கோட்டுபாட்டுத் தத்துவங்களும் அதன் மீதான பொருள் கோரலும்! பகுதி – IV

‘ஜெனிவா’ என்ற பூதம் மீண்டுமொரு தடவை இலங்கை அரசியல் பரப்பில் முகம் காட்டத் தொடங்கியிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் கூடவுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டத்தில் இலங்கை மீதான போக்கும் முடிவுகளும் எப்படியிருக்கப் போவதென்பதோடு, இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் எதிர்வினை என்ன? என்பது பற்றிய கருத்தாடல் நேரமாகவும் அமைகிறது. இலங்கை ஆளும் பொதுஜன பெரமுனா அரசு இச்சூழலை எப்படி நகர்த்த போவதென்பதுவும், ஆளும் அதிகாரத்தில் பங்கேற்றிருக்கின்ற, ஆதரவு நிலை தமிழ்க்கட்சிகள் இந்த ஜெனிவா விடயத்தில் ஆளும் தரப்பை எப்படி கையாளப் போகிறார்கள் என்பதும் முக்கிய கேள்வியாக இருக்கிறது.

இலங்கைத்தமிழர்களுக்கான அரசியல்த் தீர்வென்பது ஓர் பிரசவத்திற்கான வலி வேதனையோடு இருப்பதான குறியீட்டுச் சூழலில் தவிக்கிறதாக நாம் கருதுகிறோம். இப்பெருந்தொற்றுக் காலமும், ஜெனிவா விடயமும், இவ்விரு காரணங்களால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியும் தேசியங்களுக்கிடையேயான அரசியல் அதிகாரப் பிணக்கைத் தீர்ப்பதற்கும் ஓர் புள்ளித் தொடர்ப்பை உடையதாகவும் கருதுகிறோம். இந்தச் சூழலில் தேசியங்களுக்கிடையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதன் ஊடாகத்தான் இலங்கை எதிர்கொள்ளும் பெருந்தொற்றில் இருந்தும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கிற வாய்ப்பைப் பெற முடியும் என்பது எமது முழு நம்பிக்கையாகும்.

தேச பொருளாதார நெருக்கடிக்கான தீர்வென்பது குடும்பப் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முற்படும் தந்திரோபாய நடவடிக்கை போன்றதே. இந்த தேச பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதென்பது புதிய வருவாய்க்கான ஆதாரங்களைத் தேடுவதோடு, இருக்கிற வருவாயைத் தக்க வைத்துக் கொள்வதும் என்பதற்கு மேலாக, செலவுகளைக் கட்டுப்படுத்துவதும், குறைப்பதென்பதும் மிக முக்கியமான நடவடிக்கைத் திட்டமிடுதலாக இருக்கும். இங்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் தேசிய நல்லிணக்கமும் அதனூடாக தேசியங்களுக்கிடையான பரஸ்பரம் நம்பிக்கையென்பது மிக அவசியமானதாக இருக்கிறது. இந்த நம்பிக்கையின் பின்தான் இலங்கையின் பொருளாதாரத்தின் பெரும் பகுதியைச் செலவீனமாகக் கொண்டிருக்கும் இராணுவச் செலவீனத்தைக் குறைக்க முடியும். போர் அல்லது யுத்தம் என்பது முடிவடைந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையிலும் இராணுவச் செலவீனம் அப்படியேதான் இருந்து வருகிறது.

இந்த இராணுவச் செலவீனத்தைக் குறைப்பதென்ற பேச்சை எந்தத் தரப்பாலும் முன்னெடுக்க முடியாத சூழலை வலிந்து இரு தேசிய அரசியலாளர்களும் முன்னெடுப்பதில் முனைப்புத்தான் காட்டி வந்திருக்கிறார்கள். மரபுக்குள் மொழியை முன்னிலைப்படுத்தி தமிழ்த்தேசியத்தின் மீதான கட்டமைப்புக்குள் யுத்தம் ஒன்றை முன்னெடுத்ததும், அதன் வழியே கிடைத்த அரசியல் தீர்வைப் புறம் தள்ளிப் போர் முனைப்பில் தோல்வியைத் தழுவிய தமிழ்த்தேசியம் இந்த நம்பிக்கையை முதலில் ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குள் இருக்கிறது. இங்கு பல கூறுகளாக பிரிந்து நிற்கிறது தமிழ்த்தேசியம். இந்தத் தமிழ்த்தேசியம் யார் என்பதில் ஏற்பட்டிருக்கும் அடிப்படை முரண் பிணக்குகளே இந்த நம்பிக்கையை சிங்களத்தேசியத்திற்குக் கொடுக்க முடியாமல் தமிழ்த்தேசியம் முட்டுச் சந்தில் முட்டிட்டு நிற்பதற்கும், தவிர்ப்பதற்குமான காரணமாக அமைகிறது.

