அபிவிருத்தி அரசியலுக்குள் மழுங்கடிக்கப்பட்ட சமூக நீதி அரசியல்?

கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையின் வடகோடியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் தாழ்த்தப்பட்டச் சமூகமென பயன்பாட்டு வழக்கில் விழிக்கப்படும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல் என்பது தமிழ் அரசியல்ச்சூழலிலும், இலங்கை அரச அதிகாரச் சூழலிலும் பல கேள்விகளுக்கு அவசர அவசரமாக விடை காண வேண்டுமென்பதை நிர்ப்பந்திக்கிறது.

இவ்வன்முறைத் தாக்குதல் மீதான தனது கண்டனத்தை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. அந்தக் கண்டன அறிக்கையில் இருந்து மேற்கோள் ஒன்றை முன்வைத்து இக்கட்டுரையை நாம் தொடங்குவதுதான் இச்சூழலுக்குப் பொருத்தமாக அமையுமென நம்புகிறோம்.

//…கிராம மக்கள் தங்களுக்குள் ஐக்கியப் படுவதும் இளைஞர்கள் ஒன்றுபட்டு போராட்ட மார்க்கத்தில் உறுதியுடன் முன் செல்வதுமாகும். அதனைத் தவிர்த்து பா.உ. கள், அமைச்சர்கள், அரசாங்க எடுபிடிகள் ஆகியோரை நம்பிச் சென்றால் சாதி ஆதிக்கவாதிகளிடம் தொடர்ந்து அடிவாங்கவே வேண்டிவரும். எனவே வெகுஜனப் போராட்ட மார்க்கம் மட்டுமே சாதிய ஒடுக்கு முறையை எதிர்த்து முறியடிக்க உள்ள ஒரே மார்க்கமாகும். இதனையையே சாதியத்திற்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 போராட்ட எழுச்சியும் அதனைத் தொடர்ந்த புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களும் அறுதியிட்டு அனுபவங்களாகத் தந்து சென்றன…//

வெள்ளை நிறக் கிறிஸ்தவர்கள் இலங்கையை ஆட்சி செய்த போது பலரும் பல நோக்கத்திற்காக மதம் மாறினர். சிங்கள மக்களின் பெரும்பான்மையினர் ஆங்கிலம் கற்க மறுத்த காலத்தில் இலங்கை வடபகுதியில் வெள்ளாளர் எனும் சாதியினர் ஆங்கிலத்தை கற்க முன் வந்தனர். இவர்களில் பலர் மதம் மாறினர் ஆங்கிலேய அதிகார வர்க்கத்துடன் கைகோர்த்து கைக்கூலிகளாகவும் செயல்பட்டனர்.

அந்த வகையில் இலங்கை முழுவதும் நிர்வாக செயல்பாட்டாளர்களாக அந்த ‘மேட்டுக்குடியினரே’ அதிகாரம் செலுத்தியும் வந்தனர். இவர்களே ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள வேண்டும் என்ற கோசத்தையும் பரப்பினர். இவர்களே இந்திய பார்ப்பனியத்தின் மனுதர்ம சாஸ்திரங்களையும், கருத்தியல்களையும் விதைத்தனர். இலங்கையின் வடபகுதியில் சைவமும் தமிழும் எனும் பதாகைகளினூடாக இவை அனைத்தையும் பேணிப் பாதுகாத்தும் வந்தனர். இவ்வாறான ஒரு பிரிவினரின் சமூக அநீதிக் கோட்பாடே இலங்கையின் வடபகுதியில் மட்டுமே தீண்டாமைக் கொடுமை கொழுந்துவிட்டு எரியக் காரணமாக அமைந்தது என தேவதாசன், ‘நெடுவாழ்வின் எழுதித்தீரா டொமினிக் ஜீவா’ எனும் நூலில் குறிப்பிட்டுச் செல்கிறார்.

