‘நான் காற்று வாங்கப் போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்….
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்..
அந்தக் கன்னி என்ன ஆனாள்…’ என்கிற கண்ணதாசனின் சினிமாப் பாடல் ஞாபகம் வந்தது.
அந்த ஞாபகம் வருவதற்கு ஏது மூல காரணமாக எனக்கிருந்ததென்கிற ஒரு கேள்வி உங்களுக்குள் இருந்து எழுமல்லவா?

அது வேறொன்றுமில்லை; இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சிவஞானம் மீதான .இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கொடுக்கப்பட்ட முறைபாட்டின் நிமித்தம் முறைப்பாட்டாளருக்கு அழைப்பு ஆணைக்குழுவால் அனுப்பட்டு Nov 12, 2025 இல் 7 மணி நேர விசாரணை நடாத்தப்பட்டது என்கிற செய்தியை ‘தமிழ் அடியான்’ வெகுசன ஊடகத்தில் காணுற்ற பொழுதே இந்த நினைப்பு எனக்கு வந்திருந்தது.
‘..அந்தக் கன்னி என்ன ஆனாள்…’ என்கிற வரியை நீங்கள் நோக்குகிற தருணத்திலும் ‘நிக்சன் எங்கேயோ பார்த்துக் கொண்டு நிற்கிற பொழுது தனக்குப் பின்னாலுள்ள மாங்காய்க்குக் குறி வைக்கிறான்’ என்கிற நினைப்பும் உங்களுக்கும் வரலாம். அதில் தவறும் இல்லைத்தான். அதுதான் எதார்த்தமும்கூட. அதற்காகவேதான் நானும் இந்தச் சினிமா பாடல் வரிகளைத் தேர்ந்தெடுத்தேன்.
சுப்பர் மார்க்கெட்டுகள், மக்களதிகார அரசு நிறுவனத்தைத் தன் பண பட்டுவாடாவுக்காக வேறொருவருடைய பெயரைப் பயன்படுத்துவது, Liquor store permit, Bar License, அதிதமான பொருளாதார செழிப்பைக் காட்சிப்படுத்தும் வாழ்வியலை உருவாக்குதல், தனக்கான வேலைகளுக்காக பல நபர்களை நியமிப்பதுவும் அவர்களுக்கு மாதாந்த வேதனங்கள் அதிகாரப்பூர்வமற்ற (Unofficial) வகையில் வழங்குதல் என இன்னோரன்னச் செயல்பாடுகளென்பது ஒரு அரசியல்வாதிக்குச் சட்டபூர்வமானதென்கிற சமூகப் பொதுப்புத்தி மன நிலையைக் கொண்டிருக்கிற நாங்களெல்லாம் இந்த விசயத்தை ஆச்சரியமாகத்தான் பார்க்கிறோம்.
இன்னொரு ஆச்சரியம் இங்கு முகிழ்ந்து கொண்டிருப்பதை தமிழ் அடியான் சொல்கிற செய்தியின் விபரங்கள், தரவுகளில் இருந்து நாங்களெல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது.
சஞ்சய மகவத்த எனும் சமூக செயப்பாட்டாளர் Civil Intelligence Front (குடிமக்கள் புலனாய்வு முன்னணி) என்கிற அமைப்பின் ஊடாகp இம்முறைபாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருக்கிறார். இவரது முகவரி என்பது மத்தேகொட, குருபவில்கம, பலாங்கொட என்பதாகும்.
நம்மட ஆட்கள் ரோசக்கர பயல்கள்; வன்னி புலனாய்வு, தமிழ் புலனாய்வு, யாழ்ப்பாண புலனாய்வு என முகநூலுக்குள் வாழ்க்கையை ஒட்டுவதற்காக அரசியல் செய்கிறதில் விண்ணன்களாக இருக்கேக்கி உண்மையில் ‘புலனாய்வு’ தலைப்பை வைத்துக் கொண்டது மட்டும் இல்லாமல் ஊர் விட்டு ஊர் சென்று புலனாய்வும் செய்து கெத்தாக உரிய இடத்தில் முறைப்பாடும் செய்தும் அதற்கான அத்தாட்சி விபரங்களையும் தரவுகளையும் திரட்டி ஆவணமாக்கியும் கொப்பன் குதிருக்குள் கீரை முளைத்த கதையாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன்னால் ஏழு மணி நேரமாக பதிலும் விளக்கமும் கொடுத்து தானெடுத்துக் கொண்ட முயற்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதென்பது பாராட்டக்கூடிய விசயம்தான். ஆனால், எங்களது முகத்தில் கரியைப்பூசி அவமானப்படுத்தியுமெல்லோ காரியம் நடந்திருக்குது பாருங்கோ மக்காள்…!
