• May 16, 2023

முஸ்லீம்களின் தனித்தவமான தேசிய இன அடையாளம் வெறும் அரசியல் காரணிகளால் உருவானது அல்ல…!

பொறுப்புக்கூறல் : நஜா முஹம்மது BA (Hons), MA

கட்டுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறைப் பட்டதாரி.

பேராசிரியர் அம்பலவானர் சிவராசா. போராசிரியர் ரன்ஜித் அமரசிங்க, முன்னாள் தென் கிழக்குப் பல்கலைக் கழக உப வேந்தர் ஜனாப். ஏம்.எல்.ஏ காதர் ஆகியோரின் மாணவன்.

தென் கிழக்குப் பல்கலைக் கழக சமூக விஞ்ஞானத் துறையில் அரசியல் விஞ்ஞான விரிவுரையாளராக கடமையாற்றியவர்.

இலங்கை முஸ்லீமகளின் சமூக அரசியல் விவகாரங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் இவர், இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றினை எய்துவதில் இனங்களுக்கிடையிலான புரிந்தணர்வின் அவசியத்தை வலியுறுத்தும் இவர், தமிழ் – முஸ்லீம் சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர உறவில்தான் வடக்கு கிழக்கில் நிரந்தர சமாதானத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்.

“முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்ற வாதம் அரசியல் காரணிகளால் உருவானதே தவிர முஸ்லிம் சமூகத்தின் சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார வாழ்வின் முதிர்ச்சியின் விளைவாக உருவானதல்ல.” என்று கூறப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

வாசகர்களே! இக்கட்டுரை தமிழ் மக்கள் பற்றி முஸ்லிம் மக்களிடம் காணப்படும் கருத்தினைப் பிரதிபலிப்பதாகலே எழுதப்பட்டுள்ளது இது ஒரு நீண்ட கலந்துரையாடலுக்கான தோற்றுவாய். இதற்கு சார்பாகவும் எதிராகவும் எவரும் விவாதிக்கலாம். இன்று அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் முன்னாள் தமிழர்களிலிருந்து துருவப்படுத்தப்பட்டுள்ள விதத்தினை விளக்க முயற்சித்துள்ளேன்.

தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துனர்வை ஏற்படுத்துவதில் மிகப் பெரிய விட்டுக் கொடுப்புடன் முஸ்லிம்களை அரவணைக்க வேண்டிய ஒரு தார்மீகக் கடமை தமிழர் தரப்புக்கு இருக்கிறது. ஆனால் இந்த அரவணைப்பு அவ்வளவு சுலபமானதல்ல. ஏனெனில் இன்று முஸ்லிமகளை நோக்கி தமிழர்கள் விடுக்கும் எந்தவொரு சமாதானத்திற்கான அழைப்பும் கபடத்தனமானதாகவும், நயவஞ்சகத்தனமானதாகவும், சந்தர்ப்பவாதமாகவுமே முஸ்லிம்களால் நோக்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது. தமிழர்கள் மீதான முஸ்லீமகளின் இந்த மனப்பதிவை தமிழ் சமூகம் எப்படி, எப்போது மாற்றப் போகிறது. காலம் பதில் சொல்லட்டுமா?

முஸ்லீம் சமூகம் தான் தனியான ஒரு தேசிய இனம் என்பதனை அரசியல் ரீதியாக மாத்திரம் அன்றி சமூக, பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் அடிப்படையில் பேணி வந்துள்ளமை வரலாற்றுச் சான்றாகும். முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அடையாளத்தைத் தீர்மானிப்பது முஸ்லீம்கள் இஸ்லாத்தின் மீது வைத்திருக்கின்ற ஆழமான நம்பிக்கையாகும். ஒரு முஸ்லிமுடைய தனிமனித, குடும்ப, சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார, பண்பாட்டு வாழ்வியல் அம்சங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் மீதான ஆழமான நம்பிக்கையின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் இனத்துவ அடையாளம் பிரதேசம், மொழி, காலநிலை, சமூக மரபுகள் போன்ற எல்லைகளைத் தாண்டிய ஒரு அடையாளத்தையே பிரதிபலிக்கிறது. முஸ்லீம்கள் தமது அடையாளத்தை தேசிய மட்டத்திலான ஒரு குறுகிய எல்லைக்குள் நின்று பார்க்காமல் தம்மை உலகளாவிய இஸ்லாமிய சமூகத்தின் ஓர் அங்கமாக இணைத்தே தமது அடையாளத்தைப் பேணி வருகின்றனர்.

