ஊமைக்குரல் – 2

கதாபாத்திரங்களும் சம்பவங்களும், உரையாடலும் உண்மையோடு ஒத்துப் போவதாகக் கருதினால் அதற்கு அவர்களே பொறுப்பு; ஏனென்றால், என் சூழல் தாண்டி…, என் புலன்களுக்கு எட்டுப்படாத சூழலில், உங்களுக்கு அருகாமையில் என் சுய கற்பனையோடு இணைந்த சம்பவங்களோ, நிகழ்வுகளோ நடந்திருக்கலாம்; நான் மறுப்பதற்கில்லை; ஆனால், அவைகள் உங்களுக்குள்ளிருந்தும் மேலெழலாம்; அது எதார்த்தமானதுதான்; ஆனால், அதற்கு நான் பொறுப்பல்ல; இது என் சுய கற்பனையே…!

80 களில் சமூக ரீதியான, பிரதேச ரீதியான, வர்க்க ரீதியான ஏற்றத்தாழ்வுகள், அன்றைய இளையதலைமுறையினர்களுக்குள் நீர்த்துப் போகும் வாழ்வியல் மேலெழுந்த சூழலில் இந்த ‘மச்சான்’ போட்டுக் கதைக்கிறது சர்வ சாதாரணமான சொல் பிரயோகமாக நாளாந்தத்தில் இருந்தது.

அது சமூகப் பொதுவெளியைத் தொடர்ந்து இயக்கங்களிலும், அதுவும் இடதுசாரிய சிந்தனைக் கோட்பாட்டைக் கொண்டிருந்த இயக்கங்களில் குறிப்பாக அடிமட்டச் சூழலில் பெருவாரியாகக் காணப்பட்டது.

அந்த ‘மச்சான்’ சொல் பயன்பாடு அருகிப்போன இன்றைய தலைமுறையினருக்குள்ளும், இன்று மூத்த தலைமுறையினராக இருக்கும் அன்றைய இளைய தலைமுறையினக்குள்ளும் வாசிப்பில் உற்சாகம் உண்டாக்கும் வகையில் ‘மச்சான்’ சொல் இங்கு  தாராளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

கிட்டத்தட்ட ‘தோழன்’ என்கிறதும், ‘மச்சான்’ என்கிறதும் ஒரே அரசியலைக் கொண்டிருப்பதாக, ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துவதாக நான் கருதுகிறேன்.

ஆளான ஆடெல்லாம் சோத்துக்கு அழ, சொத்தியாடு ஓழுக்கு குத்தி முறிஞ்சாதாம் கதையாக எனக்குத் தெரிந்த EPDP க்காரன், WhatsApp இல் சேதியொன்று அனுப்பியிருந்தான்.

“மச்சான்…,  லேபர் டிப்பார்ட்மென்ட், ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றிலிருந்து கட்சியின் சம்பளம் தொடர்பாக நல்ல பதில் வந்துள்ளதாக, சதா சொல்லுது. இதில் எனக்கேதும் சாதகம் இருக்குமோ…?”

“சதாவுக்குச் சாதகமாக அமைந்தால் உனக்கு மட்டுமல்ல எனக்கும்.., மற்ற EPDP நிறுவனத்தில்  ஒப்பந்த அடிப்படையில் இராணுவத்தில் வேலை செய்த எல்லோருக்கும் சாதகம்தான் மச்சான்; அந்த ஒப்பந்த அடிப்படையில்தானே Defence Ministry மாதாமாதம் EPDP நிறுவனத்துக்கு லொட்டாக் காசு கொடுத்தது. அதிலிருந்துதானே மாதாமாதம் பொக்கட் மணி கொடுத்தார்கள். கொழுப்பில் அலுவலகங்கள், வாகனங்கள், ஆடம்பர ஹோட்டல் சாப்பாடுகள், பம்பலப்பிட்டியில் சொகுசு பங்களாக்கள், தினமுரசுக்கு முதலீடு எல்லாம் சிறப்பா நடக்க முடிந்தது. உனக்கு இது தெரியுமோ மச்சான்..?”

“என்ன மச்சான்…?”

“அது வந்து மச்சான்… நான்தான் நெடுந்தீவில் என்னோடு இருந்தவர்களுக்கு மாதம் 50 ரூபா கொடுக்கத் தொடங்கினான்; அதற்குப் பிறகு கொழும்பில் இருந்து லிஸ்ட் போட்டு ஒவ்வொருத்தருடைய காலத்தின் அடிப்படையிலும், பொறுப்பிலும் பார்த்து மாதக் கொடுப்பனவு தீர்மானித்து கையிட்ஸ்க்கு அனுப்பட்டது மச்சான்…”

“அப்படித்தான் மச்சான்…, மாதத் தொடக்கத்தில் கட்டையோ, வலண்டையனோ கவரைக் கொடுத்திடுவாங்க…, பார்க்க வேணுமே எல்லாருடைய முகங்களையும்…, அன்டைக்கு பார்க் ரோட்டில் சென்ரிக்காரனைத் தாண்டி ஒருத்தரையும் காணக் கிடைக்காது மச்சான்…, அவனும் டுயூட்டியை முடிச்சவுடனே வெளிக்கிட்டுடுவான்.”

“அப்படியா மச்சான், பொக்கட் மணிக் கொடுப்பனவு லிஸ்ட்டில் மதனும், நானும், சீலனும் கிடையாது மச்சான்…”

“எனக்குத் தெரியும் மச்சான்…, நீங்கள்தானே உலக வங்கிக்கு கடன் கொடுத்த ஆட்களாச்சே …?”

“போடா மச்சான்…, இதிலை டக்ளஸை அடிக்க ஆளில்லை; தொடர்ந்து மூனு மாசம் காசு அனுப்பினாரென்றால் ஒரு மாசத்தை டிமிக்கி கொடுத்திடுவார்; அதற்கெல்லாம் ஏதோதொரு காரணத்தை அடுக்கி விடுவார்; அதைத்தானே சிங்கப்பூரிலை செய மார்க்கெட்டில போட்டுதாகக் கையிட்ஸிலை ஆர்மிக்காரன் மதனுக்கு வத்தி வைச்சாங்க; இது பெரிய கதையாய் அங்கை ஒடிச்சு. இது புறமென்றாலாடா அங்கிங்க காம்பிலை பொடியளிட்டை புலம்பல் தாங்க முடியேலை; இது ஒரு புறம் என்றால் அடுத்த மாசம் காசு வரேக்கி இன்னும் ஒரு மாசம் பாக்கி இருப்பதாக வறுத்தெடுத்துடுவாங்கள்…”

பெரும் சிரிப்பு; கிட்டதட்ட டக்ளஸ் மாதிரி…, ஒரு இழுவைச்சிரிப்பு.

