• April 26, 2023

வவுனியாவில் ‘நாபா’வின் சிலை திறப்பு உணர்த்தும் அரசியல் இதுவாக இருக்குமோ?

‘நாபா’வின் சிலை வவுனியாவில் திறந்ததின் இலங்கைத் தமிழ் அரசியலின் தட்ப வெப்ப களச்சீதோஷண நிலவரம் என்பது பெரும் மாற்றம் ஒன்றை நோக்கியதானதாக இருப்பதாக ‘நாங்கள்’ கருதுகிறோம்.

இந்த நகர்வு EPRLF க்கானதாக மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நகர்வாக இல்லையென்பதோடு DTNA இற்கான நகர்வாகவும் ‘நாங்கள்’ கருதுகிறோம்.

இதொரு சித்தாந்த முன்னிறுத்தலோடு நகர்வதாக ‘நாங்கள்’ கருதவில்லை. மாறாக, யாழ்மையவாத வெள்ளாளிய மேலாதிக்கச் சிந்தனை அடிப்படையில் களச்சூழலைப் பயன்படுத்தலின் நகர்வாகத்தான் ‘நாங்கள்’ பார்க்கிறோம்.

இதற்கான உதாரணமாக முன்வைக்கக் கூடியது எதுவென்றால் பல்கலைக்கழக நுழைவை மனதில் கொண்டு யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி மாணவர்கள் உயர்தர பரீட்சையை வன்னி மாவட்டங்களில் எழுதுவது போன்றதாகும்.

இதொரு யாழ்மையவாதச்சிந்தனையின் மற்றவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் மேலாதிக்க மேட்டுக்குடி மனோபாவமாக இருந்து விடுகிறது.

வடக்கு மாகாணத்தின் இரு பாராளுமன்ற தேர்தல் மாவட்டமான வன்னி மற்றும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்றத்துக்கான ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் முறையே 6 மற்றும் 7 ஆகும்.

EPRLF வைப் பொறுத்தமட்டில் சித்தாந்த அடிப்படையில் சாதீய வர்க்க ரீதியான அரசியல் சூழல் இரு மாவட்டங்களிலும் கணிசமான வாக்குகள் இருந்து விடுகின்றன.

EPRLF இன் அக முரண்பாட்டில் பிளவுப்பட்டுப் போய் கிடக்கும் இந்த வாக்குகள் EPDP க்குள் இருப்பதை 2020 பாராளுமன்றத் தேர்தல் சுட்டி நிற்கிறது.

2020 பாராளுமன்றத் தேர்தல் EPRLF சார் முகாம் வாக்கு அரசியலை மட்டுமல்ல மிதவாத தமிழ்த்தேசிய அரசியலுக்கும் புதுப்படிப்பினையைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

EPRLF இன் சுரேஷ் அணி மிதவாத தமிழ்த்தேசிய அரசியலுக்குள் பயணத்தை மேற்கொள்ள EPRLF இன் அக முரண்பாடு காரணமாக இருந்தாலும் அதில் கிடைத்த பாராளுமன்ற வாய்ப்பையும் சுரேஷின் யாழ்மையவாத வெள்ளாளிய மிதவாதத் தமிழ்த்தேசிய சிந்தனையின் நகர்வில் வன்னிப் பாராளுமன்ற வாய்ப்பை இழக்க வைக்கிறது.

2020 பாராளுமன்றத் தேர்தலில் சி.வி. மீதான யாழ்மையவாத வெள்ளாளிய மிதவாதத் தமிழ்த்தேசிய காட்சி விம்பத்தின் வழியாக பாராளுமன்ற வாய்ப்பைப் பெறும் சுரேஷின் சாணக்கிய இராஜதந்திரத் தோல்வியும் பெரும் கேள்ளியொன்றை EPRLF சுரேஷ் அணிக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சூழலில் சுரேஷின் அடுத்த இலக்காக TNA க்குள் நெருக்குவாரத்துக்குள் தள்ளாடும் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆக இருக்கிறது.

