ஊமைக்குரல் – 3

வயலில் புழுதி நெல் விதைப்புத் தொடங்கி விட்டதாக அவன் சொல்லியிருந்தான். அவனுக்கு WhatsApp இல் உரையாட நேரமில்லாமல் இருந்தது. அன்டைக்கு அவனும் புழுதி விதைப்பு முடிந்து மருந்து தெளிக்க வயலுக்குப் போயும் வேலையும் தொடங்கிவிட்டிருந்தான். ஆனால், பொழுது மதியத்தைக் கடந்து விட்டிருந்த பொழுது மழை வந்து மருந்து தெளிக்கிற வேலையைக் கெடுத்து விட்டது. ஏளியாக வீட்டுக்குத் திரும்பியிருந்தவன் Whats App இல் தொடர்பை எடுத்திருந்தான்.

சதாவோடு கதைத்து போட்டு அப்பத்தான் போனை வைச்சிருந்தேன். அப்பத்தான் அவனின் அழைப்பு, அவன்ரை பெயரை ஸ்கீரினில் அடையாளப்படுத்திக் கொண்டு வந்தது.

“ஹாலோ மச்சான் என்ன செய்யிறாய்”  என விசாரிப்போடு பேச்சைத் தொடங்கியிருந்தேன்.

” இல்லை மச்சான்.., வயலுக்குப் போயிருந்தேன்; மழை வந்து வேலையைக் கெடுத்துப் போட்டுது; வீட்டுக்காரர்களும் கோயிலுக்குப் போக வேண்டுமென்றார்கள்; கூட்டிட்டுப் போயிட்டு வந்து மாடுகளிலை பாலைக் கறந்து வீட்டுக்கும் கொடுத்திட்டு கொம்பனிக்குக் கொண்டு போற பாலை எடுத்து ரெடி பண்ணி வச்சிட்டு நிமிர்ற பொழுது வாயும் கசக்கிற மாதிரி இருந்தது; ஒரு கோப்பை தேத்தண்ணிக்காக உட்கார்ந்த பொழுதுதான் உனக்கொருக்க தொடர்பு எடுத்திடலாமென்று எடுத்தேன்டா; என்ன பிஸியாக இருக்கிறாயோ..?”

“இல்ல…, இப்பத்தான் இரவு எழு மணியாகுது. மனிசி கிச்சினிலை சமைக்கிறா. நான் ஒவ்வொருத்தராக போன் போட்டு கதைச்சுக் கொண்டிருக்கிறேன்டா மச்சான்.., இப்பத்தான் சதாவோட கதைச்சு போட்டு வைக்கிறேன் நீ எடுக்கிறாய்”

நானும் தேத்தண்ணியை ஊத்துவோமென்று நினைத்துக் கொண்டு கிச்சினுக்குப் போக நினைத்த முடிவை மாற்றிக் கொண்டு திரும்பவும் ஷோபாவில் உட்கார்ந்து கொண்டேன்.

“சதா என்ன சொன்னான்?”

“அது கிடக்கட்டும் மச்சான்…, சதாவை மாஸ்டர் என்று சொல்லுறதா?

எனக்கு ஞாபகமிருக்குது சில தோழர்கள் கையிட்ஸில் சதாவை அப்படிக் கூப்பிட்டதாக.., உனக்கெதுவும் ஞாபகமிருக்கா மச்சான்..?”

“ஒமடா அப்படித்தான்.., ஏன் நீ உதை இப்ப கேட்கிறாய்?”

“இல்ல.., குலமாம் சதாவோட கதைச்சராம்.., ஏன் மாஸ்டர் பிரச்சினை படுறீங்க என்று கேட்டதாகக் கதையொண்டு கிளம்பியிருக்குது மச்சான்.. இந்தக் குலம் கையிட்ஸ்க்கு வந்திருக்கிறராம் அது சின்ன பிரியட்டென்று சொல்றவங்களும் உண்டு மச்சான்”

ஏதோ யோசனைக்குள் இருந்த மாதிரி அவன் இடைமறித்து…,

“பெரிய குலமா..?”

