கோட்டுபாட்டுத் தத்துவங்களும் அதன் மீதான பொருள் கோரலும்! பகுதி – Il

கோட்டுபாட்டுத் தத்துவங்களும் அதன் மீதான பொருள் கோரலும்! பகுதி – Il

அமெரிக்காவின், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதான தீர்க்கமான முடிவும், அமெரிக்கா வெளியேறியதன் பின் நடக்கும் நிகழ்வுகளும் இலங்கைத்தமிழ் அரசியலும், இலங்கைப் புலம்பெயர்த்தமிழ் அரசியலும் நிமிர்ந்து உட்கார்ந்து கொள்வதான கதையாடல்களுக்குள் நிற்பதற்கான சூழலைத் தோன்றிவித்திருப்பதாக அண்மைய முகநூல் பதிவுகளும், ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ PART – II ம் வெளிப்படுத்துகின்றன. கருத்தாடல்கள் என்பதைவிடுத்து, ‘கதையாடல்’ எனப்பதிவு செய்வதன் ஊடாக நாம் ஒரு செய்தியொன்றினை முன்வைக்கின்றோம். அக்கதையாடல்கள் தாங்கள் சார்ந்த அரசியல் கதைக்கேற்ப வருங்காலமென்பதில் வரக்கூடிய கதையை கற்பனை, சந்தர்ப்பங்கள், நிகழ்கால நிகழ்வுகளின் இணைப்புகளின் சாத்தியங்களில் இருந்து கதையோட்டத்திற்கான காட்சிகளை விம்பங்களின் நகர்வுகளைக் கொண்டு தமிழ் மக்களின் மனங்களில் ஓர் கதையினை உருவாக்குகிறார்கள். அது சாத்தியமா? சாத்தியமில்லையா? என்பது பற்றிய முன் அனுபவங்களின் அனுபவத்திலிருந்து எந்தவொரு தர்க்க ரீதியான விவாதம், விமர்சனம், சுயவிமர்சனங்களுக்குள் செல்லாமல், தாங்கள் சார்ந்த கருத்தியல் மீதான தொடர்ச்சியான அரசியல் கொதிநிலையை குளிர்வடையாமல் அதியுயர் வெக்காரத்துக்குள் பேண முற்படுகிறார்கள் என்பதுதான் அச்செய்தியாகும்.

தாலீபான்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கும் இலங்கை, புலம் தமிழ் அரசியல் பரப்பு தாம் வந்தடைந்து நிற்கும் புள்ளியையும், கோலத்தையும் சுயவிமர்சனம் செய்யத் தயாராக இல்லை. காட்சிப்படிமானங்களை முன்வைத்து வருங்காலம் பற்றிய அரசியல் காய் நகர்வுகளை நகர்த்த முயல்பவர்கள் யாரென்பதையும், அவர்களது கோட்பாட்டுத் தத்துவமென்ன? அதை முன்னெடுத்துச் செல்வதற்கான சித்தாந்தமென்ன? அவர்கள், தாம் முன்வைத்த கோட்பாட்டுத் தத்துவத்தின் விளைவுகளின் பின் தமிழ் அரசியலின் பலம், பலகீனங்கள் பற்றிய யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டிருக்கிறார்களா? அதிலிருந்து மாற்றத்தை நாடிச் செல்கிறார்களா? எனப் பல வினாக்களை நாம் முன்வைத்து இக்கருத்தாடலை முன்னகர்த்துகிறோம்.

இலங்கை, புலம்பெயர் தமிழ் அரசியல் தளங்கள் அப்படி நடந்து முடிந்த விளைவுகளுக்கு பொறுப்புக்கூறவோ? அல்லது ஏற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை. இங்கும் நாம் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் முடிவொன்றை நாடும் சூழலைத் தேடிச் செல்கிறோம். முக்கியமாக, நாம் திரும்பவும், வாழ்வதற்கான சூழலை மறுக்கும் மரணம் செய்யும் ‘கந்தகப்புகை’ கோட்பாட்டுத் தத்துவங்களுக்குப் பின்னால் தமிழ் மக்கள் செல்வதை தடுத்திட வேண்டுமென்பதை வலியுறுத்துகிறோம். அதற்காக, குறைந்த பட்சம் நிலமும் அது சார்ந்த இன விழுமீயங்களைக் கொண்ட அடையாளங்களோடு கூடிய அதிகாரமொன்றை நிறுவிக் கொண்டு, அதிலிருந்து தன் இலக்கு நோக்கி நகர்த்து கொண்டிருக்கும் தமிழகத்தின் அனுபவங்களை உள்வாங்குவதும், அதைப் பற்றிப் பேச முற்படுவதனூடாக நாம், நமது வருங்காலம் பற்றிப் பேச முனைகிறோம். இதில் இருந்துதான் நாம் இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் பற்றிய தேடலும், அதற்கான கருத்தாடல்களை ஒழுங்குபடுத்த முடியும்.

