ரத்தமும் சதையுமாக கரைந்து போன பலநூறு பேரில் வள்ளுவன் எனும் ஆளுமை! – பகுதி – XVII

ரத்தமும் சதையுமாக கரைந்து போன பலநூறு பேரில் வள்ளுவன் எனும் ஆளுமை! – பகுதி – XVII

வாழ்வும் சாவுமென வாழ்க்கை கொண்ட ஆயுதப் போராட்ட சூழலில் அமைப்புக்கு உள்ளே வெளியே குருதியில் சாய்க்கும் கலாசாரத்தில் மிச்சம் சில்லறையாக தப்பிப் பிழைத்த உயிர்களும் வாழ்ந்த வாழ்க்கையை, கட்சித் தலைமைக்கும், அக்கட்சித் தலைமை அண்டிப் பிழைக்கும் ஆளும் கட்சிக்கு, “இறைமையான அரசொன்றின் விசுவாசமிக்க பிரசைகளாகிய நாம் அரச ஒத்தோடிகள் என்று சொல்லப்படுவதில் பெருமையடைகிறோம்” என முகநூல் பின் திரை வாசகம் தாங்கிவரும் முகநூல் சொந்தக்காரன், வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிப்போகும் வேந்தன்போல், அக்கட்சிக்கு ஓடாய் உழைத்து நாதியற்ற மனிதனாக வாழ்ந்த பிரதேச சபை தலைவர் வாழ்வு பற்றியும், இன்றைய ஆளும் அரசு நிர்வாக அலகின் அழகு பற்றியும் கீழ்கண்டவாறு கீறிக்கிட்டு போகிறார்.

மகேந்திரம் தோழரின் இறுதிக் காலம் மிகவும் கவலைப்பட வைத்தது. தனது சொந்தக் கடைகளின் தாவாரத்தில் அநாதையைப்போல் தங்கியிருந்து சிறு பணி செய்து, அதற்கு ஊதியமாக சாப்பாடு பெற்று, குடும்பத்தாரின் அரவணைப்புமின்றி இருந்தார். ஒரு கௌரவ பிரதேச சபைத் தலைவரின் இறுதி வாழ்வு அது. வட்டுக்கோட்டையில் என்றைக்கு சாராயத் தவறணை வந்ததோ அன்றிலிருந்து அராலி மாவடி சித்தன்கேணி ரோட் விபத்துக்கள் தொடர்கின்றன. உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. வட்டுக்கோட்டை காவல்துறைக்கோ எப்படி காசு உழைப்பது என்ற சிந்தனைதான் அதிகம்? என்ன செய்வது வலைத் தளத்தில் எழுதுவதோடு எங்கள் சமூகப்பணியும் நிறைவடைந்து விடுகிறது.

நாம் எங்கே நிற்கிறோம்? நம் உடம்பு முழுவதும் துகிலுரியப்பட்டு பொட்டுத்துணியுமின்றி அம்மணமாக, நிர்வாணமாக நிற்கிறோமா? குனிந்து கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள். நம் குருதி மரபு வழிப்பயணத்தில் வெட்கம், மானமென வார்த்தைக்கான நம்பிக்கையின் மீதான சத்தியமாக, அறம் வழுவாத நெஞ்சுரம் கொண்ட மனிதமிக்க வாழ்க்கையில் உயிரென்பது அச்சத்திற்கும் எச்சத்திற்கும் இணங்கிப் போதலைவிட துறந்திடுலே சிறப்பென்பதைவிட நாம் யாரென்பதை நிறுவிடும் குருதி மரபாகும்.’

