புலம்பெயர் தேசத்துக் கவிஞனின் புலராத பொழுது…!

காக்கைச்சிறகினிலே வ.ஐ.ச.ஜெயபாலன், காத்துக் கிடக்கிற மண் எனும் தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

அவர், தலைவர்களைப் பற்றி ஒன்றும் பிதற்றவில்லை. தலைமைகளுக்கு மோட்டு அருவருடிகளை உற்பத்தி செய்கிற களத்தினை உருவாக்கவதற்காக பிதற்றுகிறார்.

மாறாக, மனித நேயமும் மானிட தர்மமுமின்றி நடந்து முடிந்த தவறுகளை மூடி மறைத்து நியாயப்படுத்தும் மேலாதிக்க வர்க்க பண்பியல் கவிதையில் தமிழ்த்தேசியம் மானம் காக்க தீக்குளிக்க வைக்கிறார்.

அதை என்ன லாவகமாக மண்ணின் மீதான நேசத்தோடு கவிஞர் இணைக்கிறார்.

கெந்தகக் குண்டுகளுக்குக் காவு கொடுத்து செத்து மடிந்தது போக மிகுதியையும் அந்த மண்ணில் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரும் உசலாட ஊருக்குள்ளே கிடந்து விட மாட்டோமாவெனக் கலங்கிக் கண்ணீர்த்துளிகளும் வியர்வைகளும் காய்ந்து உப்பாய் திட்டு திட்டாய் வெள்ளைப்பொடுகா மாறிவிடும் அந்த சனங்களுக்குத் தீர்வு சொல்லுதோவென்றால் புலம்பெயர்ந்து வந்து விடுவென்கிறான் கவிஞன்.

அவனும் அவளும் ஊரைக் காலி பண்ணி புலம்பெபர்ந்து விட்டால் யாரிங்கு அவர்களுக்காக காத்திருப்பார்கள்?

போர்க்களத்தில் முன்னரங்க மனிதர்களாகவும், எதிரியின் மடி தேடித் தாக்கும் தற்கொலைக் குண்டுதாரிகளாகவும், தேவையற்று வருகிற பொழுது நடு ரோட்டில் கை விட்டுச் செல்லும் நாதியற்ற மனிதர்களாகவும், வீடு, கோயில், சம்பிரதாயச் சடங்குகளிலும்  படுக்கையறைக்குள்ளும் புறக்கணிக்கப்படுகிற பெண்களாகவும், போர்க்களத்தில் வீரவேங்கையாக்கப்படுகிற பெண் மனிதர்களாகவும், தற்கொலைக்குண்டில் மகனோ, மகளோ சிதறித் துண்டுகளாகும் காட்சி நாளும் நடந்துவிட முன் கொடுக்கும் துயரத்தின் வலியைத் தாங்கும் மனிதர்களாகவும் நாதியற்று போருக்குப் பின்னான அம்மண்ணில் நிற்போரைத் தாண்டி புலம்பெயர்ந்த மனிதர்களின் மீள் வருகையை மரபணுவில் தாய்ப்பறவை எழுதி வைத்த வழி தேடி வருகுதே எனத் துப்பாக்கியும் கெந்தகக்கூடுகள் நிறைந்த முதுகில் பாரமாய் அழுத்தும் பொதியோடு நடக்காத கவிஞனின் கவிதை மனம் எங்கேயோ தங்கிவிட்டதைக் கூறுகிறது.

யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையின் சூடேத்தும் அரசியல் போக்கையே அக்கவிதை தன்னுள்ளும் அகவயமாக உயிராக் கொண்டிருக்கிறது.

வடகிழக்காய் மெத்தை விரித்து காத்துக் கிடக்கிறது தாய்மண்.

புறம்போக்கு புலம்பெயர் தேசத்துக் கவிஞனின் புலராத பொழுதின் புலம்பல் வரிகள்.

இச்சூழலின்தான் தேசிய மாநாட்டு அரசியலையும் தொட்டுத் தொடங்கி வைக்கிறது.

