• May 9, 2023

காத்திரமான அரசியலுக்காக, புலம்பெயர் இலங்கைத் தமிழ்ச்சமூகம் இலங்கை நோக்கித் திரும்புதல் வேண்டும்?

பொறுப்புக்கூறல்: Nixson Baskaran Umapathysivam

நாம் புலம்பெயர்ந்திருக்கிறோம்; அதனால், நாம் பொருளாதார ரீதியில் வளர்ந்திருக்கிறோம் என்பதால் நாம் விட்டு வந்த மண் சார் மக்கள் கையலாகாதவர்களாக இருக்கிறார்களா?

ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தங்களுக்குத் தேவையானதுக்கேற்ப ஏதொரு கற்பனாவாத படைப்பொன்றை உருவாக்கிக் கொள்கிறார்களென நான் கருதுகிறேன். இதொரு உளவியல் ரீதியான நோயோயெனச் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது.

பொதுவெளி விளிம்போரத்தில் இருந்து இந்த மையம் கொண்ட கட்சிகளையும் தலைமைகளையும் நோக்குகிற பொழுது இவர்கள் அரசியல் சொதப்பல்தான் இன்றைய ஒட்டுமொத்த இலங்கையின் நிலையெனத் தோன்றுகிறது. அதிலும் தமிழ்த்தலைமைகளின் சொதப்பல்தான் தமிழ் சமூக பொருளாதார அரசியல் இன்றைய நிலவரத்தையும் பார்க்க முடிகிறது.

குறிப்பாக, ஆயுதப்போராட்டத்தின் தலைமைகளின் சொதப்பல் என்பதுதான் ‘கருக்கலைப்பு’ அரசியலுக்குக்கூடாக 2009 இல் அந்த ஆயுதப் போராட்ட ‘Subject’ க்கு முள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். அதற்குப்பின், மிச்சமிருக்கிற தலைமைகள் ஏதாவது திருத்தினார்களா? அல்லது மாறினார்களா? என்று பார்த்தால் இல்லையென்றுதான் சொல்ல முடிகிறது.

EPRLF எனும் ஆயுதப் போராட்ட அமைப்புக்குள் டக்கிக்கும் சுரேஷ்க்கும் இடையிலான முரண்பாடென்பது தனிநபர் முரண்பாடாகும்; அது வெகுசன மக்களின் தரப்பின் தேவையில் இருந்து எழுந்த முரண்பாடல்ல. அது தீர்க்கப்படாத சூழலில் சேதாரப்படுத்தப்பட்ட, இவர்களால் பயன்படுத்தாமல் கைவிடப்பட்ட  மனித வலுக்களை கணக்கில் கொள்ள முடியாதது. இது போர்முனையில் பிரபாகரன் இழந்த மனிதவலுவைவிடக் கூடுதலானது.

1987 இல் இந்துப் பிராந்திய வல்லாதிக்கமான இந்தியா, இலங்கைத் தமிழ் ஆயுதப் போராட்டத்தின் தோல்வியின் பக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அதில் நேரடி நடுவராக மாறுகிற பொழுதேற்பட்ட சந்தர்ப்பத்தில் பிரபாகரனின் தனிமனித அகமன முரண்பாட்டின் வெளியில் நிலைமாறும் இந்திய நடுவர் அரசியலைப் பயன்படுத்திக் கொண்ட EPRLF, 2009 இல் நிலை தடுமாறும் இலங்கைத் தமிழ் அரசியல் பரப்புக்கு தலைமையேற்றிருக்க வேண்டும். EPRLF இன் அகமன முரண்பாடு அதைத் தவிர்த்துச் செல்கிறதெனலாம்.