ஒரு காலத்திற்குப் பிறகு, EPDP நிறுவனத்தில் வேலை செய்த ஆட்கள், பேசுறதும் சிரிக்கிறதும் நிறுவனத்தின் தலைவரைப்போலவே பார்த்து இமிக்கிரி செய்கிறதைக் காணலாம். அதொரு உளவியல் ரீதியானதாக அமைகிறது. அது வேறொன்றுமில்லை; அது அதிகார Style/பாணி. அதன் வழியாக, EPDP நிறுவனத்துக்குள் தங்களுடைய அதிகாரத்தை நிறுவுகிறார்கள். நினைப்பு பிழைப்பைக் கெடுத்த கதைதான்.

அதே மாதிரித்தான்…, சதாவின்ரை பிரச்சினை மீண்டும் யாழ் ஊடக மையத்தில் அரங்கேறினதுக்குப் பிறகு, EPDP நிறுவனத்தின் தற்போதைய ஊடகப் பேச்சாளர் பன்னீர்ச்செல்வம் சிறிகாந்தும் டக்ளஸ் மாதிரி சதாவின்ரைப் பெயரை, “பொண்ணையன்..” என்று முதலில் சொல்லித் திரும்ப ‘பொன்னையா’ எனத் தன் காணொளியில் சிறப்பாக டக்ளஸ் மாதிரியே நடித்திருந்தார்.

கொஞ்சம் மனசுக்குள் நினைத்துப் பார்த்தேன். கதை Out Line இல் போவதை உணர்ந்து மாற்ற முயன்றேன்.

” டேய் மச்சான்.., எல்லாவற்றுக்கும் கொடுக்க டக்ளஸிடம் பணம் இருக்க வேண்டுமே..?”

“ஏன்டா மச்சான்…, அரசுதானே கொடுக்க வேண்டும். அதுவும், பாதுகாப்பு அமைச்சுதானே மச்சான் பொறுப்பு…?”

“ஒமோடாப்பா…, நானோ நீயோ கேணையனென்றால் அவங்களையும் அப்படி நினைக்கக் கூடாது மச்சான்; தீர்ப்பை அவங்க ஈசியா சொல்லிப் போட்டு, அதை இன்னமும் ஈசியா EPDP நிறுவனத்தின் தலைவர் டக்ளஸே கட்ட வேணுமெண்டு சொல்லி விடுவாங்க..”

“அப்படியா மச்சான்…, ஏழு மாசமாகச் சம்பளமே தரலையடா மச்சான்…, பம்பலப்பிட்டி வீடு விக்கப் போறேன்; வித்துப்போட்டு தாறேன் எனச் சொல்லித் திரியிற மனுசன் சதாவுக்குக் கணக்கு தீர்த்து எங்களுக்கு எப்ப, எது கிடைக்கும் மச்சான்…?”

“ஒமாடா மச்சான்…, யாரைப் பார்த்தாலும்  Defence Ministry இலிருந்து கட்டுக் கட்டாக சாக்கில கோடிக் கணக்கில கொண்டு வந்ததைத்தான் கதைக்கிறாங்க மச்சான்”

மெளனம் திரும்பவும்..,

“Park Road, லாயிட்ஸ் ரோடு, உருத்திரா மாவத்தை இல: 15, நந்தனக் கார்டன் இல:  !, தினமுரசு அலுவலகம், நெல்சன் பிளேஸ், சிங்கப்பூரில செயர் மார்க்கட்டில் போட்டது, மகேஸ்வரி நிதியம் மணல் வியாபாரம், விண்ணனோட கப்பல் பிசனஸ், டயலொக் வட பிராந்திய ஏஜன்ட், 13 சொகுசு பஸ் சேவை, ஆபிரிக்காவில் இருந்து சீனி இறக்குமதி, வவுனியாவில் தோழமைப் பண்ணை, தீவகத்தில் கடலட்டை பண்ணைகள், இன்டைக்கும் பல டிப்பர்கள், ஸ்ரீதர் தியேட்டருக்கு முன்னாடி காணிகள் பினாமிகளின் பெயர்களில் இருக்காமே மச்சான்…, நீயேண்டா மூக்கால அழுவுறாய்…?”

“உண்மைதான் மச்சான்…, எல்லாம் தம்பிக்கிட்டதானே இருக்குது.”

“அப்படியாடா மச்சான்.., நான் 2000 த்திலேயே ஓடிப் போயிட்டேனேல்லோ, எனக்கு உதுவெல்லாம் தெரியாது மச்சான்…?”

“போடா மச்சான்.., அப்பவே கெனடி சொல்வான்; நிக்சன் ஒரு பச்சோந்தி; ஏனென்று கேட்டால் சந்தர்ப்பத்துக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திப் போடுவான் என்பான். இப்பவும் உன்னை நீ மாத்திக்கவேயில்லை; என்னை மாட்டி விட்டுறதையடா..?”

“டேய் மச்சான்.., இப்பவும் அந்தாளுக்குப் பயப்பிடுகிறாயா…? EPDP நிறுவனத்துப் பொட்டம்மானும் இல்லை; கூட்டாளிகளும் இல்லை; உறுமித் திரியிற உம்முனா மூச்சி வேட்டை நாய்களும் இல்லை; இப்பத்தானே அரசு அதிகாரமும்கூட இல்லை மச்சான்…, நீ ஏன்டா சீலையோட மூத்திரம் போறாய்…?”

“உனக்கெப்பவும் பகிடிதான்; உன்னை மாதிரி இருந்திருந்தால் நானும் எம்.பி ஆகி, கனடாவுக்கோ, இலண்டனுக்கோ ஓடிப்போயிருப்பேன்; என்ரை கஸ்ட காலம் இப்படி புலம்ப வேண்டி கிடக்கு மச்சான்..”

