இன்றைய தலைமை வெற்றிடத்திற்கு நாங்கள் முன்னிறுத்தும் அரசியல் குறியீடு…!

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
          – திருக்குறள்

நான் மேட்டருக்குள்ளே போகிறதிற்கு முன் ஒரு விசயத்தைச் சொல்லி விடுவது சரியாக இருக்குமென நம்புகிறேன். ஏனென்றால், நான் பேசப் போகிற மேட்டரென்பது மாகாண சபையைச் சார்ந்தது.

2023 இல் நான் தமிழகத்திற்கு குடும்பத்தோடு பயணம் மேற்கொண்ட பொழுது Arulbert Julian இன் ஒழுங்கமைவில் கோயம்புத்தூரில் முன்னாள் வடகிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வரதராஜ பெருமாளைச் சந்தித்திருந்தேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் இச்சந்திப்பு மிக முக்கியமானதாகத்தான் இருந்தது. அது ஈழத்தமிழ் அரசியல் வரலாற்று போக்கில் ஒரு திருப்புமுனையொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இருந்தது.

அதுவும், 2020 இல் நாங்கள் திட்டமிட்டப்படி தொடங்கப்பட்டிருந்த உரையாடலுக்குழுவுக்குள் பெரும் உடைப்பொன்றை திட்டமிட்டு வலிந்து டக்ளஸ் செய்த பின் நான் சந்தித்த நபராகவே வரதர் இருந்தார்.

அந்தச் சமயத்தில் அந்த உடைப்பென்பது புதியதொரு கட்சியாக பரிணாமிக்கவும் திட்டமிடப்பட்டு அதுவும் தொடங்கப்பட்டிருந்ததை முகநூல் வழியாக நீங்களும் ஈழ வெகுசனமும் அறிந்திருக்கக்கூடியதாக இருந்தது. ஏனென்றால், அன்றைக்கு அந்த உரையாடல் தளத்தின் போக்கின் வீரியமும் வீரமும் சேர்ந்து தனக்கெதிராக வருங்காலத்தின் போக்கைத் திரும்பக்கூடிய வல்லமை இருப்பதாக உணர்ந்திருந்த டக்ளஸ், அக்குழுவினால் மையப்படுத்தக் கூடியதாகக் கருதப்பட்ட நபரோடு நேரிடையாக உரையாடுகிற வாய்ப்பை உருவாக்குகிறார். அதில் தனக்கெதிரான முகநூல் உரையாடல் பதிவுகளை நிறுத்த வலியுறுத்துகிறார். அதன் பின்னாலே இந்தக் கோல்மால் விளையாட்டைத் தொடங்கி அதைச் சாதிக்கவும் அவரால் முடிகிறது. அதில் ஈழத்தமிழ் சமூகக் கூடப்பிறந்த குணப்பண்பியலான குழுவாத மனப்பான்மையே கை கொடுத்ததென்பதில் மாற்றுக்கருத்து ஏதும் எம்மிடம் கிடையாது. இது ஆயுதப்போராட்டச்சூழலில் மூன்றாம் தலைமுறையில் அரசியல் ரீதியாக தொடர்கிறதென்பது நாம் தொடர்ந்து பேசுகிற மாகாண சபை அரசியலோ இல்லை ஒட்டுமொத்த ஈழத்தமிழ் அரசியலை வைத்துக் கொண்டு ஈழத்தமிழ் அரசியலின் வருங்காலம் பற்றிப் பேசுகிற பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய காரணியும் காரணமாக இருக்கிறது.

இச்சந்திப்பின் நோக்கமே வரதரின் அரசியல் மனவோட்டத்தைத் தெரிந்து கொள்வதாகவே இருந்தது. ஏனென்றால், ஈழத்தமிழ் அரசியலில் கோலோச்சிக் கொண்டிருக்கும் குழுவாத மனநிலையை ஏதொரு புள்ளியில் கேள்வி கேட்டு உடைக்க வேண்டியிருந்தது. அதைத் தவிர்த்து விட்டு எந்தவொரு புதிய சூழலையோ, புதிய சிந்தனையையோ நடைமுறைக்கு கொண்டு வர முடியாதென்பது எம்முடைய தீர்க்கமான முடிவுகளில் ஒன்றாக இருந்தது. அதற்காகவே நாம் அவரைச் சந்திக்கிறதை விரும்பமோடு செய்தோம்.