அனேகமாக, யுத்தம் உக்கிரமான சூழலில், 2009 இல் ஜெனிவாக் கூட்டத் தொடருக்குச் சென்ற இலங்கை அரசு குழுவில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பொறுப்பாளர் டக்ளஸ் தேவானந்தாவும் இடம் பெற்றிருந்தார். அன்றைய சூழலில் இலங்கையில் நடந்த யுத்தம் பயங்கரவாதத்திற்கான யுத்தம் என்ற நிலைப்பாட்டிலே அக்குழுவில் இடம் பெற்றிருந்து பிரச்சாரமும் மேற்கொண்டிருந்தார். அந்த யுத்தத்திற்குப் பின்னான இந்த ஒரு தசாப்த காலத்தில் ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்ற கோட்பாட்டுத் தத்துவத்தின் வழியே கண்டடைந்த தீர்வுக்கான சாத்தியமான வழிகள், பேச்சுக்கள் போன்றவற்றை இவர்கள் பேச வேண்டும். ‘போலித்தமிழ்த்தேசியம்’ என்ற ஒன்றைச் சொல்லாடலினால் தமிழ்த்தரப்புக்குள் கலவர நிலையைத் தோன்றுவிக்கும் அரசியலையே கட்டமைக்க முயற்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லாத நிலையில் அதோடு சம்பந்தப்படாதவர்கள், அமைப்பைச் சாராதவர்கள் அவர்களைப் பற்றிய பேச்சில், கதையாடல்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நம்பிக்கையை உருவாகுவதை மேலும் சீர்குலைப்பதாகவே இருக்கிறது. பயங்கரவாதம் என்பதுவும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்பதுவும் பிணக்குகள், முரண்பாடுகளுக்கு அப்பால் இலங்கை அரசியலாளர்களின் தேர்தல் அரசியலுக்கு இன்றும் அவசியமாக இருக்கிறது.

