• April 30, 2023

மாற்றுக் கருத்து என்பது என்ன? புலியை எதிர்ப்பது மாற்றுக் கருத்தா?

நேர்காணல் : பி.இரயாகரன்

‘தமிழ் வட்டம்’ என்ற இணையதளத்தின் ஆசிரியரான இவர்; புலம்பெயர் இலங்கையின் வடக்கு கிழக்குத்தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமாவார்.

வாழ் நிலத்தில் இருந்து அரசியல் செயல் காரணமாக புலம் பெயரும் நிலைக்குத்தள்ளப்பட்ட இவர், மேலாதிக்க சக்திகளின் கொலை அச்சுறுத்தல்களுக்கிடையே தொடர்ந்தும் தனது அரசியல், எழுத்துப்பணிகளை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களைப் பற்றி…

என்னைப் பற்றி விபரமான பதில் அவசியமற்றது. குறிப்பாக தமிழ் தேசியம் என்பதே புலிகள் என அனைத்தையும் குறுக்கி அந்த எல்லைக்குள் முடங்கிய போது, புலியெதிர்ப்பே முற்போக்கானது என்ற போக்கும் உருவானது. இந்த நிலையில் நாம் இந்த இரண்டு போக்கையும் எதிர்த்து தனித்துவமாக தனித்து போராடியவர்கள். இந்த அடிப்படையில் சில நூறு கட்டுரைகளை எழுதியுள்ளேன். மற்றும் சர்வதேச நிகழ்சிகள் வரை பல நூறு கட்டுரைகளை எழுதியவன். பல நூல்களையும் வெளியிட்டுள்ளேன். இன்று www.tamilcircle.net என்ற இணைத்தையும் நடத்துகின்றோம். இது புலியெதிர்ப்பு, புலி ஆதரவு என்ற இரண்டுக்கு எதிராக, மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னிலைப்படுத்தி இயங்குகின்றது. தமிழ் மக்களுக்கு ஜனநாயகமும் தேவை, தேசியமும் தேவை. இரண்டுக்குமாக நாம் போராடுகின்றோம்.

இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் நிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வட அமெரிக்க, அய்ரோப்பிய நிலங்களில் வாழும் தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரலம், அரசியல், தாயகம், பெண் விடுதலை என்ற சொல் பதங்களின் பிரயோகம் பற்றி உங்கள் பார்வை?

இது தொடர்பாக பேசவோர் பலரும் தத்தம் இருப்பு சார்ந்த, வாழ்வு சார்ந்து பேசுகின்றனர். இது போன்று புலிகள் மற்றும் புலிகள் அல்லாத தளத்தில், இவை பற்றி தமது குறுகிய அரசியல் நோக்கில் இவை பெருமளவில் பயன்படுத்துகின்றனர். மக்கள் நலன் நோக்கில் இருந்து இவை மிக கணிசமாகவே பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக இதுபற்றி புரிதல் இன்றி பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இவை ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதவை. மக்களின் மொத்த விடுதலையின்றி, அதற்கான முயற்சியின்றி இந்த சொற்கள் படுபிற்போக்கான மோசமான அரசியல் வடிவில் தான் இவை உயிர் வாழ்கின்றது.

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் பரப்பில் காணப்படும் அரசியல் தலைமைகளின் போக்கும், அமைப்புகளின் உட்கட்டமைப்புகளும் செயல்பாடுகளும்தான் சகோதர அமைப்புகள் மீதான கொலைகளுக்கும் தடைகளுக்கும் காரணமாக இருக்கிறதென்பது சரியாகுமா? இது பற்றி உங்கள் கருத்து என்ன?