ஈழத்தமிழ் அரசியலில் தமிழ்த்தேசியம் அல்லது தமிழ்த்தேசியவாதம் என்பது பொது அடிப்படையானது. ஏனென்றால், இன ரீதியாக இனவாத அரசியலாகக் கூர்ப்படைந்த பின் இலங்கைக்குள் ஒற்றைத்தளத்தில் ஒருமைப்பாடு ஏற்படுத்த முடியுமாவென்றால் அது உடனடியாகச் சாத்தியமில்லையென்பதற்குள் அது சாத்தியமாகக்கூடிய காலம் என்பதைத் தீர்மானித்து வரையறுத்து நம்பிக்கை கொடுக்குமளவுக்கு எந்தவொரு வெளிச்சமும் தென்படவில்லை. இதனால் தமிழ்த்தேசியவாதமும் அகவயமாக தான் வந்த பாதையில் மீள திரும்பி செல்வதற்கான உரையாடல்கள், மீளாய்வுகள், திறனாய்வுகள், தன்னிலை விளக்கங்கள், சுய புராணங்கள், கோபங்களின் பேச்சுகள், துயரங்களின் சோக வலிகளின் ஆறுதல்களென இன்னொரன்ன நடைமுறை செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. அதுவரைக்கும் தமிழ்த்தேசியவாத அரசியலைப் புறம் தள்ளிவிட முடியாது.

இங்கு எங்களைப் பொறுத்தமட்டில் தீர்க்கமானதொரு தீர்மானத்திற்கு வந்திருந்தோம்; அது ஈழத்தமிழ் அரசியலின் போக்கு என்பது முள்ளிவாய்க்காலோடு காலாவதியாகி விட்டது. அதற்கான புதிய நடைமுறை சாத்தியமான வழிமுறையொன்றைத் தேட வேண்டும். அதில் புலிகள் இல்லாத 2009 இற்குப்பின்னான ஈழத்தமிழ் அரசியலின் செயல்பாடென்பது மிக முக்கியமானதென நினைத்தோம். ஆனால், அது பெரும் கவலை அளிப்பதாக இருந்தது. அப்பொழுது எமக்குள் ஒரு கேள்வியெழுந்தது.

2009 இற்குப் பிற்கால அரசியலுக்கு புலிகள் மிக முக்கிய கருப்பொருளாக இருப்பதைத்தான் இந்த 15 வருடங்களும் ஈழத்தமிழ் அரசியலின் தமிழ்த்தேசியவாதம் சுட்டி நிற்கிறது. அப்படியாயின் முள்ளிவாய்க்காலில் பிரபாகரனையும் புலிகள் அமைப்பையையும் முற்றுப்பெற ஏன் வைத்தார்கள்?

அந்த முற்றுப்பெறுதலை தடுத்து நிறுத்தி தங்களோடு இணைத்துக் கொண்டு புதிய சூழலொன்றுக்கூடாக பயணிக்க இவர்களைத் தடுத்தது எது?

புலிகளை மாவீரர்களாக இவர்களின் ஈழத்தேசம் முழுக்க நடுகற்களாகவும் பிரபாகரனைத் தெய்வமாகவும் உருமாற்றும் இவர்களின் அரசியலுக்குள் இருக்கிற உள்நோக்கமென்ன?

இந்தக் கேள்விகளெதும் ஈழத்தமிழ் வெகுசனத்திற்கான அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வுக்கானதென மெய்ப்பிக்கவே தவறுகின்றன. அதைவிட மாவீரர் துயிலும் நடுகை கற்களும் இல்லங்களும் நினைவேந்தல்களும் பிரபாகரனைத் தெய்வமாக்குதலும் இச்சூழலோடு சம்பந்தப்படாத யாரோ ஒருவரின், ஒரு குழுவின் இருப்புக்காக பாவிக்கப்படுவதை வாய் மூடி மெளனிகளாக இருந்து விடுவதில் நாம் எங்குதான் சென்றுவிடப் போகிறோம்?