இத்தகைய முஸ்லீம் இனத்துவ அடையாளமானது இலங்கை முஸ்லீம்களிடம் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் முஸ்லிம் சிறுபான்மைகளிடம் காணப்படுகிறது. இவ்வாறு எல்லைகளைத் தாண்டிய முஸ்லிம் இனத்துவ அடையாளமானது துரதிஷ்டவசமாக குறுகிய இனவாத சிந்தனையின் அடிப்படையில் உருவான ஒரு அடையாளமாக ஏனையவர்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. (இதற்கான பொறுப்பு முஸ்லிம் களைச் சார்ந்ததாகும்) அல்லது திட்டமிட்டுப் புரிய வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சற்று ஆழமாகச் சென்று இதன் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முற்படும் போது தான் “இல்லாம்” என்ற கொள்கை ஏற்படுத்துகின்ற மிக ஆமான சகோதரத்துவ பிணைப்பின் அடியாக எழுகின்ற ஒரு அடையாளம் என்பதனைப் புரிந்து கொள்ள முடியும்.

“நீங்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், என்னை மாத்திரமே வணங்கி வழிபடுங்கள்” என்ற அல் குர்ஆனியத் தத்துவத்தின் அப்படையிலேயே முஸ்லீம்களின் இனத்துவ அடையாளம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

எனவே முஸ்லீம்களின் இனத்தவ அடையாளத்தை மேற்படி கோட்பாட்டின் அடிப்படையிலிருந்து தான் ஆராய வேண்டும். மாறாக வேறு அடிப்படைகளை வைத்து முஸ்லிம் சமூகத்தின் இனத்தவ அடையாளத்தை ஆராய முற்படுவது யதார்த்தத்திற்கு முரணானதும் முழுமையற்றதுமாகும்.

இந்தப் பின்னணியில் இலங்கை முஸ்லீம்களின் வரலாற்றை நோக்கும் போது, முஸ்லீம்கள் ஒரு தனியான தேசிய இனம் என்பதனை நிறுவுவதற்கான சான்றுகளையும், பதிவுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் நிறையவே காணமுடிகின்றது. இவ்வரலாற்று ஆதாரங்கள் வெறும் ஏடுகளாக, பதிவுகளாக அன்றி ஒவ்வொரு காலகட்டத்திலும் எழும் சவால்களை எதிர் கொள்ளும் வகையில் உயிரோட்டமும் இயக்கத் தன்மை கொண்டதுமான ஒரு வரலாற்று ஓட்டமாக திகழுகின்றது.

ஆயிரம் வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்ட இலங்கை முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு கால கட்டத்திலும் தமக்கெதிராக விடுக்கப்பட்ட சவால்களுக்கு தாம் தனித்துவமான ஒரு தேசிய இனம் என்ற தளத்திலிருந்தே முகம் கொடுத்துள்ளனர். தமது இனத்தவ அடையாளங்களை இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உற்பட்ட வகையிலேயே பேணி வந்தள்ளனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகளாவிய இஸ்லாமிய தலைமைத்துவத்தின் சின்னமாகிய துருக்கித் தொப்பியணிந்து நீதிமன்றம் செல்வதற்கான உரிமைப் போராட்டம் முதல் கடந்த மாதம் கொழும்பு லிண்ட்ஸி பாலிகா மகா வித்தியாலயத்தில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய உடையுடன் பாடசாலை செல்வதற்கான போராட்டம் வரை முஸ்லீம்கள் தாம் தனித்துவமான இன அடையாளத்தைக் கொண்டவர்கள் என்பதை நிலைநிறுத்தி வந்தள்ளனர்.

தமது தாய் மொழியான தமிழைக்கூட முஸ்லிம் என்ற தனித்துவ அடையாளத்தை முதன்மைப்படுத்தியே வளர்த்து வந்துள்ளனர். இதனால்த் தான் நாட்டார் கள் எனைய முஸ்லீம்களின் படைப்பிலக்கியங்கள் அனைத்திலும் “இஸ்லாமியம்” வேறூன்றிக் காணப்படுகின்றது.. ஏன் தமது வேத நூலான குர்ஆனின் அரபு மொழியில் தமிழை வாசிக்கவும். எழுதவும், படைப்புகளை உருவாக்கவும் அரபுத் தமிழை உருவாக்கிக் கொண்டவர்கள் முஸ்லீம்கள்.

