எம் அரசியல் பரப்பில் மறுதலிக்கப்பட்ட அல்லது மறந்த மே தினம்!

எம் அரசியல் பரப்பில் மறுதலிக்கப்பட்ட அல்லது மறந்த மே தினம்!

மே தினம்! உலகத் தொழிலாளர் தினம்! 1886 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பெரு நகரமான சீகாகோவில், தொழிலாளர்களுக்கு எட்டு மணித்தியால வேலை நேரத்திற்காக நடந்த போராட்டத்தின் விளைவாக கிடைக்கப்பட்ட அந்த உரிமை வெற்றியைக் குறிக்கும் நாளாகும். ஆனால், கவலை தரும் நிகழ்வாக அந்த போராட்டத்தை தலைமை தாங்கிய நடத்திய நான்கு தோழர்களுக்கு அந்த முதலாளித்துவ அரசு தூக்குத் தண்டனை வழங்கி நிறைவேற்றிக் கொண்டது. தோழர் கார்ல் மாக்ஸ், தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்வு பற்றிய தத்துவார்த்த சிந்தனையில் இருந்து எழுந்த கருத்தியலின் ஓர் விளைவாக ‘தொழிலாளர் தினம் அல்லது மே தினம்’ என்றழைக்கப்படும் நாளாகும். இந்த மே தினம் பற்றிய நிகழ்வுகளை எமது சிறு வயதுக் காலங்களில் பார்த்திருக்கிறோம். அந்த அரிவாளும் சுத்தியலும் சித்திரங்களாக தீட்டிப் பார்த்த நாள்களை நினைவடுக்கில் பத்திரமாக பூட்டி வைத்திருக்கிறோம். நாம் யார் என்பதை பேச முற்படுகிறோம். ஆனால், தத்துவார்த்த விவாத நிறுவல் அற்றவையாக, ஓர் புனைவுக்கதை வாசிப்பாக எமது சிறு வயதுக்காலம் கடந்த படியால் தோழர் வி.பொன்னம்பலமும், தோழர் சண்முகதாஸன், தோழர் டொமிக் ஜீவா, தோழர் பத்மநாபா போன்றவர்கள் நினைவடுக்களில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தோழர் கார்ல் மாக்ஸிலிருந்து தோழர் லெனின், தோழர் மாசேதுங், தோழர் பிடல் காஸ்ரோ என உலகம் ஒருமித்து வியக்கும் தத்துவார்த்த சிந்தாந்த தொடர்ச்சியை நாம் காண்கிறோம். இவர்களால் மக்களின் வாழ்வில் மாற்றமொன்றைக் கொடுக்க முடிந்திருக்கிறது. இதே இலக்கை நிறுவதற்கும், தத்துவார்த்த சிந்தாந்தத்தை கற்றுக் கொள்ளவும் நாம் மே தினம் கொண்டாட வேண்டி இருக்கிறது.கடந்த காலங்களில் நாம் கடந்து வந்த அரசியல் செயல்பாட்டில் இந்த மே தினம் அல்லது தொழிலாளர் தினம் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது. என்னைப் பொறுத்த மட்டில் இந்த தொழிவாளர் தினம் பற்றி தோழர் சீலன் இராமமூர்த்தியோடு, கதையாடல் ஒன்றுக்குள் செல்லும் பொழுது, 1984 இலிருந்து 1986 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி அரசியலில் மே தினத்தின் முக்கியம் பற்றியும், தாங்கள் நடத்திய மே தினம், மே தின ஊர்வலங்கள் பற்றி கிலாகித்துக் கூறுவார். அதற்குப்பின் வந்த காலங்களில் மே தினம் என்பது மறந்துபோன, தேவையற்ற விடயமாக மாறிவிட்டதாக கவலைப்பட்டுக் கொள்வார்.

