• June 13, 2023

‘organic’ என்ற சொல்லில், என் கிராமம் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது!

பொறுப்புக்கூறல்: Nixson Baskaran Umapathysivam 

செம்மண் நில அமைப்பியலில் தோட்டங்களிலும், பனைக்காடுகளிலும், மேய்ச்சல் வெளிகளிலும் வாழ்வைத் தொடங்கிய நான், இன்று Toronto மாநகரத்தில் வாழ்பவனாக மாற்றம் கொண்டிருக்கிறேன்.

இந்த இரு புள்ளிகளுக்கிடையான என் வாழ்வியல் அனுபவங்களில் இருந்து அறிவுபூர்வமாக கண்டடைந்தவைகளைப் பொதுப்புத்தி உரையாடலுக்கு மையம் கொள்ள வைப்பதற்காக நான் தேடிச் சென்ற பக்கங்கள் அனைத்தும் என் அனுபவங்களை தர்க்கம் செய்ய உதவியிருக்கின்றன.

வளர்ந்த நாடுகளின் மாநகர வாழ்க்கை அனுபவமும், என்னுடைய தேடலும் என்னை பின்னோக்கி, நான் உதறித்தள்ளி வந்த விடயங்களை நோக்கி ஒடத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

மாநகர வாழ்க்கையின் என் அனுபவம், நான் முன்னோக்கி நகர்ந்து கொள்ள.., கொள்ள தொழில்நுட்ப அறிவியல் என்னைச் சிறைப் பிடிக்க அகலமாக தன் வாயைத் திறந்திருப்பதாக நம்பத் தொடங்குகிறேன்.

நான் நகராமல் தருக்கணித்து நிற்கிற பொழுதும் என்னை நோக்கி அது நகர்வதாக என் மனம் சொல்கிறது.

ஏனென்றால், என்னைச் சுற்றி நிறைய மாதக்கொடுப்பனவு பத்திரங்கள் இறைந்து கிடக்கின்றன.

முன்னம் தபால் பெட்டியை நினைக்கின்ற பொழுதே என் மனம் பதட்டப்படத் தொடங்குகிறது; என் உடம்பு நடுங்கத் தொடங்குகிறது.

சில இரவுகளாக இருந்த போதிலும் இப்பொழுது ஒவ்வொரு தொலைபேசியின் Notification சத்தத்திற்கும் தூக்கம் கலைக்கப்படுகிறேன்.

நித்திரை வராத இரவுகளில் கடினமான போர்வைக்குள் கடுவன் பூனையாட்டம் முழி பிதுங்க விடியலை எதிர்பார்க்கிறேன்.

நாலடி உயரமான படுக்கையில் நைட்டியில் பக்கத்தில் படுத்துறக்கும் அவளைத் தொட்டுப் பார்த்திடும் மனதைத் தொலைத்துப் பல மாதங்களென்ன…, வருடங்களாகிக் கொண்டிருக்கின்றன.

மதுப்போத்தல்களின் எண்ணிக்கைகள் வீட்டின் வாகனம் நிறுத்தும் பகுதிக்குள் நிறைந்து இறைந்து கிடக்கின்றன.

மருத்துவரும், நீங்கள் மது அருந்துகிற பொழுது கொலஸ்ரோல் குளிசை எடுக்கிறதைத் தவிர்க்கும்படி அறிவுரை சொல்லுகிறார்.

இரத்தழுத்தம் பார்க்கவும், இரத்தத்தில் சர்க்கரை அளவைப் பார்ப்பதற்கும் இயந்திரங்களையும் மாத்திரைகளோடு மருத்துவர் கொடுத்தும் விட்டார்.

பல இரவுகள் சோபாவில் தூங்கிப் போவதால் மது மயக்கமும் களைகிற பொழுது தூக்கம் களைந்ததென நினைத்தும் விழித்ததில் அப்புறம் படுக்கைக்குப் போனதில் தன் தூக்கத்தைக் கெடுப்பதாக அவளும் புறுபுறுப்பும் கண்டிப்பும் காட்டியதால் Bastment இல் என் வசிப்பிடம் தயாராகத் தொடங்கியது.

மகன் கண்டும் காணாத போக்கும், மகள் ஆலோசனையும் Father’s Day Gift மாகக் கடந்து போக, அவளோ வேற்றுக்கிரகவாசிக் கணக்காக பார்க்கிறாள்; அவள் ஜெர்மன் செப்பேட்டோடு வாக்கிங் போகிறாள்.

அப்படியொன்றும் குடிசை வாழ்க்கையென நினைத்து விடாதீர்கள்?

மகளும் வருடத்துக்கு $ 75 ஆயிரம் சம்பாதிக்கிறாள்; மகனோ பல்கலைக்கழகம் முடித்து வேலைக்காக காத்திருக்கிறான். அவளும் வேலைக்குப் போகிறாள்.

மொத்தம் நான்கு கார்கள். இவை நிறுத்துவதற்காக Parking வசதிகளோடு வீடும் கொண்டிருக்கிறேன். எல்லாமும் மாதக்கொடுப்பனவில் என் யாழ்ப்பாணியக் கெளரவமும் முதலீடாகவும் கலந்து நிற்கிறது.

முதலில் வாங்கிய காருக்கு என்ஜின் மாத்தி என்னோடு கூட வைத்திருக்கிறேன். அதை விக்கிறதுக்கு எனக்கு மனசு வரேலே.