“ஏன்டா புலம்புறாய்; நீ மச்சான் குடும்பத்தைச் செட்டில் பண்ணிட்டியேதானே…? இந்தாளோட இருந்து இவ்வளவு செய்ததென்றால் என்னைவிட நீ எவ்வளவு கெட்டிக்காரன்”

“போடா மச்சான்…, என்னத்தை காசு பணம்…, ஊரிலை ஒரு மனுசன் மதிக்கிறானில்லை; எதற்கெடுத்தாலும் மினிஸ்டரோட கதைக்கிறானென்கிறான், இல்லையென்றால் அப்படிச் சொல்றவங்களோட சேர்ந்து கை கட்டி நிக்க வைக்கிறதாலே அந்தாள் இல்லாத நேரத்திலை ஒரு நாய்கூட மதிக்கிறதில்லை; ஒரு துளி மரியாதையும் இல்லை மச்சான்.., இந்தப் பிழைப்பு தேவையா…, சொல்லு மச்சான்..?”

சிறு மெளனத்திற்குப்பின்…,

“உந்தாளுக்கு சதாவைப்போல் ஒருவர் தேவைதான்” என்றான்.

“டேய் மச்சான், உவன் சதா டக்ளஸ்சுக்கும், மதனுக்கும் பிரச்சினை வந்து மதன் பிரிஞ்ச பொழுது மதனோடைதானே போனவன்; எப்ப திரும்பவும் EPDP நிறுவனத்துக்கு வந்தவன் மச்சான்.., அவன் பாண்டியனைப் போட்டதைப் பற்றிச் சொல்லுறான்; சாவச்சேரி சாள்ஸை வைத்துச் செய்ததென்று சொல்லுறாண்டா; அப்ப இதெல்லாம்…, ‘ஆறு விரல்’ முரளி, நெப்போலியனுக்குப் பிறகுதானே இதெல்லாம் நடந்திருக்குது மச்சான்…?”

“நீ என்ன மச்சான்.., போட்டு வாங்கிறியா…?”

“இல்லை மச்சான் கோவிக்காத…, அன்டைக்கும் ஒருத்தரைப் பார்த்து கதைக்கிற பொழுதுகூட ‘கட்டை’ ராஜூவைப் போட்டுது மதனென்றுதான் சொன்னார்…, பார்டா ஒரு 27 வருசமிருக்குமெல்லோ மச்சான் கட்டை செத்து; அப்ப பார்க் ரோடில சொன்ன கதையை, அப்படியே அச்சொட்டாகப் பிழையோ, கூட்டலலோ இல்லாமல் சொல்றாங்க பார்டா மச்சான்… இவங்கட அரசியல்…?”

“கட்டைக்கு நடக்கேக்கி நீ எங்கடா நிண்டாய் மச்சான்..”

“நான் பார்லிமெண்ட்டுலதான் நின்டனான்; அப்பொழுது என்னிடம் செல் போனெல்லாம் கிடையாதுதானே; நானும் மாதிவெல இருந்து பார்லிமெண்ட்டுக்குள்ள வந்தாப்பிறகு வழமைபோல ஒபிஸ்சுக்கு போன் எடுத்தேன்; தெய்வேத்தி மாஸ்டர்தான் லைனுக்கு வந்தார்; அவர், சிவதாஸன் அங்கிளுக்கு இச்சேதியைச் சொல்ல முயற்சி செய்யேக்குத்தான் நானும் தொடர்புக்குப் போனேன்; தெய்வேத்தி சேதியை எனக்கும் சொல்லிப்போட்டு அங்கிளுக்கும் சொல்லச் சொன்னார் மச்சான்…”

தொடர்ந்தும்…,

“டேய் மச்சான் எனக்கு ஞாபகமிருக்கு…, கட்டையோடு தேவனும் பின்னாலே மாடிப்படியில் ஏறிப் போனதாம்; கட்டை சிகரெட் அடிச்சுக் கொண்டு மேலே போனவர், கதவடிக்கு வந்தவுடன் சிகரெட்டை பின்னாலை வந்த தேவனிடம் கொடுத்தாராம்; சிகரெட்டை வாங்கிய தேவன், அங்காலை திரும்பிக் குனிந்து சிகரெட்டை இழுக்க, கதவின் கைப்பிடியை கட்டை திருப்ப, வெடி முழங்கியது…, சிகரெட் இல்லையென்றால் தேவனும் அதிலை மாட்டியிருப்பானென்று சொன்னார்கள்…,”

சின்ன யோசனைக்குப் பிறகு…,

“நீ நினைக்கிறியா மச்சான்…, கட்டையை மதன், ஆள் வைச்சு போட்டிருப்பாரென்று நம்புறியா…?”

“இல்லை மச்சான்…, அன்டைக்கும் இந்தக் கதை வந்த பொழுது நான் சொன்னேன்; ரூஷ்யாவில்… அப்ப சோவியத் யூனியனில் ஸ்டாலினும் ட்ரஸ்கியோடு பிரச்சினையாகுகிற பொழுது தன்னோட நெருக்கமாக இருந்த ஒருத்தரைப் போட்டுத் தள்ளித்தான் பிரச்சினையை சோல்ட் பண்ணினார். இதை அடிக்கடி சீலன் சொல்லுவான் மச்சான்…”

சின்னச் சிந்தனைக்குப் பிறகு தொடர்ந்தேன்…,

“டேய் மச்சான்…, அன்டைக்கு அப்படியொரு நெருக்கடி EPDP நிறுவனத்துக்குள் இருந்தது உனக்குத் தெரியும்தானே…?

அது உண்மையும்கூட; அதை நான் உணர்ந்திருக்கிறேன்; அதாலை பாதிக்கப்பட்டும் இருக்கிறேன் மச்சான்…,”

“ஒமடாப்பா மச்சான்…, அதையேன் கேட்கிறாய்; இங்கிருந்து அங்கையும் அங்கிருந்து இங்கையுமாக பொடியள் மாறிக் கொண்டிருந்தார்கள். யாரையும் நம்ப முடியேலைத்தானே மச்சான்…?”

