அடங்காத்தமிழனின் அரசியல் பொட்டுக்கேடுகள்….!

அடக்காதே…, அடக்காதே…, தமிழர்களை அடக்காதே…!

வைக்காதே…, வைக்காதே…, தமிழர்களின் இடங்களில் சிலை வைக்காதே…!

அரசே உமது நீதி எங்கே…?

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்திற்குப் பின் ‘Dhani Thursi’ எனும் முகநூல் முகவரியைக் கொண்ட Reels ஒன்றைப் பார்க்க முடிந்தது. அதில் போராட்டக்காரர்களின் கோஷக்குரலாக ஒலிக்கிறது.

அது கடற்கரையையொட்டிய சாலையொன்றில் பெருந்திரளான போராட்டக்காரர்கள், தங்கள் திரட்சியின் மையப்பகுதியில் தங்களது தோள்களில் மத அடையாளத்திற்கான தெய்வமொன்றைச் சுமந்து கொண்டு வருகிறார்கள்.

அது சிவனாக இருக்குமென ZOOM பண்ணிப் பார்க்கிற பொழுதொரு குழப்பத்தைத்தான் எனக்குள் விதைத்தது. அப்படியிருந்தும் அக்காணொளித்துண்டில் பயன்படுத்துகிற மொழியையும் வைத்தும் இவ்வுருவாக்கத்திற்கான மையக் கருப்பொருளும் சேர்ந்து இப்போராட்டக் காட்சிக்காகப் பயன்படுத்தியிருக்கிற தெய்வம் இந்துக்கடவுளென அனுமான முடிவொன்றுக்கு வருகிறேன்.

இங்கு தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி கற்பனாவாத மாயைக் காட்சியை உருவாக்கிறதென்பதில் அடக்கியிருக்கும் மிக மோசமான ஆபத்தான குரோத மனநிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இக்ணொளித் துண்டு திட்டமிட்டு இரு இனங்களுக்கிடையே அரசியல் இன விரோதத்தீயை மூட்டி விடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறதும் தெளிவாகத் தெரிகிறது.

இதொரு தேசத்துரோகச் செயலென்பதை நாங்கள் வெகுசன பொதுப்புத்திக்கு எடுத்தியம்பத் தவறுவோமாயின் நாங்களும் இச்செயலோடு உடன்பட்டுப் போகிறவர்களாக இருந்து விடுகிறோம்.

இதை நாங்கள் சுட்டிக்காட்டி வெளிப்படையாகப் பேசுவது மட்டுமல்ல அதை ஊக்குவிக்கிறதைத் தவிர்த்துக் கொள்ளவும் வேண்டும்.

மாறாக, இக்காணொளிக் காட்சியமைப்பைத் தயார் செய்கிற பொழுது போராட்டக்காரர்கள் தாங்கிப் பிடிக்கும் பாதாதகைகளில் உள்ள கோஷங்களின் சொற்கள் தாறுமாறாக இருக்கிறதில் இருந்து இக்காணொளி AI தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட காணொளித் துண்டென்பது தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்?

இந்துவாக, தமிழனாக மனதளவில் அரசியல் பலகீனமாக இருந்து விடுகிறவர்கள் இக்காணொளியை Reels ஆகப் பார்க்கிற பொழுது முதலில் உளவியல் ரீதியாக உணர்ச்சி வசப்பட்டு விடுவார்கள். அவர்களுக்கு கறுப்பு வெள்ளையென இரு பக்கங்களைத் திறந்து கொள்ளவும் பார்க்கவும் உணர்ச்சி ரீதியாகக் கற்றுக் கொடுத்தும் பழக்கப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மாறாக, பெளத்தனாக, சிங்களவனாக மனதளவில் அரசியல் பலகீனமாக இருந்து விடுகிறவர்களும் மொழி தெரிந்து இக்காணொளியைப் பார்க்கிற சந்தர்ப்பங்களில் இவர்கள் மாதிரி உணர்ச்சி வசப்பட்டு கறுப்பு வெள்ளை உளவியல் மனநிலைக்குள் எதிர்வினைக்குத் தயார்படுத்தப்படுகிறார்கள் அல்லது இவர்களால் சிங்கள வெகுசனப் பரப்புக்குள் ஆழமாக இம்மன உணர்வைப் பரப்பவும், வேர் ஊன்றவும் செய்ய முடியும்.

