• April 30, 2023

மீட்சியை வேண்டி நிற்கும் வெகுசன மக்கள் ஆணை!

பொறுப்புக்கூறல்: Nixson Baskaran Umapathysivam

2020 இன் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகளுக்குப் பின்னெழுந்த அரசியல் பார்வையென்பது தற்குறித்தனமாக மாறிவிட்ட சூழலில் மாறிய ‘அதிகாரம்’ வெகுசன மக்கள் நம்பிக்கையற்று நிற்பதான கருத்தியல் இலங்கை பொதுப்புத்தி அரசியலுக்குள் ‘முன்னகர்த்தல்’ செய்யப்பட்டிருக்கிறது

தன்னெழுச்சியான வெகுசன மக்களின் அறப்போராட்டமானது ‘அறகலிய’ அமைப்புக் கட்டுமானப் போராட்டமாக முன்னகர்த்த பொழுது அதிகாரம் மீதான மாற்று நம்பிக்கை வெகுசன மக்களிடம் ஏற்படத் தொடங்கியிருந்தது.

அறகலியப் போராட்டத்தின் அகலப் பரப்புக்குள்  தங்களை உருமறைப்பு செய்திருந்த கட்சிகள், தம் முகமூடிகளைக் கழட்டிய தருணப்புள்ளியில்  திசை மாற்றம் கண்ட அறகலியப் போராட்டம் வலு குன்றத் தொடங்குகிறது.

அறகலியப் போராட்ட நெருக்கடிக்குள் ஜனாதிபதி கோத்தாவும், பிரதமர் மகிந்தாவும் திக்குத்திசையற்று நின்றிருந்த வேளையில் தார்மீக ஆதரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸாவிடம் கோரியிருந்தனர்.

அந்தக் கோரிக்கை, எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸாவினால் முற்று முழுதாக நிராகரிக்கப்படுகிறது. அப்பொழுதும் தேர்தலொன்றின் வழியாக மக்களிடம் செல்வதற்கு ஆளுந்தரப்பிடம் தயக்கமே மேலோங்கியிருந்தது.

இச்சூழலில் ஜனாதிபதி கோத்தாவின் அணுகுமுறை அனைத்தும் தனக்கான சவக்குழி தோண்டுவதாக அமைகிறது. பிரதமர் மகிந்தா வெளியேற்றப்படுவதும் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கா நியமிக்கப்படுகிறார்.

ஜனாதிபதி கோத்தாவின் மனமோ உயிர் தப்பிப்பதற்கான வழி தேடுகிறது; ஆனால், தன்னால் நியமனம் செய்யப்பட்ட பிரதமர் ரணிலோ மற்றைய 224 பாராளுமன்ற உறுப்பினர்களோ இலங்கைக்குள் இருப்பதைப் பற்றி யோசிக்கிறார்களே என்கிற வினாவைக்கூட கேட்டுப் பார்த்திட முடியாமல் கோத்தாவின் மூளை கறுப்பாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஜனாதிபதி மாளிகை உட்பட பிரதமர் அலுவலகம் வரை அறகலியப் போராட்டத்தின் கைகளுக்கு மாறியிருந்தது; ஆனால், பாராளுமன்றம் மட்டும் தன் அதிகாரத்தைப் பிரதமர் ரணிலின் தலைமையில் வைத்திருக்க முனைந்தது.

அந்தப்புள்ளியில் அறகலியப் போராட்டத்திற்குள் உறைமறைப்புக்குள்  இருந்த ஒரு முகமூடி கிழிக்கப்படுகிறது. அந்த கிழிந்த முகமூடி  தனித்து பாராளுமன்றத்தைக் கைப்பற்ற முனைகிறது; அது தோல்வியில் முடிவடைகிறது. பாராளுமன்றம் இலங்கையின் ஆளும் அதிகாரத்தை தன்னகத்தே நிலை நிறுத்துக்கிறது.

இக்கள நிலவரம் என்பது பொதுத்தேர்தல் ஒன்றின் ஊடாக மக்கள் ஆணையைப்பெற வேண்டிய அவசியமின்மைய பாராளுமன்றத்திற்கு ஏற்படுத்துகிறது. அந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கு ஊடாக  ஜனாதிபதியாகுகிறார்.