“அப்ப இதுகளைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் மச்சான்…?”

“நான் என்ன நினைக்கிறது மச்சான்…, அப்படித்தான் ஏதாவது நினைத்து பேசுறதுக்கான மன நிலையோ, எண்ணமோ எனக்கு இருந்ததில்லை.”

“டேய்…, டே.. டே உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, பொக்கட் மணி கொடுத்து அரசியலைக் கெடுத்ததைச் சொல்லனும்…, இந்தச்சூழல்தான் எல்லாருக்கும், எல்லாத்துக்கும் வாய்ப்பாகப் போச்சது; கண்டவன் நின்டவனெல்லாம் பார்க் ரோடில சேவாக இருந்து தங்களடை அலுவலைக் கொடுக்கத் தொடங்கினாங்க…”

“உந்தக் கதையெல்லாத்தையும் சொல்லித் தலைவரைக் காப்பாத்தாதே; இதுக்கெல்லாம் முழுப்பொறுப்பும் அவர்தான்; இதைத்தான் விரும்பினார்; ஒமடாப்பா இந்த மதனின் புதிய சிக்கல் அவர் எதிர்பார்க்காதுதான்; அதுவே EPDP நிறுவனத்துத் தலைவருக்குப் பெரிய சங்கடமும் இக்கட்டான நிலைமையும் கொடுத்ததுதானே மச்சான்…?”

“ஒமடா ஒப்பாய்…, கையிட்ஸ்க்குள்ளதானே டக்ளஸ், மதனை நம்பி முழுப்பொடியளையும் போட்டிருந்தார்; அதுவும் பெரும் பொருளாதார முதலீடு ஒப்பாய்…, ஆனால், யாரும் எதிர்பார்த்திராத இராணுவக் கட்டமைப்பை மதன் அங்கு நிறுவியிருந்தார்தானே ஒப்பாய்”

“ஒமடா மச்சான்…, K.K நகரில் இருந்த ‘ஒப்பாய்’ தியாகு எங்க மைச்சான்; அவன் அங்கேயே வெளியே போயிட்டான்தானே…, அப்படித்தான் எனக்கு ஞாபகம்…?”

“ஒமடா மச்சான்…, அவன் மட்டக்களப்புதானே; அவன் IPKF காலத்தில சாவகச்சேரி புண்ணியம், தியாகு, காத்தான் இவங்களெல்லாம் சூளைமேட்டாலே ஊருக்கு வந்ததாகத்தான் எனக்கு ஞாபகம் மச்சான்.”

“அந்த நேரம் டக்ளஸ், மதன், ரமேஷ் என மூப்பது பேர் பிள்ளை கடத்தலில் சென்னை ஜெயிலுக்குள்ள தானே மச்சான்…?”

“ரமேஷ் (அற்புதன்) எப்படியடா மாட்டினவர்; அவர் வெளியில தனி வீட்டிலதானே மனிசி பிள்ளையோட இருந்தார்.”

“ஒமடா மச்சான்.., அது அவர்ரை பெண்டாட்டி இல்லையாமே; அவர் EPRLF இல் ஊரில் இருந்த பொழுது கழட்டிக் கொண்டு வந்ததுதானாம் மச்சான்…, மெல்லியா…, ஒல்லியா ஒமக்குச்சி மாதிரி…, விசரன் பைத்தியக்காரன் மாதிரி K.K நகர் வீட்டுக்கு முன்னாலே ஸ்டாட் நேரத்தில வந்து கத்திக் கொண்டிருந்தான்; டக்ளஸின்ரை பொடிகாட்மார் ஒருக்கா போட்டு அடிச்சாங்க…, உனக்கு ஞாபகம் இல்லையா மச்சான்…?”

“டேய்…, டேய்…, டேய் கோதாரி போவானே என்னை மாட்டி விட்டுதை மச்சான்…, எனக்கொன்றும் இதுகளெல்லாம் ஞாபகத்திலை இல்லை மச்சான்…, எனக்கு பின்னுக்கு கிணத்தடிக்குப் பக்கத்தில நின்ட முருங்கையிலை வறுத்து தின்டு நீ பத்மன் ஆட்களோட ஜீம் அடிச்சது மட்டும்தான் ஞாபகமிருக்கு மச்சான்.”

“சரி விடுறா மச்சான் பழைய கதைக்கு வாறேன்; உனக்குத் தெரியும்தானே.., முதலில் எல்லாரும் சேர்ந்து உண்மையோ, பொய்யோ சொல்லி ஆட்களைத் திரட்டிச் சேர்த்து கையிட்ஸ்க்குத்தான் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அப்ப வேற்றுமையோ, வேறுபாடோ கிடையாதுதானே மச்சான்.”

“ஒமடாப்பா…, அப்படித்தான்; ரமேஷ், மதன், ‘கட்டை’ ராஜூ, அசோக் (சந்திரகுமார்/சமத்துவக்கட்சி), புரட்சிமணி இவங்களெல்லாம் இரண்டாம் கட்டத் தலைமைகளென எண்ணித் தொலைச்சோம் மச்சான்; ஆனால், அப்படியில்லைத்தானே மச்சான்; டக்கியும் அப்படி வராமல் பார்த்துக் கொண்டார் தானே..”

“ஒமாடப்பா அதிலை டக்கி வெலு கெட்டிக்காரன்; மல்லாக்க படுக்கேலையும் காலை ஆட்டிக் கொண்டு இதுதான் யோசினையாக இருந்திருக்குமெல்லோ மச்சான்…”

“அதெப்படி மச்சான் டக்ளஸ், ஈரோஸில் இருந்து தலைமைக் கனவோடதானே EPRLF க்குள்ளே வாரார்; இந்த லடாயில்தானே டக்ளஸ் அங்கிருந்து லவகமாக பெட்டியுமில்லாமல் படுக்கையுமில்லாமல் நசுக்கிடாமல் வேப்பம் பழத்தில் இருந்து கொட்டையை நசிக்கிற மாதிரி நசிக்கிட்டாங்க…”

“டேய் கோதாரியில போறவனே அவங்க யாராவது கேள்விப்பட்டாலே சண்டைக்கு வருவாங்க…, அது சரி டக்கி, K.K நகர் தன் ரூமுக்குள்ள வைத்து என்ன சொன்னார்டா?”