இல்லை. இந்தக் குழுக்களின் அரசியல் தான் காரணமாகும். தலைமை என்பது காரணமல்ல. எந்த அரசியலுக்கு இவர்கள் தலைமை தாங்கினார்கள் என்பதே தலைமை பற்றி பிரச்சனையாகும். யாரும் கொல்ல வேண்டும் என்று பிறப்பதில்லை. தலைமை தாங்குவதுமில்லை. மாறாக அவர்கள் கொண்டுள்ள அரசியல், அது சார்ந்த வர்க்க நிலையைத் தக்கவைக்க கொலைகள் அவசியமாகின்றது. சாவாதிகார பாசிச கட்டமைப்புகள் உருவாகின்றது. இதன் மூலம் குறித்த தலைமை அதிகாரத்தை தனதாக்கின்றது. இன்றைய குறித்த தலைமைக்கு பதில், இதை அரசியல் கொண்ட எந்த மாற்றுத் தலைமையும் இந்தப் பண்பையே கொண்டிருக்கும். மாற்றம் எதுவும் இருக்காது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் அதற்கு எதிராக மாற்றுக்கருத்து, மாற்று அமைப்பென இரு வகை போக்கினை இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழ் அரசியல் பரப்பிலும், அதன் தொடர்ச்சியான புலம்பெயர் நிலங்களிலும் காணப்படுகிறது. இச்சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது ஒன்றையொன்று சார்ந்திருப்பதாகவும், ஒன்றின் வாழ்வில் மற்றதின் வாழ்வும் தங்கியிருப்பதாக உணர்கிறேன். இது பற்றி உங்கள் பார்வை?

‘விடுதலைப்புலிகள் அமைப்பும் அதற்கு எதிராக மாற்றுக்கருத்து, மாற்று அமைப்பென இரு வகை போக்கினை’ என்பது தவறானது. மாற்றுக் கருத்து என்பது என்ன? புலியை எதிர்ப்பது மாற்றுக் கருத்தா? இல்லை. மாற்றுக் கருத்து என்பது, புலியைப் போல் மற்றொரு தலைமை அதாவது அதே அரசியல் என்ற இன்றைய பொது கண்ணோட்டம் அடிப்படையில் தவறானது. மாற்றுக் கருத்து என்பது மக்கள் தமது சொந்த வாழ்வு சார்ந்த சமூக பொருளாதார நலன்களைப் பற்றி பேசுவதாகும். இவைகளை மாற்றுக் கருத்தாக கொண்டு யாரும் இலங்கையில் பேசுவது கிடையாது.

புலிகளின் கொள்கைக்கு மாறாக புலி அல்லாத புலியெதிர்ப்பு கும்பல் மாற்றாக என்ன அரசியல் கொள்கையை வைத்துள்ளனர்? சரி புலிகள் மறுக்கும் இவர்கள், மக்கள் நலன் கொள்கை என எதைக் கொண்டுள்ளனர்? ஒரே அரசியல் கொள்கை. மக்கள் பற்றி மாற்றமற்ற ஒரே அரசியல் சிந்தனை முறை. ஆனால் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதில் இவர்களின் எதிர்நிலைப்பாடு உள்ளது. புலிகளின் மக்கள் விரோத நடத்தையை அரசியல் இருந்து பிரித்து சம்பவமாக புலியெதிர்ப்பு அணி விபரிப்பதும், அதேபோல் புலி எதிர்ப்பின் அரசு சார்பு மக்கள் விரோத நிலையை சம்பவமாக அரசியல் இருந்து பிரிந்து புலி கூறுவதன் மூலம், இரண்டு தரப்பும் தம்மை எதிர் நிலையில் ஒரே அரசியலுடன் தம்மை தக்கவைக்கின்றனர்.

இலங்கையின் வடக்கு கிழக்குத்தமிழ் அரசியல் பரப்பில் பிரதேசவாதம் பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. இது ஆயுதப்போராட்ட அமைப்புகளிடம் மட்டுமல்ல மிதவாத அமைப்புகளிடமும் காணப்பட்டிருக்கிறது. பிரதேசவாதத்தின் தாற்பரியமென்ன?