இங்குதான் அரசியலுக்கான கற்றல் நிகழ்வானது கட்சிக்குள் கீழிலிருந்து மேல் நோக்கிய பயணிப்பில் கிடைக்கிறது; அந்தக் கற்றல் அனுபவம் நடைமுறை நெருக்கடிக்குள் தன்னை இழக்காத நிலையைக் கட்டமைத்து அதனூடாக கள அவதானிப்பும் அதற்கான முடிவையும் ஆளுமைத்திறனை வெளிப்படுத்தி நிற்கிறது. 

இந்நிலைக்கான தனிமனித அக மனச்சூழலுக்கு வரலாற்றின் வாசிப்பு மிக முக்கியமென்பதை உணர்த்தும் புள்ளியாக இக்களச்சூழல் அமைந்து இருப்பதை நோக்கலாம்.

அதிகாரத்திற்கான போர் எடுப்புக்களை 70 களுக்குப்பின் பல தடவைகள் பல அரசியல் கோரிக்கைகளில் கண்டு வந்த இலங்கை ஆளும் அதிகாரம், அந்த ஆயுதப் போராட்டங்களை அடங்கி இல்லாதொழித்த கால வரலாற்றில் ஜனாதிபதி மாளிகையும், பிரதமர் அலுவலகமும் இன்னபிற முக்கிய அரசு இயந்திரத்தின் ஏனைய ஆளுமைப் புள்ளிகளையும் காப்பாற்ற முனைந்திருக்கின்றன.

ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் ரூபவாஹினியென அறகலியப் போராட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த நிலையில் அடுத்தது என்ன நடந்திருக்க வேண்டுமென்பது பல வெட்டு முகப்புக்களைக் கொண்ட வினாவாக இன்று வரைக்கும் நிலைத்து நிற்கிறது.

தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள், தொழில்ச்சங்கங்களின் போராட்டங்கள் அனைத்தும் அரசுக்கு எதிரானதாக இருந்துவிடினும் அரசை அகற்றுவதற்கான போராட்டத்தினை கட்சியொன்றின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது வரலாறு கற்றுத்தரும் அரசியல் பாலபாடம்.

ஜனாதிபதி கோத்தாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதில் பிரதமர் ரணிலுக்கு அறகலியப் போராட்டம் பயன்பாட்டுத் தளத்தில் பெரும் துணையாக இருந்தது; அது இன்றுவரைக்கும் இருந்து வருகிறது என்பது எதிர்க்கட்சிகளின் பலகீனமாக இப்பொழுது ஆளும் தரப்பினால் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அரசியல் களச் சூழலுக்குள் வெறுமையை உணரத் தலைப்படும் இளைய தலைமுறை அரசியலாளர்கள், அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுக்காக புதிய கட்சியொன்றுக்கு நகரத் தொடங்குகிறார்கள்.

அதற்கான முகாந்திரங்களை அண்மைக் காலங்களில் பார்க்கிறோம்; அது இனம், மதம், மொழி கடந்து ஒட்டுமொத்த இலங்கைக்கான அமைப்புக் கட்டுமானத்தைப் பேசுகிறது.

இந்தப் புதிய கட்சிச் சூழல் அனேகமாக, ‘நாங்கள்’ பேசுகிற இன்றைய அரசியல் கருத்தியலையொட்டிய முழு இலங்கைக்கான அரசியலை முன்வைப்பதாக இருக்கிறது.

சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கை அரசியலின் 75 வருட காலத்தில் 50 வருட இனவாத அரசியலின் அதிகார அனுபவத்தின் முதிர்ச்சியின் வெளிப்பாடுகளின் ஒன்றென இம்முயற்சி சூழலைச் சொல்லிவிடலாம்.

50 வருட இனவாத அரசியலில் எழுந்திருக்கும் தேசிய இனங்களுக்கான அரசியல் தீர்வினை, பாராளுமன்றத்துக்கு வெளியே கட்சிகளின் கூட்டு அமர்வில் காண முயற்சிக்காத ஜனநாயக தேர்தல் அரசியல் சூழலில் ஒட்டுமொத்த இலங்கைக்கான அரசியல் கட்சி என்பது “அதிகாரம்’ கை மாறுவதற்கான முயற்சியாக மட்டுமே ‘நாங்கள்’ கருதுகிறோம். இந்த முடிவென்பது ஆயுதப்புரட்சியின் தோல்வியில் இருந்து எழுந்த முடிவாகக் கருதலாம்.

ஆனால், இம்மாதிரியான நிகழ்வுகள் நடந்துதான் ஆக வேண்டுமென்பதை ‘நாங்கள்’ உணர்ந்திருக்கிறோம், வலியுறுத்துகிறோம். அதைக் காலமும் களமும் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து விடுகின்றன.