“இல்ல மச்சான், திருகோணமலைக் குலமாம்; இப்ப வத்தளையிலோ எங்கோ இருக்கினாம்; அவன்ரை பொடியன் லண்டனில் இருக்கிறராம்; வெளியில இருக்கிற பழைய ஆட்களோடு கதைக்கிற பொழுது தான் சதா மாஸ்டரோடு கதைச்சதாகச் சொல்லியிருக்கிறார். அது அப்படி உப்படி சுத்தி என்னட்டையும் வந்து சேர்ந்திருக்குது மச்சான்”

“இப்ப உனக்குச் சந்தோஷம்தானே மச்சான்.., ஒரு மாதிரி சதாவின்ர விசயத்தை டக்ளஸ் தன்ரை அரசியல் எதிரிகளின் வேலையிதுவென அரசியல் மூலாம் பூச வெளிக்கிட்டதை நீ இப்ப அதில்லை; இது கட்சி பிரச்சினை; அது உள் வீட்டுப் பிரச்சினை; ஏமாத்தப்பட்ட பொடியனின் எதிர்ப்புரட்சியென நீயும் அரசியல் சாயம் அடிச்சுப் போட்டாய்தானே; உனக்கிது தேவையா; போற போக்கைப் பார்த்தா அந்தாளை கடசி காலத்தில நிம்மதியாய் இருக்க விட மாட்டாய் போல இருக்குது?”

“இல்ல மச்சான்…, உனக்குப் புதிசா சொல்றதுக்கொன்னுமில்லை; ஆனால், மற்றவங்களைப் பயன்படுத்தினாரென்றது பெரிய விசயமே இல்லை.., அத விடக்கொடுமை என்னவென்றால் எங்களுக்கொன்றுமே தெரியாதென்று சொல்றதுதான். இது டக்ளஸ்க்கு எங்கிருந்து வருகிறது.., நீயே சொல்லு…?

அதற்கு உன்னிடம் பதில் இல்லை மச்சான். ஏனென்றால், உனக்கு முதல் எதிரியாக தமிழரசுக்கட்சி, அகில இலங்கை காங்கிரஸ் போன்ற வெள்ளாளர்களின் மேட்டுக்குடி கல்வி புலமையாளர்கள் தொடங்கிய கட்சிகளையும் அவர்களே தொடர்ந்து தலைமையாக இருப்பதையும் அவர்களது வாரிசுகளே தொடர்ந்து தலைமையாக வருவதையும் அக்கட்சிகள் அவர்களது சொந்த சொத்து கட்சியாகவும் சொல்லும் அரசியலை முன்னே ஆட்டுக்கு கிளுவத்துளிர்களை கட்டி விட்டுற மாதிரிக் கட்டித் தொங்க விட்டிருக்கிறார்கள். இதில் இந்த மேட்டுக்குடி சிந்தனையில் உருவாக்கிக் கொண்ட நிலப் பிரபுத்துவ எச்சங்களின் சமூக ஏற்றத்தாழ்வுகளை வைத்தும் உன் வாயைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

அடுத்தது உன்னை இயங்க விடாமல் உன்னை சாதியைச் சொல்லி நீ திரட்சி கொண்ட அமைப்பைக் கேவலப்படுத்திச் சிறுமைப்படுத்தி உன் அரசியலைப் பேச விடாமல் துரத்தி துரத்தி கொன்ற புலி அரசியலை அடுத்த எதிரியாக முன்னிறுத்திவிட கண்ணுக்கு மறைப்பு கட்டிய குதிரையாட்டம் நீ ஒடிக் கொண்டு இருக்கிறாய்.

EPDP யை விட்டு தூர துரத்தப்பட்டதைப் புரிந்து கொள்ளவே ஒரு தசாப்த காலம் எடுத்தது. அப்பத்தான் டக்ளஸின் அரசியலைத் திறனாய்வு செய்ய வேண்டுமென்பதே மண்டைக்கு உறைச்சது. இதில் டக்ளஸ் யாரின் பிரதிநிதி என்கிற கேள்வி வருகிறது. அதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்துக் கிடையாது மச்சான். அவர் தன்னை வெள்ளாளர்களின் பிரதிநிதியாகவே அடையாளப்படுத்துவதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு மறைப்பு செய்ய தேர்தல் வாக்கரசியலைச் சொல்லத் தொடங்குகிறார்.

யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையையே தன் அரசியல் சித்தாந்தமாகக் கொண்ட டக்ளஸ் ஏறி ஏறி மிதிக்க குனிஞ்சுட்டுப் போறதென்பது என்னடா அரசியல்…?

அப்படி என்னாலே இருக்க முடியாது. நியாயமாக நேர்மையாக விசுவாசமாகத்தானே கட்சிக்கு இருந்தேன்; டக்ளஸ் சொன்னதைச் செய்யேலே என்பதும் தன்னைச் சார்ந்திருக்காமல் தனிச்சையாக கட்சிக்குள் நிலை கொள்வதை நிறுத்தவும் எவ்வளவு நரி வேலை செய்ததென்று தெரியுமாடா மச்சான்?”

இப்படிக் கதைக்கிற பொழுது எனக்குச் சூடு கிளம்பி விடும். அதொரு மனப்பிறழ்வு நிலைதான். எனக்குப் புரிகிறதோ இல்லை அவனுக்குப் புரிந்திருக்கிறது. அதனால், அவன் மெளனத்தை உருவாக்கத் தொடங்கினான்.

எதிர்ப்பக்கத்தில் இருந்து எந்தவொரு இச் கொட்டலும் இல்லாமல் அமைதி நிசப்தமாகி மெளனமாக உருவெடுக்கிற பொழுது என்னால் தன்னிலையை உணரக்கூடிய திரும்புதலைச் செய்யச் சந்தர்ப்பம் வாய்ப்பாகக் கிடைக்கிறது.

பேசவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிற பொழுது தலை சாய்த்து கொள்ள எந்த வாய்ப்பென்பதும் அங்கு கிடைத்து விடுவதில்லை.

இது பொதுவாக எம் சமூகத்திலும் இருந்து விடுகிறது. அதற்காக சமூகம் முழுக்கப் பழகிப் பார்த்து அனுபவத்தைத் திரட்டிச் சொல்றேனென்றில்லை. அப்படியில்லாமல் என் குடும்பம், என் இருந்த கட்சி…, இன்றைக்கு நான் புலம்பெயர்ந்து வாழ்கிற புலம்பெயர் நாட்டிலும் நானும் எதிர் கொண்ட நம் சமூக மனிதர்களின் நடைமுறையையும் போக்கையையும் வைத்துதான் நான் சொல்றேன். இது முழுமையில்லையென்பது தெரிந்தாலும் என் மனச்சுமையும் துயரங்களின் வலியும் வேதனையும் அப்படிச் சொல்ல வைக்கிறது.

அந்த வெகுசன நிறுவனத்தில் வேலை செய்தவர்களிடத்தில் கீழ் மட்டத்தில் இருந்தவர்களிடத்தில் எதொரு புள்ளியில் அது சித்தாந்த ரீதியாகவோ, இலக்கின் மீதான பொதுத்தன்மையிலோ, வாழ் களச்சூழலின் நெருக்கடி சூழ்நிலையோ என்பதைத் தாண்டி மானிட விழுமீயத்தில் மனித நேயமாக இருந்து விடுகிறதை நான் பார்த்திருக்கிறேன். அதைச் சில உறவுமுறை வாழ்வியலில் நான் பெற்ற அனுபவமாக அமைகிறது. இதில் உயிர் வாழுதலும் கலந்திருக்கிறதென்பது ஆச்சரியமாகத்தான் எனக்கும் இருக்கிறது.

இலக்கைத் தொலைத்து இலக்கின்றி அலைகிற வாழ்க்கையை நானே தேர்ந்தெடுத்ததாக என் அப்பனில் இருந்து சமூகம் தொடங்கி இந்த உலகமே சொல்கிறது. ஏனென்றால், இவர்கள் யாருமே கைகளில் ஆயுதத்தையும் முதுகில் சுமந்த பைக்குள் இத்தூண்டு சின்ன உணவுப் பொதியோடு ரவைக்கூடுகளையும் குண்டுகளையும் என்னோட சுமந்தவர்களல்ல.

