செம்மண் புழுதியில் கிளர்த்தெழும் தமிழ்த்தேசிய அரசியல் காட்சிப் படிமங்கள்!

வடபுல விடிவெள்ளி! ஒய்வின்றி உன்னைப்போல் யாருமில்லை! உன் பாதங்கள் போகாத ஒரு ஊருமில்லை!

மீண்டும் ஒரு தடவை சன் தொலைக்காட்சியில் பாரதிராஜாவின் ‘கிழக்குச்சீமையில்’ எனும் கிராமத்தின் எதார்த்த உறவுகளின் மரபு சார்ந்த வாழ்வியலின் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளின் நிறங்களைக் கொண்ட சினிமாவைப் பார்க்க முடிந்தது. அதில் விஜயகுமார் நெப்போலியனின் கதைப்போக்கில் சின்னாபின்னமாகும் மற்றைய உறவுகளின் வாழ்க்கையில் இருந்து மேலெழும் அவலங்கள், துயரங்களின் வலிகளில் இருந்து கீழறங்கும் கண்ணீர்த்துளிகள் அந்த காய்ந்துபோன செம்புழுதி மண்ணில் விழுந்தும் கணநேரத்தில் காணாமல் போகும் கண்ணீர்த்துளிகளின் அவலங்கள், துயரங்கள், வலிகளை தலை மக்கள் இருவரும் கண்டு கொள்ளாத போக்கில் விளையும் கதையும் நாட்களில் கரைந்து போகும் வாழ்வின் உன்னதங்களை சித்தரிக்கும் அழகியலை கண்டும் என் கண்களில் கண்ணீரும் மனம் நிறைய சோகமும் கருமையாய் அப்பிப்போனது. நிர்கதியாய் போகும் உறவுகளின் வாழ்வில் விளையாடும் தனிநபர் வரட்டுக்கெளரவம், போலி மரியாதைக்காக யாரும் யாரும் மோதிக் கொள்ளும் வார்த்தைகளின் இராஜங்கம் பாண்டியனின் கதைக்குள் நுழைந்து காணும் சமரசம் அதுதான் தனிநபர் சார்ந்தெழும் அரசியலின் உச்சம். இங்கு தான் தேடிச்செல்லும், நாடிச்செல்லும் இடம் பற்றிய தரதாரம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தன் தேவை நிறைவேற்ற முனையும் புள்ளியில் நெப்போலியன் தன் கதாபாத்திரத்தின் ஊடாக வில்லனாக மாற்றம் காணும் நிலையைக் கதைக்களம் வந்து நிற்கிறது.

தமிழ் மக்களுக்கும் அவர்களது அரசியலுக்கும் 1983 ஆம் ஆண்டு மிக மிக முக்கிய வருடமாக இருந்ததெனலாம். ஒரு கதையின் தொடக்கத்தில் இரு அரசியலின் செந்நிறக் குருதியின் இழப்பில் உறவுகளின் தொலைப்பில் விளைந்த சோகத்தின் அவலங்களிலும் துயரங்களிலும் வலிகளிலும் உயர்த்தப்பட்ட கைகளின் தொகையில் தெரிந்த நம்பிக்கை வெளிச்சம், அதை நாம் எங்கே, எப்பொழுது தொலைத்தோம்? விடை தெரிந்திருந்தும் எதை நோக்கி கடந்து போனோம்? ஆனாலும், இதையும் மீறி என்னுள் எழுந்த ஆயுதப் போராட்டம் பற்றிய எதிர்நிலை மனச்சித்திரம் ஒன்றை 1982 இல் என் அருகாமைச் சூழலில் நடந்த இறைகுமாரன், உமைகுமாரனின் படுகொலை ஏற்படுத்தியிருந்தது. அப்படியிருந்தும் அதைக் கடந்தும் பயணித்த அரசியல் பல திடுக்கிடும் செங்குருதித் திருப்பங்களையும் கொண்ட கதைக்களத்தை கட்டமைத்து அதில் வாழ்ந்த கதா மாந்தர்களின் பெரு அனுபவங்களை காலம் எமக்கு கொடுத்திருக்கிறது. இதில் இருந்து நாம் கண்டடைந்த அரசியல் பெறுபேறுகள்தான் என்ன?

இலங்கை அரசாங்கம் மாகாண சபைக்கான தேர்தலை அறிவித்தது ஒருபுறமென்றால் மறுபுறம் புதிய அரசியல் யாப்பை வரைந்து கொண்டிருக்கிறது. அதற்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கான தீர்வுகள் அடங்கியிருக்குமா? உள்ளடக்கப்பட்டிருக்குமா? யாரிடம் போய் கேட்டிட முடியும்? யார் அதை விளங்கப்படுத்துவார்கள்? ஏன்? தமிழர்கள் தரப்பை விடுத்து சிங்களப் பெருந்தேசியம் மட்டும் அந்த யாப்பைத் தயார் செய்கிறது? இது சரியானதாக இருக்குமா? இரு தேசிய இன மக்களும் இந்த யாப்பை ஏற்றுக் கொள்வார்களா? மக்களிடம் எழும் இக்கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்? விடை தெரிந்தும் விடை காணாத வினாக்களாக அரசியல்வாதிகளின் உடல்மொழியின் கவர்ச்சியில் மயங்கிக் கிடக்கிறது.