ஏனென்றால், இன்றைய கட்சிகளுக்குள் உரையாடுவதற்கான பன்முகச்சூழலும், பன்முகத் தலைமைகளும் இல்லாத சூழலில் அக்கட்சிகளுக்கு வெளியேதான் அந்த உரையாடல் நிகழ்த்தப்படும்; அச்சூழல் புதிய கட்சியை நோக்கித்தான் இளைய தலைமுறை அரசியல் செய்பவர்களைத் தள்ளும்.

ஆயுதப்புரட்சியின் அனுபவத்தின் தொடர்ச்சியில் ஜனநாயகத் தேர்தல் அரசியலுக்குள் வந்திருந்த கட்சிகளுக்குள்கூட இந்த புதிய அரசியல் செய்ய முனைபவர்கள் முகாம் கொள்ள முடியாத இராணுவ மயம்கொண்ட ஜனநாயகச் சூழலையே இக்கட்சிகளுக்குள் காண முடிகிறது.

70 களின் அரசியல்க்களம் இக்கட்சி காட்சி அமைப்பைக் கொண்டிருந்தது; அது தலைமைத்துவம் உட்பட கட்சி அதிகார சூழலுக்குள் புதிய முகங்களுக்கான வாய்ப்பு இல்லாமல் செய்து கொண்டிருந்தது.

மேலும், கட்சி அகவயமான அதிகாரப்பகிர்வு, பரவவலாக்கம் என்பதில்லாமல் மட்டுப்படுத்தப்பட்டு உரையாடலுக்கான இடைவெளி இல்லாமலும் இருந்தது.  இது தலைமைக்கான கட்சி அரசியல் என்கிற புள்ளியை நோக்கி நகர்ந்து இந்த பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு வந்து நிற்பதாகப் புதிய கருத்தியல் உருவாக்கம் கொள்கிறது.

இன்று மேலெழும் இப்புதிய கட்சிக்களச்சூழல், அன்றைய போராளிகள் இயக்கங்களின் தோற்றக்கள நடைமுறையை  மறு பதிவு செய்வதாக அமையும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

இன்றைக்கு இருக்கின்ற கட்சிகளும் அதனது நடைமுறைக் கட்டுமானமும் அதற்குள் இருந்தெழுந்து நிற்கும் ஒற்றை விம்பத் தலைமையும் அதிகாரமும் இந்த புதிய கட்சி சூழலை எதிர்க்கவும், அடக்கவும் முயற்சிகள் செய்யும்.

இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் ஒட்டுமொத்த இலங்கைக்குள் எழும் எதிர்ப்பு அரசியல் சூழலுக்கானது; அதுவும் அறகலிய,  தொழில் சங்கங்களைத் தாண்டி முன்னிலை சோசலிச கட்சி போன்ற எதிர்நிலை அரசியலை நீர்த்துப்போகவே பிரினைவாதம்   இல்லாத இன்றைய அரசியல் களத்தில் இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது.

இம்முயற்சிகள் சரியான இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டுமாயின் 70 களுக்குப் பிற்பாட்ட ஒட்டுமொத்த இலங்கை அரசியல் சூழலில் நிராதரவாக விடப்பட்டிருக்கும் முன்னை நாள் அரசியலாளர்களில் மொழியைத் தாண்டி மிச்சம் இருப்போர் இக்களச்சூழலில் வாய் திறந்து பேசுபவர்களாக மாற வேண்டியிருக்கிறது.

இங்கு மிக முக்கியமானதொன்று யாதெனின் இந்த மூத்த அரசியல் செயல்பாட்டாளர்கள் அரசியல் செய்பவர்களாக மாறிடக் கூடாது.

இச்சூழலே புதிய இளைய தலைமுறை அரசியல் செய்பவர்களைக் காத்திரமான வெகுசன மக்களுக்கான அரசியலைக் கட்சிக்குள் சிந்திக்கவும், நடைமுறை ஆய்வுக்கும் செயல்ப்படுத்தலுக்கும் உட்படுத்தும்.

ஜனநாயக தேர்தல் அரசியலுக்குள்  புரட்சிகரமான அரசியல் சிந்தனைகளைக் கொண்ட கட்சி அமைப்பு வெகுசன மக்களுக்கான அரசு அமைவதையும், அரசு இயந்திரத்தை உருவாக்கவும் நிச்சயப்படுத்தும்.
         April 30, 2023

Leave a Reply