இலங்கைத்தமிழ் அரசியல் பரப்புக்குள் மாற்று கருத்து, மாற்று அரசியலென ‘மாற்றீடு’ ஒன்றை முன்னிறுத்திய அரசியல் அணுகுமுறைக்குள் திணிக்கப்பட்ட அரசியல் தலைமைக்கான போட்டியை 2009 இற்குப் பின்னும் தொடர்ந்ததும், அந்த மாற்றீட்டுத் தமிழ்த்தலைமைகளும்  ‘கருக்கலைப்பு’ அரசியலை முன்னெடுத்திருப்பதைக் கவனிக்கலாம். ஆனால், அடிப்படைக் குணயியல்பு இந்த மாற்றுத் தலைமைகளுக்குள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதுவும், பிறிதொரு வளையத்துக்குள் EPRLF க்குள் ஏற்பட்ட தனிநபர் அகமன முரண்பாட்டின் அரசியலை முன்னெடுத்து வருவதை, EPRLF உடைவுக்கட்சித் தலைமைகள் செய்து வருவதைக் காணலாம். இச்சூழலில் மனித வலுவை மட்டுமல்ல இலங்கை நடுவன் அரசைப் பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரப்பலத்தையும் கோரிக்கைகளையும் இலங்கைத்தமிழ் அரசியல் பரப்புக்குள் EPRLF இழந்து நிற்கிறது.

இச்சூழலிலில் புலம்பெயர் இலங்கைத் தமிழ்ச்சமூகம் இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணப் பரப்பில் புரனமைப்பு, மீள் கட்டுமானம்,  வெகுசன அமைப்புக்களை உருவாக்க முனைதல் எனத்தாண்டி அரசியல் பேசுதல், விமர்சனம் செய்தலோடு புதிய கட்சிகளை உருவாக்கித் தலைமைகளாகவும் இருப்பதோடு பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாறியிருக்கிறது.

இதைவிட இந்தப்புலம்பெயர் இலங்கைத்தமிழ்ச் சமூகத்தின் மேலடுக்கு தரப்பு புலம்பெயர் தம் தேசங்களில் மக்கள் அரசு அதிகாரத்தில் தம் அளவிலான பங்கினை நிறுவியிருக்கிறதைக் கவனிக்கலாம். அதே வழிச்சூழலில் பொருளாதார ரீதியிலும் இப்புலம்பெயர் தமிழ்ச்சமூகம் தங்களை நிறுத்தியிருக்கிறது.

இங்கு ஒரு பொது அடையாளம் ஒன்றை அவதானிக்கலாம்; அது யாழ்மையவாதச் சிந்தனை கட்டமைத்திருக்கும் சமூக அமைப்புக்குள் குடும்பத் தலைமைத்துவத்தின் தனிநபர் குணக்கூறுகளாகப் பார்க்கலாம். இது அப்படியே வெகுசன மக்கள் அமைப்புக்கள், கட்சி வரைக்கும் எடுத்து வரப்பட்டிருக்கிறது.

தமிழ்த்தேசிய விடுதலை அரசியலென்பதுகூட யாழ்மையவாதக் கல்விச்சமூகத்திலிருந்தும் அதைவிட ஒருபடி குனிந்து பார்த்தோமானால் சாதிய ரீதியான யாழ்மையவாத மேலாதிக்கச் சாதியான வெள்ளாளியச்சூழலில் கிளைகொள்ள ஆரம்பித்ததெனலாம்.

யாழ்மையவாதச் சமூக அமைப்பில் சொத்துச்சண்டையில் சாவு வீட்டுக்குப்போக முடியாத குடும்ப தனிமனித அக மனச்சூழலையே கட்சி அரசியல் முரண்பாட்டின் வெளிப்பாட்டிலும் காண முடிகிறது. இந்தக் குடும்ப தனிமனித கோபப்பகை முரண்பாடும் சொத்துக்களில் ஆதிக்கம் கொண்டிருந்த வெள்ளாளிய மேட்டுக்குடிக் குடும்ப யாழ்மையவாதச் சிந்தனைக் குணயியல்பாகும்.