நாலு வருடங்களுக்கு முன்னாடி, ஒருவருடன் அதுவும் நாற்பது வயது மதிக்கத்தக்கவர், ஊரில் அவரது அரசியல் செயல்பாடு பற்றித் தெரியாது. ஆனால், புலம்பெயர் தேசத்தில் அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புச் செயல்பாட்டாளர். அவருடன் தொலைபேசியில் / Wats Appஇல் பேசுவதற்கு, அதில் அரசியல் பேசுவதற்கும் வாய்ப்புக் கிடைத்தது. நீண்ட உரையாடலின் பின், “ஏன்? தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை தொடர்ந்தும் இலங்கைத் தமிழ் மக்களுக்கான அரசியலில் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. அப்பெயரைப் பயன்படுத்துவதனூடாகத்தானே நீங்கள் முன்வைக்கும் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு விடைதேட முடியும்?” என வினாவொன்றை முன்வைத்தேன். நான் நினைக்கிறேன், அவர் இந்த வினாவை தன்னிடம் கேட்கப்படுமென எதிர்பார்க்கவில்லை. சிறிய மெளனத்திற்குப் பின் அவர், “தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சர்வதேச நாடுகள் பயங்கரவாத அமைப்பென்று தடை செய்திருக்கிறது. அதைவிடுத்து, அதை மீறி, அதை எப்படி இயக்க வைக்க முடியும்?” என்ற பதிலில் வினாவொன்றை முன்வைத்தார். இங்கும் அவர்களும் முட்டுச்சந்தியில் முட்டிப்போட்டு நிற்பதான காட்சிச்சூழலாக இருக்கிறது. நாம் யோசித்துப் பார்க்க வேண்டும், காலம், சொத்து, உயிர்கள் என எவ்வளவை தமிழ்ச்சமூகம் இழந்தும் முட்டுச்சந்தில் நிற்பது வேடிக்கையாக பார்த்து கடந்து சென்றுவிட முடியுமா? பொதுவாக, அதன் எச்சங்களாக அக்குணயியல்புகள் இன்றும் அதன் சகோதர தமிழ் அமைப்புகளிடத்தில் மற்ற அமைப்பினர்களை பூட்டுக்குள் சிக்க வைப்பதில் பெரும் முயற்சி செய்வதில்தான் தமக்கான வாக்கு பலத்தைக் கட்டியமைக்கலாம் என்பதும், அதற்கென கேள்வி கேட்காத, மறுவாசிப்புச் செய்யாத, புதிய தன் சிந்தனை பற்றிய எந்தவொரு முகாந்திரமில்லாத அடுத்த படிநிலையைத் தூரமான புள்ளியாக உருவாக்கிக் கொண்டு தலைமைக் கதிரையையும் கட்சியின் பொருளாதார செளபாக்கியங்கள் அனைத்தையும் அனுபவித்துக் கொள்ளுதல் மட்டுமே அரசியல் என்பதை நடைமுறைக்காட்சிகளாக காண்கிறோம். இந்த அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக்கட்சித் தலைமைப் பொறுப்பாளர் இரா. சம்பந்தன் மீதான பார்வையும் விமர்சனமும் அவர் மீதான என்பதைவிட அக்கட்சித் தலைமைப் பொறுப்பு மீதான கணதியும் வரலாற்று வழியான விம்பமும் கேலி செய்யப்படுவதாக இருக்கிறது. இது பற்றி மக்கள் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தக்கூடிய மக்கள் அமைப்புகளும் பொறுப்புமிக்க பொறுப்பாளர்களும் இல்லாமையென்பதே ஒருபுறத்தில் தமிழ்த்தேசியமென்ற அரசியலின் பலகீனமாக இருப்பதோடு, தமிழ் மக்களின் தேர்தல் காலச் சிந்தனைகளும் தமிழ்ச்சமூகம் சார்ந்த முடிவுகளும் கேலிக்குரியதாகவே இருக்கிறது. இந்தப் போக்கில் தமிழ் மக்களும் தமிழ்த்தலைமைப் பொறுப்பாளர்களின் வழியே தம் இருப்பு, தேவையில் இருந்தே தமிழ்ச்சமூகத்தைப் பார்க்கும் குணயியல்பு வழியே மரபின், வம்ச கூறாகவும் பண்பாட்டுக்கூறாகவும் வெளிப்படுத்தும் சூழலில் அரசியல் பயணம் செய்கிறார்கள். வேலிச்சண்டை கிணத்தடி உரித்துச் சண்டையில் நல்லது கெட்டது பங்கெடுக்காத குடும்பச் சமூக மனோநிலையிலேதான் கட்சி, அமைப்புத் தலைமைப் பொறுப்பாளர்களும் இன்று வரைக்கும் அன்று ஏற்பட்ட முரண்பாடுகளை களையாமல் முகங்களிலும், மனசுகளிலும் சுமக்கிறார்கள். இந்த முரண்பாட்டு முகம் சுளிப்புகள் தமிழ் மக்களின் அரசியலைப் பலகீனப்படுத்திச் செல்வது புரிந்திருந்தும் தமக்குக் கீழ்ப்பட்டான பொறுப்பாளர்களையும் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் தட்டிக் கொடுத்து கொம்பு சீவிடுதலுமாக ஒர் ஜனரஞ்சக நவீன அடிமைத்தன அரசியலொன்றைக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் இன்றைய இறுக்கமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான சூழலின் நம்பிக்கை கொடுக்கும் ஒளிக்கீற்றாக பிரசவ வலி கண்டிருக்கும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வை பிறப்பிப்பதாகும். இதற்கு இரு தேசிய அரசியலாளர்களும் ஒருமித்து ஓர் புள்ளியொன்றுக்கு வந்தாக வேண்டியிருக்கிறது.

பல ஊடக பதிவுகளில் ஆளும் தரப்போடு இணக்கமான அரசியலை முன்னெடுக்கும் தமிழ்க்கட்சிகளான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆகியவற்றின் ஜெனிவா விடயத்திலான பங்காளிப்பு பற்றி பேசுவதை திட்டமிட்டே தவிர்த்து வருவதாகத் தெரிகிறது. இதொரு தேர்தலை முன்னிறுத்தும் செயலாகவும், இக்கட்சிகள் மீதான தப்பாப்பிராய வார்த்தைப் பிரயோக மனப்போக்கை தமிழ் மக்களிடத்தில் தொடர்வதைச் செய்கிறது. அதே நேரத்தில் இக்கட்சிகளிலும் வெறுமனே இச்சூழலைக் கடந்து செல்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தினால் இலங்கை அரசு மீது கொடுக்கும் அழுத்தம் என்பது தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழ் அரசியாலாளர்களுக்கான எதிரான சட்ட மூலத்தை இல்லாமல் செய்வது உட்பட குறைந்த பட்ச இந்த தமிழ்க்கட்சிகளின் அடிப்படை கட்சிக் கோட்பாட்டுத் தத்துவங்கள், கொள்கையென தேர்தல் கால வாக்குறுதிகளுக்கான தீர்வாகத்தானே அமைகிறது. இதில் கூட இரு தமிழ்த்தரப்பும் ஓர் இணக்கச்சூழலுக்குள் வருவதென்பது பிரசவ வலி கண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் ஆபிலாசைக்கான தீர்வென்பதைச் சாத்தியமாக்கும்.

Leave a Reply