• April 18, 2023

மாராப்பில் நீ மறைத்த மானம் மரியாதை வீரம்….!

மாராப்பில் நீ மறைத்த மானம் மரியாதை வீரம்….!
உச்சி வெயில்
தலைக்கு மேலே வந்ததென்று
பனை மரத்தடியில்
நிழல் தேடினோம்... முருங்கை மரம்
முசுட்டைக்கொடி... தூதுவளை,
கத்தாளையென காய்ச்ச பூமி
வாழ்வு கொடுத்தது.. வேணாம்பிட்டு, 
சந்தைப்பொருளாதாரத்தில்
வெண்பனிக்குளிர்க்காற்றில்
உயிர்ச்சீவன் கரைய விட்டோம்
விட்டுத்தொலைத்த வாழ்வு பற்றி
வீறாப்புக் கதை பேசுகிறோம்
அதைச்சொல்லியே புலம் தேசத்தில் கடை விரிச்சோம்
சின்னாச்சி... செல்லம்மா.. குஞ்சாச்சி... மாராப்பில் நீ
மறைத்த மானம் மரியாதை வீரம்
தெற்குச்சீமை இராசாவிற்கு
சீவியம் முழுக்கு
கங்காணி வேலைக்கு கைக்கூலி
காசுக்கு அடைமானம் கொடுத்திட்டோம் 
ஒட்டிப்போகும் மாடுகளாய், வட்டிக்காக வாக்கு 
கேட்கிறாங்க... செல்லக்கண்டு..!

கட்டுமரம் கரைவலை
கடல் கரை எங்களிடமில்லை
பாத்திகட்டி வாழ்வு பார்த்த தோட்டம் தொரவும் 
எங்களிடமில்லை
வயிரு நிறைத்த செம்மண்
கண்காணிப்பு அரசியலுக்குள்
காவல்காரன் எல்லைக்குள்
கையெடுத்து கும்பிடுகிறோம்
கடலட்டை குஞ்சுக்கு அடைகிடக்க
சீனாக்காரன் மடி பார்த்து
வேட்டி மடிச்சுக்கட்டி
நாட்டாண்மை நடை நடக்கிறோம்
சின்னத்தம்பு... செல்லச்சாமி..
வேல் அம்பு வெட்டரிவாள்
வீர மீசை நீ போட்டு வா!

பெண் முகம் பார்த்து
காதல் சொல்ல வெட்கப்பட்டவன்
பல குழல் துப்பாக்கி
குறி பார்க்க பாலைவனம்
போய்வந்த கதை பாரசீகம் வரை
பல்லு விழுந்த பாட்டிக்கிழவிகள்,
காலம் கோடு போட்ட மார்பகங்கள் மறைக்க
மாராப்பு சீர்செய்து பல்லில்லா வாயால்
கொக்கட்டிச் சிரிக்குதாம் சின்னத்தங்கம்... பொன்னம்மா 
ஒடி வாங்க சேதி சொல்றேன் கேளங்கடி.

போகிற வரைக்கும்... பாடை வாற வரைக்கும் 
பல்லாக்கில் பவணி போகிறாராம் சட்டாம்பி 
காலமொரு நாள் கரையேறாத மனக்கவலை மனையாளும் 
மாடி சட்டாம்பி வீட்டுப் பாத்திரம் தேய்க்க போனாளாம்
சட்டவாக்க சபை சட்டாம்பி குலத்தோருக்காம் 
சட்டாம்பி பெண்டாட்டி சொன்னாளாம்
காது கொடுத்து கதை கேளங்கடி
நெல் வயல் நிறைமாத கர்ப்பினியாய் விளைச்சிருக்கு
பெருமாக்கடவை பிள்ளையாரும்
தன் பங்குக்கு நெல்லு அளக்க கேட்கிறாரு 
வானமோ கருக்குதடி கந்தசாமியைக் காணவில்லை 
அறுவைக்கு வந்த பொன்னியும் கமக்காரனுடன் சல்லாப்பை கொட்டுது 
மாரியாத்தா... 

வையிரவா... மண்டகப்படி பத்தலேயா? 
சிவப்புச் சட்டைக்காரனும் சரசரக்கும் பனைத்தோப்புக்குள்ளே 
மார்க்சீயமும்... லெனிசீயமும் பேசிறாண்டா... 
காலம் வரலாறும் மறந்துபோச்சு 
முள்ளிவாய்க்காலில் காடாத்திப்போட்டு... 
திவசத்திற்கு அய்யரை தேடுறாங்க... 
வெள்ளையை கட்டிக்கொண்டு இதுதான் சிவப்பென்று சொல்றாங்க... 
காலம் கெட்டுப்போச்சு ஆவாக்குறுப்பும் ஊருக்குள்ளே திரியிறாங்க... 
ஆடி அமாவசை கும்மிருட்டு கவனமாய் போயி திரும்பிடு செல்லுக்கண்ணு... 
சுதந்திரம் உனக்கெதற்கு? சமத்துவம் நீ ஆசைப்படலாமா? சின்னையா... 
செல்லம்மா... உனக்காக குப்பி விளக்கில் காத்திருக்கிறாள் மறந்திடாதே மாரிமுத்து!

Leave a Reply