1986 இல் LTTE மற்றும் பிரபாகரனின் அகமன நிலைக்கும் 2023 இல் டக்கியின் அகமன நிலைக்கும், செல்வத்தின் அக மன நிலைக்கும், சித்தார்த்தனின் அக மன நிலைக்கும், சுரேஷின் அக மன நிலைக்கும், சந்திரகுமாரின் அக மன நிலைக்கும் என்ன வேறுபாட்டை நாம் பார்த்திட முடியும்? இதை முக்கிய அவதானிப்பாக, இலங்கைத்தமிழ் பொதுவெளிக்கு முன்வைக்கிறேன்.

இங்கு பொதுமைச்சூழலில் தங்களைத் தனித்து ஏகமாக நிலை நிறுத்துவதற்கான கூட்டுக்களையும் உடைவுகளையும் இங்கு நடாத்தப்பட்டிருக்கிறது. அதைத்தாண்டி, அந்த ஏகத்தைத் தக்க வைக்க மட்டுமே இலங்கைத்தமிழ் அரசியல் தலைமைகள் தெற்கு சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும், பயன்படுத்தலையும் எடுத்திருக்கிறார்கள் என்பதே என் அவதானிப்பாக முன்வைக்கிறேன்.

இங்கு, இந்த இலங்கைத்தமிழ்த் தலைமைகள், தங்களது இருப்பு மற்றும் ஏகத்திற்கான மேலதிக இனைப்பாக இந்தியா, சர்வதேசம், ஐக்கிய நாடுகள் சபை, சீனா, புலம்பெயர் இலங்கைத்தமிழ்ச் சமூகமெனப் பயன்பாட்டுத்தளத்தில் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைத்தாண்டி வேறெதையும் இவர்களிடத்தில்  காண முடியவில்லை என்பது இத்தமிழ்த்தலைமைகளின் அரசியலே சுட்டி நிற்கிறது.

புலம்பெயர் இலங்கைத்தமிழ்ச் சமூகத்தின் மத்தியதர வர்க்கத்தில் புதையுண்டு இருக்கும் முன்னாள் போராளி அரசியலாளர்கள்தான் இன்றைக்கு இலங்கையில் உள்ள இந்த இலங்கைத்தமிழ் மாற்றீட்டுச் சூழல் மற்றும் இலங்கைத்தமிழ்  தலைமைகள் மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால்,   இவர்கள்தான் 86 இல் பிரபாகரனின் ஏகத்திற்கான ‘கருக்கலைப்பு’ நடவடிக்கைகளின் பின் புலப்பெயர்வில் பெருமளவில் இருக்கிறார்கள். இவர்கள்தான் இந்த ‘மாற்றுக்கருத்து’ புலம்பெயர் சூழலை உருவாக்குகிறார்கள்; அதன் நதிமூலமாக இலங்கையிலும் தமிழ் அரசியலுக்குள் மாற்றீட்டு தலைமை முளை கொள்கிறதெனலாம். 2009 இற்குப்பின் புலிகள் அல்லாத இலங்கைத்தமிழ் அரசியலில் அந்த ஏகத்தை இந்த இலங்கைத்தமிழ் மாற்றுச்சூழல் முன்னிறுத்துகிற பொழுது இந்தப் புலப்பெயர் மத்தியதர வர்க்க முன்னாள் போராளிகள் சமூகம் அதிருப்தி கொள்கிறதெனலாம்.

புலம்பெயர் மாற்றுக்கருத்துச் சமூகம் கருத்தியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அங்கொரு புதிய சூழல், முற்போக்குச்சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டுமென அலட்டிக் கொள்வதாகத் தெரிகிறது.ஏனென்றால், அங்குள்ள மாற்றுத்தலைமைகள் இதைக் காது கொடுத்து ஏற்றுக் கொள்வதாக இல்லை; மாறாக, தம் கட்சிகளுக்கான புலம்பெயர் தேசப் பொறுப்புக்களையும், கட்சி மத்திய பொறுப்புக்களையும் கொடுத்துக் கணக்கு தீர்ப்பதாகக் காண முடிகிறது.