பிரதேசவாதம் என்பது இனவாதத்தை போன்ற ஒன்று. அதாவது எல்லாவிதமான சமூக ஒடுக்குமுறையைப் போன்று, மக்களை பிளந்து அதில் குளிர் காயும் ஒரு கும்பலின் குறுகிய அரசியலாகும். சமூகங்களைப் பிளந்து மக்களை மோதவிட்டு, சிலர் தமது சொந்த வர்க்க பொருளாதார வாழ்வை மேம்படுத்தும் அரசியல் உள்ளடக்கமாகும்.

குறிப்பாக ஆதிக்கம் பெற்ற தமிழரை எடுத்தால் யாழ் மேலாதிக்கம் மூலம் பலவிதமான பிரதேசவாத உணர்வைக் கொண்டது. இது கிழக்கு மக்களை மட்டும் பிரித்து விடவில்லை. தீவான், வன்னியன் போன்ற பல வடிவத்தில் கூட அது உள்ளடங்கியே உள்ளது. இதுவே குறிப்பாக சாதிய வடிவிலும், குறுகிய இனவாத நோக்கிலும் வெவ்வேறு வடிவிலும் உள்ளது. உண்மையில் பார்த்தால் இந்த பிரதேசவாதம், யாழ் மேலாதிக்க சாதிகளின் உயர் வர்க்கங்களின் மையமான பொருளாதார நலன்களுன் பின்னிப்பினைந்தது.

தமிழ் தேசிய போராட்டம் அப்படித் தான் உருவானது. அது சகலவிதமான பிரதேசவாத உணர்வையும் தக்கவைத்தபடி, யாழ் உயர்சாதிய மேட்டுக்குடிகளின் வாக்க நலன்களுடன் ஒருங்கிணைந்த வகையில் காணப்படுகின்றது.

இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழ் அரசியல் பரப்பில் வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமெனக் உரத்துக்குரல் கொடுத்துவரும் நேரத்தில் இன்று கிழக்கில் இருந்து தனியான நிர்வாகமாக கிழக்கு இருக்க வேண்டுமென கிழக்குத்தமிழ்த்தரப்பிலும் முஸ்லிம் தரப்பிலும் இருந்தும் குரல்கள் எழத்தொடங்கியிருக்கின்றன. இது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

ஒரு தேசிய இனம் மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரத்தை கோருவது சரியானது. அது தன்னிடத்தில் உள்ள சகல சமூக ஒழுக்குமுறைகளையும் களைய தவறுகின்ற போது, பிளவுகளும் பூசல்களும் உருவாகின்றது. இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ இதை ஒரு மூட்டையில் கட்டிவைத்து விடமுடியாது. மாறாக அனைத்து சமூக ஒக்குமுறையையும் களைவதன் மூலம், ஒருமித்த ஒரு சமூகமாக மனிதனாக மாறுவது அவசியமானது.

இதை நாம் நிறைவு செய்ய தவறும் போது, அதிக்கம் பெற்ற அரசியல் தலைமைகள் அந்த சமூக முரண்பாட்டை பகை முரைண்பாடாக கையாள்வது நிகழ்கின்றது. இதற்கு எதிரான அனைத்து ஒடுக்கப்பட்ட குரல்களும் நியாயமானவை. அதற்காக நாமும் குரல் கொடுக்கின்றோம். ஆனால் இந்த முரண்பாட்டை பயன்படுத்தி இன்னுமொரு பிற்போக்கு கும்பல், அல்லது அரசியல் அந்த மக்களை எமாற்றுவதையும் நாம் கடுமையாக எதிர்த்து போராடுகின்றோம்.

இந்தியாவின் உதவியும் ஒத்துழைப்புமின்றி தனிநாடொன்றினைப் பெற்றிட முடியாதென்பதை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும், அதன் தலைமையும் உணர்த்திருப்பதாக அண்மைய அவ்வமைப்பின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பேட்டி உணர்த்துவதாக நான் கருதுகிறேன். அது பற்றி உங்கள் கருத்து?