ஆனால், இந்த வெகுசன அமைப்பெனச் சொல்லப்படுகிற நிறுவனத்தின் மேல் மட்டத்தில் இருக்கக்கூடியவர்களிடத்தில் அப்படியிருக்கவில்லை. தன்னுடைய இலக்காகவோ, ஆசாபாசங்களாகவோ, சமூகத்தை ஆளும் அதிகார வர்க்கமாகவோ, தன்னை துதிக்கிற கூட்டத்தின் தலைவனாகவோ இன்னா பிற தனி நபரின் விசயமாக இருந்து விடுகிறது. அதைத்தாண்டி தங்களோடு கீழ் அங்கம் வகிக்கிற மற்றவர்களின் அதிகாரத்திலும் நலனில் அக்கறை கொள்வதாக தலைமை இருக்கிறதென்றால் தன் நலனில் சார்ந்ததாகவே இருக்கிறது. அது கறிக்குள் கறிவேப்பிலைக்கான நிலையைத்தான் இங்கு காட்சிப்படுத்த முடிகிறது.

தங்க மூலாம் பூசப்பட்ட கைத்தடியாக இவர்களின் கைகளில் தனி நாட்டு விடுதலைக்கான புரட்சி, போராட்டம் என்பன இருந்திருக்கின்றன. ஆதலால்தான் இவர்கள் தலைவர்களாகவும் அதிகாரமிக்கவர்களாகவும் மாறியிருக்கிறார்கள். இல்லையென்றால் முடிந்திருக்குமா?

இந்த மனநிலையைக் கொண்டிருந்த தலைமைகளை இயக்கங்களில் இருந்தோ, கட்சிகளிடமிருந்தோ நியாயமான தனி மனித மற்றும் அமைப்பு நடைமுறை சார்ந்த காரணங்களை முன்வைத்து வெளியேறுதல் சாத்தியமே இல்லாத சூழலே இருந்தது. ஏனென்றால், இத்தலைமைகள் பொறுப்பையையும் பொருளாதாரத்தையும் விதிகளையும் கொண்டு தம்மைச் சுற்றி சாதகமான நபர்களை அணி சேர்த்துக் கொண்டார்கள். இவர்களை ஊதுகுழலாகவும் பேச்சு பீரங்கிகளாகவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்கள்.

அதுவும் ஈழ அரசியலின் அமைப்புகளுக்கிடையேயான அக முரண்பாடு உச்சம் பெற்றிருந்த காலங்களில் இந்தத் தலைமைகள் தம்  இருப்பை நிச்சயப்படுத்தி நிலை நிறுத்திக் கொள்ள இவர்களால் பொது எதிரியெனச் சுட்டி அடையாளப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா அரசோடு கூட்டுச் சேர்ந்து தம் அகவயமான போட்டியைக் கட்டுப்படுத்தத் தொடங்குகிற பொழுதுதான் துணைப்படை என்கிற ஸ்ரீலங்கா இராணுவத்தோடு இணைந்து ஈழ விடுதலை இயக்கமொன்று செயல்ப்படுவதென்பது 87 கால கட்டத்தில் IPKF இற்கும் அதனோடு இணைந்து செயலாற்றிய ஈழ இயக்கங்களுக்கு எதிராக புலிகள், ஸ்ரீலங்கா அரசோடும் இராணுவத்தோடும் இணைந்து செயலாற்றத் தொடங்குகிறார்கள்.

இதொரு மாறுப்பட்ட களச் சூழலாக இருந்தாலும் மிக முக்கியமான அடிப்படை மைய கருப்பொருள் என்பது ஒன்றாகவே இருக்கிறது. இது எல்லாருக்குமானதாக இருக்கிறது.

86 இல் மற்றைய அமைப்புகளைத் தாக்கியழித்து தடை செய்கிற புலிகள், ஈழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்கிற ஒரேயொரு இயக்கமாகப் புலிகள் தங்களை  நிறுவ முயன்றிருந்தார்கள். ஆனால், அது நடந்ததாவென்றால் இல்லை.

இதனடிப்படையில் இரு வேறு துருவங்களாக நகரத் தொடங்குகிற ஈழ விடுதலை அரசியலென்பது ஏற்கெனவே அடிப்படையில் அதிகாரப் போட்டிக்கான ஒரு போராட்டமாக மாறிவிட்ட இப்போராட்டம் வரையறுக்கப்பட்ட திசை வழியைவிட்டு விலகிச் செல்கிறது. இது நிறுவன மயப்படுத்தப்பட்ட அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கிறது. அதுதான் என்னுடைய புலம்பலுக்கும் பிரதானமாக அமைகிறது. அது இலங்கை இந்திய ஒப்பந்தம் மற்றும் IPKF காலமாக நகரத் தொடங்குகிறது.