இங்கு இக்காணொளியில் காட்சிப்படுத்தப்படுகிற காட்சி உண்மையில் ஒரு கட்சியின் அழைப்புக்கிணங்க மக்கள் திரட்சி கொண்டு இப்போராட்டம் நடாத்தப்பட்டிருந்தால் இதற்கெதிராக மேலெழுகிற எதிர்வினைத் திரட்சியை எதிர்கொள்ளத்தக்க பலமான அரசியல் தலைமையும் கட்சியும் மக்களும் அந்த இடத்தில் இருப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கும்.

ஆனால், ஆயுதப் போராட்ட காலத்தில் இராணுவத்திற்கெதிரானா தாக்குதலை கெரில்லாப் போர் உத்தியில் நடாத்துகிற இயக்கம் தாக்குதலுக்குப் பின்னால் தாக்குதலுக்குள் உட்பட்டு ஆக்ரோஷப்பட்டு தன்னிலை இழந்து நிற்கிற  இராணுவத்தினால் மக்கள் மீது மேற்கொள்ளும் எதிர்வினைச் செயல்பாட்டுக்கு எந்தவிதமான முன் தயாரிப்புகளெதும் இல்லாமலும் அது சிந்தனையளவிலும்கூட இல்லாதிருந்ததை நாம் அனுபவமாகக் கொண்டிருக்கிறோம்.

அந்த உத்தியைக் கெரில்லா இயக்கங்கள் தங்களை நோக்கி வெகுமக்கள் திரட்சியைத் திரும்புவதற்கு பயன்படுத்துவதாக நியாயப்படுத்தியிருந்தாலும் இராணுவத்தால் ஏற்படுத்தப்படுகிற வலிமிகு துயரங்களின் பாதிப்பென்பது தமிழ் மக்களைத்தான் பாதிக்கிறது. இது தொடர்ந்தும் எதிரியாகவே இராணுவத்தைப் பார்க்க வைக்கிறது.

அப்பொழுது வெகுமக்கள் “பொடியள் அடிக்கிறாங்களென்றால் அவர்களைத் தேடி அடிக்க வேண்டியதுதானே; அதற்காக அப்பாவிகளான எங்களை அடிக்கிறதும் கொல்லுறதற்கும் என்ன நியாயம் இருக்குது?” எனக் கேட்பதும் காதருகில் ஒலிக்கத்தான் செய்கிறது. ஆனால், நாமேதும் கூட்டி கழித்துப் பார்த்ததில்லை. வெள்ளைச் சட்டை போட்டவனங்களும் கோர்ட் சூட்டும் போட்டவனங்களும் உண்மையையும் நியாயத்தையும் சொல்லுவாங்களென நம்பினோம் பாருங்கோ மக்காள்…, அதுதான் பிழையென்கிறதை எப்ப உணரப் போகிறோம் மக்காள்…?

இது சரியா பிழையா என்பதை நாம் மீளாய்வுக்குள் நிறுத்தியிருக்கிறோமோ என்றால் கேள்விதான். ஆனால், அந்த Method யை நாம் தொடர்ந்தும் பயன்படுத்துகிறோமென்பதையே திருகோணமலை புத்தர் சிலை விவகாரமும் எடுத்துக் காட்டுகிறது.