தனிநாடு என்பதை எந்த வகையிலும் அனுமதிக்காத உலகமயமாதல் போக்கு தான் உலகில் உள்ளது. குறிப்பாக இலங்கையில் இது மேலும் சிறப்பாக பொருந்தும். தனிநாடு ஒன்று சிங்கள பேரினவாதத்தின் கொடூரத்தால் தவிர்க்க முடியாது உருவாகும் சூழல் என்பது, முற்றுமுழுதாக மக்களை நம்பி அவர்களின் சொந்த சமூக பொருளாதார நலனுக்காக போராடுவதில் மட்டும் சாத்தியமானது.

இதை நிராகரிக்கும் புலிகளும் மற்றக் கும்பல்களும் அடிக்கடி அலட்டுகின்றனர். இந்தியா பற்றி பாலசிங்கத்தின் நிலைப்பாடு, புலிகளின் சுயநல குறுகிய அரசில் நலனை அடிப்படையாக கொண்ட பினாற்றலாகும்

இலங்கையின் வடக்கு கிழக்கு நிலங்களில் 60களின் தொடக்கத்தில் சமூக மாற்றத்தினை உண்டாக்கிய கம்யூனிச சித்தாந்தம் பின்னான காலப்பகுதியான ஆயுதப்போராட்டச் சூழலில் தோன்றிய அமைப்புகள் பலவற்றில் இருந்தும் பெரும் எழுச்சியினையைப் பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

வர்க்கப் போராட்டம் பற்றிய சரியான அரசியலும், அதற்கான சரியான அரசியல் தலைமையும் உருவாகவில்லை. இயக்கங்களுக்குள் இருந்து உருவான சிந்தனையாளாகள், மக்கள் நலன் விரும்பிகள் அதன் கருவடிவிலேயே முதலில் கொல்லப்பட்டனர். இப்படி குறைந்தபட்சம் 500 பேர் இனம் காணப்பட்டு கொல்லப்பட்டனர். இப்படி உருவானவர்கள் தான் முதலில் உள்ளியக்க, வெளியக்க படுகொலையில் பலியானவர்கள். உருவான ஒரு சில தனித்துவமான இயக்கங்களும் தவறான அரசியல் வழியால் அவர்கள் காணமல் போனதுடன்., பலர் கொல்லப்பட்டனர்.

இன்றைய இலங்கைப்பிரச்சினைக்கான தீர்வாக எம்மாதிரியான ஒர் தீர்வை நீங்கள் முன்மொழிய விரும்புவீர்கள்?

இக்கேள்வியைக் கேட்டதும் இக்கேள்வி இடம் மாறி கேட்டதாக நினைக்கத் தோன்றுகிறதல்லவா? வேண்டாம்… அப்படி எண்ணாதீர்கள். ஒவ்வொருவரும் தங்கள் மனதில்… தங்களால் சரியெனக் கருதும் தீர்வொன்றினை முன் வைக்க வர வேண்டும் அப்பொழுதுதான் எல்லோருடைய கருத்துக்களையும் நம்முடைய அரசியல்வாதிகள் அறிவார்கள். கட்டாயமாக அறிய வேண்டும். தீர்வென்பது எமக்கானது.?

தீர்வு என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அது எந்தத் தீர்வாகவும் இருக்கலாம். தீர்வின் ஒவ்வொரு கூறும் மக்களின் நலனை முன்னிறுத்த வேண்டும் இதை அடிப்படையாக கொண்டு பேச்சவார்த்தை தொடங்கிய போது எனது நூல் ஒன்றில் அதை முன்வைத்தேன். அதை பார்வைக்கு தருகின்றேன் அல்லது இந்த குறித்த இணையத்தளத்தில் படிக்கமுடியும்.

http://www.tamilcircle.net/Bamini/books/book_04/book_04_22.htm

‘நம்மொழி’ April – June 2006 காலாண்டு இதழுக்காக, கனடா வந்திருந்த பி.இரயகரனிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் இது. 

Leave a Reply