தேசிய மாநாடு; யார் சொல்லி என்னாவதென்கிற கவலை சமானியனுக்குக் கொஞ்சமாவது இருக்குதா?

கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றப் பொதுத்தேர்தலுக்குப்பின் நம்மடை தலைவர்கள், திருவிழாவுக்குப்போன குழந்தைகள் விசிலுக்கும் கச்சானுக்கும் அடம் பிடிக்கிற மாதிரித்தான் மாகாண சபைத் தேர்தலும் தம் கட்சி தேசிய மாநாடு நடாத்துறதுமென அடம் பிடிக்கிறார்கள்.

இப்படியாவது மக்களின் மனங்களில் ஒரு குழப்பத்தை உண்டாக்கிடலாமோ என்று பார்க்கிறவைகள், இருக்கப்பட்ட தொண்டராற்றுப் படைகளும் தேசிய மக்கள் சக்தி (NPP) யின் பிரஜா சக்தி நியமனங்களில் All most கரைந்தே போய்விட்டிருக்கிறதுக்கு மாற்று வழி தேடுவதே தேசிய மாநாடு ஆகும்.

இடதுசாரிகளெனவொரு முகமூடியை அணிந்து கொண்ட யாழ் மையவாத மேலாதிக்க வலதுசாரிகள் எதுவுமே நியதிக்கும் சட்ட திட்டங்களுக்கும் அமைவாக உண்மையை அறக்கோட்பாட்டு மீதானதாகப் பேசியதில்லை.

தங்களது கட்டுப்பாடற்ற உரையாடல் மூலம் பொய், ஊகம், வன்முறை அரசியலைத் திட்டமிட்டு சூழ்ச்சியுடன் பரவலாக்குவதற்காகவே தேசிய மாநாடுகளைப் பேசுகிறார்கள்.

தேசியவாத கருத்து ஏதுமற்ற இளைய தலைமுறைக்குள் அவர்களது மண்டையைக் கழுவுறதிற்காக திட்டமிட்டு உற்பத்தி செய்யப்பட்ட தேசியவாத பொய்களைக் கட்டமைக்கின்றனர்; பரப்புரை செய்கின்றனர்.

அத்தேசியவாதப் பொய்களைத் திரும்பத் திரும்ப கூறுகிற பொழுது அப்பொய்களில் மேலெழுகிற இனவாத குரோத, விரோத அரசியலுக்குள் இளைய தலைமுறை மக்கள் திசை திருப்பப்பட்டு ஊகத்திற்குள் இழுத்துச் செல்லப்படுகின்றனர்
.
ஊகம் என்பது நிருபிக்கப்படாதது என்ற பொழுதிலும் அக்கருத்தியல் திரும்பத் திரும்ப பரபரப்பாக்கப்படுகிற பொழுது மீண்டும் இளைய தலைமுறை மக்களிடத்தில் வன்முறை எண்ணமும் வெளிப்படக்கூடும்.

புலம்பெயரும் மனநிலைக்குள் அகதி கோரிக்கைக்கு ஏது ஏதுவாக அமையுமென அலைகிற இளைய தலைமுறை மக்களுக்கு முன் பின் யோசனை ஏதுமின்றி இந்த அரசியலோடு தம்மை இணைத்துக் கொள்ளத் தயாராவார்கள்.

இதுவே தேசிய மாநாட்டுக்கான களத்தில் மனித முகங்களை மண்டபம் நிறை கொள்ளச் செய்கிறது. ஆனால், அப்படி அந்த முகங்கள் காணப்படவில்லை. மாறாக, அச்சிந்தனை, அக்கருத்தியல், அவ்வெண்ணம் மட்டுமே தேசிய மாநாட்டுக்கான அரசியல் தார்ப்பாரியத்திற்குள் ஒன்றறக் கலந்திருக்கிறது. அதுவே, மண்ணையும் அதற்கான அரசியலையும் வெற்று டப்பாக்களாக்கி விட்டிருக்கிறது.

இங்கு எல்லாமே ஊகத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. 

– Nixson / Mar 11,2026

Leave a Reply