தமிழ் மாற்று அரசியல் பேசும் சுழலொன்றைக் கண்டேன்…!

NPPயையோ, அநுராவையோ தமிழ் மாற்று அரசியல் பரப்புக்குள் காத்திரமான அறிமுகமொன்றைக் கொடுத்ததென்பது ‘நாங்கள்’ என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

இது சாத்தியமானதென்பதில் 1000 பூக்கள், நம்மொழி என்கிற அரசியல் உரையாடல் தளங்களின் கூட்டுழைப்பு இருந்ததென்பதில் இதில் பங்கு கொண்ட நாம் அனைத்துப் பேரும் கடல் அலைபோல ஆர்பரிக்க முடியும்.

NPP மற்றும் அநுராவின் அரசியல் பற்றி தமிழ் அரசியல் பரப்புக்குள் எங்கேயோ ஒரு புள்ளியில் அரகலிய போராட்டத்திற்கு முன்னாடி 2019 இல் எம்மால் குறித்து பேசப்பட்டிருந்தது.

NPP இன் வெற்றி பற்றி எதிர்வு கூறி, எம்மை தகுமைபடுத்திக் கொண்டதல்ல; மாறாக, நடப்பு தமிழ் அரசியலை மாற்றி, மனசைத் தொட்டு நனைத்துவிடும் Emotional politics விடுத்து Practical politics, Legic politics என்கிற கூறுகளை உள்ளடக்கிக் கொண்ட முற்போக்கு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் பேசும் குவியத்தின் மையமாக, எம்மை மாற்றிக் கொண்டோம்.

எதொரு காரணத்தை முன்னிறுத்தி, தம்மை தமிழ் மாற்று அரசியலாளர்களென்பதை தொடர்ந்து அடையாளப்படுத்தும் தனிநபர்களோடு, அவர்கள் எதிர் நோக்கும் மாற்றத்தின் நேரெதிர் முரண்களுக்கான காரணங்கள் எதுவாக இருந்து விடுகிறதென்பதைக் கண்டடையும் திரைமறைவு உரையாடலொன்று நிகழ்ந்திருக்கிறது.

மாற்றமொன்றைக் கோரி நின்ற வெகுசன திரட்சியெனும் புள்ளியைத் தொட்டு ஒரு விஸ்வரூப பாய்ச்சலை NPP செய்யுமென்பதைக் கனவில்கூட நினைத்துப் பார்க்கத் தயாராக இல்லாத அரசியல்வாதிகளாகவே இருந்து விடுகிற ஒட்டுமொத்த தமிழ், சிங்கள அரசியல் சூழலில் JVP க்குக்கூட வடக்கு கிழக்கில் அமைப்பு ரீதியாக பெரு வெற்றிடத்தைக் கொண்டிருந்த பொழுதுகூட கட்சி ரீதியாக தனித்து அங்கம் வகிக்கும் NPP, தன் வேட்பாளர் பட்டியலை பாராளுமன்றத் தேர்தலுக்குத் தயார்படுத்துவதென்பதில் சரியான, அது சிந்தாந்த ரீதியாக வேட்பாளர்களை தெரிவு செய்வதில் பெரும் சிக்கலை எதிர் நோக்குவதென்பதே வெற்றிக்கான முதல் அடி சறுக்கலென எண்ணிய வடக்கு கிழக்கு  தமிழ் அரசியலின், அதிலும் தமிழ் மாற்று அரசியலின் மனப்போக்கென்பது யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்க சிந்தனையின் அடிப்படையே என்பேன்.