இப்புள்ளியில் நிகழ்ந்த வரதரோடான சந்திப்பில் பலதும் பேசியிருந்தாலும் என்னால் சுட்டிக்காட்டியதொன்றை இங்கு பதிவு செய்வதற்கான முன்னுரையே மேலே சொல்லப்பட்டவையாகும்.

“எங்களுக்குள் இந்த முரண்பாடும் கிடையாது; ஆனால், உங்கள் மூன்று பேருக்கிடையில் இருக்கிற முரண்பாடும் மன விரோதப் போக்குமே 2009 இற்குப்பின் EPRLF சார்ந்த அரசியலுக்குக் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்கள், வாய்ப்புக்களை இல்லாது செய்திருக்கிறது. நீங்கள் மூன்று பேரும் (டக்ளஸ், சுரேஷ், வரதர்) உங்களுக்கிடைய முரண்பாட்டைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையாயின் எங்களுக்கு வேறொரு வழியும் தெரியவில்லை. உங்கள் மூன்று பேரையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதுதான் எங்களுக்கு முன்னிருக்கிற வழியாகும். அதைப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதே சம காலத்தில் இதை வெகுசன அரசியல் பரப்புக்கும் எங்களால் புரிந்து கொள்ள வைக்கப்பட வேண்டியிருக்கிறது”

2020 இல் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (EPDP) இன் தொடங்க காலத்தில் இருந்து செயல்பட்டு தீவகச் சூழலும் 94 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மிக முக்கிய நபர்களாகச் செயலாற்றி வெளியேறியிருந்தவர்களின் கூட்டுச் சூழலில் மேலெழுந்த உரையாடலில் கிடைத்த அனுபவங்களும் தீர்மானங்களும் புதிய அரசியல் வெளியை உருவாக்குவதற்கான தீப்பொறியை உருவாக்கியிருக்கிறது. இப்புள்ளியில் இப்பதிவுக்கான அவசியம் உருவாகிறது. அதுவும், பத்மநாபா அறிவாற்றுக்கழகத்தின் சோலைக்கும் EPRLF இன் கனடா நாட்டு சர்வதேச பிரதிநிதி யோகா வளவனுக்கும் இடையில் EPRLF இனால் ஒழுங்கு செய்து ஈழத்தமிழ் மாகாணங்களிலும் சர்வதேச புலம்பெயர் நாடுகளிலும் நடாத்தப்படுகிற மாகாண சபைக்கான தேர்தலின் அவசியம் பற்றிய கலந்துரையாடலின் நிமித்தம் கருத்து முறுகல் ஏற்படுகிறது.

‘புலிகள் பாஸிஸ்ட்டுக்களா? ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டனவா?’ என்கிற தலைப்பில் சோலையூரானும் மு.சிவலிங்கமும் சேர்ந்து கலந்து கொண்ட ‘Thesam Tube’ இன் Oct 21, 2025 க்குரிய காணொளியை யோகா வளவன் அனுப்பி, 5:00 நிமிடத்தில் இருந்து 7:30 வரைக்குமான கால அளவுப்பகுதியைக் கேட்கச் சொல்லியிருந்தார்.

அதில், //… ‘வடகிழக்கில் மாகாண சபை ஆட்சி முறைமையும் அதிகாரப் பகிர்வும்’ என்ற தலைப்பில் இடம் பெறும் கருத்தரங்குகள் .ஆபத்தான நிலையை உருவாக்கும் என தான் நினைப்பதாக சோலையூரான் கூறுகிறார்..// என்பதாகக் குறிப்பும் அனுப்பப்பட்டிருந்தது.

அக்காணொளியை 4:40 நிமிடத்தில் இருந்து 7:22 வரைக்கும் கேட்டேன். அதைக் கீழேயும் மெனக்கிட்டு எழுத்திலும் கொடுத்திருக்கிறேன்.

இது ஊடகவியலாளனாகவோ, படைப்பாளனாகவோ, கதை சொல்லியாகவோ சொல்லிட்டும், செய்திட்டும் வெறுமனே போகவில்லை. ஒரு அரசியல்வாதியாக, அரசியல் செயல்பாட்டாளனாக எனக்கிருக்கும் சமூக ஒப்பந்தத்தின் மீதான அக்கறையில் மெனக்கிட்டு செய்திருக்கிறேன். புதிய அரசியலுக்கான பாதையின் வாசலைத் தோன்றுவிக்கவே மெனக்கிடுகிறேன். அது என் கருத்தியலின் அறமும், கருத்தியலின் மீதான என் உண்மையை வெளிப்படுத்துவதாகவும் இருந்து விடுகிறது.