இந்த Method இல் தன்னை பெரிதாக வளர்த்துக் கொண்டதாகக் கூறப்பட்ட புலிகளின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் தோல்வியைத் தொட்டு நின்ற பின்னும் நாமும் அதே அரசியல் Methodயைப் பற்றிய எந்தவொரு மீளாய்வுக்குள் நிறுத்தாமல் அந்த Method இன் பலகீனப் பக்கங்களாக இருந்து விடுகிற விளைவுகளை உணர்ச்சி உசுபேத்தலுக்குப் பயன்படுத்துவது தொடர்ந்தும் மேற்கொள்வது எமது அரசியல்  அறியாமையா, பற்றாக்குறையா இல்லை தெரிந்து கொண்டும் தம் தேவைக்காகப் பயன்படுத்துகிற மரபார்ந்த சந்தர்ப்பவாதம் என்கிறதை மறைத்து தொடர்ந்தும் தம் இருப்பிற்காக வெகுசனத்தைக் காவு கொடுக்கிறார்களா என்பதை இங்கு உரத்த குரலில் சொல்லத் தயங்குவோமாயின் நாமும் இந்தக் களிசடை அரசியலுக்கு தொடர்ந்தும் துணை போகிறவர்களாக இருப்போம்?

புத்தர் சிலை விவகாரத்திற்குப்பின் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம் உரைகளால் ஆளும் NPP அரசை திக்கு முக்காட வைத்து விட்டதாகப் பெரும்பான்மையான தமிழ் வெகுசன ஊடகங்கள் கருத்துகளை வெளியிட்டிருக்கின்றன. அத்தோடு அவர்களது பேச்சின் துண்டுக் காணொளிகளையும் சேர்த்தே வெளியிட்டிருக்கின்றன. இதொரு ஒரு பக்கச் சார்பான செய்திகளையும் கருத்துகளையும் தமிழ் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதாக நான் கருதுகிறேன்.

//…. அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடாத்த பயப்படுகிறது. வடக்கு கிழக்கில இன்றைய அரசாங்கத்தின் செல்வாக்கு இந்த புத்தர் சிலை விவகாரத்தோடு மொத்தமா இல்லாமல் போய்விட்டது.

ஜனாதிபதி நேற்று சொல்றார்; இது முடிந்த சம்பவம்; ஏன் முடிந்த சம்பவத்தைப் பற்றி இன்னமும் பேசிறீங்கென்று.

அந்த சிலை அந்த இடத்தில் இருக்கும் வரைக்கும் இந்த சம்பவம் முடிந்த சம்பவமல்ல. உங்களைப் பொறுத்தவரைக்கும் உங்களுடைய அரசாங்கத்தின்ர நிகழ்ச்சி நிரல் அந்த இடத்தில் ஒரு சிலையை வைப்பது.

அந்த சிலையை வைத்தபடியால் இன்று முடிந்த விடயமாக இருந்தாக்கூட எங்களைப்  பொறுத்தவரைக்கும் அந்த சிலை அந்த இடத்தில் இருக்கும் வரைக்கும் வடக்கு கிழக்கிலே தமிழ் பேசும் மக்களுக்கு இந்த அரசாங்கத்தினுடைய இனவாத செயல்பாடு ஞாபக மூட்டுமொரு செயல்…, விடயமாக அந்த சிலை அமையும்.

அந்தச் சிலையைப் பார்க்கும் போதெல்லாம் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த அனைவரும் வலது கையால் சாப்பிட வேண்டாம் இடது கையால் சாப்பிடுங்களென்று சொல்லி விட்டார்; மீண்டும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.       ……//

இது இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினன் சாணக்கியனின் உரையின் ஒரு பகுதியென நான் நினைக்கிறேன்.