எத்தனை ஜனாதிபதி சட்டத்தரணிகள்…, எத்தனை எத்தனை முன்னாள் நீதியரசர்கள்…, மக்களுக்காக மரக்கட்டையில் கிடைக்கிற சொற்ப நேரத்தில் தூங்கி வழியும் கர்ம வீரர் காமராசாக்களான அத்தனை இயக்கத் தலைவர்கள்…, ஆயிரமாயிரம் அரசியல் செயல்பாட்டாளர்கள்…, ஊடகவியலாளர்கள்…, நையாண்டி நக்கல் பண்ணும் வெகுசன ஊடகங்கள் எதுவுமே செல்லாக்காசாகி சந்தி சிரிக்கிற அளவுக்கு முட்டாளாக்கி இருக்கும் தெற்கில் இருந்து வடக்கிற்குள் இறங்கியிருக்கும் சுப்பர்மான் இவனல்லோ மாவீரன் மக்காள்…!
சூடு சுரணையற்ற சமூகமா…?
இல்லைவே இல்லை; மாறாக, 75 வருடங்களாக தேர்தல் ஜனநாயகத்தில் வெள்ளைக்காரன் கொடுத்திட்டுப்போன சர்வசன வாக்குரிமையைப் பயன்படுத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைத்துப் பேரும் சிறிதரன் சிவஞானத்தின் மீது சுமத்தப்படுகிற முறைப்பாட்டுக்கான அரசியலையே கள்ள வாக்கு போடுகிறது முதல் கொண்டு செய்திருக்கிறார்கள். யாருமே மறுத்துப் பேசுவார்களா மக்காள்…?
ஊருக்குள் சின்னச்சிறார்கள் மட்டுமன்றி சமூகமே பட்டம் சூட்டி பட்டம் தெளிக்கிறதில் தொடங்கி கட்சிகளுக்கிடையேயான சண்டையாயினும் தலைவர்களுக்கிடையேயான சண்டையாயினும் குற்றம் சொல்லிக் கொள்ள மட்டுமே பயன்படுத்துவார்கள். அதற்கு அவர்களும் முதுகெழும்பிருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துவெனச் சாவால் விடுவார்கள். தேர்தல் திருவிழாவாக மாற்றப்படும். முடிவில் யாரெல்லாம் பாராளுமன்றம் போவார்களோ அவர்கள் வெட்கம் ரோஷம் மானம் மரியாதையெல்லாம் துகிலுரிந்து அம்மணமாகி நிற்க பல்லைக் காட்டுவார்கள். அதன் பின் அரசியலொரு சாக்கடையென்பார்கள்; சாக்கடையை பூக்கூடையாக்குகிறோமென அள்ளி விடுவார்கள்.
ஒரு விதத்தில் Island Re-convicted Criminals (IRCs) என முத்திரை குத்தப்பட்டால் அதை வாழ் நாளில் மறுதலிக்க முடியாததென்பதைப் போலவே இன்றைக்கு சிறிதரன் சிவஞானம் சார்ந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முறைப்பாட்டு எண் AC/3942/2025/B-213 என்பது அவர் கழுத்தில் தொங்க விட்டிருக்கிறதையும் அழித்துவிட முடியாததென்கிற உண்மை உறைக்கிற ஒரு தருணம் அமைதியானதொரு மெளனத்தின் எதொரு புள்ளியில் இடித்துரைக்கப்படுமென்கிறது காலம் உணர்த்தப் போகிற உண்மையாகும்.