//… நீங்கள் எடுத்துக் கொண்டீங்களென்றால் ஒரு கட்சி சார்பில் 14 பேர் கேட்பாங்கள்; அப்ப 14 பேருக்கான வாக்காக பிரியப்படுந்தானே தோழர்; எட்டு பேர் வந்து ஒரு… ஒரு பாராளுமன்றத் தேர்தலில் எட்டு பேர் கேட்கிறதும் ஒரு மாகாண சபைத் தேர்தலில் எட்டு பேர் அந்த மாவட்டத்தில் கேட்பாங்க.., அந்த அடிப்படையில் பத்துக்கட்சி கேட்கும் போது அந்த மாவட்டத்தில் 140 பேர் கேட்ப்போறாங்க; அவங்களுக்கான ஆதரவுத்தளம், அவங்க குடும்பங்களுக்கான ஆதரவுத்தளம், கட்சிக்கான ஆதரவுத்தளத்திவதான் இந்த வாக்குகள.. இந்த வாக்குகளை நாங்க உண்மையிலா பார்க்கனும்.

இந்தத் தேர்தல் முறையில வந்து தனிபட்ட நபரின் வாக்குகளும் செல்வாக்கு செலுத்துகின்றது. அந்த அடிப்படையில்தான் நான் நினைக்கிறேன் பிரதேச சபை எலக்ஷனில் NPP க்கு வீழ்ந்த வாக்குகள் வந்து பலமான வாக்குகள்தான்; அதைப்பத்தி NPP பெரியளவில் பெரிசா இது காணத்தேவையில்லை. ஆனா இன்டைக்கு மக்களுக்கான… மக்களுக்கான இதுகள வந்து எல்லா விசயங்களையும் அவங்க செய்யலேயென்று ஒரு கேள்வி; அதுகளிலிருந்து மக்கள் பாக்கலாம்.

ஆனா மற்ற பக்கத்தில் ஒரு ஊழல் இல்லாத ஒரு நாட்டை வந்து சீரான போக்கில கொண்டு போற.., இது வந்து இன்டைக்கு அவங்களுக்கு தலைகீழா மாறியிருக்கு…, அவங்கட வேலையிலால… வேலைகள் அது வந்து எதிர்காலத்தில அவங்களை நோக்கி மக்கள் நகருவாங்க. மத்தது அவங்கட அரசியல் வேலைகள் வந்து சாதாரண மக்க்கள் சார்ந்து நடக்கப்படுகிறது. ஒரு கிராமத்துக்குப் போய் பழங்கப்படுகிறது.

தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் மக்களோடான அரசியலைச் செய்யலேலை; இன்டவரைக்கும்; இன்ன்டைவரைக்கும் நீங்கள் பார்த்திகளான்றால் வடக்கு மாகாணத்தில கிழக்கில ரிங்கோவில வவுனியாவில நடந்த இதெல்லாம் வந்து மாகாண சபையும் மாகாண சபைக்கான அதிகாரமென்ற கதைகள் வந்து எப்படி அவங்க கையாளுகிறார்களென்டால் அந்தத்தந்த பிரதேசத்தில் இருந்த பிரமுகர்ககையும் கடந்த கால பத்திரிகையாளர்களையும் கடந்த கால பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தோடு கைகோர்த்து நின்ற பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் அவங்களோட அப்படியான பிரமுகர்களோட தான் இந்த உரையாடலை வைக்கிறாங்க; சாதாரண மக்களோட இந்த உரையாடல் நடக்கவில்லை.