இதற்குப் பின்னான காலத்தில் 1992 ஆம் ஆண்டு, நெடுந்தீவில் மிகப் பிரமாண்டமான மே தின நிகழ்வை, அந்த மக்களின் முழு மன ஈடுபாட்டுடனும், அந்த மக்களுக்குள் இருந்த சமூக அமைப்புகளின் முழு மன பங்களிப்புடன் மே தின ஊர்வலமும், மே தினக் கூட்டமும் நடாத்தப்பட்டது. அக்கூட்டம் தென்னிலங்கை அரசியலுக்குள் ஈழ மக்கள் சனநாயகக் கட்சிக்கான அரசியல் பார்வையொன்றை ஏற்படுத்தியதை நாம் யாரும் மறுத்து நிற்க முடியாது. இதன் விளைவாக, அதன் பின் அன்றைய. ஜக்கிய தேசியக்கட்சிப் பிரமுகர் டாக்டர் ஜயலாத், நெடுந்தீவுக்கு வந்து போகுமளவுக்கு அந்த மே தினம் நிகழ்வு இருந்தது.தோழர் நவநீதன் (மோகன்) குணரத்தினம், சந்தைக்கடை ஈசன், வளர்மதி சனசமூகத்தைச் சேர்ந்தவர்கள் பத்மநாதன் மாஸ்டர், கிழக்கு சனசமூக நிலையத்தைச் சேர்ந்தவர்கள் செல்வா மாஸ்டர், சேவியர், செல்வநாயகம் போன்று கெனடி, தோமஸ், மகாராசா போன்றவர்கள் தத்துவார்த்த சிந்தாந்த அறிவுள்ளவர்களாக காணப்பட்டார்கள்.

இது எனக்கு வியப்பை அளித்த விடயமும், பல கேள்விகளை என்னுள் எழ வைத்தது.இவர்கள் சனசமூக நிலையத்துக்கூடாக தங்களுக்கான கற்றுக் கொண்டும், அதை தங்கள் வாழ்வினூடாக செழுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த மே தின நிகழ்வும் எனக்கும் என் அரசியலுக்கும் தவிர்க்க முடியாதொன்றாக இருக்கிறது. இரு வேறு திசைகளாக மாறிவிட்டிருந்த ஆயுதப் போராட்ட அமைப்புகளின் நிர்வாக அதிகார மாற்றங்களின் போது, தமிழ் மக்களின் நிலை என்ன என்பதை நாம் அறிந்ததொன்றாகும். அன்றைக்கு நெடுந்தீவில் எனக்கும், மக்களுக்குமான மன நெருக்கம், நம்பிக்கைகள் என்பது கேள்வியாக இருந்தது. இதில் எனக்கு கை கொடுத்தது இந்த மே தின நிகழ்வுதான். இதனால் எனக்கு இந்த மே தினம் என்பதின் மீது ஓர் அலாதியான ஈடுபாடு. அதற்குப் பின் இன்றைவரைக்கும் அந்த மே தின நிகழ்வை, அந்த பிரமாண்டத்தை ஈழ மக்கள் சனநாயகக் கட்சியால்கூட நடத்திட முடியாமல் இருக்கிறது. இதற்கு நான் மட்டுமல்ல, அந்த நெடுந்தீவு மக்களின் சிந்தாந்தப் பார்வையும், ஒத்துழைப்பும், தோழர் மதனின் இடதுசாரி தத்துவார்த்த சிந்தாந்த தெளிவான பார்வையும் அம்மாபெரும் மே தின நிகழ்வை அந்த தீவில் நிகழ்த்திக் காட்ட முடிந்தது.2009 ஆம் ஆண்டிற்குப் பின் அரசியலை தமிழர்களுக்கான ஓர் புதிய அத்தியாயமாக பார்க்கலாம். இங்கு எம் மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகளைப் பற்றிப் பேச்செழும் பொழுது தனித்து அபிவிருத்தியென வெறுமனே கட்டிடங்களின் கட்டுமானங்களை பேசிட முடியாது. நாம் பெரும் ஆர்பரிக்கும் கடல் அலைபோல எழ, அடிப்படை மக்கள் கட்டுமானங்களாக எது இருந்தனவோ, அவற்றை மீள கட்டியமைத்தல், அதனூடாக மக்களை அரசியல் அறிவூட்டச் செய்வதென்பது அத்தியாவசியம்.

வெறுமனே வாக்கு அரசியலுக்குள், சம்பளம் வழங்கும் கட்சி முறைக்குள் காலம் தள்ளிவிட முடியாதென்பதை ‘நம்மொழி’ குழுமம் தன் உள்ளக விவாதங்களுக்கூடாக கண்டடைந்திருக்கிறது. தமிழ் மக்களின் அன்றாட தேவைகளுக்கான அரசியலையும், இன்றைய தமிழ் மக்களின் வாழ்வுக்கான பாதுகாப்பு அரசியலை முன்னெடுக்கும் சம காலத்தில், நாளைய அரசியலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பெற்றிடும் அரசியலுக்கு மே தினம், மகளீர் தினம் போன்ற மக்கள் நிகழ்வுகள் மிக மிக அவசியமாகிறது. தோழர்களே! இந்த உலகத் தொழிலாளர் தின வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வடைகிறோம்.

Leave a Reply