//….”திரும்பத் திரும்ப அடிக்கிறியள் நாங்களும் பார்க்கிறோம் நான் ஒன்று மட்டும் சொல்றன்…” அர்ச்சுனா இடது கையால் மேசையைத் தட்டிக் கொண்டு “கடைசித் தமிழன்…, பால் குடிச்ச கடைசித் தமிழன் இருக்கும் வரைக்கும் வடக்கு மாகாணத்தில் ஒரு வோட்டு உங்களுக்கு விழாது. பக்கத்து ஆளுக்கு…, பக்கத்து வீட்டுக்காரனுக்கு  பிறந்தவனால் மட்டும்தான் உங்களுக்கு வோட்டு போடும். வெட்கமாயிருக்கு…, வெட்கமாயிருக்கு உங்களையெல்லாம்…, எங்கே ரஜீவன் எம்.பி.., எங்கே இளங்குமாரன் எம்பி..,” எனத் தன் கைகள் இரண்டையும் விரித்து சபையை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு “எங்கே…, ஒவ்வொரு தமிழ் எம்.பி… எங்க பைசால்  எங்கே ஒரு வசனம் உங்களால் கதைக்க முடியுமா? ஒரு வசனம் கதைக்கேலுமா? நான் தமிழ் பால் குடிச்சு வந்தவன். ஆனா முஸ்லீம் எனக்கு என்னுடைய இரத்தம் நீங்கள் என்ன சொன்னாலும் நான் ஒவ்வொரு முஸ்லிமுக்காக அடிபடுவன்; என்னுடைய தேசியத் தலைவர் என்றாவதொரு நாள் நினைத்து விட்ட பிழையோ நினைக்காமல் விட்ட பிழையோ அந்த பிழையை திருத்திறதுக்கு எனக்கு கட்ஸ் இருக்குது. இதைச் சிங்களத்திலும் சொல்ல ஆசைப்படுறேன்…//

சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினன் அர்ச்சுனாவின் உரைத் துண்டு முடிகிறது; DM MEDIA News Channel என ஒளித்திரையில் பின்னணி இசையோடு வந்து முடிகிறது.

டொக்டர் அர்ச்சுனா, NPP க்கு யாழ்ப்பாணத்தில் வாக்களித்தவர்களை கொச்சைப்படுத்திப் பேசுகிற பொழுது சட்டத்தரணி கஜேந்திரகுமார் தலை குனிந்திருக்கிறார். அதன் பின்னால் தலையை நிமிர்த்தித் தலையாட்டி உரையை ஆமோதிக்கிறதாகக் காட்சி பதிவாகி இருக்கிறது. ஆனால், ஊருக்குள்ள மதுபோதையில் உளறிக் கொட்டும் கொச்சைப் பேச்சாக அந்த வசனம் அமைந்திருப்பதில் எந்தவொரு மனப் பிரச்சினை, மானப் பிரச்சினையும் இல்லாமல் இருப்பதில் கோர்ட் சூட்டு போட்டிருப்போருக்கு தமிழ் என்பது சுத்தமாக தெரியாதென்பதாகும். அவர்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தெளிவாகப் பேசுவார்கள். அவர்களது வாழ்க்கை Partners ம் அம்மொழிகளைப் பேசுபவர்களாகவே இருப்பதையே அவதானிக்கலாம். இது மேட்டுக்குடி வர்க்க கலாசார பண்பியலாகக்கூட இருக்கலாம். ஆனால், மொழியையும் மதத்தையும் வைத்து ஒரு மேலாதிக்க அரசியலை மேற்கொள்ள ‘அடங்காத்தமிழன்’ என்கிற பட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொண்டு அந்தப் பாதாதகைகளைத் தூக்கிப் பிடிக்கவும் ஊடகங்களில் பரப்புரை செய்வதற்கும் மூளை சலவை செய்யப்பட்டவர்களை மனித வெடிகுண்டாகத் தயாரிக்கவே இந்தப் பாராளுமன்ற உசுப்பேத்தல் பேச்சுகளைத் திட்டமிட்டே செய்யப்படுகிறது.

இதைவிட 70 களின் தொடக்கத்தில் யாழ் மாநகர மேயரும் பாராளுமன்ற உறுப்பினனாக இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு இயற்கைச் சாவு இல்லையென மேடைகளில் பகிரங்கமாக இலங்கை தமிழரசு கட்சியினர் சொல்லி வந்ததிற்கும்  இப்பொழுது அர்ச்சுனா சொல்லுகிற “….பக்கத்து ஆளுக்கு…, பக்கத்து வீட்டுக்காரனுக்கு  பிறந்தவனால் மட்டும்தான் உங்களுக்கு வோட்டு போடும். வெட்கமாயிருக்கு…, வெட்கமாயிருக்கு..” என்பதற்கும் என்ன வேறுபாட்டைக் காண முடியுமென்பதே என்னுடைய கேள்வியாக இருக்கிறது?