உண்மையான தமிழ்த்தேசிய கட்சிகள் மக்களை 13 சட்.., 13 யை நோக்கி நகர்த்த வேணுமென்டால் 13 யை பத்தியான அதிலிருக்கிற விசயங்கள், அதற்கானன அதிகாரங்கள் பத்தி ஒரு சின்ன புக்கா அடிச்சு கூட அந்த மக்களுக்கு பகிர்ந்தளிச்சிருக்கலாம்;

ஒவ்வொரு பிரதேச சபையில போய் பிரதேசமா கிராமமா வந்து அது பத்தி தெளிவை ஏற்படுத்தி தெளிவுபத்தி அந்த புத்தகங்களை வாசிக்கக் கொடுத்து அப்படியொரு சின்னதாக அடித்துத் தோழர் அதைக் கொடுத்திருந்தாக்கூடத் தோழர் இதொரு மக்களுக்கொரு மாற்று நிலையை கொண்டுவரும்.

13 யை நடைமுறைபடுத்த வேணுமென்டு சொல்ற இன்டைக்கு எல்லாத் தமிழ்த் தலைவர்களும் இதைக் கொண்டு வரவேண்டுமென்று நினைக்கிற ஆட்களும் எங்க வடக்குக்குப் போனாலும் சரி கிழக்குக்கு போனாலும் சரி கடந்த கால சிந்தனையோட கொண்ட பல பிரமுகர்களோடு சந்திக்கிறதும் அதைப் பிரச்சாரம் செய்யிறதுமான போக்கொண்டு இருக்கு; இதொரு ஆபத்தான சூழலைக் கொண்டு வருமெண்டு நான் நினைக்கிறேன்…//

இதுதான் யோகா வளவன் சொன்ன சோலையூரானின் கதையாடல் பகுதியாகும்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் ஸ்தாபகருமான ஐங்கரநேசனின் நேர்காணலில் இதே மாகாண சபை கருத்தரங்குகள், கூட்டங்கள் பற்றிக் கூறிய கருத்தைத்தான் யோகா வளவனுக்குச் சொல்லியிருந்தேன். அதுவும் நானும் அவரும் சந்தித்துக் கொண்ட பராவின் அம்மாவின் மரண இறுதி பார்வை நிகழ்வில் வைத்து நேரிடையாக முன்வைத்திருந்தேன்.

பின்னாளில் இந்தக் கதையாடலை யோகா வளவன் என்னுடைய முகநூலில் தொடங்கினார். அதில் ஐங்கரநேசனின் காணொளியை அவருக்குப் பின்னோட்டத்தில் பதிவு செய்திருந்தேன். அதை அவர் பார்த்திருப்பார் என்று நம்புகிறேன். ஏனென்றால், இந்த உரையாடலை Serious ஆன உரையாடலாக எடுத்திருப்பாரென்பதே இந்த நம்பிக்கையின் அடிப்படையாகும். அது அப்படியில்லையென்பது பின்னாடி அவரது உரையாடல் என்னை உணர வைத்திருந்தது.

என்னுடைய எதிர்வாதமாக, நான் முன்வைத்ததையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அதுதான் ஐங்கரநேசன் கூறியிருந்த மாகாண சபை சார்ந்த கூட்டங்களைப் பற்றியதாகும். அதுவும், இவ்வுரையாடலுக்குத் தேவையானது மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.

//….13 வது திருத்தச்சட்டம் தொடர்பாக நான் என்னுடைய பதிலை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். புதிய அரசியலமைப்பு தொடர்பாக அநுரா அரசாங்கம் பேசுகிறது; வெளிப்படையாக சொல்கின்றது. புதிதாக தாங்கள் ஒன்றைக் கொண்டு வரப்போகின்றோமென்று; ஆனா நாங்கள் எல்லாக் கட்சிகளுமே அந்த புதிய அரசியலமைப்பில் எங்களுக்கான தீர்வை என்னவாக வலியுறுத்த வேண்டும் என்கிற நிலைப்பாட்டை இன்னும் கலந்து பேசவில்லை. 13வது திருத்தச் சட்டத்தை அமுல் நடத்த வேண்டுமென்று மக்களை எழுச்சி கொள்ள வைப்பதற்காக மாவட்டங்கள் தோறும் கூட்டங்களை வைக்கிறோம். இதொரு அரசியல் அயோக்கியத்தனம் என்டுதான் நான் நினைக்கிறேன்; என்னென்டு சொல்லிச் சொன்னால் நீங்களும் அந்த இடத்தில சொன்ன மாதிரி நாங்க இதுவரைக்கும் ஒன்டும் பெற்று கொள்ளாத மாதிரி; ஆகவே இருக்கிறதை வைச்சு எதாவது செய்யலாமென்றால் இதொரு தோல்வி மனப்பான்மையை ஒரு உளவியல் ரீதியான யுத்தத்தை, இயலாமையை எங்கட மக்கள் மத்தியில் திணிக்கின்றோம். நா.. என்னுடைய பார்வை தேசியப் போராட்டம் ஒரு அஞ்சலோட்டம் போன்றது….//