அப்படிச் சூழல் போய்க் கொண்டிருந்தாலும் இதைக்கடந்தும் பேசும் புலம்பெயர் முன்னாள் போராளி அரசியலாளர்களுக்கு இந்த அரசியல்கூட அவர்களது நிகழ்ச்சி நிரலில் முதல் priority கிடையாது; இதனால், இவர்களது பேச்சும் முயற்சிகளும் நீத்துப்போய் விடுகின்றன. அப்படியிருந்தும், இந்த முயற்சிகளின் ஆயுள் என்பதுகூட இன்றுவரைக்கும் நீடித்துக் கொண்டிருக்கும் ‘கருக்கலைப்பு’ அரசியலினால் மட்டுப்படுத்தப்படுகிறது.

2009 இற்குப் பின்னான கருக்கலைப்பு நிகழ்வென வன்னி மாவட்டத்தில் கட்சிகளுக்கிடையான போட்டியில் நிகழ்ந்த சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இன்று போட்டித் தலைமைகளாக இருக்கின்ற EPRLF உடைவுக் கட்சிகளின் மனப்போக்கும் தாம் ஒன்றாக இருந்து விடுபட்டு புதிய கட்சிகளுக்குள் பயணிக்கத் தொடங்கிய சூழலில் எழுகிற போட்டிக்குள் மாவட்ட அமைப்பாளருக்குக் குறிவைத்து உள்ளிழுத்து அத்தோடு அலுவலகத்தையும் கைப்பற்றிக் கொள்ளும் இராணுவ அரசியலைப் பார்க்க முடிந்திருந்தது.

நான் இன்னொரு அவதானிப்பையும் முன்வைக்க வேண்டியிருக்கிறது; அதாவது, புலம்பெயர் இலங்கைத்தமிழ்ச் சமூகத்தின் நிலம்சார் மக்களாதிகாரத்தின் மீதான வேட்கை பற்றியது, அதில் அங்கையன், சாணக்கியன், ஜெனா, சந்திரகுமார் போன்றவர்களின் அரசியலைக் குறிப்பிடலாம். அதைவிட கட்சியை பரம்பரைக்கட்சியாக மாற்றிக் கொள்ளும் யாழ்மையவாத மேட்டுக்குடி மனநிலையில் புலம்பெயர் தேசத்தில் இருந்த குடும்ப உறுப்பினர்களைக் கட்சிக்குள் ஆளுமைக்குள் நிலை நிறுத்தப்படுவதையும் காணலாம்.

பொதுவாக, ஆயுதப் போராட்டத்தின் தொடக்கமும் அகதிப்புலப்பெயர்வும் சம கால நிகழ்வாக இருந்ததினால் அமைப்புக்களின் நிர்வாக தேசமாக புலப்பெயர் தேசங்களும் அமைகின்றன. இது இன்று வரைக்கும் தொடர்ந்து வருகின்றது.

இலங்கையின் பொருளாதார அரசியல் நெருக்கடிக்கும் புலம்பெயர் தேசத்து இலங்கைச் சமூகங்களின் இலங்கை மீதான கவலைகள் அதிகரித்திருக்கின்றன. இதொரு கற்பனாவாதக் கவலைகளெனப் பதிவு செய்யத்தான் முடிகிறது. இதுகூட புதிய காலனித்துவதத்தின் சிந்தனை வடிவமாகவும் பார்க்கலாம்.

ஆகவே, இலங்கைத்தமிழ்ச் சமூகம் ஒரு தேசமாக திரள்வதற்கு முன் தமக்கான தலைமையென்பதைக் கண்டடைய  வேண்டும். அதற்கு முன்னாடி தலைமைக்கான கட்சியொன்றைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. இதில் புலம்பெயர் தேசத்து இலங்கைத்தமிழ்ச்சமூக கவலையாளர்கள் உடனடியாக இலங்கை திரும்புதல் செய்வதுதான் அவர்களுக்கான அரசியலாகும்.
          May 09, 2023 

Leave a Reply