அரசு உத்தியோகத்திற்கு ஆலாப்பறக்கும் சமூகம் என்னுடையது; அது சம்பளத்தோடு கிம்பலம் எவ்வளவு தேறுமென்கிற விசாரிப்பில் சீதனக் கொடுப்பனவு தீர்மானிக்கப்படுகிறதை மரபு வழி கலாசாரமாகக் கொண்டிருக்கிறது. அப்படி தோட்டக்காரனைத் திரும்பிப் பார்காத சமூகம் 78 களின் முடிவில் தன்னை மாற்றிக் கொள்கிறது. இன்றை வரைக்கும் யாழ் மையம் ஸ்ரீமாவைத் திட்டித் தீர்க்கிறதைக் காணலாம்.
தமிழ் அடியானின் இக்காணொளியை அனுப்பிப்போட்டு நானும் பார்த்திருப்பேனென நினைத்துக் கொள்ள சில போதுமான நிமிடங்கள் கழிய விட்டு தொடர்புக்கு வந்து இது பற்றிய உரையாடலைத் தொடங்கியிருந்தவரிடம் முன்னாடி முகநூலில் ஒரு கட்சி சர்வதேச பிரமுகருக்கும் அக்கட்சியில் இருந்து பிரிந்த கட்சி முக்கியஸ்தர்க்கும் இடையில் நடந்த பின்னோட்டச் சண்டையில் நாலு கடைகள் மற்றும் Bar License எனச் சில விபரங்களைக் கொட்டித் தீர்த்தார்களென ஞாபகப்படுத்தினேன்.
அதற்கு அவர், பெரும் வக்கீல்தனத்தைக் காட்டிவிட்டு தகவல்களை ஆவணமாகத் திரட்டுவது கஸ்டமென்றும் அதைவிட இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சும்மா விடாது உண்டு இரண்டென ஆக்கிப்போடும்; அந்த முறைப்பாட்டாளரை ஏழு மணித்தியாலங்களாக வறுத்தெடுத்ததெனப் பயம் காட்டினார். நானும் அதொரு பெரிய விசயமென நினைக்க வைக்கிற அளவுக்கு அவரது கதையாடலும் இருந்ததென்பது உண்மைதான். நானும் ஆடிப்போன மாதிரித்தான்; எனக்குள் துளிர்விட்ட சிந்தனையும் கருகித்தான் போனதென்றால் பாருங்கள். அப்பத்தான் தமிழ் அடியானின் காணொளியை இரண்டாம் தடவை கேட்கத் தொடங்கினேன். அதற்கிடையில் LONDON TAMIL TV இன் ‘பேசுவோம் பகிர்வோம்’ நிகழ்ச்சியில் வீ.தனபாலசிங்கம் ‘யார் முதலமைச்சர் வேட்பாளர்?’ என்கிற கருப்பொருளில் ‘நீதிபதி இளஞ்செழியன் வேண்டாம்
DR அர்ச்சுனாவை துரத்துங்கள்
சுமந்திரன் சரியான தெரிவு’ என்பதாக விளாசித்தள்ளியிருந்தார். இது எனக்குள் ஒரு உத்வேகத்தைக் கொடுத்ததென்றால் அதை என்னால் மறுக்க முடியாதொன்றுதான் மக்காள்…!
சஞ்சய மகவத்த வேறொன்றும் செய்யவில்லை; மொட்டைக் காடுதாசி எழுதுறதாக நினைத்துக் கொண்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கடிதம்தான் எழுதியிருக்கிறார்.