இப்ப ஐங்கரநேசன் வெளி ஆள்; சோலையென்பது உள் ஆள்; உள் ஆள் அப்படிச் சொல்ல முடியுமா என்கிறதுதான் யோகா வளவனின் அக மனவோட்டமாக இருப்பதை நான் உணர்கிறேன். ஏனென்றால், டக்ளஸ் என்னதான் கழுவிக்கழுவி ஊத்தினாலும் ஏதாவதொரு மறுப்பு வார்த்தையை டக்ளஸ்க்கு ஏதிராக EPRLF ஆட்கள் முன்வைத்திருப்பார்களா?

என்னைப் பொறுத்தவரைக்கும் சோலை என்டைக்கு பத்மநாபா அறிவாற்றக்கழகம் என்கிற மக்கள் இயக்கத்தைத் தன் தலைவனின் பெயரில் ஆரம்பித்து அதுவும் சமூகப்பொதுவெளியில் அவ்வமைப்பின் ஸ்தாபகர் சோலையென்கிறதை ஊடகமும் மக்களும் சொல்ல வெளிக்கிடுகிற பொழுது டக்ளஸ் மாதிரி சோலையும் சுரேஷ் பிரேமசந்திரனின் EPRLF க்கு வெளி ஆள்தான். அதே மாதிரி டக்ளஸ் தாய் அமைப்பான EPRLF யை தன் அரசியலுக்குப் பயன்படுத்த முடியுமோ அதே நிலையும் தார்ப்பரியமும் சோலைக்கும் உண்டு.

என்னுடைய கேள்வி என்னவென்றால் யோகா வளவன் சோலையை மட்டும் பொதுவெளியில் கேட்க முடிந்தால் நான் சுட்டிக் காட்டிய பொழுதும் ஐங்கரநேசனின் கருத்துக்குப் பதில் சொல்லாமல் கடந்து போவதென்பது அவருக்குள், அவருக்கான கருத்தியல் அடிப்படையாக யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையே இருக்கிறது.

தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் என்பதும் பத்மநாபா அறிவாற்றுக் கழகம் என்பதும் அடிப்படைச் சிந்தனையில் வேறுபடுகிறது. இதைக் கருத்தில் உள்வாங்கிக் கொண்டு இவ்வுரையாடலின் போக்கையையும், இன்றைக்கு சுரேஷ் EPRLF இனால் முன்னெடுக்கப்படும் மாகாண சபை சார்ந்த கருத்தரங்குகள், கூட்டங்கள் பற்றிய நான் குறிப்பிடுகிற இவ்விரு அமைப்புகளின் தலைமைத்துவ நபர்கள் முன்வைத்த கருத்துகளையும் இவ்வுரையாடல் கவனத்தில் கொள்கிறது. இவ்வுரையாடலுக்குள் Noel Nadesan கூறிய கருத்தையும் இவ்வுரையாடல் உள்வாங்கிறது. ஏனென்றால், தாய் EPRLF இன் சிந்தாந்த கோட்பாட்டு கொள்கையில் இருந்து சுரேஷ் EPRLF க்கு வெளியே உள்ள EPRLF இன் நலன் விரும்பிகளின் நிலைப்பாட்டையும் இவ்வுரையாடலில் யோகா வளவனின் அக மனநிலையையும் இணைந்து நகர்கிற பொழுது ஒட்டுமொத்த ஈழ அரசியலில் EPRLF இன் வகிபாகம் எதுவாகவென்பதை கோடிட்டு காட்ட முடியும். அது எதனால் நிகழ்ந்ததென்பதை சொல்ல முடியும்.