அநுரா, ஜனாதிபதித்தேர்தலில் வெற்றியடைந்ததைக் காது கொடுத்து கேட்ட இச்சிந்தனை போக்காளர்கள், மூன்று MP க்களைக் கொண்டு அநுரா எவ்வாறு அமைச்சரவையை அமைத்து நடத்துவார் என்ற கேள்வியோடு அநுரா, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சேர்த்து தேசிய அமைச்சரவையை அமைத்துத்தான் பாராளுமன்றத்தை நடாத்துவார், நடாத்த வேண்டும், பாராளுமன்றத் தேர்தலையும்  அறிவிப்பாரெனக் குழந்தைத்தனமாகச் சொன்ன பொழுதும்கூட நான் மறுத்திருந்தேன். ஏனென்றால், புலம்பெயர் தமிழ் மாற்று அரசியல் செயல்பாட்டாளர்களோடு நானும், Toronto NPP யினரைச் சந்தித்த பொழுதுகூட அவர்கள், புலிகளின் அரசியல் வெகுசனப் பரப்பைத் தொட்டு விடுவதற்கான வழி வகைகளைக் கண்டறிவதைத்தான் முதன்மைப்படுத்தி, புலம்பெயர் தமிழ் மாற்று அரசியல் குழுவினரோடு உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்ணுற்றேன். ஆகவே, அநுராவோ, NPP யோ, JVP யோ எதார்த்தமான சாத்தியப்பாடுகளை நல்லாவே அறிந்தும், அதை நடைமுறைப்படுத்தவும் தயாராக இருப்பதை உணர்ந்து கொண்டேன். அதுவே, என்னை, NPPயையோ, அநுராவையோ மாற்று பார்வைக் கூடாக பார்க்க முடிந்தது.

இதற்கான நல்லுதாரணமொன்றையும் என்னால் சொல்ல முடியும். அது எதுவென்றால், ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னாடி WhatsApp இல் ஒரு குறுஞ்செய்தியொன்றை, NPP க்கான தமிழ் மாற்று அரசியலாளர் ஒருவருக்கு ‘அநுராவின் பதவியேற்புக்குச் செல்வதற்கான ஒழுங்குகளை தயார்படுத்துங்கள்’ என்பதாக அனுப்பியிருந்தேன்.

அதற்கு அவர் பதிலேதும் அளிக்காமல் தன் நண்பரோடு ‘நிக்சன் என்ன நக்கல் பண்ணுகிறானா?’ என்பதாக தன் மனநிலையை ஆதங்கத்தோடு வெளிப்படுத்தியிருந்தார்.

Toronto NPP இன் செயல்பாடென்பது எனக்குள் கடுப்பொன்றைத்தான் துளிர்விடச் செய்தது. அப்படியிருந்தும், எனக்கான சந்தர்ப்பத்தில் என்னைச் சார்ந்த அரசியலையும், அதில் நான் யாரென்பதையும் சொல்லி நின்றேன். அப்பொழுது, நான்  குறித்து நின்ற தமிழ் அமைச்சரை, தாம் அரசமைக்கும் சந்தர்ப்பத்தில் அமைச்சரவைக்குள் உள் வாங்க மாட்டோமென்பதைச் சொன்னார்கள். அந்த வார்த்தைக்கான செயல்பாட்டினை, அடுத்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் தெரிந்தது. அது விண்ணன் வரைக்குமான நாகஸ்திர பயன்படுத்துதலாக விரிவாகியிருந்ததை யாவரும் அறிவோம்.

கட்சி ரீதியாக NPP பாஷையூர் கூட்டத்தை செய்திருந்தாலும் கல்விச் சமூகத்தினர் பாராளுமன்றம் செல்வதென்பது ஊழலைத் தடுத்து சிறப்பான சேவையை வெகுமக்களுக்கு வழங்க முடியுமென்கிற NPP யினதோ, அநுராவினதோ செய்தியாக வெளிவந்ததென்பது யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையின் அப்புக்காத்து மிதவாதி அரசியலுக்கு இது இனிப்பான செய்திதானே?

வடக்கு கிழக்கு மற்றும் இதன் புலம்பெயர் சூழலுக்குள் புலிகளும், அதற்கெதிரான  தமிழ் மாற்று அரசியலுமாகப் பெரும் இரு பிரிவுகளாகப் பிளவுபட்டு இருந்தன. அது 2009 வரைக்கும், புலிகள் முள்ளிவாய்க்காலில் சிங்கள தேசிய அரசினால் தோற்கடிக்கும் வரைக்கும் குறைந்தபட்சம் சித்தாந்த வேறுபாட்டினைக் காணக்கூடியதாக இருந்தது. அதற்குப்பின், 2024 இல் இந்தச் சித்தாந்த வேறுபாடு சிதைந்து புலிகளின் Follewers ஆக மாறியிருந்தது. அப்பொழுது தமிழ் மாற்று அரசியல் சிறுத்து தெற்கில் மேலெழுந்த வெகுசனத்திரட்சியான ‘அரகலிய’ போராட்டத்தைக் கவனப்படுத்துகிறது. இதன் பின் மாற்றத்திற்கான குரலாக தன்னை அடையாளப்படுத்தத் தொடங்கும் NPP யை நோக்கித் திரும்புகிறது.