நெப்போலியன் நடத்தத் தொடங்கும் விஜயகுமாருக்கு எதிரான பங்காளிச் சண்டையில் அவரவர் கிராமத்துச் சனங்களைத் திரண்டும் காட்சிப் படிமங்களைப் போன்று சுமத்திரனுக்கு எதிரான தனிநபர் மக்கள் போராட்டம் என்பது கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பில் முன்னெடுப்பதான காட்சிப்படுத்தலுக்குள் வந்து நிற்கிறது. இந்தக் கதைக் கோர்ப்பில் பாரதிராஜாவின் வாசகன், இரசிகன் என்ற சினிமா என்கிற ஊடகத்தின் கதாபாத்திரங்களின் நகர்வு சூழலின் மனநிலையின் போக்கு கதாசரியரினால் தீர்மானிக்கப்பட்டதைவிட மேலதிகமாக ஏதுவும் நடந்துவிட முடியாததுதான். ஆனால், இங்கு நிஜமான கதைக்களத்தில் அமைச்சரின் கதாபாத்திரம் நகரும் சுமத்திரனின் கதாபாத்திரத்திற்கான விம்பங்களின் விளைவுக்கு சுதந்திரமும் தன்னெழுச்சியும் இருந்து விடுவதால் மறுதலையான போக்கும் விளைவுகளும் காட்சிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உண்டு.

சினிமாவின் ஆளுமையும் வளர்ச்சியும் இந்த தொழில்நுட்ப அறிவுச் சூழலினால் அபரிதமான வளர்ச்சிக்குள் சென்றிருந்தாலும் ஒர் சினிமாப் படைப்பின் படைப்பாக்கத்தின் கதையின் அடிப்படைத்தன்மையில், கதாபாத்திரங்களின் தெரிவும் கட்டமைப்பும் பெரிதாக பெருமாற்றம் பெறவில்லை. சினிமாக் கதையைப் பொறுத்தமட்டில் கதைக்கான நாயகன், நாயகனுக்கான வில்லன் என பிற தேவையான அளவுக்கான கதாபாத்திரம். இன்றும் சினிமாவில் கண்டடையும் மக்கள் பிரச்சினையை தனித்து தனிநபராக கதாநாயகனே தீர்வை நோக்கி நகர்ந்து வெற்றி கொள்வதாக இருக்கும். இந்த சினிமாவின் கதைப் போக்கு அரசியல் என்கிற நிஜச் சூழலிலும் கையாளப்படுகிறது, அதற்காக தனிநபர் மீது கட்டமைக்கப்படும் கட்சிக் கட்டுமானங்களும் பேச்சுக்களும் அதற்காக முன் செலுத்தப்படும், பயன்படுத்தப்படும் சொற்களும் வார்த்தைகளும் அத்தலைமை என்ற நாயகன் பார்த்துக் கொள்வார் என்ற சினிமாவின் கதைப் போக்கில் அரசியலிலும் உறுப்பினர்கள் மட்டுமன்றி மக்களும் பங்கெடுக்காத சூழலை உருவாக்கி விடுகிறது. இந்தச் சூழலில் எல்லாமே தலைமையால் வழங்கப்படுவதான சாத்தியப்பாட்டு படிமங்களில் இறைவாதம் நோக்கி நகர்ந்திடும் களச்சூழலால் தலைமை புளங்கிதம் அடைவதும் தன்னை தயார்படுத்திக் கொள்வதன் பலகீனங்களை நாம் தொடர்ந்தும் காண்கிறோம், விளைவுகளையும் சந்தித்து வருகிறோம். இதொரு மனப் பிறழ்வொன்றினை தலைமைக் கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்தப் புள்ளியில் சமாந்திரமான கதாபாத்திரங்களின் குணயியல்புக் கட்டுமானத்தில் வேறுபாட்டை பிரித்து நகர்த்தும் தேவை கதைக்கு தேவையேற்படுகிறது. ஏனென்றால், இடைவேளைக்குப்பின் கதை முடிவொன்றை நோக்கி நகர்த்தப்பட வேண்டியிருக்கிறது. ஆகவே, கதாபாத்திரங்கள் நாயகன், வில்லலென தெளிவாக பிரித்தொதுக்கி நகர்த்தப்படுகிறது. இந்தச் சூழலில் கிளைக்கதையான கையூட்டு விவகாரமும் அதற்கான எதிர்வினைச் சம்பவமான குருநகர் கடல் தொழிலாளர்கள் போராட்டம் அமைந்து விடுகிறது. இப்ப வில்லன், நாயகன் யார் என்பதை கதை நகர்த்தப் பயன்படும் விம்பங்களுக்குக் கூடாக தீர்மானிக்கப்படுகிறது.