90 இன் தொடக்கத்தில் புலிகளால் பத்மநாபா படுகொலை செய்யப்படுகிறார். இப்படுகொலையை மேற்கொள்ள பிரபாகரனுக்கு இருந்ததென்பது தான் மறுத்து வெளிநடப்பு செய்த மாகாண சபையை ஏற்று அதற்கொரு அங்கீகாரம் வழங்கியதாகும். அதுகூட பத்மநாபாவுக்குக் கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பமாக இருக்கிறது. அதைக்கூட அவர் ஈழப்போராட்டத்தின் திசை வழியே தீர்மானித்ததாக சோலை அடிக்கடி சொல்வார். இன்னொன்றை நானும் ஈழப்போராட்ட வரலாற்றில் அவதானிக்கிறேன். பத்மநாபாவைத் தவிர்த்து வேறொரு நபர் யாராகினும் பிரபாகரன் வாயை மட்டுமே பார்த்துக் கொண்டுதான் நின்றிருப்பார்கள். ஏனென்றால், இவர்கள் இன்றுவரைக்கும் பிரபாகரன் ‘உம்’ என்று சொல்லாமல் எதுவுமே சாத்தியமாகாதென்பதை நிறுவுகிற அரசியலையே முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால், நாபாவோடு இருந்த எந்தத்தலைவர்களும் நாபாவின் முடிவில் உருவான மாகாண சபை முறையைச் சிறப்பான, தீர்க்கத்தரிசனமான முடிவாக முன்னகர்த்தத் தயாராக இருந்ததில்லை. மாறாக, மாகாண சபை எதுக்கும் சல்லிக்காசுக்கும் பெறுமதியில்லையென நிறுவ முற்படுகிற கும்பல்களோடு, தமிழ்த்தேசியவாதிகளோடு, புலித்தேசியவாதிகளோடு கூட்டு சேர்ந்து 2013 ஆம் ஆண்டில் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபையைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தனர். ஆனால், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் ஸ்தாபகரும் வடக்கு மாகாண சபை விவசாய அமைச்சருமான ஐங்கரநேசன் இதே காணொளியில் 2014 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையில் மறவர்களின் நினைவாக கார்த்திகை மாதத்தை மரம் நடும் மாதமாக பிரேரணையைக் கொண்டு வந்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறுகிறார். அப்படியிருக்கையில் இவர்கள் மாகாண சபையை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

90 இல் டக்ளஸ் இலங்கை அரசோடும் இராணுவத்தோடும் இணைந்து செயல்படுகிறார். அந்த கால கட்டத்தில் புலிகள், பாலகுமார் EROS தவிர்ந்த ஏனைய ஈழத்தமிழ் கட்சிகள் கொழும்புச் சூழலோடுதான் அரசியல் இசைவைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யாரும் ஒரு மையம் கொள்ளத் தயாராக இல்லை. அது தலைகீழாக ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தரை மேலாதிக்கம் பண்ணவே துடித்தார்கள். 94 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தபட்சம் பரஸ்பரம் ஓர் இணக்கச்சூழலொன்றைக் கண்டடைய வாய்ப்பிருந்தது. அதுவும், யாரு முதன்மைப்படுதலென்பதில் இணக்கப்பாடு சாத்தியமில்லாமல் போகிறது. ஆனால், தனக்கு 9 ஆசனங்கள் கிடைத்ததில் நடுச்சாமத்தில் போன் எடுத்து கெக்காளமிட்டு சிரித்த சம்பவம் இருந்ததாகக் கதையொன்று என் காதிலும் வீழ்ந்ததுதான்.

இந்தச் சூழவ் இன்னமும் பெரிய விரிசலை ஏற்படுத்துகிறது. ஆளுந்தரப்போடு நெருக்கமாக இருப்பதை வலுவாக இருப்புக் கொள்வதில் டக்ளஸ்சும் தீவிரமாகிக் கொள்கிறார். சுரேஷ், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு (TNA) க்குள் இணைவுக்குள் நகர்கிறார். அது புலிகளின் “விடுதலைப் போராட்டத்தை” அங்கீகரித்து, அவர்களே இலங்கைத் தமிழரின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக் கொள்கிறது. இது EPRLF இன் மூன்றாவது அணியை வரதரின் முகதாவில் உருவாக்க வைக்கிறது. 2009 இற்குப்பின் புலிகள் இல்லாத ஈழத்தமிழ் அரசியலை தலைமையேற்று நடாத்த வேண்டிய EPRLF அச்சந்தர்ப்பத்தை அசால்டாக புறம் தள்ளிவிட்டுச் செல்கிறது. இதை ஐங்கரநேசனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் டக்ளஸ், சுரேஷ், வரதர் போன்றவர்களின் அயோக்கியத்தனம் என்பேன். EPRLF இன் அரசியல் கருத்தியலுக்குச் செய்த துரோகமாகும்.