‘வடக்கும் தெற்கும்’ என்ற நாடகம் என் கிராமத்தின் அடையாளங்களில் ஒன்றாக உருவாகிய காலமொன்றைக் கடந்து வந்திருக்கிறேன். அதொரு புனைவு அரச வரலாற்று நாடகமாகும். அந்தக் கலைப்படைப்போடு சமூகத் தோழமையை நோக்கி நகர்ந்திருந்தோம். அப்படியிருந்தும், எம் படைப்புப் புனைவிலும் நிஜத்திலும் வடக்கோடு இணைவதாக தெற்கின் சேர்க்கை எனும் அரசியலோடு வரலாற்று பிணைவாக அரசியல்ப் பயணமொன்றின் ஊடாகக் கடந்து வந்து நிற்கிறோம். அதுதான் நிஜமென்பதை புரிந்து கொள்ளும் பொழுது நாம் பல பேர் மரணத்தின் வாசலுக்குள் அண்மித்து விடுகிறோம். இங்கு நாம் சமூகக் கட்டமைப்பில் உயர், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என வகுப்பு சமூக அரசியலில் இருந்து விடுதலைக்காக, அமைப்பு நோக்கி தள்ளப்படும் இவ்வகையினர் மாற்றமெதுவும் இன்றி ‘தேச விடுதலை’ என்ற ஒரு புள்ளிக் கோஷம் கேள்விக்கு இடமின்றி சமூகக் கட்டமைப்புக் குணத்தோடு கட்டுடைக்காத, விடையைக் கண்டடையாத கேள்விகளோடு பயணத்தைத் தொடங்கும் பொழுதுதான் யாதார்த்தம் புரிகிறான். புதிய அத்தியாயமல்ல, புதிய சூழலுக்கல்ல எமது பயணம்; யாரொரு சிலரது தேவைக்காக, வாய்ப்புக்காக எமது வாழ்வை அடைமானம் கேட்கப்பட்டிருக்கிறது. இதைப் புரிந்து கொண்டதில் நான், நாம் சாட்சியமென்பதற்காக கடந்த வரலாற்றில் இருந்து வருங்காலம் பற்றி பேச முற்படுகிறோம். கருத்தியலொன்றை நோக்கி தர்க்க ரீதியான தத்துவ விவாதங்களுக்குக் ஊடாக சமூக நீதி பற்றியும், சமூக சமத்துவம் பற்றியும் சுதந்திரம் பற்றியும் பேசும் சூழலை உருவாக்குவதன் மூலம் புதிய அரசியல் தலைமைகளை கண்டடைவதாகும்.

இன்று நடந்து முடிந்த வரலாற்றுக் காட்சிப்பதிவுகளில் இருந்து உடைத்தெறிய வேண்டிய அடிமைத்தனங்களை தொடர்ந்தும் அங்கீகரித்துச் செல்லும் போக்கே, குறுந்தேசிய, தமிழ்த்தேசிய, இணக்க அரசியலென எல்லா தள சித்தாந்தமற்ற கோஷங்களினால் இயக்கப்படும் கட்சிகளிடமும், தலைமைகளிடமும் காணப்படுகின்றது. இதன் வெளிப்பாடே, ஒட்டுமொத்த கட்சியின் பலத்தைக் கட்டமைக்க முயற்சிப்பதைவிட குழு அரசியலை வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் தலைமைகள், அக்குழுவாதத்தின் மூலமே தனக்கும் கட்சியில் அல்லது அமைப்பில் அடுத்த நிலை உறுப்பினனுக்கும் கால அளவு நீண்டதாக இருப்பதை ஊர்ஜிதப்படுத்த போட்டுத்தள்ள, வெளியேறிட சூழலை உருவாக்கிய வஞ்சக துரோக அரசியலின் விளைவே இன்றைய இலங்கையின் தமிழ் அரசியல் பரப்பும், நில வாழ் மக்களின் வாழ்வியல் பண்பாடும் கலாசாரமாகும்.