முஸ்லீம்கள் தமது கலாச்சார, பண்பாட்டு விடயங்களில் மாத்திரமன்றி சமூகப் பொருளாதார, கல்வி போன்ற விடயங்களிலும் தமது தனித்துவ அடையாளத்தை முன்னிலைப்படுத்தி வந்துள்ளனர். பிரித்தானிய காலணித்தவ காலத்தில் ஆங்கிலக் கல்வி இஸ்லாமிய விழுமியங்களுக்கு சாவாலாக அமைந்த போது ஆங்கிலக் கல்வியைத் தமக்கு ஹராமாக்கிக் கொண்டார்கள். வட்டி இஸ்லாத்திற்கு முரனானது எனும் போது வட்டியிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் இஸ்லாமிய வங்கிமுறைகளை உருவாக்கிக் கொள்ளும் முயற்சிகளிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒரு தசாப்த காலமாக தென் இலங்கையில் பொருளாதார காரணிகளினால் ஆங்கில மொழி மூல சிங்கள மொழி மூல கல்வியின் பால் முஸ்லிம் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஏற்படப்போகும் சமூகப்பண்பாட்டுக், கலாச்சார ரீதியான சவால்களை எப்படி எதிர் கொள்வதென்பது முஸ்லிம் புத்திஜீவிகளினதும், சமூக நிறுவனங்களினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் விளைவாக அண்மைக் காலத்தில் சிங்கள மொழி மூல, ஆங்கில மொழி மூல இஸ்லாமிய நூல்கள், சஞ்சிகைகள், மென்தட்டுக்கள், இணையத் தளங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இதுவெல்லாம் முஸ்லிம் சமூகம் தனது தனித்துவமான இன அடையாளத்தினை “இஸ்லாம்” என்ற தளத்திலிருந்து பேணிப் பாதுகாப்பதில் மிக உறுதியுடன் இருப்பதை எடுத்தக் காட்டுகிறது.

எனவே முஸ்லீம்களின் தனித்தவமான தேசிய இன அடையாளம் வெறும் அரசியல் காரணிகளால் உருவானது அல்ல. மாறாக நிலையான உறுதியான அடித்தளத்திலிருந்து உருவாக்கப்பட்ட சமூக, பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் வெளிப்பாடாகும்.

அரசியல் ரீதியாக நோக்கும் போது முஸ்லீம்களும் ஒரு தனித் தேசியம் என்ற கோட்பாடு கடந்த இரு தசாப்த காலத்தில் கூரமைப் படுத்தப்பட்டுள்ளமை உண்மையாகும். ஆனால் முஸ்லீம்கள் ஒரு தனித் தேசிய இனம் என்ற எண்ணக் கரு, இலங்கை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து சுதந்திரத்தை நோக்கி நகர ஆரம்பித்த காலம் முதலே முஸ்லிம் அரசியல் தலைமைகளாலும், சமூக ஆய்வாளர்களாலும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளமை வரலாற்றுச் சான்றாகும், எப்போதெல்லாம் முஸ்லிம்களின் அரசியல் அபினாகைள், உரிமைகள் குறிப்பாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டதோ அப்போதெல்லாம் முஸ்லீம்களின் தனித் தேசியக் கோட்பாடு வலுவாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. துரதிஷ்டவசமாக முஸ்லீம்களின் அரசியல் உரிமைகள் அதிகமான சந்தரப்பங்களில் கேள்விக்குற்படுத்தப்பட்டது இரண்டாவது பெரும்பான்மையாகக் காணப்படும் தமிழர் தரப்பீனால்தான் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

இலங்கை சுதத்திரத்தை நோக்கி நகர ஆரம்பித்த மிக ஆரம்ப காலகட்டத்தில் இலங்கை முஸ்லீம்களும் தமிழர்களே என்ற கருத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களிலும், உருவாக்கப்பட்ட சட்ட சபைகளிலும் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவத்தினையும் தமிழர்களே அனுபவித்து வந்தனர். ஆனால் முஸ்லிம் அரசியல்த் தலைமைகளின் போராட்டத்தினால் 1889 முதல் முஸ்லிம்களுக்கென தனியான பிரதிநிதித்துவம் பெற்றுக் கொள்ளப்பட்டது.

அன்று முஸ்லீம்களும் தமிழர்களே! என்ற வாதத்தினை மிகத் தீவிரமாக முன்னெடுத்தவர் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்களே. ஆனால் அதே இராமநாதன் அவர்கள் 1915 இல் தென் இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற வன்முறைகளின் போது பிரித்தானிய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த சிங்களத் தலைவர்களை விடுவிக்கக் கோரி பிரித்தானிய மகாராணியிடம் வாதாடியிருந்தார். தொடர்ந்து வந்த காலங்களிலும் முஸ்லமீகள் மீதான இத்தகைய நிலைப்பாடு தமிழ்த் தலைமைகளிடம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. அதன் விளைவாக முஸ்லீம் அரசியல்த் தலைமைகள் தென் இலங்கையைத் தளமாகக் கொண்ட தேசிய கட்சிகளைச் சார்ந்தே தமது அரசியலை முன்னெடுத்துச் சென்றனர்.