நாம் கொஞ்சத்தூரம், ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்ற கோட்பாட்டுத் தத்துவத்தின் அரசியல் பயணம் பற்றிப் பார்த்தோம். அதே நேரத்தில், அதே சாயலில் வார்த்தைகளின் மாற்றத்தினூடாக வேறொரு கருத்தியலைச் சொல்வதனூடாக, இலங்கைக்குள் தமிழர்களுக்கான தீர்வொன்றை முன்னிறுத்தும் ‘இரு தேசம் ஒரு நாடு’ என்ற கோட்பாட்டுத் தத்துவம் எங்கே? முன் கோட்பாட்டுத் தத்துவத்தோடு கட்சி அளவில் முரண்படுகிறதென்பதைப் பார்த்திட வேண்டியிருக்கிறது.

‘இரு தேசம் ஒரு நாடு’ என்ற கோட்பாட்டுத் தத்துவத்திற்கு 2020 ஆம் ஆண்டுக்கு முன் நெருங்கிய காலங்கள் முக்கியமானதாக மாற்றமடைந்திருக்கிறது. இலங்கையின் தலைநகர்க் கட்சியாகவும், தொண்டனும் தலைவனும் ஒரு விம்பமாக இருந்த சூழல் பரந்துபட்ட, பன்முகம் கொண்டதாக மாற்றமடைகிறது. அந்த மாற்றம் தேர்தலில் பெரும் மாறுதலை தமிழ் அரசியல் பரப்புக்குள் கொடுப்பதோடு உள் கட்சி முரண்பாடென்னும் விளைவையும் சேர்த்தே கொண்டு வந்து நிறுத்துகிறது. இங்குதான் நாம் இரு கோட்பாடுத் தத்துவங்களுக்கிடையான புரிதலை உணர முடியும். அதே நேரத்தில் கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நபர்களின் மன உள்ளிருப்புக்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. இக்கருத்தாடல் தர்க்க ரீதியான விவாதமொன்றிள் ஊடாக மக்களுக்குக் கடத்தப்பட வேண்டும். தொடர்ந்தும் இனம் காணும் சந்தர்ப்பங்களுக்குக் கூடாக மக்களோடு கருத்தாடலை நடாத்த வேண்டியுமிருக்கிறது.

முகநூலில் கிடைக்கப்பட்ட, Soosaithasan Sinthujah இன் பின்னோட்டப் பதிவை முழுமையாக, மறுவாசிப்பொன்றுக்காக மீண்டும் இங்கு பதிவு செய்கிறோம். பொதுப்புள்ளியில் இருந்து முன்வைக்கப்படும் ‘இரு தேசம் ஒரு நாடு’ கோட்பாட்டுத் தத்துவத்தின் மீதான பொருள் புரிதலாக நாம் கருதுகிறோம். ஆகவே, எமது கருத்தாடலிலும் மிக முக்கியமானதாகவும் இருக்கிறது.

//ஒருநாடு என்பது சர்வதேச எல்லைகளைக்கொண்ட சட்டரீதியான ஓர் புவியியல் நிலப்பரப்பு எனலாம். இவை மற்றைய நாடுகளுடனான சர்வதேச உறவுகளையும் ஏற்றுமதி இறக்குமதிகளைக் கொண்ட சர்வதேச வர்த்தகங்களையும் கொண்டிருக்கும் சட்டரீதியான அங்கீகாரம் பெற்ற ஒன்றாகும். உலகில் ஏறத்தாழ 190 நாடுகள் காணப்படுகின்றன.

தேசம் என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் காணப்பட்டாலும் கூட பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணத்தின்படி ஒரு இனம் தனக்கென தனியான மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வேறுபடுத்திக்காட்டக்கூடிய தனியான வரலாறு என்பவற்றைக் கொண்டிருப்பதுடன் குறித்த ஓர் நிலப்பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருவார்கள் ஆயின் அவர்களை தேசம் (Nation) என அங்கீகரிக்க முடியும். “தேசம்” (Nation) என்பதை தனிநாடு என பலர் தவறாக புரிந்துகொள்வதுண்டு, தேசம் என்பது தனிநாடல்ல. தேசம் என்பது மேற்கூறப்பட்ட பண்புகளைக் கொண்ட ஓர் தேசிய இனத்திற்கான அரசியல் அங்கீகாரம் மட்டுமே.//