இந்த பிளவுபட்ட இரு துருவ ஈழ அரசியலென்பதில் வலிந்து இரு தரப்பிலும் இருந்து வெளியே தள்ளுகிற தனி நபர்களுக்குள் இருந்து புதிய பார்வையொன்றை காலம் தன் வரலாற்று நகர்வுக்காக ஆங்காங்கே மழைக்குமிழ்களாக தோன்றச் செய்கிறது. அதில் சதாவின் குரலும் ஒன்றாக இருந்து விடுகிறதாக நான் நினைக்கிறேன்.

பெரும் நிசப்தமான மெளனம் நீடித்துக் கொண்டிருப்பதில் அலுப்படிக்கத் தொடங்கியிருந்த உரையாடலின் மயான அமைதியைக் குலைக்க அவன் எத்தனித்தான்.

“என்னடா மச்சான்…, சூடேறிட்டாய் போலிருகிறது. டேய் மன்னிச்சுக் கொள்ளடா; டக்ளஸைப் பற்றிப் பேச்செடுத்தாலே கடுப்பாவாயென்று தெரியுமடா. கதை போற போக்கிலை அந்தச் சனியனைத் தொடாமல் இருக்க முடியேவையடா”

“பரவாயில்லை மச்சான்…, இதெல்லாம் எங்களுக்குள்ள நடக்காத விசயமடா. எனக்கென்னவோ அந்தாளின்ட பெயரைக் கேட்டாலே சூத்தில மிளகாயை தேய்ச்ச மாதிரி எரிச்சலா வருகுது…”

“டேய்…, டேய் விண்ணனும் உப்பிடித்தான் சொன்னான். அப்படி என்னடா சூத்தில இரகசியமிருக்காடா மைச்சான்.”

“உதுலெல்லாம் பேச நிறையக் கிடக்கு மச்சான்…, எப்படி உதைச் சொல்றதென்று எனக்குத் தெரியலையாடா. ஆனால், நான் பேசித்தான் ஆவேன்; இப்பல்ல.

“சரி விடுறா மச்சான்.., வேறென்ன சதா சொன்னான்?”

“அவன் இன்டைக்குத்தான் EPDP நிறுவனத்தில இருந்த காலத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொள்ளவே இந்தச் சம்பளப் பிரச்சினையைக் கையிலெடுத்திருக்கிறான் என்கிற சூட்சுமத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது.”

நான் முடிக்கவும் அவன் அவசர அவசரமாகக் குறுக்கிட்டு…, “அது என்னடா மச்சான்” என்று தன்னுடைய ஆர்வத்தினை வெளிப்படுத்தினான்.

“இல்லையடா…, அவன் வேலை வெட்டி இல்லாமல் இருந்த நேரத்திலை கொன்ராக் அடிப்படையில் கொழும்பு மத்திய வங்கி உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

அவனுக்குச் சிங்களம் தெரியும். அதோடு பொலீஸ் கிளியரன்ஸ்சும் கஸ்டமில்லாமல் எடுத்திருந்தான்.

அதற்கு அவன் EPDP நிறுவனத்திற்காக யாழ்ப்பாணம் ஸ்ரீதர் தியேட்டரில் இருந்நு வேலை செய்த பொழுது ‘அங்கு வேலை செய்கிறேன்’ என்கிற அந்நிறுவனத்தின் லெட்டர் கெட்டிலேயே யாழ் பொலீஸ் மா அதிபரிடமே கையெழுத்தே வாங்கியிருந்தான். அது அவனுக்குப் பெரும் உதவியாக இத்தருணத்தில் இருந்திருக்கிறது.

அங்கு வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் வேலை செய்திருக்கிறான். அந்த நேரத்தில் கொன்ராக் வேறு கொம்பனிக்கு கை மாறிட்டது. இதனால் அவன் வேலையை இழந்திருக்கிறான்.

அப்பத்தான் பழைய கொம்பனியில் வேலை செய்த பொழுது வெட்டப்பட்ட EPF காசை அவனுடைய பேங்க் எக்கவுண்ட்டுக்கு போட்டிருந்தாங்களாம். அது எவ்வளவோ தெரியுமோ உனக்கு மச்சான்?”