ஆனால் சுதந்திர இலங்கையின் முதல் இரு தசாப்த காலத்தில் இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகளால் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்களும் முஸ்லிம்களும் அரசாங்கத்தின் மீதும் தேசியக் கட்சிகளின் மீதும் தமது நம்பிக்கையை இழந்தனர். குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இளைஞர்கள் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதன் காரணமாகத் தமிழ்த் தலைமை தனி நாட்டுக் கோரிக்கைக்கான பிரகடணத்தைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இது கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர்கள் மீதும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சந்தர்ப்பம் தான் தமிழர்களும் முஸ்லீம்களும் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படுவதற்கு அரிய வாய்ப்பினைத் தோற்றுவித்தது எனலாம். ஆனால் அந்த வாய்ப்பு மிகக் குறுகிய காலத்தில் இழக்கப்பட்டது. அந்த வாய்ப்பு உருவான போது அன்றைய இளம் சட்டதரணி அஷ்ரப், அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழத்ததைப் பெற்றுத் தராவிட்டாலும் தம்பி அஷ்ரப் அதனைப் பெற்றுத் தருவான் என்ற திடமான நம்பிக்கையுடன் களம் இறங்கினான். நூற்றுக்கனக்கான முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக் குழுக்களிலே இணைந்து முன்னணித் தளபதிகளாக விசுவாசத்துடன் செயற்பட்டார்கள். கைமாறாக தமிழ் அரசியல்த் தலைமைத்துவங்களும் ஆயுதக் குழுக்களும் எவ்வளவு கொடூரமாகவும் துரோகத்தனமாகவும் நடந்து கொண்டார்கள், நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வரலாறு, கடந்த இரு தசாப்தங்களாக முஸ்லிம்கள் படும் துயரங்கள் வாரத்தைளால் வரணிக்க முடியாதவை. சுருக்கமாக ஐம்பது வருட கால சுதந்திர இலங்கையின் முதல் இருபத்தைந்து வருட காலத்தில் சிங்களப் பேரினவாதிகளால் தமிழர்கள் பட்ட துன்பங்கள் துயரங்களைவிட கடந்த இருபது வருட காலத்தில் தமிழ்ப் பேரினவாதிகளாலும், தமிழ்ப் பயங்கரவாதிகளாலும் முஸ்லிம்கள் படும் துன்பங்கள் துயரங்கள் பல நூறு மடங்கு என்பது மட்டும் உண்மை

எனவே இன்று முஸ்லீம்கள் தமிழ்த் தலைமைகளின் மீது அது அரசியல்த் தலைமைகளாக இருந்தாலும் சரி, ஆயுதக் குழுக்களாக இருந்தாலும் சரி எந்த வகையிலும் நம்பத் தயாராய் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கிலே ஒரு நிரந்தர சமாதானம் உருவாக வேண்டுமென்றால் வடக்கு கிழக்கு முஸலிமகளதும் தாயகம், முஸ்லிமகளும் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு தேசியம் என்ற அடிப்படையில் முஸ்லிமகள் தேசிய ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் உள்வாங்கப்பட வேண்டும்,

இவ்வாறு சொல்லுகின்ற போது முஸ்லீம்கள் ஒரு தனித் தேசியம் என்ற வாதம் அரசியல் காரணிகளால் உருவான ஒன்றாகவே தோன்றுகிறது. ஆனால் ஒரு நாட்டில் காணப்படும் ஒவ்வொரு சமூகக் குழுவும் அதற்கேயுரிய தனித்துவமான குணம்சங்களுடனும் சிறப்பம்சங்களுடனும் தான் காணப்படுகின்றன. அது தனக்கே உரிய சமூகப் பண்பாட்டு, கலாச்சார விழுமியங்களுடன் ஒரு சமூகக் கட்டமைப்பினைக் கொண்டிருக்கும். அதனுடைய இயல்பில் அது ஒரு தனித் தேசியமாகத்தான் காணப்படுகிறது. ஆனால் அந்தத் தேசியத்தின் இருப்புக்கு சவால் விடப்பபடும். வளர தனது தேசியத்தை வலியுறுத்தி ஒரு போராட்டத்தை துவங்காது. எப்பொழுது ஒரு தேசியத்தின் இருப்புக்கு சவால் விடப்படுகிறதோ. அப்பொழுது தனது தேசியத்தை வலியுறுத்த ஆரம்பிக்கும். இந்த அடிப்படையில்த்தான் இலங்கை முஸ்லீம்களின் தனித் தேசியக் கோட்பாடு இன்று வடக்கு கிழக்கிலே வலுப் பெற்றுள்ளது எனலாம். ஆனால் முஸ்லீம்கள் ஒரு தனித் தேசியம் என்பது அடிப்படையில் இருந்து வந்ததொன்றாகும்.
             நம்மொழி, June – August 2005

Leave a Reply