மரபுசார் காத்திரமான அரசியல் சித்தாந்த கட்டுமானங்கள் இன்றி தேசிய நல்லிணக்கத்தில் கரையும் தமிழ்க்கட்சிகள்!

மரபுசார் காத்திரமான அரசியல் சித்தாந்த கட்டுமானங்கள் இன்றி தேசிய நல்லிணக்கத்தில் கரையும் தமிழ்க்கட்சிகள்!
  • Nixson Baskaran Umapathysivam

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டுத் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்கும், மதம், இனம் எனப் பேதமின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரே சட்டத்தைக் கொண்டு வருவதற்கான சட்ட வரைவை தயாரிப்பதற்கு ஜனாதிபதி செயலணிப் பிரிவை மிக அண்மையில் நியமித்திருந்தார்.

இந்த ஜனாதிபதி செயலணிப் பிரிவானது, நீதி அமைச்சினால் ஏற்கெனவே தயாரிக்கப்படிருக்கும் சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்து, அவற்றின் சரியான தன்மையை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கான பணியைச் செய்வதாகும்.

1. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி அனைவருக்கும் நியாயமான சட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல்.

2.எந்தவொரு பிரஜையும் சட்டத்தின் பார்வையில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை என்பதையும், தேசியம், மதம், சாதி அல்லது வேறு எந்தக் கருத்தில் யாருக்கும் எந்தச் சிறப்பும் வழங்கப்படுவதில்லை என்பதையும் உறுதி செய்தல்.

3. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ கருத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனிதாபிமான விழுமியங்களுக்கு அமைவாக இருப்பதை உறுதி செய்தல் என்பன ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயணிப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளாக கூறப்படுகிறது.

அனைத்து மக்களையும் ஒரே மாதிரியான சட்டங்களுக்குக் கீழ்ப்படியச் செய்யும் நகர்வுக்கான கோட்பாட்டுத் தத்துவமான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பது நவீன ஜனநாயகத்தின் அடையாளம் எனவும் குறிப்பிடுகிறார்கள். ஆனாலும், செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்ட வண. கலகொட அத்தே ஞானசார தேரர் நியமனம் வகையில் விசனங்கள் எழுந்துள்ளது.

ஜனாதிபதி செயலணிப் பிரிவின் தலைவரும், பொதுப்பல சேனாவின் பொதுச்செயலாருமான வண. கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த காலங்களில் முஸ்லீம் விரோத போக்கை உடையவராகவும் காணப்படும் இவரது தலைமையில் நடைமுறையாகும் இச்செயலணிப் பிரிவு, சமூகங்கள் மற்றும் அவற்றின் தனித்துவமான மரபுசார் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சமன் செய்து அனைத்துப் பேருக்கும் நீதியை வழங்குமா? என்று சமூகச்சீர்திருத்தவாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை கவலை கொள்ள வைத்திருக்கிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வண. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போது, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார். 2019 மே 23 அன்று வண. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு, மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்திருந்தது. ஏனெனில், அது ‘சட்டத்தின் முன் சமத்துவம்’ மற்றும் ‘ஒவ்வொரு இலங்கையருக்கும் பொதுவான சட்டம்’ என்ற சட்ட விதிமுறைகளையும் நடைமுறைகளையும் மீறியதும் முரண்பட்டதுமாகும்.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டும், வண. தேரரின் மேன் முறையிட்டு மனுவை உயர் நீதிமன்றம் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்றம் இரண்டும் நிராகரித்திருந்ததை மாற்றுக் கொள்கைக்கான நிலையம் சுட்டிக் காட்டியிருக்கிறது. மேலும், ‘மன்னிப்பு என்பது சட்ட ரீதியான நடவடிக்கைகளில் தேவையற்ற தலையீட்டிற்குச் சமம்’ என்பதையும், ‘நீதித்துறையை அவமதிக்கும் வகையில் செயல்படுவது, முறையான நீதித்துறை செயல்முறை மூலம் தண்டிக்கப்படுவது, பின்னர் அரசியல் ரீதியான பரிசீலனையின் பேரில் வழங்கப்பட்ட மன்னிப்பின் மூலம் தண்டனையில் இருந்து விலக்கு பெறுவது சாத்தியம் என்ற பார்வையை மன்னிப்பு நியாயப்படுத்தியது’ என்பதையும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