“எனக்கென்னடா தெரியும் மச்சான்?”

“இரண்டு வருசத்துக்குமாக 65 ஆயிரமாம். அவனே என்னிடம் கேட்டான்; 90 இலிருந்து EPDP இயிலை வேலை செய்திருக்கிறோம். எவ்வளவு வரும் நிக்சன் தோழர்? என்கிறான். நானே ஆடிப்போயிட்டேடென்டா. அவன் சொன்ன காசுத் தொகையைக் கேட்டல்ல. அது…, எவ்வளவு விபரமாக இருக்கிறான் என்பதை நினைச்சுதான் மச்சான்”

“மச்சான் சொன்னா கோவிச்சுக்கக் கூடாது. எப்படியென்டாலும் அந்த வெள்ளாள இரத்தம்தானே உன்னிலும் ஒடுது. அதுதான் டக்கியை மாதிரி நீயும் சதாவையும் பார்க்கிறாய் என நினைக்கிறேன்?”

நான் பொதுவாக டக்ளஸ் என்பேன்; அவனோ டக்கி என்றுதான் சொல்லிக் கொள்வான். அதுவும் என்னோட கதைச்சு கதைச்சுத்தான் இந்த மாற்றமும் வந்தது என்பான்.

“இதிலென்ன இருக்குது. என்னை நானே சுய பரிசோதனை செய்த பொழுதே இதைத் தெரிந்து கொண்டேன்டா. அதில் எவ்வளவு தூரம் அச்சமூகச் சிந்தனையை என்னால் மாற்ற முடிந்ததென்பது பெரிய கேள்விதான். அதைவிட என்னை உள் வாங்கிய இயக்கங்களோ, கட்சியோ இந்தச் சமூக உண்மையைப் புரிந்து கொண்டு அரசியலைச் செய்தார்களா என்பதும் கேள்விதான் மச்சான்.

EPDP யைப் பொறுத்தமட்டில் பெண்கள் என்பது எப்படியென்பது உனக்குத் தெரியாத விசயமல்ல. அது தனியாகப் பேசுவோம் மச்சான்”

“அது சுவாராசியமான கதைதான் மச்சான்”

“நீ இன்னொரு விசயத்தையும் தெரிஞ்சுக்கனம் மச்சான்.., ஒவ்வொருத்தருக்கும் அவர்களுடைய childhood மிக முக்கியமானது.

அதில் அம்மாவின் கருவறைக்கான சிந்தனையை அம்மாவின் மனநிலைதான் தீர்மானிக்கிறதென்றாலும் அம்மாவின் மன நிலையைக்கூட அம்மாவின் Childhood ம் சமூகமும் தீர்மானிக்கிறது.

அத்தோடு அப்பாவோடு மனநிலையென்பதும்தான் விந்துக்கான அடிப்படை மூலம் கருவறைச் சிந்தனையைத் தீர்மானிக்கிறதில் பங்காளியாக இருக்கிறதெனச் சொன்னாலும் இந்தச் சூழலையும் அப்பாவின் childhoodம் அவரது சமூகமும் சேர்ந்து தீர்மானிக்கிறது. ஆகவே, என்னில் மாற்றம் எதாவது நிகழ்வதாக இருந்தால் இவைகளைத் தாண்டி நான் இணைகிற சமுதாயமும் பள்ளிக்கூடமும் செய்திருக்க வேண்டும். அது அரசியலைத் தவிர்த்து எவ்வளவுக்கு சாத்தியமென்றால் அது கேள்விதான் மச்சான். ஆனால், கட்சி அரசியலுக்குள் இம்மாற்றம் நடந்திருக்க வேண்டும்? அதுதான் இல்லையே மச்சான். அங்கு ஏதுமே இல்லையென்றால் என்னில் மாற்றம் சாத்தியப்படுமா மச்சான்…?”