இந்த முகநூல் சொந்தக்காரன்; ‘இறைமையான அரசொன்றின்’ என்ற சொல்களைக் கொண்ட தொடர்புக்கூடாக ‘இறையாண்மை’ என்ற சொல்லை ஏன் தொலைக்கிறார் என்பதின் உள்ளே அவரது மனமும் அரசியலும் வெளிப்பட்டே நிற்கிறது. இங்கு ‘இறைமை’ என்பது இறைவன் என்பவனின் ஆளுமைக்குட்பட்ட பிரதேசம். அந்த ‘இறை’ சித்தாந்தம் இன்று கட்சித் தலைமை மீது ஒளி வட்டமாக இறங்கியிருக்கிறது. இது இன்று இவர் துதிக்கும் தலைமையின் கட்சியில் வெளவால்கள்போல் தலை கீழாக தேவையென்னும் நூல் கொண்டு தொங்கியிருப்பவர்களின் குறியீடாக இவரே வெளிப்படுகிறார். மாதா மாதம் அளக்கப்படும் கொடுப்பனவுக்கான கொடுப்பே இந்த அரசியல் பாதை. இதில் தோழர் வள்ளுவன் வாழ்வும் நினைவும் திரும்பவும் வெளிக்கொண்டு வரப்படுகிறது. இது வேடிக்கையும் விந்தையுமாய் தேர்தல் அரசியலில் வில்லுப்பாட்டுக் கணக்காய் காட்சியும் கானமுமாக முகாரி பாடுகிறது.

வலைத் தளத்தில் எழுதுவதோடு எங்கள் சமூகப்பணியும் நிறைவடைந்து விடுகிறது

என்று அந்த முகநூல் மக்கள் சேவகன், தன் தலைவன் மேல் சத்தியமாய் வாக்குமூலம் கொடுக்கிறார். இதுவல்லவா! இன்றைய தமிழ் அரசியலின் யாதார்த்தம். இதில் இவர்கள் அள்ளி வழங்கும் பட்டங்களும், அடைச்சொற்களும், இவைகளைப் பார்த்து எள்ளி நகையாடும் கட்சித் தொண்டனின் வாழ்வு, கேள்வி கேட்க நாதியற்றவர்களாக காற்றிலிலே கரைந்து போன உயிர்களைப் பற்றிப் பேச வெட்கமாய் இல்லை? தோழர் வள்ளுவன் போன்ற தோழர்களோடு அந்த குருதி ஈரமான நிலத்தில் தன் உயிருக்கு நிச்சயமில்லாத சூழலில் வாழ்ந்திருந்தால் வெறுமனே இம்முகநூலுக்குச் சொந்தக்காரர் போல் கடந்துவிட முடியாது. இவர் எங்கிருந்து இதைக் கற்றுக் கொள்கிறார்? இவரை இப்படி பேச எந்த சூழல் நியாயப்படுத்த வைக்கிறது? ஓர் மக்களுக்கான அமைப்பென்ற சொல்லுக்குள் தங்களை மக்களுக்கான சேவகர்களாக உருமறைத்துக் கொண்டு, எல்லாத் துரோகங்களையும், வாய்ச்சொல்லின் மீதான நம்பிக்கைகளை வெறுமனே புறந்தள்ளிச் செல்லும் தன் இருப்புக்காக அரச ஒத்தோடிகளாகிவரும் அரசியல் சூழலே காரணமாக அமைந்திருக்கிறது. இதுதான் அரசியலென்று மக்கள் மீது சத்தியம் செய்கிறார்கள்? இந்த சத்தியத்தில் தியாகிகளாக காட்சியை வரைகிறார்கள். காலமும் வரலாறும் வல்லவனுக்கும் என்றும் தலை சாய்த்தே வரவேற்கிறது. இது புதிய அடிமைகளை புதிய வடிவில் உற்பத்தி செய்கிறது. இங்கு மீண்டும் அரசியல் சித்தாந்தம் கோபப் பார்வையோடு அடிமை விலங்குகளை உடைப்பதாகச் சொல்லி இணைத்துவிட்டே செல்கிறது. முதுகு குனியத் தொடங்குகிறது, முதுகின் சுமை அதிகம். அழுகுரல்கள் ஓலங்களாக பிணவாடை தேடி அலையும் ஓநாய்களின் குரல்களில் அடங்கிப் போகிறது.

Leave a Reply