//…”ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. எனினும் இதுதொடர்பாக என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, மூன்று தமிழ் பிரதிநிதிகளை உள்வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயலணிகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

ஏனெனில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் மேற்கொள்ளப்படுகின்ற இறுதித் தீர்மானங்கள் தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது…// என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனா கூட்டணி அமைச்சரவையின் கடல் தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இந்த ஜனாதிபதி செயலணிப் பிரிவின் பணியென்பது இயற்றப்படும் சட்டங்களை சில விதி முறைகளுக்குள் உட்பட்டு அமைகிறதா? என்பதை கவனித்தலாகும். இதில் சட்டங்கள் அதிகாரமிகக்கவர்களால் / ஆட்சியில் இருப்பவர்களால் உருவாக்கப்பட்டு பாராளுமன்றத்தில் எண்ணிக்கையின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது. அது சில கோட்பாட்டுத்தத்துவ விதிகளுக்குள் இலங்கையர் அனைத்துப் பேருக்கும் சம அளவில் உணரப்படும் உணர்வை ஏற்படுத்துவதென்ற ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கதையாடலில் எந்தவிதமான புதுமையோ? அல்லது நடைமுறையில் சட்டம் உருவாக்குவதிலும் அதனை நடைமுறை செய்வதிலும் நியாய தர்ம அறத்தினை நிலை கொள்ள வைக்கும் என்பது கேள்வியாக இருக்கிறது. இன்றைவரைக்கும் சட்டங்கள் உருவாக்குவதும் செயல்படுத்தும் நடைமுறையும் தேசிய, மத ரீதியான முரண்நிலையில் மேலாதிக்க போக்கில் நடந்து வந்திருக்கிறது. அந்த தேசிய, மத முரண்நிலையைத் தீர்ப்பதற்கான எந்த கதையாடலோ? அல்லது முயற்சியோ? இல்லாத சூழலில் இவ்வகையான செயலணிப் பிரிவில் தேசிய, மத ரீதியான அடிப்படையில் உறுப்பினர்களை உள்வாங்குதல் என்ற கதையாடலும் எந்தப்புள்ளியில் இருந்தெழுகிறது என்பது முக்கிய முரண்நிலையாகும். இன்றுவரைக்கும் இருக்கும் சிங்களப் பெருந்தேசிய, பெளத்த மத அரச செயல்முறைகள் நடைமுறைகள் பற்றிய எந்தவிதமான கதையாடல் எதுவும் இங்கில்லை. இலங்கை என்பது பெளத்த நாடு என்ற விரிவாக்கத்தின் சிறுபான்மைத்தேசிய மத சேதாரத்திற்கும், மறைமுகமாக ‘இரு தேசம் ஒரு நாடு’ என்ற கோட்பாட்டுத் தத்துவார்த்த சொல்லாடலுக்கு எதிரான கோசமாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த சிக்கலான, பலகீனமான சூழலில் குறைந்த மக்கள் அதிகாரப் பலத்துடன் ஆளும் கட்சியாக இருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போன்றவற்றின் செயல்பாட்டில் தமிழ்ச்சமூகத்தின் இருப்பு இப்பொழுது தங்கியிருக்கிறது.