இச்சூழலில், சித்தாந்த ரீதியாக இவ்விரு தரப்புக்குள்ளும், மாற்றத்திற்கான குரலென அடையாளாப்படுத்தப்பட்ட NPP க்கும், தமிழ் மாற்று அரசியலுக்குமிடையில் எந்தவித கலப்பும் வெகுசன அமைப்புகள் ரீதியாகவோ, கட்சி ரீதியாகவோ நடந்ததில்லை. மாறாக, தனிநபர்களாகவே இதில் ஒரளவுக்குச் சாத்தியமானதாக இருந்தது. இதுவே, தமிழ் மாற்று அரசியலுக்கு மிகப்பெரும் பலகீனமாகவும் இருந்தது மட்டுமன்றி சவாலாகவும் மாறத் தொடங்கியது. ஏனென்றால், ஒருபுறத்தில் NPP புலிகளின் அரசியல் பரப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதும், புலிகளுக்கெதிரான தமிழ் மாற்று அரசியல் சிறுத்து தனிநபர்களாக மாறிக் கொண்டிருப்பதுமாக நேரெதிர் திசை வழிப்பயணத்தை, சேர வேண்டிய NPP யும் தமிழ் மாற்று அரசியலும் மேற்கொள்ளத் தொடங்குகின்றன. உச்ச கட்டமாக, மனோரஞ்சன் போன்றவர்களை தம் மேடைகளில் ஏற்றுவதில் மனோரஞ்சனின் புலி எதிர்ப்புவாத அரசியல் தடையாக இருப்பதாக NPP தரப்பு முன்வைக்கத் தொடங்குவதும், NPP யை ஆதரிக்கும் தம் உறுப்பினர்களை கட்ட்சியைவிட்டு வெளியேற்றுவதும் அதாவது, தேவராஜ்க்கான இன்றைய நிலையையும் நாம், இதற்காக கவனம் கொள்வதாக இருக்கிறது.

நிர்மால்  ரஞ்சித் தேவசிறியின் அண்மைய ‘நாங்கள்’ ZOOM உரையாடலில் சோலையூரானின் கேள்வியைத்தான், இங்கிருந்து பெரும் உரையாடலொன்றிற்குக் கூடாக இலங்கை பொதுவெளிக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்பதையே நான் பரிந்துரை செய்கிறேன். ஏனென்றால், NPP இன் தமிழ் சமூகத்தை அரசியலாகவோ, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பார்ப்பதிலையோ சோலையூரானின் கேள்வியை வைத்துப் பார்க்கிற பொழுது JR இலிருந்து சந்திரிகா, ரணில், மகிந்தா, மைத்திரி, கோத்தா வரைக்குமான சிங்கள தலைவர்களின் பார்வையான, புலிகளை அமைதிப்படுத்துதல், சாந்தப்படுத்துதல், வெற்றி கொள்ளுதலென்பதே தமிழ் சமூகத்திற்கான தீர்வ அல்லது இலங்கையிலுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்லது  இலங்கையில் அமைதியை கொண்டு வருவதற்கான வழியென்பது போலவே NPP மற்றும் அநுராவின் போக்கு அமைந்திருக்கிறதென்பதைச் சுட்டி நிற்பதுதான் சோலையூரானின் வாயிலில் இருந்து வெளியேறிய கேள்வியின் சாராம்சமாகும். ஆனால், நிர்மல் ரஞ்சித் தேவசிறியோ அல்லது தெற்கு முற்போக்கு சக்திகளோ NPP இன் புலிகளின் அரசியல் பரப்பை, புலிகளின் கட்டுமானத்திற்குக் கூடாக அனுகுவதை பிழையெனச் சுட்டிக் காட்டவோ தயாராக இருந்ததில்லையென்பது பெளத்த சிங்களப்பேரினவாத அடிப்படையென்பேன்.  ஆனால்,, NPP அரசு காப்பாற்றப்பட வேண்டுமென்கிற கருத்தை, தமிழ் பொதுவெளிக்குக் கொண்டு செல்வதற்கு இந்த தமிழ் மாற்று அரசியல் பரப்பை, NPP இன் போக்கை விமர்சனம் செய்யாமலோ அல்லது பேசாமலோ கடமையென உணர்ச்சி அரசியலொன்றின் வழியே அனுகிறார்கள். இதுவுமொரு பயன்பாட்டுத்தளமாகும்.

