வெகுசன ஊடகங்களில் வெளியாகும் காணொளிகள் கட்டமைக்கும் அரசியல்?

மாகாண சபைக்கான தேர்தல் பற்றிய அமைச்சர் பசில் ராஜபக்சாவின் கதையாடலுக்குப் பின் தமிழ் அரசியல்த் தலைமைகளின் நேர்காணல்கள், செயல்பாட்டுச் செய்திகளென தமிழ் ஊடகத் தரப்பு பரபரப்பொன்றை கட்டமைத்துக் கொள்ள முற்படுவதாகத் தோன்றுகிறது. இச்சூழலென்பதை தமிழ் அரசியல் தரப்பும் ஒத்துக் கொண்டதாக தங்களது பரபரப்பான அரசியல் வேலைகளுக்கிடையில் நேரம் கொடுத்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதொரு ஆரோக்கியமான அரசியல்ச் சூழலை, கருத்தியல் ரீதியான காத்திரமான உரையாடலை அரசியல்த் தலைமைகளுக்கு இடையில் ஏற்படுத்துமென்ற நம்பிக்கையை பொய்த்துக் கொண்டு போவதை அண்மையில் வெகுசன ஊடகங்களில் வெளிவந்த காணொளிகள் சாட்சியாக இருந்து விடுகிறது. மேலும், தர்க்க ரீதியான கருத்தியலைக் கொண்டிராத சொற்களின் கூட்டில் உணர்ச்சிமிகு வாக்கியங்களாகவே அரசியல்த் தலைமைகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வாக்கியங்களின் குரலில் சில இடங்களில் ஏமாற்றங்களும், ஏற்றுக் கொள்ளாமையின் கோபமும், அதன் பின்னான விளைவின் மீதான கவலைகளுமாக இருந்துவிடும் தருணத்தில் வயதின் வருடங்களின் எண்ணிக்கையின் கணதியின் தளர்ச்சியும் மறதியுமாக அடுத்த கட்ட முன்பின் தலைகீழ் திரும்புதல் அலம்பலுமாக சுவாராசியமற்று இலக்குத் தவறி சென்றடையும் இலக்காகி விடுகிறது. இந்த போக்கு காணொளியின் தரத்தைக் குறைத்து விடுவதோடு காணொளியில் கருத்தாளர் முன்வைக்கும் கருத்துக்கு எதிர்நிலைக் கருத்தை கொண்டு சேர்ப்பதாக காணொளி அமைந்து விடுகிறது.

Globe Tamil, வீரகேசரி சமகாலம் கருத்தாடல் களம், வசந்தம் தொலைக்காட்சி தீர்வு, Spot Light, Sooriyan FM விழுதுகள் போன்ற வெகுசன ஊடகங்களில் அண்மையில் வெளிவந்த காணொளிகளில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடல் தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரத்திற்கான பொறுப்பாளரும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமத்திரனும் மிக முக்கிய அழைப்பாளராகவும், மிக முக்கிய பிரதான ஆட்டக்காரர்களாகவும் இவ்வெகுசன ஊடகங்களால் உருவகப்படுத்தப்பட்டு காணொளிக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. வாசகர்களிடத்தில் இருந்தும் அந்த மனப்போக்கிலே கேள்விகள் தொடுக்கப்படுகிறது. பொதுவாக, கேள்விகள் அனைத்து ஊடகங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே இருந்து விடுகின்றன. இந்த வெகுசன ஊடகப் போக்கு வாசகர்களையும் தாண்டி மக்களிடத்தில் அழைப்பாளர்களின் கருத்தை கொண்டு போய்ச் சேர்த்திருக்குமா? என்பது கேள்வியாக நிற்கிறது.

இந்த வெகுசன ஊடகங்களால் நடாத்தப்படும் கருத்து மல்யுத்தப் போட்டியில் எல்லா ஊடகங்களின் கேள்விகள் ஒரே மாதிரி இருந்து விடுவதாலும், கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கூறிய வெகுசன ஊடகங்களில் கலந்து கொள்வதாலும் கேள்விக்கான பதில் கருத்துக்கள் ஒரே மாதிரி அமைந்தே விடுகின்றன. இதை அமைச்சரும் கவனிக்கத் தவறுவதும் பதில்களில் சொற்களிலோ? வார்த்தைகளிலோ? எந்தவித மாற்றத்தையும் கொடுக்காமலும், கேள்விகளுக்குக் ஊடாக கொடுக்கப்படும் உணர்ச்சியொன்றினை உள்வாங்கும் அமைச்சர் தன் குரலில் கலந்து வெளியேற்றும் உணர்ச்சியும் உடல்மொழியும் ஒரே மாதிரியே அமைந்து விடுகிறது. இந்தச் சூழல் வடிவேலுவின் பிரசித்தமான, “என்னை வச்சு காமடி கிமடி ஏதாவது செய்யலைத்தானே?” வசனத்தை மன அடுக்கில் இருந்து ஞாபக நினைவுகளாக எம் முன்னிறுத்தியது.