நான் நினைக்கேலை அவர் ஒன்றும் புலனாய்வு செய்கிறேன் பேர் வழியென ஜேம்ஸ் பாண்ட் கணக்கில் தொப்பியும் அணிந்து ஒரு கையில் சூட்கேசும் மறு கையில் துப்பாக்கியுமாக கிளிநொச்சிக்கு கிளம்பி வந்திருக்க மாட்டார். மாறாக, சிறிதரன் சிவஞானம் பற்றிச் செய்திகளாக வந்திருந்த அச்சு ஊடகங்கள், வெகுசன ஊடகங்கள், இணையதள பத்திரிகைகளை திரும்ப திரும்பப் புரட்டி அலசித் தேடி மேய்ந்திருப்பார். அவற்றில் தேர்ந்தெடுத்தவைகளைத் தொகுத்து ஒழுங்குப்படுத்தி முதல் அறிக்கையைத் தயார் செய்திருப்பார். அதற்குப்பின் ஒவ்வொன்றிற்கான ஆதாரங்களைத் தேடுவதில் கவனம் செலுத்தியிருப்பார். அதுவும் தமிழ் அடியான் குறிப்பிடும் காங்கேசதுறையில் உள்ள சுப்பர் மார்க்கெட், கிளிநொச்சியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஆகியவற்றின் முதலாளி யார் என்பதைச் சரி பார்ப்பதென்பதென்ன பெரிய விசயமா?
இங்க பாருங்க மக்காள்…, தேர்தல் காலம் திருவிழாவாகக் களை கட்டத் தொடங்கினால் அரசியல் மேடைகளைத் தாண்டி வெகுசன ஊடகங்களுக்குள்.., குறிப்பாக முகநூலுக்குள் நிறைய இலஞ்ச ஊழல்கள், முறைகேடாக, அடாத்தாக, சட்டவிரோதமாகத் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் காணிகளைப் பிடித்து ஆளுமைப்படுத்தினது பற்றியும், முறைகேடான பாலியல் அத்துமீறல்கள் பற்றியும், கொலைகள் பற்றியும், கடத்தல், கந்து வட்டி, போதைப்பொருள் வியாபாரம், Bar License எனத் தங்களால் அறியப்பட்ட, பார்த்த செய்திகளாகத் தரவுகளை உள்ளடக்கி விபரங்களைக் கொட்டுகிறார்கள். நாங்களும் எங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து விமர்சனத்தையும் வியாக்கியானத்தையும் பின்னோட்டங்களாக, வேறொரு புதிய பதிவுகளாகச் செய்கிறோம்.இதுதான் எமக்கான அரசியலும் பொழுது போக்குமாக இருக்கிறது. இதைவிட சுண்ணித்தண்ணி கழண்டு கடுப்பு தீர்த்தது கணக்கில் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிந்து பெறுபேறுகள் முடிவுகளாக அறிவிக்கப்பட்ட பின் அடங்கிப் போகிறோம். ஆனால், நாம் சொல்வதெல்லாம் உண்மையென்றும் வெகுசனம் சார்ந்தே முன்னெடுப்பதாகவும் கூறிக் கொண்டு தங்களை அரசியல் செயல்பாட்டாளர், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள், இடதுசாரிய அரசியல்வாதிகளெனப் பீத்திக் கொள்கிறோம். இவையெல்லாம் எங்களது பிழைப்புக்கும், இருப்புக்குமே செய்கிறோமே தவிர வெகுசனத்துக்காக செய்யவில்லை. இதற்கொரு நல்லுதாரணம் சொல்ல வேண்டாமோ?
2013 இல் வடக்கு மாகாண சபை தேர்தலுக்காக ரிட்ரையர்மெண்டில முகட்டு வளையில் ஒடிக் கொண்டிருந்த மின் விசிறிக் காற்றில் காயப்போட்ட கருவாடாக ஈசிச்சேயரில படுத்திருந்த நீதியரசர் விக்கினேஸ்வரனைக் கூட்டி வந்து நிறுத்தி ஜெயிக்கவும் வைச்சோம். தமிழீழம் கிடைச்சது கணக்கிலை நிலை மாறு கால அரசியல் செயல்பாட்டாளர்களும் ஊதித்தள்ளிக் கொண்டாடினோம். ஆனால், வடக்கு மாகாண சபையில் நாலே நாலு அமைச்சர்கள்தான்; அதுவும் நீதியரசரான முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டை அந்த நாலே நாலு அமைச்சர்களிலும் சுமத்தியிருந்தார். இது எதுவும் வெகுசனம் சார்ந்தோ, அரசு சார்ந்தோ நடந்ததில்லை. மாறாக, தன்னைத் தொட்டு