இது போன்று நிறைந்த கூறுகளைப் பற்றி என்னால் சொல்ல முடியும். இவையனைத்துமே இந்த தமிழ் மாற்று அரசியலுக்கெதிராக நிற்பவையாகும். இவைகளை, இந்த தமிழ் மாற்று அரசியல் புரிந்து கொள்ள வேண்டும். சம காலத்தில் தாம் யாரென்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த தமிழ் மாற்று அரசியலென்பதும் யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்க சிந்தனையையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதைவிட்டு வெளியே வந்ததாக தெரியவில்லை. அப்படியென்றாலும், அவர்கள், தங்களை முற்போக்காளர்களாக சீரமைத்துக் கொண்டார்களென்றாலும் இல்லை. ஏனென்றால், தாமும் இடதுசாரிகள்; ஆகவே, NPPயும் தங்களை நோக்கி நகர்ந்திருக்க வேண்டுமென்கிற மனநிலையை வெளிப்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்தப்போக்கு இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?

சரி பிழைக்கப்பால், இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் யாழ் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டவர்கள் 4 உறுப்பினர்களை மூன்று சபைகளில் பெற்றிருக்கிறார்கள்.

இவர்களைப் பற்றி இங்கு குறித்துக் காட்டுவதற்கு என்ன காரணமும் அரசியலும் இருக்கிறதென்கிற உங்களுடைய வினாக்குறி புருவங்களை உயர்த்துவதற்கு நான் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்தானே?

நானும், நான் சார்ந்தவர்களும் அரசியல் பேசுவதற்கு களமாக அமைந்த கட்சியின் போக்கினை விமர்சித்ததன் எதிர்வினையாக அங்கிருந்து வெளியேறியவர்கள் ஒன்றிணைக்கப்பட்ட உள்ளூராட்சி சபை மட்டத்திலான சுதந்திரமான தலைமைத்துவக் கட்டுமானத்திற்கான முயற்சியில் இனம் காணப்பட்ட சபைகளில் முன் முதல் நகர்வாக இந்தத் தேர்தலில் பங்கெடுத்திருந்தார்கள். அதில்தான் இவர்கள், அந்த நாலு உள்ளூராட்சி  மக்களதிகாரப் பிரதிநிதித்துவங்களைப் பெற்றவர்களாக தம்மை அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் பரப்புக்குள் முற்போக்குவாதிகளெனவும், இடதுசாரிகளாகவும் அடையாளப்படுத்துவோர் இம்மாற்றத்தினைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இம்மாற்றத்தினை எதொரு காரணத்தினால் தவிர்க்கவும், உள்ளூர் மற்றும் தம் தேசியவாத அதிகார வர்க்கத்தை எதிர்க்க தயாரில்லாத யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்க சிந்தனையின் கூறுகளின் பண்பியலில் வேண்டாத மாற்றமெனப் புறக்கையால் தட்டி விட்டுக் கொண்டு NPP யின் இருப்பு பற்றிப் பேசுவதில் கவனம் கொள்கிறார்கள்.

இப்போக்கும், NPP இன் போக்கும் சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் திக்குமுக்காகாடித் தம் எதிர்கால அரசியல் கேள்விக்குறியாகி நின்ற யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்க சிந்தனை மற்றும் அதன் கூறாகவிருந்த தமிழ் தேசியவாதமும் இன்று உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலுக்குப்பின் தம்மை, NPP யைக் கட்டுப்படுத்தும் சக்திகளாக மாற்றிக் கொண்ட மீளுருவாக்க அரசியலுக்குப் பொறுப்புக்கூற தயாரில்லாத நிலையை வைத்துக் கொண்டு, NPP வலிந்து மேலேற விட்ட தமிழ் தேசியவாத அரசியலை இந்த தமிழ் மாற்று அரசியலை வைத்துக் கொண்டு குருஷேத்ர யுத்த களத்தை, மாகாண சபைத் தேர்தலுக்கு முன், அத்தேர்தலுக்காக திறக்க முடியுமா?