பகுதி நேர வேலையாக பேப்பர் போடுகிற பொழுது மகளையும் மகனையும் பின் இருக்கையில் வைத்துக் கொண்டு அவளோடு பேப்பர் போட்டது என் அடிமன நினைவுகளாகி விட்டன.

இன்றைக்கும் அந்தக் கொடுப்பனவுகள் மின்னஞ்சலில் வந்து மிரட்டிக் கொண்டிருக்கின்றன. அவைக்கான கொடுப்பனவுகளை அவர்களே என்னைக் கேட்காமல் எடுப்பதற்கும் ஒழுங்கு செய்தாச்சு.

Insurance என்கிற காப்பீட்டுக் கொடுப்பனவுகளைச் சொல்லி மாளாது. எல்லாவற்றுக்கும் காப்பீடு. நான் மரணிக்கிறதுக்கும் காப்பீடு செய்து வைத்திருக்கிறேன்.

காப்பீட்டைக்கூட வைத்து கடன் வாங்குவதற்கும் வாய்ப்புண்டு. அது பற்றி வானொலியில் காப்பீட்டு வல்லுநர் உரையாடிக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுது பொருட்களின் expire date பார்க்கும் பொழுதில் Nutrition Facts ம் பார்த்துதான் வாங்க வேண்டியிருக்கிறது. எனக்கு பல ஒவ்வாமைகள் நிறைந்திருக்கின்றன.

வாய்க்காலில் ஒடி வருகிற தண்ணீரைக் கைகளால் அள்ளிக் குடித்து நிமிருகிற பொழுது தூரத்து வாய்க்காலில் அடிக்கழுவி நகரும் மனிசைக் கண்டும் வேலையில் ஐக்கியமாகிய ஏதார்த்தம்.

இப்பொழுது ‘organic’ என்கிற சொல் பிரயோகத்தோடு உணவுப்பொருட்களைத் தேடத்தொடங்குகிறோம்.

இவையெல்லாம் நான், செம்மண் புழுதியில் கடாசி எறிந்துவிட்டு தலை தெறிக்க ஒடி வந்தவைகள். சந்தையில் நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கான அறிவியல் விஞ்ஞானத்தின் தீர்வாகச் சந்தைப்படுத்தப்படுகிறது.

கனரக வாகனச் சாரதியாக, North America நாடுகளான கனடா, அமெரிக்கா நிலப்பரப்பைச் சுற்றி வந்த பொழுது ஆய்வென்கிற தோரணையில் பரப்புகிற இயற்கை சார்ந்த பரப்புரைகள் மீது கேள்விகள் எனக்குள் எழுகின்றன.

இவையெல்லாவற்றுக்கும் அடிப்படையென்பது மாநகர வாழ்க்கைக் கட்டுமானச் சந்தைப் பொருளாதாரமாகும்.

இந்த மாநகர வாழ்க்கை முறையில் நான் அனைத்து எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவதற்கான பெறுமதி வழங்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்பட்டிருகிறேன்.

அனைத்தும் இயற்கை வளங்கள். இந்த பிரபஞ்சத்தில் கொட்டிக் கிடப்பவை. இவற்றைப் பயன்படுத்துவதற்கு யாருக்கும் பெறுமதி கொடுக்க வேண்டியதில்லை.

இதொரு இயற்கை சுரண்டல். இவையெல்லாம் சந்தைப் பொருட்களாக மாற்றப்பட்டிருக்கிறது. அதனால், இந்த இயற்கை வளங்களை நுகர்வோர் பயன்ப்படுத்துவதற்கு நுகர்வோருக்கான வழங்கல் விலையொன்று ஏற்படுத்தப்படுகிறது.

அதில் ‘சரக்கு’ என்பதற்கான மூலதனத் தொகையையும் வழங்கல் நிறுவனமே எடுத்துக் கொள்கிறது. அதற்கு ஈடாக இயற்கையைக் காப்போமென விளம்பரங்கள்.

அந்த வழங்கல் விலையை உயர்த்துவதற்காக பற்றாக்குறை நிலையை உண்டாக்குவதையே பெரும்பாலும் ஆய்வுகள் மூலமாக பரப்புரை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு பெரு மாநகரங்களைத் தாண்டி குறிப்பிட்ட தூரம் ஒடிய பின் திரும்பிப் பார்க்கிற பொழுது அம்மாநகரங்களைக் காண முடியாது.

வாகனத்தை வாங்கி வாகனம் செய்யும் கார்ப்ரேட் நிறுவனம் நோக்கி வேலைக்காக ஒடிக் கொண்டிருக்கிறோம்.

இப்பொழுது நான், நான் உதறித்தள்ளிவிட்டு வந்தது அனைத்தும் அப்படியே இருக்குமா?

என் மனசைக் கேள்விக்கணைகள் குத்தி ரணமாக்கிக் கொண்டிருக்கின்றன. தீர்வுக்கான ஒர் சிறு மின்மினிப்பூச்சி வெளிச்சத்தைத்தான் நான் தேடிய பக்கங்களில் இருந்து கண்டிருக்கிறேன்!

சற்று பதற்றங்கள், படபடப்புகள் நீங்கி விட்டிருக்கிறேன். வாகனம் நிறுத்தும் பகுதியில் நிறைந்து இறைந்து கிடந்த மதுப்போத்தல்களை அடுக்கி வெளியே வைத்து விட்டிருந்தேன்.

June 12, 2023

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0AeDQhA7HeHNBXMhPv7okciygfLsGb4iYBB2X9iigvcDJFWqbpkWRsFNp1BvEbRhKl&id=100013809546793&mibextid=Nif5oz

Leave a Reply