‘அடங்காத்தமிழன்’ என்கிற ஈழத்தமிழ் மாவீரனைத் தேடி Google க்குள் இறங்கியிருந்தேன். அப்பொழுது முதலில் என் கண்ணில் Wikipedia தட்டுப்பட்டது. அதில் செ.சுந்தரலிங்கம்  – தமிழ் விக்கிபீடியா என்பது தலைப்பாகக் கொண்டதிற்குள் சென்று பார்த்த பொழுதுதான் ஒரே  உண்மை மீண்டும் மனதை உறைய வைத்தது. அது ஈழத்தமிழர்கள் திட்டமிட்டே தம் அரசியல் தலைமைகளால், அம்மக்களால் தேர்ந்தெடுக்கிற பாராளுமன்ற உறுப்பினர்களாலும் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள் என்கிற நிதர்சனம் அப்பட்டமாகத் தெரிகிற பொழுது மெளனிகளாக நாம் இருந்து விடுவதிலோ, புலம்பெயர் பிரதேசங்களில் இழுத்துப் போர்த்திக் கொண்டு குப்புறப்படுத்துகிறதோ நாம் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்தோமென்கிறது வெட்கப்படக் கூடியதொன்றாக மாறுகிறது.

செல்லப்பா சுந்தரலிங்கம் (Chellappah Suntharalingam,  1895 ஆகத்து 19 – 1985 பெப்ரவரி 11) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கல்விமானும், வழக்கறிஞரும் ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்தவர். தமிழீழம் என்ற கோட்பாட்டை முன்வைத்த தலைவர்களில் முக்கிய இடம் வகிப்பவர்.

இது விக்கிப்பீடியாவில் அடங்காத்தமிழனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முன்னுரை ஆகும்.

அடங்காத்தமிழனின் வாழ்க்கை வரலாற்றை விக்கிப்பீடியாவில் பார்த்துக் கொள்ளவும்.

//…..சுந்தரலிங்கம் அரசியலில் ஈடுபாடு கொண்டு 1940 ஆம் ஆண்டில் தனது பணியில் இருந்து ஓய்வு எடுத்தார். இலங்கை அரசாங்க சபைக்கு 1943, 1944 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1947 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.[1] அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்து 1947 செப்டம்பர் 26 இல் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரானார்.

இலங்கையின் 11 விழுக்காடு மக்களுக்கு (இந்தியத் தமிழருக்கு) குடியுரிமையைப் பறித்த சர்ச்சைக்குரிய இலங்கைக் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக அன்று வாக்களித்தார். ஆனாலும், 1948 திசம்பர் 10 இல் சமர்ப்பிக்கப்பட்ட “இந்தியப் பாக்கித்தானிய குடிமக்கள் குடியுரிமைச் சட்டம்” நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்பட்ட போது வெளிநடப்புச் செய்தார்.  ….//

செ.சுந்தரலிங்கம் தொடங்கி டொக்டர் அர்ச்சுனா வரைக்கும் தாம் ‘அடங்காத்தமிழன்’ என்கிற விம்பக் கட்டுமானத்திலேதான் தம் அரசியல் இருப்பைத் தீர்மானிக்க முற்படுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதில்தான் வடக்கு கிழக்கு ஈழத்தமிழர்களின் அரசியலுக்கு சாப விமோசனம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன் மக்காள்.