நிற்க வேண்டுமெமென்கிற Political Pressure படியாமையே காரணமாக முன் நிற்கிறது. உண்மையில் வெகுசனம் சார்ந்த அரசியல் நினைப்பெதுவும் முன்னாள் நீதியரசர் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு இருக்குமாயின் அதை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எடுத்துச் சென்றிருப்பார். சட்டம் தெரிந்தவர்களாக இருக்கும் இவர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக, கனம் பண்ணுகிறவர்களாக ஆத்ம ரீதியாக இருந்திருந்தால் இன்றைக்கு அந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு சட்டத்தை நாடியே இருப்பார். இதுதான் இவர் வகித்த பதவிகளுக்கான மனசாட்சியின் அறமாக இருந்திருக்கும். அதைவிடுத்து கெளரவத்திற்கும் பிழைப்புக்கும் பதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் இவர்களைப் போன்றவர்களிடத்தில் வெகுசனத்திற்கான பொறுப்புணர்ச்சியையும் கடமையையும் எதிர்பார்க்க முடியாது.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் கட்சிகளின், வேட்பாளர்களின் பரப்புரை முடிகின்ற நாள் அன்று விண்ணன் என்று யாழ் வியாபார இராஜ்ஜியத்தில் அழைக்கப்படுபவர், யாழ் ஊடக மையத்தில் பிரபல கட்சியொன்றின் தலைவரும் பல தடவைகள் அமைச்சராக இருந்தவரும் அந்தத் தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிட்ட அரசியல்வாதியின் பெரும் இலஞ்ச ஊழல் அதிகார துஷ்ப்பிரயோகங்கள் என்பதான .அடிப்படையில் குற்றச்சாட்டை பொதுவெளிக்குப் பாரப்படுத்தியிருந்தார். அந்த அரசியல்வாதியும் விண்ணனுக்கெதிராக 1000 கோடி ரூபா கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாகப் பொதுவெளிக்கு ஊடகங்களுக்குக் கூடாக தெரிவித்தார். அதெல்லாம் காற்றில் பஞ்சாகப் பறந்ததாகக் காணாமல் போக, தானும் விண்ணனும் கூட்டாக வியாபாரம் செய்தோமென அந்த அரசியல்வாதியும் பொதுவெளியில் வெகுசன ஊடகத்தில் பகிரங்கமாக விண்ணனிடம் மன்னிப்புக் கோரினார். அத்தோடு அந்த விடயம் காலாவதியாகி விட்டது.
இதே அரசியல்வாதி வேறொரு நபர் மீது 20 பில்லியன் செக் மோசடி வழக்கொன்றை நீதிமன்றில் தொடுத்திருந்தார். அந்த செக் எதற்காக அந்நபர் இந்த அரசியல்வாதிக்குக் கொடுத்தாரென யாருமே கேட்கவில்லை?
அப்படி இந்த அரசியல்வாதி கடனாக அந்நபருக்கு 20 பில்லியன் கொடுக்கிற பொருளாதார வல்லமையும் மனமும் கொண்டவாரா என்பதே பெரிய கேள்வியாக எனக்கு இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவர், என்னோட இது பற்றிப் பிரதாஸ்பிக்கிறை பொழுது சில தரவுகளைச் சொன்னார். அது உண்மையா என்பது நாம் அலச வேண்டியமென்பதே என்னுடை கருத்தும் பார்வையுமாக இருக்கிறது. ஏனென்றால், 35 வருடங்களாக தன் கட்சி ஆட்களுக்கும் அலுவலகம் நடாத்துகிறதற்கான செலவுக்கும் மாதாந்தக் கொடுப்பனவு கொடுத்து வருகிற ஓர் கட்சித் தலைவராக அந்த அரசியல்வாதி இருக்கிறார். இது வெளிப்படையானது; இதற்கான பொருளாதாரத் தேடல் எதுவாக இருக்கிறது?
இந்த அரசியல்வாதிக்கெதிரான தரப்புகள்கூட பாராளுமன்றத்தில் ‘சொப்பிங் பையோடு வந்தவர்’ எனச் சொல்லி இவரது 90 இன் பொருளாதார நிலைமையை, நிலவரத்தைச் சுட்டிக் காட்டியிருந்தார்கள்.