“தானொரு மாற்றுப் பாதையைக் கண்டு பிடிச்சிருக்கிறேன்; அது இலங்கை அரசோட சேர்ந்து முதலில் இயக்கத்தை ஸ்ரோங்கா கட்டிக் கொண்டு…, பிறகு  அரசுக்கெதிராக ஈழப்போராட்டத்தைச்  செய்யிறதெண்டு சொன்னார்டா; ஆனா, அது பிரபாகரன் எழுதின கதையெண்டு சத்தியமா எனக்குத் தெரியாது மச்சான்…” என்கிற பொழுது டக்கியின் வெடிச்சிரிப்பு அங்காலே கேட்டிச்சு.

“டேய்…, டேய் சிரிக்காதே…, டக்ளஸ் இலங்கைக்குத் திரும்பி அல்லப்பிட்டி போட்டோக்களைக் காட்டுற பொழுது தோழர் சொன்ன மாதிரி சாதிச்சிட்டாரெனச் சொன்னவங்களும் இருக்கிறாங்கதானே மச்சான்.”

“அதுவும் உண்மைதானே…, இயக்கம்…, அரசியலுக்கு வழி பிறந்திருக்குதென்றாகத்தான் நான் நம்பினேன் மச்சான்…”

“உன்ரை பார்வை அது மச்சான்…, என்னோட பார்வை அதில்லை; இதுக்குல என்ரை இடமெதுவென்பதுதான்; அதுவேதான் என் தேடலுமாக இருந்தது. இன்டைக்கும் அதுதான் மச்சான்…, ஆனால்,அப்ப நானும் வெளியில போயிடனுமென்டுதான் இருந்தனான்; அது சரி வரேல்லை; அப்பனும் யாழ்ப்பாணத்தில இருந்து கிளாலிக்காலை வர எலாதென்டு தமக்கையின்ரை பேரனிடம் சொல்லி அனுப்பிட்டார். ஏனென்டால் மச்சான்.., உவங்கட உழைப்பில நான் குறை சொல்ல மாட்டேன்; ஆனால், உவங்கட உந்த தோழமைகளுக்குள் கள்ளம் இருந்தது. அதை உவங்கட ஆளாளுக்குள்ள நடந்து கொண்டிருந்த சின்னச் சின்னதாக உரசல்கள், முறைப்புகளில் இதை என்னால் வலுவாகப் புரிந்து கொள்ள முடிந்திருந்தது மச்சான்.

ஏன் பாரேன் மச்சான்…, K.K நகர் லைவ் முடிச்சு கொழும்புக்கு வந்தாச்சு; அவரவர் தங்கட வேலைகளை ஆளாளுக்குப் பார்த்தாங்க; ஆனா…, டக்ளஸ் தன்னை மையப்படுத்தித் தன்னை ஸ்ரோக்காக கட்டமைக்கத் தேவையானவற்றைச் செய்ய.., EPRLF க்குள்ள கட்டிய விசுவாசத்தைச் சரியாகப் பயன்படுத்தியொரு நிர்வாகத்தைக் கட்டமைத்தார்தானே மச்சான்…, அதில ரமேஷ் கொஞ்சம் அவுட்டில டக்ளஸ் வைச்சிருந்தாரென்பதுதான் என் பார்வை மச்சான்.”

“அவரும் கனடா போகத்தானே இருந்தார் மச்சான்; தன்ரை சேவிற்றிக்காக வந்து போனவரே தவிர ஒட்டின உறவில்லைத்தானே மச்சான்…”

“ஒமடா மச்சான்…, ரமேஷின்ர கெஸ்ட் பிரண்டுகள் ஈழமணி, மித்திரனெல்லாம் முதல்ல கனடா போயிட்டினம்தானே…?”

மற்றது இவரும் டக்ளஸ் கொழும்புக்கு வரேக்கி வாற மாதிரி இல்லைத்தானே; அசோக்…”

இடைமறித்து…

“புளட் யோகன் கன்னமுத்தா மச்சான்…?”

“ஒமடாப்பா…, கொஞ்சம் மிஸ்ஸிங்; கடைசி நேரத்தில ரமேஷ் ஏறிப் போயிட்டார்…”

“உனக்கு ஒப்பாய் எல்லாம் தெரியும்; யார் சொன்னது மச்சான்…?”

“அது வந்து மச்சான்…, ஏழுமலையோட ஆட்டோவில டக்ளஸ் திரிகிறது. அதுதான் ஏழுமலை எனக்கு ஒன்னு விடாமல் சொல்லும் மச்சான்…”

“அது சரி…, அப்படித்தான் மச்சான்…, அதில்லை…, முதலிலை பச்சை ஜீப்பைக் கொடுத்து ரமேஷை ஆள் பிடிக்க அனுப்பிறார்; அதிலை நீயும் போனதாக கையிட்ஸ்க்கு வந்த பொழுது நீ சொன்னது ஞாபகம் வருகுது மச்சான்.”

“ஒம் ஒப்பாய்…, அது சிறிபால லேனில் முதல் முதல் அலுவலகமும் தங்குகிற வீடுமாக இருந்த நேரத்திலை நடந்தது. அப்பத்தான் நானும் வேலூர் சிறையில் இருந்து வெளியில் வந்து சென்னையிலை  நிறுவனத்துக்கு ஆள் அனுப்பிற வேலை பார்த்திட்டு வந்திருந்தனான் மச்சான்…, அப்பவே ரமேஷ் தனியாகத் தங்கியிருந்தார்.

இப்படியான வேலையெண்டால் எல்லாரையும்விட ரமேஷ் பெரும் இன்ரஸ்டாக குஷியோடு துள்ளி ஜீப்பின் முன் சீட்டில் உட்கார்ந்திடுவாரே மச்சான்…, அன்டைக்கு ஐலண்ட் லொட்ஜ்சடிக்குப் பக்கமாகப் போனோம்.