இன்றைய காலத்தேதியில் தமிழ் அரசியல் பரப்பில் மட்டுமல்ல இலங்கைத்தேசிய அரசியலிலும் மிக முக்கிய ஆளுமையாக இருந்துவிடுகிற கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேர்காணலின் போக்கு பற்றிய மதிப்பீடு ஒன்றின் வெளிப்பாட்டின் ஊடாக ஓர் ஆளுமைச் சூழலைக் கட்டமைக்க அமைச்சரின் அருகில் இருப்பவர்கள் முயல்வதில்லை என்பதை கோடிடும் இச்சூழலால் அமைச்சர் தன் பதில் கருத்துக்களால் கட்டமைக்கும் கருத்தியலுக்கு எதிர்நிலையாளர்களின் தூக்கியெறியும் கேள்விகளால் உண்டாக்க முயலும் கோமாளித்தன கதாபாத்திரம் சரியாக காட்சிப்படுத்தவே உதவுகிறது. இதை அருகில் இருப்பவர்கள் கட்டாயம் புரிந்து கொள்வதோடு கவனத்திலும் கொள்ள வேண்டும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொடர்ந்து முன்வைக்கும் பலஸ்தீனம் போய் வந்த கதையில் இருந்தெழும் இராணுவாளன் என்ற விம்பம் சிதலமாகி கரைந்தே விடுகிறது. கேள்விகள் ஒரே மாதிரி அமைந்திருந்தாலும் பதிலில் வித்தியாசத்தையும் வேறுபாட்டையும் கொண்டு வருவதினூடாக பொறுமையாக எதிராளியை நோக்கி திருப்பி விடும் சாதுரிய சாணக்கிய மொழி ஆளுமையை வாசகன் கிலாகித்துப் பேசும் சந்தர்ப்பத்தை உருவாக்குவதனூடாக மக்களின் மனதின் அடியில் சென்றடையும் வாய்ப்பை அமைச்சரின் கருத்து பெற்றிடும். இது பற்றி அமைச்சர் கவலைப்படாமல் லோக்கல் மாட்ச் விளையாடிக் கொண்டிருப்பது மட்டுமல்ல இதனால் சர்வதேச மாட்ச் விளையாட்டுக்களை இழந்தே வருகிறார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தின் இருப்புக்காலம் பற்றி எங்களுக்கு எந்தவித மாற்றுக்கருத்து கிடையாது. அந்தக் கருத்துக்கள் நிதர்சன உண்மையென்பதும் காலத்தால் மறுக்க முடியாதும், இன்று அனைத்து தத்துவக்கோட்பாட்டு தமிழ் அரசியல் தலைமைகளும் அந்தக் கருத்தையே வந்தடைந்திருப்பதென்பதும் நிஜமாக இருந்தாலும் அந்த உண்மையை வரலாற்றுப் பக்கங்களில் இருந்து அழித்துவிட முனையும் தந்திரத்தின் கயிற்றில் ஆடும் பொம்மையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்து விடுவதாகத்தான் நாம் கருதுகிறோம். இந்தச் சூழலைத் தாண்டிட அமைச்சரின் அக மனமும், தனி ஆவர்த்தனமும் சேர்ந்து அவர் கட்டமைத்திருக்கும் அவையின், அருகாமையில் இருப்பவர்களின் செயலற்றத் தன்மையுமே தடுத்து நிற்கிறது.

காணொளிகளில் அமைச்சரால் முன்வைக்கப்படும் கருத்தினூடாக தமிழ்த்தேசிய அரசியலுக்கெதிராக எழுப்படும் கேள்விகள் அனைத்தும் அமைச்சரின் பழிவாங்கலையே சுமந்து வருவதாகவே வெகுசன ஊடகங்கள் தமிழ் மக்களிடத்தில் காட்சிப் படிமங்களாக கொண்டு சேர்க்கின்றன. இது இந்த ஊடகங்களால் திட்டமிட்டே நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. அப்படியிருந்தும் ஊடகத் தர்மம் பற்றியும் நியாயப்படுத்த காணொளியில் அவர்கள் தவறுவதில்லை.

இன்றும் இன்றைய சூழலுக்கு அமைச்சராக இருப்பதாலும், 13 வதை விட்டால் வேறு கதி இல்லையென்ற நிலைக்கு நீங்கள், நாங்கள், அவர்கள் வந்திருப்பதால் தமிழர்கள் சார்பில் தலைமையேற்று இனம் காணப்படும் கட்சிகள், தலைமைகள், கருத்துருவாக்கிகள், கல்விச்சமூகம், மதப்பெரியார்கள், சுயேட்சைக்குழு தலைமை வேட்பாளர்கள் என எல்லாத் தரப்பினரை அழைத்து ஒழுங்கமைத்து தமிழ் மக்கள் அவையொன்றை அமைத்து அதனூடாக அரசுடன் பேசுவதற்கான சூழலையும் தமிழ் மக்கள் அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வாக இந்திய அரசின் மத்தியஸ்தில் இனம் காணப்பட்ட 13 வது அரசியல் திருத்த மாசோதாவை நடைமுறைக்கு கொண்டுவருவதும் இனிமேல் அதை வைச்சு அரசியல் செய்யாத சூழலையும் உருவாக்க முயற்சிப்பதே அமைச்சர் முன் இன்றைய காலத்தின் அவசியமாக இருப்பதாக நாம் கருதுகிறோம்.