நாமெல்லாம் 20 பில்லியன் செக் மோசடி நபரை விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோம். அவர் வேறு யாருமில்லையாம்; பெண் மாநகர முதல்வரைக் கொண்ட யாழ் மாநகர சபையால் வின்ஸர் லிடோ சந்தியில் இருந்த குளத்தை நிரப்பி 60 கடைகளைக் கொண்ட கடைத் தொகுதி கட்டி விற்கப்பட்டிருந்தது/ கொடுக்கப்பட்டிருந்தது. அந்த கட்டிடத்தைக் கட்டி முடித்த கட்டிட ஒப்பந்தக்காரர் தானாம் அந்த செக் மோசடி நபர் என்கிற விபரத்தைச் சொல்லியிருந்தார்.
அந்த முன்னாள் பெண் மாநகர முதல்வர், யாழில் பிரபல பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகக் கடமையில் இருந்தவரென்றும் தன்னுடைய மகனின் திருமணத்தை கொழும்பில் மிக ஆடம்பரமாக நடாத்தினாரென்றும் அதற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அதிகார அமைச்சர், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று கலந்து கொண்டாரெனவும் மேலதிகமாகக் கூறினார்.
முன்னாள் பிரதேச சபை தாவிசாளரொருவரோடு பேசக்கூடிய சந்தர்ப்பமொன்று நான் இலங்கைக்கு போன பொழுது கிடைத்திருந்தது. அப்பொழுது அவர் மனமுடைந்து பல உண்மைகளைச் சொன்னார்.
அது 2000 ஆம் ஆண்டளவில் மேற்குலக நாடொன்றில் வாழ்ந்திருந்த தம்பி கொழும்பு திரும்பி கட்சிக்குள் Unoffical ஆக அதிகாரம் செலுத்தத் தொடங்கியிருந்த காலமது. ஒரு நாள் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு; பிரதேச சபையைப் பற்றி விசாரித்துக் கொண்டு என்ன வாகனங்கள் இருக்குது இல்லையென்கிறதைக் கேட்டு தெரிந்து கொண்டார். பின் வாகனங்களுக்கான விலை கோரலுக்கான கடிதங்களை அனுப்புகிறேன். அதில் விலை குறைவானதை ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றபடி பிரதேச சபை செயலாளரிடம் சொல்லி வையுங்கள்; தான் தொடர்பு எடுப்பேன் என்பதாகச் சொல்லி வையுங்கள் என்றும் தன் தலையீட்டைத் தொடங்கியிருந்தாரம்.
இப்படி தொடர்ந்து மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் இணைப்புச் செயலாளராகவும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளராகவும் இருந்திருக்கிறாரெனவும் அந்த முன்னாள் தாவிசாளர் கவலையோடு தெரிவித்திருந்தார். அவருடைய கவலைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன.
நாங்களெல்லாம் எதற்காக இயக்கங்களில் இணைந்தோமென்கிற கேள்வியே அந்த முன்னாள் தாவிசாளருக்கும் இருந்தது. ஏனென்றால், தனக்குக் கிடைத்த பெரும் அரசியல் சந்தர்ப்பமாகவே அந்த தாவிசாளர் பொறுப்பைக் கருதினார். ஆனால், கட்சியென்பது தனக்கான வாய்ப்பைத் தருகிற பொழுது அதை நிர்வாகிக்கிற சுதந்திரத்தையும் சேர்த்துக் கொடுக்குமென நம்பியிருந்தார். அது நடக்கவில்லையென்பதில் மனமுடைவுக்குள் உள்ளாகும் அவர் உளவியல் ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகிறார். இதனாலே அவர் கட்சி அரசியலைவிட்டு ஒதுங்குகிறார். அதே நேரத்தில் கட்சியும் அவரில் இந்த பண்பியலைக் காணுகிற பொழுது தலைமையாலும் ஓரம் கட்டி ஒதுக்கப்படுகிறார். இந்த அவமானச்சூழலை அவர் விபரிக்கிற பொழுது அவர்கள் காட்டிய பேப்பர்களில் கையெழுத்திடுவதைத் தவிர வேறெதுவும் அவர்கள் வழங்கிய தாவிசாளர் பொறுப்பால் செய்ய முடியாதிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். அப்பொழுது குரல் உடைந்து வார்த்தைகள் சிதறத் தொடங்கியிருந்தது.
