஜரத்தினம் .

தருமகுலம் எழுந்து கொண்டான் . ” சரி எல்லாரும் கானைத் தோளில் ஏத்திக்கோங்க … எனக்குப் பின்னாடி வந்துடுங்க “

எல்லோரும் இடுப்பிலிருந்த சாரத்தைக் கழற்றி தலையில் சுற்றிக் கொண்டார்கள் .

கானைத் தூக்கிக் கொண்டவர்கள் தருமகுலத்திற்குப் பின்னால் நடக்க ஆரம்பித்தார்கள் . தருமகுலத்தின் கையில் மூன்று அடி நீளமான கத்தி இருந்தது .

ராஜரத்தினம் பேருந்தைவிட்டு இறங்கிக் கொண்டான் . காலை பத்து மணியாகி விட்டது . முனையிலுள்ள இனிப்புக் கடையில் இனிப்பு வாங்கிக் கொண்டான் .

‘ ‘ என்ன ராஜரத்தினம் இப்பத்தான் வேலையால் வாறிய ? ‘ ‘ என்ற குரலுக்கு திரும்பிய ராஜரத்தினத்தின் தோள் மீது கை வைத்துக் கொண்ட ராமன் , ‘ ‘ உனக்குத் தெரியுமா ? குமரேசனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனங்கள்… முடியலே … மதியம் பொடி எடுக்கிறாங்களாம் “

ராஜரத்தினத்துக்கு ராமன் சொல்லச் சொல்ல மனம் சோகமாகிக் கொண்டிருந்தது .

“சரி ராமன் , நான் கெதியா முகாமுக்குப் போகணும் … பிறகு பேசுறேன் ‘ ‘ என்றவாறு முகாமை நோக்கி நடந்தான் .

குடிசை வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சித்ரா அப்பா வருவதைப் பார்த்துவிட்டு , ‘ அம்மா அப்பா வாறர் ” என்று சொல்லிக் கொண்டு எழுந்து போனாள் . இதைக் கேட்ட கல்பனாவும் வெளியே வந்தாள் .

ஓடி வந்து காலைக் கட்டிப் பிடித்த சித்ராவிடமும் , கல்பனாவிடமும் கையிலிருந்த பைகளைக் கொடுத்தான் ராஜரத்தினம் .

‘குமரேசன் சம்பவத்தால் கண்ணகி நொந்து போயிருப்பாள் . ஒவ்வொரு நாளும் வேண்டாம் இந்த வேலை என்று சொல்லுவாள் … அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாது ‘

குடிசைக்குள் உள்ளே போன ராஜரத்தினத்தை மௌனமாகப் பார்த்தாள் கண்ணகி . சிறு நேரத்திற்குப் பின் அடுப்பில் சுடுதண்ணி வைத்து , ராஜரத்தினத்துக்குத் தேநீர் ஊற்றினாள் .

” இங்க கொண்டு வாங்கோ ” என்று ராஜரத்தினம் வாங்கி வந்த இனிப்புப் பலகாரத்தை வாங்கி , தட்டில் எடுத்து வைத்து எல்லோருக்கும் பங்கு கொடுத்தாள் . டம்ளரில் ஊத்திய தேநீரை எடுத்து ராஜரத்தினத்துக்கு முன்னால் வைத்தாள் கண்ணகி .

‘ ‘ இஞ்சாருங்கோ இனிமேல் தருமகுலத்தோட வேலைக்குப் போக வேணாம் …. உங்கள நம்பித் தான் நாங்க நாலு பேரும் இருக்கோம் ‘ ‘ என்ற கண்ணகி முந்தானைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள் .

‘ ‘ சரி ” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்தான் ராஜரத்தினம் . 

– Nixson Baskaran Umapathysivam

Leave a Reply