இங்குதான் நோயல் நடேசனும் சோலையும் வரதரின் முன்மொழிவில் சுரேஷ் முன்னெடுத்துச் செல்லும் மாகாண சபை பற்றிய கருத்தரங்குகள் மீண்டும் நீதியரசர் விக்கினேஸ்வரன் போன்ற நிலப்பிரபுத்துவ பிற்போக்குவாதிகளிடம் கையளிக்கிற கைங்கரியமாகவே இருக்கிறதெனச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், சோலை அது எப்படி நிகழுமென்பதையும் சொல்கிறார். கருத்தரங்கென்கிற பெயரில் மாவட்டங்களின் தலைநகரில் குறிக்கப்பட்ட கல்விப்புலமையை பின்புலத்தைக் கொண்டவர்களோடு உரையாடலை நடாத்தப்படுவதால் சாமானிய வெகுசனப்பரப்பிற்குள் இவை சென்றடைய வாய்ப்பில்லை என்பதை சுட்டி நிற்கும் சோலை அதற்கான தீர்வாக சில யோசனைகளையும் முன்வைத்திருக்கிறார். ஆனால், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமாரோடும் தமிழ் தேசிய பேரவைக்குள் ஐக்கிய ஜோதிக்குள் கரைந்தது. அவர்களும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானதாகச் சொல்லப்பட்டிருந்தது.

காலம் தொடர்ந்து ஒடிக் கொண்டாலும் இவர்களும் காலத்தோடு சேர்ந்து சலிக்காமல் ஒடினார்கள். ஆனால், யாருக்காக ஒடினார்கள் என்பதுதான் விவாதத்திற்குரியதாக மாறி நிற்கிறது. ஆனால், தங்களைப் பல பேரை ஏற்றிவிட்ட ஏணியாகக் காட்சிப்படுத்துவதில் தம் தோல்விக்காக எடுத்த முடிவுகளின் முகங்களை மூடிவிடத்தான் முனைகிறார்கள். ஒற்றைச் சொல்லில் சொல்வதாயின் வரலாறு அதைத்தான் சொல்லி நிற்கிறது. காலமும் வரலாற்றுக்காக நோயல் நடேசனையும் சோலையோடு சேர்த்து சொல்ல வைத்திருக்கிறது.

சமஷ்டியைப் பற்றிப் பேசுபவர்களோடும் மாகாண சபையைத் தும்புத்தடியாலும் தொட்டுப் பார்க்க மாட்டோமெனக் கூறுபவர்களோடு மீண்டும் கூட்டிணைவைப் பேசத் தொடங்கும் மனம் கொண்ட சுரேஷ் EPRLF மாகாண  சபை பற்றிய கருத்தரங்குகளை முன்னெடுத்தலென்பது வெகுசன அரசியலுக்கானதல்ல. இப்பொழுதும் சீலன் இராமமூர்த்தி சொன்னதை நினைவுபடுத்தவே விரும்புகிறேன்.

98 இன் காலப்பகுதியில் டக்ளஸிடம் இருந்தும் EPDP இலிருந்தும் சீலன் இராமமூர்த்தியும், மதன் இராமேஸ்வரனும் அவர்களது ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். அப்பொழுது அவர்கள் சுரேஷைப் பார்க்க EPRLF க்குச் சென்றிருந்தார்கள். அங்கு தோழர் சுபத்திரனை(றொபேட்) முதலில் பார்த்து விசயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அப்பொழுது தோழர் சுபத்திரன்(றொபேட்), “எண்ணெய்ச் சட்டியில் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்த மாதிரி நீங்கள் டக்ளஸை விட்டு சுரேஷைப் பார்க்க வந்தது” என்றிருக்கிறார். அது 100% அக்மார்க் உண்மை என்பதை காலமும் வலியுறுத்தியிருக்கிறது.
        – Nixson / Dec 10, 2025