எனக்கு கொழும்பு நாலாம் குறுக்குத் தெருவைத் தாண்டி எதுவும் தெரியாது. அதுவும், சங்கானை ஆசுபத்திரியடி பல்லன் கந்தசாமியின்ரை லொறியில வெங்காயத்தோட வந்து போனதுதான் மச்சான்…

திடீரென்று ரமேஷ், “ஒடுறான்…, அதோ ஒடுறான்…, பிடியுங்கடா” என்று வெளியைப் பார்த்து கத்தினார் மச்சான்…”

“ஒமடா மச்சான் இந்தச் சனியன்களெல்லாம் டக்ளஸை நம்பித்தானே இருந்தது…?

ரமேஷை பம்பலப்பிட்டி அகதி முகாமைப் பார்க்கவும் டக்ளஸ் சொல்லிப் போட்டார்; ரமேஷோ எதற்கெடுத்தாலும் யாருக்கும் கையை நீட்டிப் போடும்; அவருக்கு காளி பொடி கார்ட்டாக இருந்தது தெரியும்தானே மச்சான்; அதொரு தனிக்கதைதானே…?”

“அப்படியிருந்தாலும் இந்தச் சூழலொரு நம்பிக்கையொன்றை EPDP நிறுவனத்துக்குள்ளேயும் வெளியேயும் டக்கிக்குக் கொடுத்துக் கொண்டிருந்ததுதானே மச்சான்…?”

இவைகள்.., டக்ளஸின்டை விம்பம் நிலத்துக்கும் வானத்துக்குமாக வளர்ந்தது; EPRLF க்குள் டக்ளஸை நோக்கி எதிர்தெழுந்த, இனிமேல் டக்ளஸ்க்கு அட்ரஸே இல்லையெனச் சொன்ன வாய்கள் ‘ஆ’வெனப் பிளந்து நிற்கத் வைத்தன. அவைகளை, அவர்களின் தேவைகள் மட்டுமின்றி நாபாவின் படுகொலைக்குப் பின்னான அவர்களின் அரசியல் வெற்றிடம், நாபாவின் இழப்பைத் தாண்டி நகர முடியாத இயலாமைக் காரணிகளென அவர்களை, டக்ளஸை நோக்கி நகர்த்தத் தொடங்கின.

இச்சூழலையும் டக்ளஸ் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்; தன்னைச் சுற்றி தன் பொருளாதார பலத்தை வைத்துக் கொண்டு அவர்களது பொருளாதார பலகீனத்தைச் சரியாகக் கையாண்டு மற்றதொரு Standby அணியைக் கட்டுகிறார்.

இதற்குள் பொறுக்கியெடுத்து முதற்கட்ட அணிக்கான மாற்றீடுகளை Standby அணியாக அங்காங்கே டக்ளஸ் சேவ் பண்ணத் தொடங்கியிருந்தார். அதில் குறிப்பாக, கிபி யை எடுத்து ரமேஷ்க்குப் பதிலாக 96, 97 களில் தயார் பண்ணுகிறார்.

ரமேஷின் பத்திரிகைப் பாத்திரமான அற்புதனுக்கு ‘கண்ணோட்டம்’ அமீனை (சிவகுமார்)யும், ‘அருவி’ சேகரையும் ரெடி பண்ணி ஏரிக்கரை அரசு பத்திரிகை நிறுவனங்களுக்குள் குந்த வைக்கிறார்.

இந்த இரண்டையும் மேவி தன் தகப்பனோடும் நல்லுறவில் இருக்கக்கூடிய NLFT மனோரஞ்சனையும் தொடுப்பில் வைத்திருந்ததாகவும் அவை இரண்டு பேரையும் ஏரிக்கரைக்குள் வேவு பார்க்கவும், பாதுகாப்பாக தனக்கான விசுவாசிகளாகக் கட்டமைக்கும் அரசியல் வகுப்பெடுக்கவும் டக்கி பயன்படுத்தியதாகக் கதையொன்று உலாவினது.

மதனைக் கையிட்ஸ்க்குள் இறக்கிறதுக்கு முதல் அதே மண்ணைச் சேர்ந்த, மதனுக்கு உறவுக்காருமான மனோவைக் கொம்பு சீவியொரு குழப்பத்தை கிரியேட்டி பண்ணி அதையும் மீறி தான் மதனுக்குப் பொறுப்பு தருவதாகச் சினிமா காட்டியிருந்தார்.

இதனாலே மனோ, திரும்பவும் சென்னைக்குத் திரும்பி கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் இருக்கத் தொடங்குகிறார். பின்னாடி, டக்ளஸே மனோவை தாஜா பண்ணி இழுத்து வருகிறார்; வெள்ளவத்தை உருத்திரா மாவத்தை 15 இல் குடி வைக்கிறார்.

ஆனா மச்சான்…, அந்த நேரத்தில மனோவைக் கும்மிடிப்பூண்டியில் பார்த்த ஒருவர், தான் கும்மிடிப்பூண்டியில் ஒரு கொம்பனியில் உதவி ஸ்ரோர் கீப்பராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம்; ஒரு நாள் மதியம் போல ஒரு புதுச்செருப்பொன்று வாங்கிப் போட்டுப் பழசைப் பேப்பரிலை மடிச்சுக் கொண்டு திரும்புகிற பொழுது அந்த வெய்யிலும் வெறுங்காலோடு ஒருத்தர் வந்து நின்டாராம்; தனக்கு யாரென அடையாளமே காண முடியேலையாம்; பார்த்தால் மனோ; தனக்கு மனோவின்ரை கோலத்தைப் பார்த்து அழுகையே வந்திடும் போல இருந்ததாம்; கையில இருந்த பழய செருப்பையும் கொடுத்து, 50 ரூவாக் காசும் கொடுத்தாராம் என்று அன்டைக்கு கதைக்கும் போது சொன்னார் மச்சான்…”

“போட்டு வாங்கிட்டாய் மச்சான்…, ஏன்டா உன்னிடம்தான் எல்லாரும் மாட்டுறாங்களா…, இல்லை சொல்ல வேணுமென்று அவங்களுக்கு மனசை உறுத்துதோ தெரியாது…, ஆனா நீ அந்த இடத்துக்கு வந்திட்டாய் மச்சான்.., அதொரு உன்னுடைய பெரிய அரசியல்தான்…”

மீண்டும் டக்ளஸின் வெடிச்சிரிப்பு என்னில் தொடங்கி…, அவன் தொடர்ந்தான்…, மெளனம் தன்னை அங்கு இருத்திக் கொண்டது.