குறைந்தது 77 களுக்குப்பின் வந்திருந்த இலங்கை அரசியல் சூழலென்பது வெகுசனத்தைப் பங்குதாரர்களாக இல்லாமல் பார்வையாளராகவே வைத்திருந்தது. அதுவும், வடக்கு கிழக்கு தமிழ்த்தேசியவாத அரசியலும் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குகிற புள்ளியில் இருந்து மக்களை மந்தைகளாகவே நினைத்து மேய்க்க ஆரம்பித்ததில் இன்றுவரைக்கும் வெகுசனத்தைப் பார்வையாளராகவே வைத்திருக்கிறார்கள். இது மாற்றப்பட வேண்டுமென்பதே தெற்கில் NPP முன் வைத்திருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் வடக்கு கிழக்கிற்கு வழங்குகிறதெனக் கூற விரும்புகிறேன். முதலில் எங்கட இலஞ்ச ஊழல் பேர்வழிகளை நாங்களே நீதித்துறைக்கு முன் நிறுத்த வேண்டுமென்பதாகும். அதற்காக வெகுசனங்கள் கட்டாயம் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் இவையொன்றும் சாத்தியமாகாத விசயமாகவே தொடரும்.
நானும் ஒரு கட்சியில்…, ஒரு தலைமையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். அக்கட்சித் தலைவர் சிறிதரன் சிவஞானத்திற்கெதிராக 90 கள்ள வாக்கு போட்டதாகக் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதை வெகுசன ஊடகங்களில் பார்த்திருக்கிறோம். அப்பொழுதெல்லாம் 94 இல் யாழ்ப்பாணத்தின் தீவகச் சூழலில் தேர்தல் எப்படி நடந்ததென்று ஞாபகம் வந்துதான் செல்லும். அப்பவும், மனசு தன்ர பாட்டுக்கு எப்படி இந்த மனுசனால் கூச்ச நாச்சமில்லாமல் சொல்ல முடிகிறதெனக் கடல் அலைபோல அல்லோலப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அப்பொழுதுதான் ஒரு உண்மை வெளிச்சமானது. ஏனென்றால், எதுவும் தான் செய்வதில்லையே; யாராவதொருவரை வைத்துச் செய்வதால் அது தான் செய்வதான கணக்கில் வராதெல்லோ?
இப்பவும் பாருங்கோ மக்கள்…, பாலியல் பிரச்சினைகளைப் பேசுகிற பொழுது சம்பந்தப்பட்ட யாராவது வெளியில் வந்து சொல்லியிருக்கீனமா? வழக்கு ஏதாவது முறைப்பாடு செய்திருக்கீனாமா? பொலீஸில நீதிமன்றத்தில வழக்கு இருக்காவெனக் கேட்கிறார்களே தவிர அதற்கு மேலே எதுவுமே நகர்த்ததில்லை. ஏனென்றால், கதிரையையோ, தின்னையையோ காலியாக்குவதைக் குறியின் இலக்காகக் கொண்ட அரசியலை மட்டும் நடாத்துகிறார்கள். இதுவே, எமது அரசியலென்பதால் சஞ்சய மத்துகமவைப்போல நாமெல்லாம் இதெல்லாவற்றையும் வெளியில் கொண்டுவர முயன்றால் பங்காளிச் சண்டையெனச் சொல்லி எங்கள் வாயை அடைக்கத்தான் பார்ப்பார்கள். இதைச் சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாமென நினைக்கிறேன். நானும் இலங்கைக்குப் போன பொழுது தேடியதில் என்னுடைய சிபார்சு கடிதத்தின் அடிப்படையில் கிடைத்த License இல் ஒரு மதுபான விற்பனை நிலையம் இயங்குவதாகத் தகவல் கிடைத்தது. என்னால் ஆசை தீர வயிறு குலுங்கி குலுங்கிச் சிரித்துக் கொள்ள மட்டும் முடிந்தது.
– Nixson / Nov 19, 2025