தீண்டாமையின் வெப்பாரத்துள் இருந்து மெல்ல மெல்ல மீண்டெழு முற்படுவதான தமிழ் மரபும் அதன் பண்பாட்டுத்தளமும் மீண்டும் முருங்கை மரமேறும் வேதாளம் போல மீண்டும் தன் கோர முகம்தனைக் காட்டத் தொடங்கியிருப்பதையே வட்டுக்கோட்டை ‘நளவர்’ சமூகம் மீதான வன் தாக்குதல் சுட்டி நிற்கிறது. இச்சம்பவம் மனித மனம் படைத்த மனிதர்களால் கண்டிக்காமல் இருக்க முடியாது. இச்சூழலுக்கு சாதகமான கள நிலையை அரச அதிகாரமும், அரச ஆட்சியாளர்களும்தான் சாதீயத் தீண்டாமைச் சூழலைப் பேணுவதற்கான கள ஆதரவினை அன்றுபோல் இன்றும் சாதீய அரசியலுக்கு வழங்குகிறது. இதில் தமிழ் அரசியலும், அதில் இயங்கும் அமைப்புகள் அல்லது கட்சிகள் அதிகாரச் சண்டையில் தேர்தலில் வாக்குகளை கபாளீகரம் செய்வதற்கான மனப்போக்கில் இச்சாதீய தீண்டாமை மேலாதிக்கச் சம்பவங்களை கண்டும் காணாதவர்களாக கடந்து செல்கின்றனர். அரச அதிகாரமென்பது சிறுபான்மை மக்களின் பக்கமாக என்றும் இருந்ததில்லையென்பதை வரலாறுகளின் காட்சிகளை ஒப்பிட்டுத்தளத்தில் பார்க்கக்கூடிய நேரடிச் சாட்சியாக நாம் கால அளவில் அரசியல் ஈடுபாட்டு அனுபவங்களில் நிற்கிறோம். இக்கட்டுரையில் ‘சிறுபான்மை’ எனக் குறிப்பிடுவது சாதீய நிலை அடுக்குகளில் கீழ் அடுக்குகளையாகும். இந்த அரச அதிகாரம் ஆண் பெண் சூழலில் பெண்ணை வஞ்சிக்கும் அரசியலையே முன்வைக்கிறது.. இந்த 40 வருட ஆயுதப் போராட்டச்சூழல்கூட சாதீய விடுதலையில் அல்லது சாதீய ஒழிப்பில் நடுப்பக்கத்தில் சில பக்கங்களைக் காணோம் என்ற கதையாகிப்போய்விட்டது. இந்த சனநாயக வழிக்குத் திரும்பிய ஆயுதப் போராட்ட அமைப்புகளும், அதன் தலைமைகளும் அரச மேலாதிக்கப் போக்கோடு தங்கள் இருப்பெனும் அரசியலைக் கோர்த்து இணக்கப்போக்கில் கண்டும் காணாத சிறுபான்மை மக்கள் விரோத அரசியலில் கள அரசியலாளர்களாக நிறுத்தப்பட்டிருப்போரும் இச்சிறுபான்மைப் பிரதிநிதிகள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனி அமைப்பானது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்தெழுந்த விடுதலையாளர்களை நிறையக் கொண்டிருந்த அமைப்பாக இருந்தது. இந்த விடுதலையாளர்கள் தங்கள் சாதீய, வர்க்க விடுதலை வேண்டியே இவ்வமைப்பில் பாடசாலை செல்ல மறுத்து, மறந்து இணைந்திருந்தனர். நாடென்று விடுதலை சாத்தியமாகும் பொழுது சாதீய விடுதலையும், வர்க்க விடுதலையும் சாத்தியமாகுமென நம்பினார்கள். அந்த நம்பிக்கையில் நம்பிக்கையற்றச் சூழலை அவ்வமைப்பிற்குள் எழுந்த முரண்பாட்டு முறுக்கல்கள் தீ வைத்துக் கொளுத்தின. முறுக்கல்கள் யாருக்கிடையில் நடந்ததென விலாவாரியாக விசாரிப்பைச் செய்ய மறந்து போகும் இந்த அரசியலாளர்கள், மேட்டுக்குடி வெள்ளாள அரசியல் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள முடியாத தாழ்த்தப்பட்ட சமூகக் கட்டமைப்பில் இருந்தெழுந்த அரசியாளர்களுக்கு ‘தனிநாடு’ என்ற முகமூடி அணிவிக்கப்பட்ட போராளிகளாக, மூளை சலவை செய்யப்பட்டவர்களாக யுத்த முன்னரங்கத்திலும், குழுப்போட்டியிலும் நிறுத்தப்பட்டிருந்தார்கள். அவ்வமைப்பின் உடைவுகளும் சேதாரங்களுக்கும் காரணம் அந்த வெள்ளாளக் குருதித் தலைமைகளின் சுட்டிவிரல் சுட்டியதல்ல என்பதை இன்றளவும் இந்த அரசியலாளர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனியில் இருந்து விலகிய, விலக்கப்பட்ட, விடுபட்ட, பிரிந்துவந்த முரண் குழுவின் புதிய வடிவம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி. இக்கட்சி தோழமையின் தோழனென தொட்டிபட்டியெல்லாம் விழிம்புநிலை மக்களின் பங்காளளென பறையடித்துக் கூறியது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் தொண்டனாக, தொட்டப்பாவாக, நவீன மக்கள் திலகமென சிங்கள ஆளும் கட்சியின் பங்காளியாக மாறிவிட்ட இக்கட்சியின் தலைமை, இச்சாதீய வன் தாக்குதல் பற்றி மெளனமாகவே கடப்பதாக இருக்கிறது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தன்னகத்தே சாதீய அரசியல் கலந்துரையாடலை நடாத்துவதில்லை. ஆனால், இன்றும் இக்கட்சி தாழ்த்தப்பட்ட சமூக அரசியாளர்களை பெருவாரியாகக் கொண்டதாகவே காணப்படுகிறது. இந்த சாதீய தீண்டாமை, ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அரசியலைப் பற்றி எந்தவொரு தருணங்களிலும் இந்த ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக அரசியலாளர்கள் தம் கட்சி அகத்துள் சிந்தித்தாக, பேசியதாக, விவாதித்தாகத் தெரியவில்லை. இந்த விகிதாசாரத் தேர்தல் அரசியலில் வாக்குகளை பொறுக்குவதற்காக பயன்பாட்டுத் தளத்தில் முக்கிய பொறுப்புகளில் இவர்களைத் திட்டமிட்டே அமர்த்தப்பட்டிருப்பதாகவே கணகச்சிதமாக ஓர் கதையாடலுக்குள் கொண்டு வந்து நிறுத்தத்தான் முடிகிறது.