தமிழர்கள் என்பதன் பொதுச்சூழலில் இருந்து வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் முஸ்லீம் எனக் கூறுகளாக பிரிந்து வேறுபட்டு முரண்நிலைக்குள் சிக்குண்டு இருக்கும் தருணத்தில் தேச வழமைச் சட்டம், முஸ்லீம்களுக்கான சரியாச் சட்டம் போன்ற மரபுசார் உரித்துரிமைச் சட்டங்கள் தனித்துவமாகக் காணப்படுகின்றன. இவ்வாழ்வுரிமைச் சட்டங்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலங்களிலும் நடைமுறைச் செயல்பாட்டில் இருந்து வந்திருக்கின்றன. இந்த 40 வருட ஆயுதப் போராட்ட அரசியலில் தேச வழமைச் சட்டங்கள் கண்டு கொள்ளாமலும், அந்தத் தலைமுறைத் தலைமையினரிடம் சமூக நடைமுறை அறச் செயல்பாட்டு வடிவம் இல்லாதினாலும் அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்லப்படாமல் தேச வழமைச் சட்டங்கள் வழக்கொழிந்து விட்டன. ஆனால், முஸ்லீம்களின் இஸ்லாமிய மத மார்க்க நடைமுறை தனித்துவமான சமூக செயல்பாட்டுச் சட்டங்கள் அம்மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நடைமுறை சார்ந்து அம்மக்களின் மன உணர்வுகளுக்கான மதிப்பளிக்காமல் தன்னிச்சையான நடைமுறைச் செயல்பாடாக ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கோட்பாட்டுத் தத்துவம் அமைவதில் இனங்களுக்கிடையான முரண்நிலை தொடர்ந்தும் தொடரச் செய்யும்.

ஜனாதிபதியிடம் இருக்கும் பொதுமன்னிப்பு அதிகாரம் ஒட்டுமொத்த ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ கோட்பாட்டுத் தத்துவத்தை அர்த்தமற்றதாக்குகிறது. நல்லாட்சி ஆட்சிக்கு தலைமை தாங்கி ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்குவதும், இன்றைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அந்நபரை செயலணிப்பிரிவுக்கு தலைவராக்குவதும் என்பது அவர்களுக்கிடையான அரசியல் அணுகுமுறைக்குக் கூடாக சிங்களத்தேசியம் என்ற புள்ளியில் ஐக்கியமாவதைப் புரிந்திருந்தும் இந்த ‘நல்லாட்சிக்காலம்’ என்ற கதையாடலில் அரசியல் வண்டியோட்டும் தமிழ் தரகு முதலாளித்துவ சிந்தனை சித்தாந்தக் கட்சிகள் தங்களுக்குள் ஓர் நாடகத்தினை காட்சிப்படுத்திக் கொண்டு செஞ்சோற்றுக்கடனுக்காக தொடர்ந்தும் சிங்களப்பெருந்தேசிய இரு கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவதன் பேரில் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை இந்தத் தடவையும் நிறுவுகிறார்கள். இப்பொழுது இந்த ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கோட்பாட்டுத் தத்துவம் யாருக்கானதென்ற கேள்விக்கான விடை தெளிவாகிறது. இங்கும் பலன் அடைந்தவர்கள் மெளனமாகக் கடந்து செல்கிறார்கள். இந்த பலகீனமான களச்சூழலே அதிகார வர்க்கத்தினரின் கோட்பாட்டுத் தத்துவங்கள் மறு வார்த்தை பேச்சின்றி சபையேறுகிறது.

இந்த உண்மையை நிருபிக்கும் முகமாக, இந்த தமிழ்க்கட்சிகள் தங்கள் நலன் சார்ந்து ஓர் ஐக்கிய செயல்பாட்டு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அண்மையில் கொழும்பில் தமிழ்க் கட்சிகளான, ஈழ மக்கள் னநாயகக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் சந்தித்து தேர்தல் முறை தொடர்பில் ஒன்றுபட்டு செயற்பட தீர்மானித்தன. தேர்தலென்பது இத்தலைமைகளின் இருப்பு சம்பந்தமானது. கூடிவிட்டார்கள், குற்றமெல்லாம் மறந்து விட்டார்கள். ஆனால், தங்கள் மக்களுக்காக இந்த நிலைப்பாட்டை ஏன் எடுக்க முடியாமல் சண்டையில் காலம் ஓட்டுகிறார்கள் என்பதை தமிழ் மக்கள்தான் இனி சிந்திக்க வேண்டும்.

Leave a Reply