தமிழர்களுடைய அரசியல் தோற்கடிக்கப்படுவது தமிழ் அரசியல்வாதிகளால் மட்டுமே என்பதைத்தான் தொடர்ந்தும் நீங்கள், நாங்கள் நிறுவிக் கொண்டிருக்கிறோம். தமிழ் அரசியல்வாதிகள் என்றால் சேர்.பொன். இராமநாதன், ஜீ.ஜீ.பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம், குட்டிமணி, பிரபாகரன், உமாமகேஸ்வரன், டக்ளஸ் தேவானந்தா, கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.வி.விக்கினேஸ்வரன், சுகு சிறிதரன், சந்திரகுமார் என நீளும் பட்டியலுக்குள் நானும் நீங்களும் வருகிறோம்.

13வது அரசியல் சட்ட திருத்த மாசோதாவை நெருங்கி வருகிறவர்களை யார் ஒரு புள்ளியில் ஒன்று சேர்ப்பதென்ற கேள்வி இப்பொழுது எழுகிறதல்லவா?

இன்று ஆளும் தரப்பில் தமிழ் பங்காளியாக இருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் அதன் தலைமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமே அந்த வரலாற்றுப் பொறுப்பு இருக்கிறது. ஆனால், இந்த இரு தரப்பும் தாங்கள் முன்னர் பேசியிருக்கிறோம், சொல்லியிருக்கிறோம். இவர்கள் அப்போது கேட்கவில்லை, கேட்டிருந்தால் அழிவைத் தடுத்திருக்கலாம்? இப்ப வந்து பேசுகிறார்கள்? என தம் நலன் சார் எதிர்வாதம் பேசுவதால் கடக்க முற்படுகிறார்கள். இது தமிழ் மக்கள் நலன் சார்ந்ததா? இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்று நான் குறிப்பிடுவது ஒட்டுமொத்த அதிகாரமுள்ள உறுப்பினர்களை ஆகும். இந்த உறுப்பினர்கள் கட்சியின் தலைமையோடு இணைந்து இந்த 13வது திருத்தம் மாசோதா மீதான எல்லோர் இருப்பையும் தமிழ் மக்களின் நலனுக்காக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கான தீர்வாக மாற்றுவது, மாகாண சபையை சீராக இயக்க வைப்பதென முயலுவதைவிட்டு தங்கள் தலைமைக்கான இருப்பு அரசியலைச் செய்வது இவர்களின் அரசியல் கதாபாத்திரமென்ன என்று கேள்வி எழுகிறதல்லவா? இவர்கள், இந்த உறுப்பினர்கள் அரசியல் அறிவற்றவர்களாக, தெளிவற்றவர்களாக, 13வது சட்ட திருத்த மாசோதாவைப் பேச தகுதியற்றவர்களாகவா இருக்கிறார்கள்?

மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்! ஆயுதப் போராட்டம் தோல்வியை நோக்கி எவ்வாறு தமிழ் தலைமைகளும் அதனோடு சேர்ந்து உறுப்பினர்களும் கொண்டு போனார்கள் என்ற வரலாறு போலவே இன்றும் இந்த 13வது சட்ட திருத்த மாசோதா, மாகாண சபை என்ற அதி குறைந்த அதிகாரப் பகிர்வை இல்லாமல் செய்வதில் இன்றைய நடப்பு தமிழ் அரசியல் தலைவர்களும் கட்சி அதிகார உறுப்பினர்களும் தெரிந்தே நடந்து கொள்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் சென்றடைய இருந்த சூழலை பிரபாகரன் தலைமையிலான குழுவினர் கெடுத்த மாதிரி இன்றைய இந்த 13வது சட்ட திருத்த மாசோதாவை நெருங்கி வரும் சூழலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவர் குழுவினரும் கெடுத்ததான பழி அரசியல்ச் சூழலைக் கட்டமைக்க முயல்வதையே இன்றைய காலத்தில் வெளிவரும் காணொளி நேர்காணலும் அரசியல் செயல்தள நிகழ்வுகளும் கோடிட்டு காட்டுகிறது. இதைவிடுத்து சுமத்திரனுக்கும் சாணக்கியனுக்கும் எதிராக அரசியல் செய்வதைவிடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அதிகார உறுப்பினர்களும் 13வது திருத்த மாசோதாவின் மீது அமரும் தமிழ் மக்கள் வாக்குகளை பெறும் சூழலை நோக்கிய அரசியலை முன்னெடுப்பதே புத்திசாலித்தனமான அரசியல் சாணக்கியமாக இருக்கும்?

Leave a Reply