இக்கட்சியினதும், அதன் தலைமையினதும் 30 வருட பாராளுமன்றத் தேர்தல் அதிகார மேலாண்மை போக்கு பிழைப்புவாத அரசியல் என்ற விம்பத்தைத் தாண்டிச் சென்றுவிட முடியாமல் இருக்கிறது. இதற்காக இதர தமிழ்க்கட்சிகளோடு இணைந்து போட்டி அரசியலொன்றை திட்டமிட்டே இத்தமிழ்த் தலைமைகள் நடாத்திக் கொள்வதனூடாக தமிழ் மக்களுக்குள் எழுந்த இடதுசாரிச் சிந்தனை அரசியலுக்கூடான சாதீய விடுதலை அல்லது சாதீய தீண்டாமைக்கான எதிர் அரசியலின் மீட்சியாக எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்கப் போராட்டங்களை சிங்களப்பெருந்தேசிய மேலாதிக்க நலன் ஆட்சியின் பங்குதாரர்களாக, கைக்கூலிகளாக செயல்பாட்டுத்தளத்தில் இணைத்துக் கொண்டு ‘காட்டுத்தர்பார்’ அரசியலை, தனிமனித தலைமையை முன்னிறுத்தலுக்கூடாக யாழ் வெள்ளாள மேலாதிக்க அரசியலை மீண்டும் நிறுவிக் கொள்கிற போக்கே தமிழ் அரசியல் பரப்பில் காணப்படுகிறது.

இந்த யாழ் வெள்ளாள சாதீய மேலாதிக்க அரசியலை கிழக்கு மாகாணத் தமிழ் அரசியல் முற்று முழுதாக நிராகரித்தெழும் போக்கின் காரணமாக வட மாகாணத்துக்குள் மட்டுமே யாழ் வெள்ளாள சாதீய மேலாதிக்க அரசியல், மீண்டும் கோர முகத்தோடு சிங்களப்பேரினத்தேசிய ஆட்சியாளர்களின் அரச அதிகார மையங்களின் உதவி கொண்டு தக்க வைக்க முனைப்புக் கொள்வதாகவே வட்டுக்கோட்டை வன் தாக்குதல் நிகழ்வு சுட்டிக் காட்டுவதாகவே கருதுகிறோம்.

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசியல் செய்யும் பிராந்தியக் கட்சிகளில் தமிழ்க்கட்சிகளுக்கு ‘புலம்பெயர்’, ‘புலம்பெயர் நாடுகள்’, ‘புலம்பெயர் மக்கள்’ என்ற சொற்கள் மிக முக்கியமான அரசியல் சொற்களாக இருக்கின்றன. அதில், அந்த புலம்பெயர் நாடுகளில் கட்டமைக்கப்பட்ட அரசியலில் ‘மாற்றுக்கருத்து’ அரசியலென்பது இலங்கையில் தமிழ் அரசியல் பரப்புகளில் காணப்பட்ட முரண்பாடுகளில் இருந்தே கட்டமைக்கப்படுகிறது. பெரும் துயர்மிகு காலம் அந்த மாற்றுக்கருத்துக்கு ஓர் மாற்றுக்கருத்து அரசியல் உருவாகியிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாற்றுக்கருத்து அரசியல் என்ற சொல் பதத்திற்குள் தலைமைக்குறியீடாக இருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான, எதிரான மாற்றுக்கருத்து அரசியலை முன்னெடுக்கும் சூழல் இந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்குப்பின் முன்னெழுந்து வருவதைப் புறம் தள்ளிவிட முடியாது. அதில் இந்த வட்டுக்கோட்டை வன் தாக்குதல் நிகழ்வுக்கான அக்கட்சியினதும், அதன் தலைமையினதும் அரசியல் பார்வையானது, அக்கட்சியின் அகச்சூழலிலும் புறச்சூழலிலும் பல கேள்விகளைத் தோன்றுவிக்கும்.

“தேசிய அரசியலில் கவனம் கொண்டதினால் என் மக்களை கையேறு நிலையில் கைவிட்ட குற்ற உணர்வுக்குள் தள்ளப்பட்டேன்” என புஸ்பராஜா, தனது ‘ஈழத்தின் சாட்சியம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். இந்த வார்த்தைகளின் எதார்த்தத்தை தமிழ் அரசியலின் ‘நேற்றும் இன்றும்’ காட்சிகளாக பதிவாக்கப்பட்டிருக்கிறது. நாளையும் இந்தப் போக்கு அரசியலுக்குள் தமிழ் மக்கள் சென்றுவிடக் கூடாதென்பதுதான் எமது கவலையாகும்.

Leave a Reply