தீபாவளி அதையடுத்து சூரன் போர். சூரன் என்பது வில்லன். அவன்தான் ஒவ்வொரு வேறுபட்ட முகங்களுடன் பல உத்திகளைக் கொண்டு முருகனை எதிர்த்துப் போரிடுகிறான், தோல்வியைத் தழுவுகிறான். அதே சாயல், வடிவங்களிலும் சினிமாவில் வில்லன் தன்னிடம் இருக்கும் அடியாட்கள் போன்ற பலம் அனைத்தையும் தனித்தனியாக பயன்படுத்துவான், கடைசியில் தானே களத்தில் நாயகனுடன் மோதுவான், தோல்வியைத் தழுவான். இந்த அடிப்படைக் கதைக் கட்டுமான விதிகளைக் கொண்டு இந்தக் கடல் தொழில்ப் போராட்டத்தையும் மக்கள் போராட்டமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த அரசியலுக்கான கதை காட்சிப்படுத்தலை அரசியல்வாதிகளால் தயாரிக்கப்படுவதைப் பல சந்தர்ப்பங்களில் பல நிகழ்வுக் காட்சிகள் முன்னுதாரணமாக நிற்கின்றன.

கெளதாரிமுனைக் கடலட்டைப் பிரச்சினையைக் கையிலெடுத்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சிவஞானம், தொடர்ந்து மல்லுக்கட்டி அமைச்சரை கெளதாரிமுனையில் ஓர் உடன்பாட்டொன்றை எட்டியதன் மூலம் இன்றுவரைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சிவஞானத்துடன் எந்தவொரு நேரடி மோதல் நிகழ்வைக் காட்சிப்படுத்த முடியாத களச்சூழல் நிலவுகிறது. இது பல கதைகளத்தை உருவாக்குவதால் பல கதாநாயகர்களுக்கு ஏத்த ஒரே ஒரு வில்லன் என்ற நிலைக்கு அமைச்சர் வந்து நிற்பதாகத்தான் பார்க்கும் சினிமாத்தனம் இங்கும் காட்சிப்படுத்தப்படுகிறது.

விருமாயி என்கிற கதாபாத்திரத்தின் இறப்பு நிகழ் சூழல் மூலம் இயக்குநர் பாரதிராஜா சொல்லிய குறியீட்டுக் கதையை ஒத்த கள நிகழ்வொன்றின் வழியே சிந்திய ரத்தத்தின் ஈரம் கலந்த கதைக்களம் தாண்டி மாகாண சபை, 13வது அரசியல் சட்ட திருத்த மாசோதாவுக்குள் தமிழர்களின் அரசியல் அபிலாசைத் தீர்வுக் கதையும் வந்து நிற்கிறது. இங்கும் நெப்போலியன் விஜயகுமார் கதாபாத்திரங்கள் போன்று டக்ளஸ் தேவானந்தா, சுமத்திரன், சிறிதரன், சாணக்கியனென மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் விருமாயியை பழி கொடுத்த சினிமாக் கதை போன்று மீண்டும் மாகாண சபையை பழி கொடுக்க இவர்கள் தயாராகிவிட்டார்கள். இவர்களுக்கான கொடுப்பனவுகள் யார் கொடுக்கிறார்கள்? அவர்கள் யார்? என்பதுதான் கதையின் திருப்புமுனையாகும். திருப்புமுனையின் முடிவில் நிகழும் முடிவுக்குப்பின் வரும் காட்சிப்படுத்தலுக்கான முத்தாய்ப்பு வாக்கியங்களாக கிழக்கு சீமையின் முடிவின் வார்த்தைகளே பொருந்திப் போவதென்பது அந்த சினிமாவின் காட்சிப்படுத்தலுக்கூடாக ரசிகன் பெற்ற உணர்வையே நாமும் பெறுவோமென்பது துயரம் நிறைந்த பெறுபேறாகும்.

மனித உயிர்கள் மகத்தானது, மனிதனுக்கு மனிதன் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் ஏனிந்த வெட்டும் குத்தும்?

இந்த கிழக்குச் சீமையின் பாசக்கொடி விருமாயி சிந்திய ரத்தத்துளிகள், மனிதனின் முன் கோபத்திற்கும், முரட்டுத்தனங்களுக்கும், முற்றுப் புள்ளியாகட்டும்!!

மனித நேயத்தை வளர்ப்போம்!! வக்கிரங்களை அழிப்போம்!

Leave a Reply