“டேய்…, டேய் எனக்கு இந்தப் புகழ்ச்சியெல்லாம் பிடிக்காது மச்சான் அதை விடு…, உவன் ஜெகனைத் தெரியும்தானே மச்சான்…”

“ஒமடாப்பா அவனைத்தானே மொட்டையென்று நக்கல் பண்ணுவாங்களே…, EPDP நிறுவனத்தில கூடின சம்பளம் அவனுக்குத்தானே டக்கி கொடுத்தாரென்றால் பாரேன்…, கடைசியில ஒரு லட்சம் டக்கி கொடுத்தாராமே மச்சான்.”

மறுமுனையில் ‘ம்’ இழுவல் போய்க் கொண்டிருந்தது.

அதை குறுக்கால வெட்டி…,

“நீ பாரேன் மச்சான் K.K நகரில் இருந்து காய்ந்த நேரத்தில வெளிநாடு போயிருந்திருந்தால் டிமான்ட் கூடத்தான் என்கிறாய் மச்சான்; அதைவிடு…, 86 இல் LTTE பிரச்சினைக்குப் பிறகு மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்றிருந்த வட்டுக்கோட்டை EPRLF பொறுப்பாளராக இருந்த ஜெகனை, தன் தொடர்புக்குள் கொண்டு வந்து கதைத்து கரைத்து மத்திய கிழக்கு நாட்டில் பெறுகிற சம்பளத்தைத்தான் தருவதாகக்கூறி, வாக்குறுதியும் கொடுத்து வரவழைத்து மதனுக்குப் பதிலாக கையிட்சுக்குள் மெல்ல மெல்ல தன்னோடு கூட்டிச் சென்று தனித்து இயங்கக்குகிற, கையிட்ஸ்க்குள் உலாவுகிற நிலையை உருவாக்கி ஜெகனை, டக்ளஸ் கொம்பு சீவி, கொம்புக்குப் பெயிண்ட்டும் அடித்து விட்டு விடுகிறார்.

அந்த இடத்திலதான் சதா சொல்றானே நெடுந்தீவு AGA நீக்கிலாஸ் கொலைக்கதை வருகிறது மச்சான்…”

“டேய்.., டேய் சொல்றா மச்சான்…”

“போடா புடுக்கு இப்ப அந்தக் கதைக்குள்ள போனேனென்றால் அதுக்கு முன்னால் கதை அறுபட்டு போயிடும் மச்சான்; கத வாசிக்கிறவனையும் டென்ஷனாக்கிக் கொஞ்சம் யோசிக்க வைக்க வேண்டாமோ…?

ஒரு கதைக்கு டக்ளஸ்கூட அந்த மதனின் இடத்தில் இருந்தாக்கூட இந்தளவுக்கு இராணுவக் கட்டமைப்பை உருவாக்கியிருப்பாரா என்றால்கூட கேள்விதானே மச்சான் மிச்சம். அந்தளவுக்கு மதன், EPDP நிறுவனத்துக்கான இராணுவத்தைக் கட்டமைப்பு செய்திருந்தார். இது டக்ளஸ்க்குப் பெரும் கிலியை ஏற்படுத்தியது.

மதனோடு கையிட்ஸ் போனால் மிஞ்சிப் போறது கொழும்பும் திருகோணமவையும் மட்டக்களப்பும் புத்தளம் வவுனியா போன்றவைதான். ஆனால், அவ்வளவுக்கு EPDP நிறுவனம் அங்கு கோலோச்சியிருக்கவில்லைத்தானே மச்சான்…?”

“என்னடா மச்சான் பெரிய கதை சொல்கிறாய்…?”

“ஒமாடாப்பா…, நான் 91 இன் தொடக்கத்தில் கையிட்ஸ்சுக்கு வந்த பொழுது K.K நகரில் இருந்த ஆட்கள், தாங்கள் பழைய ஆட்கள் தங்களை முதன்மைப்படுத்திப் பொறுப்புத் தர வேண்டுமென மதனோடு முரண்பட்டு நிக்கேக்கி மதன், டேவிட்டின் பொறுப்பில் தனி முகாமைக் கொடுத்து K.K நகர் பார்ட்டிகளை ஒரம் கட்டிப்போட்டு தனக்கேத்த மாதிரி கார்த்திக்கை வைத்துத்தானே எல்லாம் செய்தார்; ஒவ்வொருத்தராக டேவிட் உட்பட முழுப்பேரையும் அங்கிருந்து காலி பண்ணினார்தானே மச்சான்…,”

இடைமறித்து…,

“உந்த கார்த்திக்கைத்தானே ரிங்கோவில கேர்ள் பிரண்ட்டிட்டைப் போயிட்டு இருட்டின நேரம் வாறேக்கி ரோட்டில குறுக்காலை கட்டுக்கம்பியைக் கட்டி சையிக்கிளாலே கழுத்தறுந்து விழ வைச்சு வெட்டிக் கொலை செய்த கார்த்திக்கைத்தானே சொல்கிறாய் மச்சான்…?”

“ஒமடாப்பா…, கார்த்திக்குமொரு இன்டஸ்ரான கதையுண்டு; அதைப் பிறகு பார்ப்போம்; இப்ப கொஞ்சம் மெயின் கதைக்குள்ள நிற்போமடா…, சரிதானே… கிறிக்கிட்டு வா மச்சான்…”

மீண்டும் டக்கியின் வெடிச்சிரிப்பு; சிரிப்போடு கலந்த குரலில்…

“அடே மச்சான்…, கிறிக்கிட்டு வா என்று நீ சொல்லேக்கி நெப்போலியன்தான்டா ஞாபகத்துக்கு வந்திச்சிடா மச்சான்…”

“ஒமடா அப்ப அவன் நெப்போலியன் அல்ல…, இராமேஷ்வரத்தில இவன் விட்ட அலப்பாறைக்கு டக்ளஸே சேர்ந்து பிலீம் காட்டினார்; அதற்குப் பிறகு டக்ளஸே நெப்போலியன் என்றும் பெயர் வைக்கிறார்.”