இலங்கை தமிழரசு கட்சி தலைவர் சுமத்திரன், திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அருண் ஹாரிச்சந்திராவை பதவியை விட்டு விலகச் சொல்லத் துணிகிறவர் அதே மாதிரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிற தன் கட்சி பாராளுமன்ற உறுப்பினன் சிறிதரன் சிவஞானத்தின் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவோ, சமூகப்பொதுவெளிக்கு கருத்துச் சொல்லவோ நீதிமன்றத்தை எதிர்பார்த்திருக்கிறதென்கிற மாதிரி திருகோணமலை புத்தர் சிலை என்பதிலும் நீதிமன்றத்தின் முடிவை ஏற்க மறுப்பது என்ன நியாயம்…?

சரி இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் நேர்மையைத் தேடுவோமென மீண்டும் Google க்குள் தேடிய பொழுது Wikipedia க்குள் நீலன் திருச்செல்வத்தின் தகப்பன் செனட்டர் மு.திருச்செல்வம் வந்தார்.

//…. 1965 ஆம் ஆண்டில் டட்லி-செல்வா  ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, தமிழரசுக் கட்சியினர் டட்லி சேனநாயக்கா தலைமையிலான அரசில் இணைந்தனர். ஆனாலும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்ப்பினர்கள் எவரும் அமைச்சர் பதவிகளைப் பெற முன்வரவில்லை. இதனை அடுத்து திருச்செல்வம்  இலங்கை செனட் சபைக்கு நியமிக்கப்பட்டு உள்ளூராட்சி அமைச்சராகப் பொறுப்பேற்றார். ….//

மேலும்…,

//…. செல்லையா இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக முதன் முதலாக மட்டக்களப்பு தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5][6][7] 
தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[8]

தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[8]

1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜே. ஆர். ஜெயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.[9][10][11] …..//

ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிக் கொண்டு பின்னோக்கிப் போனால் பல உண்மைகளை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதில் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் என்பதில் மேலெழக்கூடிய தலைமைகளின் அதிகூடிய உச்சபட்ச இலக்கு என்பது இலங்கைக்குள் அதிகாரத்தை மையப்படுத்தி அமைச்சராக ஆவதாக இருக்கிறது. இப்பொழுது வடக்கு மாகாண சபை முதலமைச்சராக ஆவதென்பதே முதன்மையாக பார்க்கக் கூடியதாக மாற்றப்பட்டிருக்கிறது. ஏனென்றால், NPP அரசானது எந்தவொரு கட்சியையும் தேர்தலுக்கு தம்மோடு இணைத்துக் கொள்ளாமல் இருந்ததொன்றானாலும் மக்களும் இக்குறை நிரப்புகளின் பேராபத்துகளைப் புரிந்திருந்ததினால் NPP க்கு பெருபான்மைப் பலத்தைப் பாராளுமன்றத்தில் கொடுத்து ஓர் புதிய அரசியல் கலாசாரத்தைத் தோன்றுவித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் தேர்தலுக்குள் NPP யோடு தோழமை பாராட்ட ‘நாங்களும் தோழர்கள் அவர்களும் தோழர்கள்’ எனவும், அநுராவின் படம் போடப்பட்ட  ‘T’ சேர்ட்டைப் போட்டுக் கொண்டதுமெனத் தகிடத்தோம் சித்து விளையாட்டுகள் நடந்தேறியிருந்தனர். வரலாற்றை வைத்துப் பார்க்கையில் ஒரு எம்.பி கதிரையை வைத்துக் கொண்டு அமைச்சராகும் அரும் பெரும் வாய்ப்பு யாருக்கு கிடைத்திருக்கும் என்பதையும் அல்லது யார் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்பதை நான் சொல்லித்தான் மக்காள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறுத்தான் இன்றுவரைக்கும் ஒரே Method இல் பயணிக்கும் யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையைக் கொண்ட தமிழ்த்தேசியவாத அரசியல் உணர்ச்சிகரமான உசுபேத்தல் அரசியலை இனிமேலும் கால தாமதம் செய்யாமல் மறுத்துரைக்க வேண்டும். அதனிலிருந்தும் விடுதலையாகிடவும் வேண்டும் என்பதும் என்னுடைய தாழ்மையான கருத்தாக இருக்கிறது மக்காள்…!
      – Nixson / Nov 22, 2025

Leave a Reply