ஆகவே, இப்பொழுது நாம், ‘இரு தேசம் ஒரு நாடு’ என்ற கோட்பாடுத் தத்துவம் யாரல் முன்மொழியப்படுகின்ற கேள்வியை கேட்பதனூடாக தர்க்க விவாதத்துக்குள் செல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இலங்கையின் அரசு அதிகாரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அதிகார மேலடுக்குகளில் இருந்து வந்த தமிழ் மரபுக்கூறுகளின் குணயியல்புகளின் தொடர்ச்சியே இக்கோட்பாட்டுத் தத்துவத்தை முன்வைக்கிறது. முன்வைக்கிற காலமும் சூழலும் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இலங்கை சுதந்திரமடைந்த காலங்களில் தமிழ்ச் சமூகத்திற்கான சமூக நாட்டாண்மைத்தனத்தை வைத்திருந்த சாதீய, வர்க்க மேல்நிலையினருக்கான அரசியல் அதிகாரத்திற்கான கட்சியின் இன்றையத் தலைமுறைத் தலைமையினால் முன்வைக்கப்படுகிறது. இக்கோட்பாட்டுத் தத்துவத்தின் முன்நிலை கோட்பாடான ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ வழியே வந்த குழந்தையாக பார்க்க முடியும். ஏனென்றால், இங்கும் ‘இரு தேசம் ஒரு நாடு’ என்ற கோட்டுபாட்டுத் தத்துவத்தின் சொற்களை கண்டடைத்த கட்சியின் முன் தலைமையின் கூட்டுணைவில் உருவாக்கம் கொண்டதுதான் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’.

‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ என்ற கோட்பாடு, இலங்கையில் இருந்து தமிழ்ச்சமூகம் பிரிந்து சென்று தமக்கான மரபு ரீதியான ஆளுமை அதிகார இராச்சியத்தை நிறுவுதல் என்பதை வலியுறுத்தி நிற்பதாகும். இந்த கோட்டுபாட்டுத் தத்துவத்துக்கு தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுக் கொள்வதாகக் கூறிக் கொண்டு, 1977 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலை எதிர் கொள்கிறார்கள். தமிழ் மக்களும் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ முன்வைக்கும் கோட்பாட்டுத் தத்துவத்தையும் அதன் மீதான அவர்களது இருத்தலையும் வெளிப்படுத்துவதாக வாக்குகளை அளிக்கிறார்கள். ஆனால், இம்முக்கூட்டுக்கட்சிகளின் கூட்டுணைவுக் கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணியும் அதன் தலைமைகளும் பாராளுமன்றம் சென்றார்களே தவிர, ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ முன்மொழியும் உள்ளடக்கமான தனி இராச்சியத்திற்கு எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. ஆனால், இன்றுவரைக்கும் தனிநாட்டுக்கான பிதாக்களாகவும், கோட்பாட்டினையும் முன்வைத்த முன்னோடிகளாகவும் கூறிக்கொண்டு, மீண்டும் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ என்பதன் PART – II வைப் பற்றி பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 May 14 இல் நிறைவேற்றப்படுகிறது.

‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ என்ற கோட்டுபாட்டுத் தத்துவத்திற்கு முன்னாடி, சிங்களத்தேசியத்தின் கட்சியொன்றின் யாழ் மாவட்ட அமைப்பாளரான யாழ்ப்பாணம் மேயர் அல்பிரட் துரையப்பா, 1975 July 27 இல் முகமூடி போட்டுக் கொண்ட கொலையாளியால் கொல்லப்படுகிறார். இச்சம்பவம் சொல்ல முற்பட்ட அரசியல் கதை பற்றியும் அதன் மீதான தமிழ் மக்களின் புரிதலும் விளக்கம் கோரலும் என்பனவே அக்காலப்புள்ளிக்குப் பின்னான கதையில் வரப்போகின்ற சொல்களின் தொகுப்பைத் தீர்மானிக்கும் என்பதை உணராத மந்தைகளாகவே தமிழ் மக்கள் இருந்திருக்கிறார்கள். பின்னாடி25 ஏப்ரல் 1978 இல் வீரகேசரித் தினசரி மூலமாக தமிழீழ விடுதலைப்புலிகள், அல்பிரட் துரையப்பா உட்பட பதினோரு பேர் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்கிறார்கள். அலைகள் ஒய்வதில்லை, தூரத்து இடிமுழக்கம், பயணங்கள் முடிவதில்லை என்ற சினிமாத் தலைப்புகளுக்கூடாக பயணப்படும் தனி இராச்சியப் பயணம், வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலிருந்து ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற கோட்டுபாட்டுத் தத்துவத்தில் சவாரி போகத் தொடங்குகிறது.

கதையும் கதைக்களமும் அப்படியே இருக்க, புதிய முகங்கள் கதாபாத்திரங்களில் வந்து அமர்கின்றன. அப்பொழுது அல்பிரட் துரையப்பா Sri Lanka Freedom Party இன் யாழ் மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார். 35 வருடங்களுக்குப் பிற்பாடு, அங்கையன் இராமநாதன் அதே Sri Lanka Freedom Party க்கு அமைப்பாளராக வருகிறார். 2020 ஆம் ஆண்டுத் பாராளுமன்றத் தேர்தல் மூலமாக 45 வருட கால அளவிற்கு பின் தமிழ் மக்களின் வாக்குகளால் யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகிறார். நாம் இப்பொழுது முக்கிய புள்ளிக்கு வந்தடைந்திருக்கிறோம். இலங்கை தேசிய அரசியல் பரப்பில் தமிழ் அரசியல்த் தலைமைகள் நகராமல் நின்ற இடத்திலே ஒடிக் கொண்டே இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. (தொடரும்)

Leave a Reply