“அதென்னடா அலப்பாறை மச்சான்…?”

“89 கடைசி இல்லாட்டி 90 இன் தொடக்கத்தில் IPKF ரிட்னேனாகி மண்டபம் காம்பில் ஆள் சேர்க்கத் துவங்கின நேரம்.., நானும் மனோவும் மண்டபம் காம்ப் தியேட்டருக்குப் பக்கத்தில வீடு எடுத்து தங்கியிருந்துதான் ஆள் சேர்த்தோம். அப்ப டக்ளஸ் தன் பரிவாரங்களோடு வந்திருந்தார். நான் நினைக்கிறேன் பாம்பன் பாலம் திறந்திட்டாங்கள்;  இராமேசுவரம் பஸ் ஸ்டாண்டும் புதிய இடத்துக்கு மாத்திட்டாங்க…, நெப்போலியனை எடுத்திட்டோம்; இவன் சின்னப் பையன்; மனோ எப்பவும் தன்னோடு வைச்சுக் கொண்டிருப்பார்; அப்படித்தான் இராமேசுவரம் பஸ் ஸ்டாண்டில் மனோவும் இவனும் டக்ளஸ் கூட்டத்தைவிட்டு தனியாகப் போயிட்டாங்க மச்சான்.., கொஞ்ச நேரத்தில நெப்போலியன் தலை தெறிக்க ஓடி வாறான்; அப்பொழுது அவன் நெப்போலியன் அல்ல.

தலை தெறிக்கத் தனியாக மனோவை விட்டு ஒடி வந்தவன், மூச்சிரைக்க.., கருணாவைப் பார்த்ததாக டக்ளஸிடம் சொன்னான்.

கேட்கவா வேண்டும்; படை பட்டாளங்களோடு டக்ளஸ் புழுதியைக் கிளம்புகிறார் பாரேன்டா மச்சான்; அங்கே ஒரு குருவியுமில்லை; அதற்குப் பிறகுதான் டக்ளஸே இரமேசுவரம் பஸ் ஸ்டாண்டில் வைத்து நெப்போலியன் எனப் பெயரே வைத்தார் மச்சான்…”

“நல்ல இன்டஸ்ரான கதைதான் மச்சான்…”

“அப்படித்தான் இதுவும் டக்ளஸ் தனக்கான கை அடக்கத்தில் மதனை விளையாட விட்டு ஒரு சூழலை உருவாக்கினதுதான்; அதுகூட பின்னாளில் எவ்வாறு டக்ளஸ்க்கு ஆப்பு வைக்கிற அளவுக்கு திரும்பினதில் டக்ளஸ் ரொப்பத்தான் சொக்காகிப் போனார் மச்சான்.”

“டேய்.., டேய் மச்சான்…, அப்படி என்னதான் டக்கிக்கும் மதனுக்கும் இடையில் நடந்தது?”

“இல்லையடா அது மூனு பேர் சம்பந்தப்பட்டது; அது வந்து மச்சான், டக்கி முதலில் EPDP நிறுவனத்துக்குள்ள மதன்ரை கணக்கைத் தீர்க்கிற ஐடியாவில் இருக்கேலை; மதனை வைச்சு அற்புதன்…, அதுதான் ரமேஷின்ரை கதையை முடிக்கத்தான் பார்த்தார்; அதற்கு மதனைப் பயன்படுத்தத்தான் டக்ளஸ் முதலில் கெச் போட்டு காயை நகர்த்திக் காரியமாகிற பொயின்ருக்கே வந்திட்டார்; அங்குதான் டக்ளஸ் எதிர்பார்க்காத திருப்பமொன்று நடந்து டக்கியின்ரை பிளானெல்லாம் தலை கீழாக மாறிட்டுது; அதில் டக்கி அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு ஆடிப்போய் என்ன செய்யிறதெண்டு தெரியாமல் முழி பிதுங்கி வெலுவெலுத்து வெளிறிப்போய் தலையில் கை வைச்சு அந்த லாயிட்ஸ் ரோடு தன் தர்பார் மண்டபத்துப் பெரிய கதிரைக்குள் தன்னை சுருக்கிக் கொண்டார்.

அந்த நீர்க்காவி பிடித்த ஓட்டை பெனியனும் வெள்ளைச் சாரமொன்றை மூட்டி இடுப்புக்கு மேலே பொக்குளடியில் கட்டி கீழ் பக்கமாக உருட்டி பெலிட் கணக்கில் பட்டி வரக் கொண்டு கதிரையில் நுனிக்குக் குண்டியை நகர்த்தி வலக்காலுக்கு மேலே இடக்காலைப் போட்டுக் கொண்டு வலக்கால் தொடையிலுள்ள இடக் காலை ஆட்டிக் கொண்டு வலக்கையால் இடக்காலின்  குதியைத் தடவிக் கொண்டு இடக்கையின் முழுங்கை மூட்டை கதிரைச் சட்டத்தில் குத்தி தலையின் இட நெற்றி மூலையின் காதுப்பக்கமாக பெரு விரலையும் மற்ற நான்கு விரல்களையும்  நெற்றியின் முன் தகட்டில் வலது பக்கமிருந்து இடப்பக்கமாக தடவிக் கொண்டு தலையைக் கவட்டைப் பார்க்கிற மாதிரி குனிய வைத்துக் கொண்டு மதனையும் ரமேஷையும் பார்க்க விரும்பாதவர் மாதிரி கடும் யோசினைக்குள்…, சிந்தனைக்குள் டக்ளஸ் ஆழ்ந்தார் மச்சான்.”

“டேய் மாச்சான் பூனா மோனே…, என்னடா நினைச்சுக் கொண்டாய்; நானென்ன கதாலோட்சபமா கேட்கிறேன்; முக்கிய பொயின்ரைச் சொல்லேன்டா…,கொதாரி போவானே; அறுவை மன்னா…!”

மீண்டும் டக்ளஸின் வெடிச்சிரிப்பு; சின்ன மெளனம்…, டக்கியின் சிரிப்பு மெல்ல பெரிதாகிக் கொண்டிருந்தது.