உலக அரசியல் ஒழுங்கின் தாக்கம் இலங்கைக்குள் ஏற்படும் தேவை மாற்றமும் ஒன்றுசேர TNA க்குள் யாழ்மையவாத வெள்ளாளிய மிதவாத தமிழ்த்தேசியத்துக்குள் பிளவு நிகழ்கிறது. அது DTNA ஆக புதியதொன்று உருவகம் கொள்கிறது.

இங்குதான் கவனிப்பாரற்றுக் கிடந்த ‘நாபா’ முக்கியம் பெறுகிறார்; அதுவும் வன்னி மாவட்டத்தில் யாழ்மையவாத வெள்ளாளிய மிதவாத தமிழ்த்தேசியத் தலைவராகக் காட்சிப்படுத்தப்படுகிறார்.

வடக்கு மாகாணத்தின் இரு தேர்தல் மாவட்டங்களில் இன்று வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற வாய்ப்பை TNA க்காக வைத்திருக்கும் கட்சி TELO ஆக இருக்கிறது. அதுவும் 69,916 (33.64%) வாக்குகளுக்காக 3 ஆசனங்களைத் தனதாக்கியிருக்கிறது.

EPRLF இன் ஒரு அணியான EPDP ஒரு பாராளுமன்ற ஆசனத்தை 11,310 (5.44%) வாக்குகளுக்குப் பெற்றிருக்கிறது.

EPRLF இன் இன்னொரு அணியான SDPT இத்தேர்தலில் பெற்ற வாக்குகள் 10,064 (4.84%) ஆகும்.

EPRLF இன் சுரேஷ் அணி இத்தேர்தலில் TMTK இல் போட்டியிடுகிறது. அந்தக் கட்சி பெறும் வாக்குகள் 8,789 (4.23%) ஆகும்.

2020 வன்னி பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் இன்றும் இனிவரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டம் மிக முக்கியம் பெறுகிறது.

யாழ்மையவாத வெள்ளாளிய மிதவாத தமிழ்த்தேசியத்தின் ஏகோபித்த தலைமைத்துவம் யார் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக இனிவரும் பாராளுமன்றத் தேர்தல் அமையப் போகிறது.

அதற்கான அரசியல் நகர்த்தலின் மிக முக்கிய புள்ளியாக ‘நாபா’ சிலைத் திறப்பு வன்னியின் தலைநகர் வவுனியாவில் நிகழ்ந்திருக்கிறது.

அந்த அடிப்படையில் வெடுக்குநாறி ஆதிசிவன் கோவில் விகாரமும் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்காகவே டக்கியின் ஆதிசிவன் காட்சி அரசியலை EPDP வவுனியாவில் முன்னிறுத்துகிறது. டக்கியும் அமைச்சரவையில் கண்ணகிச் சிலம்புக் காட்சி உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.

DTNA யாழ்மையவாத வெள்ளாளிய மிதவாத தமிழ்த்தேசியத் தலைமைகளின் கணக்கின்படி இனிவரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 4 ஆசனங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனமும், திகாமடுகல்ல (அம்பாறை) மாவட்டத்தில் ஒரு ஆசனமும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களுமாக மொத்தம் 7 ஆசனங்கள் என்பதாக இருந்து விடுகிறது.

இனிவரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான DTNA இன் அரசியல் வியூகம் இவ்வாறு இருக்குமென ‘நாங்கள்’ முன்வைக்கிறோம். அத்தோடு வன்னி தேர்தல் மாவட்டத்தில் EPRLF சுரேஷ் அணி இழந்த பாராளுமன்ற வாய்ப்பைத் திரும்பப் பெறுவதற்கான அரசியல் வியூகமாகவும் நோக்கலாம்.

April 06, 2023

Leave a Reply