இந்த குருஷேத்ர யுத்த களத்தைத் திறக்கவே பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி போன்றவர்கள், இந்த தமிழ் மாற்று அரசியலை நோக்கி திரும்பியிருக்கிறார்கள். ஆனால், இப்பொழுதும் NPP என்பது இந்த தமிழ் மாற்று அரசியலை நேரிடையாக சந்திக்கவோ, தன்னுள் ஒரு சிவில் அமைப்பாகவோ ஏற்றுக் கொண்டு மாகாண சபை தேர்தலையோ, புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தையோ நடைமுறைக்கு எடுத்துச் செல்லத் தயாரில்லாமல் இருப்பதென்பது புலிகள் அரசியல் பரப்பின் மீதான மோகத்தில் NPP இன்னமும் மயக்க மோகன நிலையில் திளைத்திருப்பதையே எடுத்துக் காட்டுகிறது. ஆனால், புலிகள் அரசியல் கட்டுமானம் என்பது NPP இன் தம் மீதான மோகன நிலையைப் பயன்படுத்தி, புலிகள் அமைப்பு மீதான பயங்கரவாத அமைப்பென்கிற தடையைச் சர்வதேச ரீதியாக அகற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் குழுவொன்றைக் கனடாவின் தலைநகர் Ottawa வில் தெரிவு செய்திருக்கிறார்கள். கனடாவில் Ontario மாகாணத்தில் நினைவுத்தூபிகள் மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுராவின் ஜெர்மன் விஜயத்தின் எதிர்பென்று மேல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் புலிகளின் மறைவு அரசியலென்பது யாழ் மாநகர சபை, வல்வெட்டித்துறை நகர சபையென NPP இன் ஆளுமை இன்மையென்பதோடு தன்னிச்சையாக இணைந்து கொள்கிறதென்பதைவிட அது திட்டமிட்டே இணைகிறதென்பது என் பார்வையாக இருக்கிறது. இதுவும், இந்த அமைப்பற்ற, தனிநபர்களாக உதிரி மனநிலையைக் கொண்ட தமிழ் மாற்று அரசியல் பரப்பை மேலும் பலகீனத்திற்கு தள்ளி விடுகிறது.

தமிழ் மாற்று அரசியலென்பது தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்குப் பதிலாக தன்னை யாரும் முன்னிலைப்படுத்துவார்களா என்கிற ஏக்க எதிர்பார்ப்போடு இருந்து விடுவதை அவதானிக்கலாம்.

தமிழ் மாற்று அரசியலென்பதன் தொடக்கம் எதுவென, அதன் கடந்த காலத்தில் பயணப்படுவோமாயின் அரகலியப் போராட்டத் தாண்டி EPDP க்கான எதிர் மனநிலை விமர்சனத்தைத் தாண்டிப் போகத் தொடங்குவதை அவதானிப்புக்குள் கொண்டு வரலாம்.

இந்தப் பார்வையென்பது புலிகளுக்கு எதிரான மாற்றுக்கருத்து அரசியலுக்குள் மாற்றீடை வலியுறுத்தும் போக்கை எதிர்க்கும் மாற்றமே அவசியமென்கிற புள்ளியில் இந்த மாற்று தமிழ் அரசியல் தொடங்கியதை மீளொரு அவதானிப்பைச் சுட்டி நிற்கலாம்.

இந்த அவதானிப்பை முன்நிபந்தனையாக வைத்துக் கொண்டு தெற்கில் மேலெழுந்த மாற்றத்திற்கான தன்னிச்சையான வெகுமக்கள் எழுச்சியோடு இணைகிறது. அது NPP/அநுரா வின் Toronto மற்றும் London பயணங்களோடு ஒத்திசைவாக, சமாந்திரமாகப் பயணிக்கிறது. அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் NPP அநுராவின் மேடையில் சுகு சிறிதரனின் உரை வரைக்கும் நீள்கிறது.

இவ்வளவு தூரப் பயணத்தைக் கொண்டிருக்கும் தமிழ் மாற்று அரசியலென்பது ஒழுங்கமைப்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாடற்ற நிலையையே கொண்டிருப்பதையே நான், என் அவதானிப்புக்குள் காண்கிறேன்.

ஆகவே, இந்நிகழ்வென்பதை நான், தமிழ் மாற்று அரசியலில் நடந்திருக்கும்  ‘சுழல்’ என்பதாகக் குறிக்கிறேன்.
       – Nixson / June 14, 2025

Leave a Reply