“என்னன்னோவெல்லாம் நீ சொல்ற மச்சான்.., உதெல்லாம் சரியா பிழையா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஏதோ நீ சொல்றாய் நான் கேட்கிறேன் என்பது உனக்குள் எழுகிற சமூகம் அரசியல் பொருளாதாரமென்கிற தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ  அதிகாரம் பற்றிய வேறு வேறு களத்தில், நிலைகளில் தன்னை வெளிப்படுத்தும் முகங்களையும் அதற்காக அணிகிற முகமூடிகளையும் பற்றிய உன் சிந்தனை உரையாடலை மெருகேற்ற உதவுமென்கிற நிலைப்பாட்டைத்தவிர இதில் எனக்கு வேறொன்றும் கிடையாது.

இக்கருத்தில் எனக்கு வலு சேர்த்ததென்றால் 2020 இற்குப் பிறகு நீ தொடங்கியிருந்த டக்கிக்கு எதிரான விமர்சன உரையாடலென்பது இந்தத் தேர்தலில் டக்கிக்கு பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்ததென்பதை நான் நம்புகிறேன் மச்சான். அது நிஜமாகி கண் முன் நிற்பதில் உன் சிந்தனையை நான் மறுத்து நிற்க முடியாமல் இருக்கிறது.

இன்னொன்று டக்கிக்கு எதிரான உரையாடல் டக்கியின்ரை வாக்கு வங்கியைச் சரிக்கும். அது தமிழரசுக்கட்சிக்குத்தான் வாய்ப்பாக அமையுமெண்டு எல்லோரும் சொன்ன பொழுது நீ.., “டக்ளஸின் வாக்கு வங்கியைச் சரிக்கிறதுதான் என்னுடைய வேலை. அந்த வாக்குகள் எங்கே போகிறதென்பது அன்டைக்கு இருக்கிற தேர்தல் களம்தான் தீர்மானிக்கும்” என்றாய். அதுவும் சரியாப் போச்சுதானே மச்சான்?”

“நாங்கள் தனியாக நின்றிருக்கிற சூழல் தேர்தல் களம் வரைக்கும் வந்திருக்குமாயின் இது சாத்தியப்பட்டிருக்குமாவென்றால் சாத்தியப்பட்டிருக்குமென்று நான் சொன்னால் அது ஆனந்தன் போன்றவர்கள்  சொன்ன மாதிரி தமிழரசுக்கட்சிக்கோ, DTNA க்கோ வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால்,  அதற்கு தெற்கு அரசியலில் மாற்றமும் தேவையென்பதை உணர்ந்திருந்தோம். அது நான் மட்டுமல்ல சீலன் போன்றவர்களும் இதற்குள் வருகிறார்கள் மச்சான்.

அப்படி இல்லையென்று சொல்வதற்கு முன் தெற்கு அரசியலென்பது மிக முக்கியமாக இருந்தது. அது அரகலிய போராட்டத்தில் தொடங்குகிறது.

அரகலியச் சூழல் சிறுபான்மையாக இருந்தாலும் அதோடு பயணிக்கிறதுதான் நியாயமாக இருக்குமென்பது சிம்பிள் சிந்தனை மச்சான்.

வடக்கு அரசியலில் மாற்றமொன்றை அரகலிய வெகுசனப் போராட்டமே தீர்மானிக்குமென்பது என்னுடைய வாதமாக இருந்தது. ஏனென்றால், அரகலியப் போராட்டத்தின் தொடக்க காலத்திலேயே இந்த வெகுசனத் திரட்சியை வன்முறைக்குள் தள்ளுவதைவிட தேர்தல் களத்தை நோக்கித்தான் கூட்டிச் செல்ல வேண்டுமென்றும் சொல்லியிருந்தேன்.

அதைவிட, ஜனாதிபதி கோத்தாவும் தேர்தல் வழியாக வெகுமக்களைச் சந்திப்பது நல்லதென்றும் அதொரு ஜனநாயகச் சூழலையும் கோத்தாவை வெகுமக்கள் நிராகரித்தாலும் எதிர்காலத்தில் அரசியலுக்கான அவருக்கான வாய்ப்பு உண்டென்பதையும் சேர்த்துதான் சொல்லியிருந்தேன்.

அரகலியப் போராட்டக்காரர்களிடத்தில் ஜனாதிபதி மாளிகையும் ரூபவாஹினியும் கைக்குள் வந்த பொழுதும் ஆளுமையைக் கோராத பட்சத்தில் இச்சூழல் தேர்தல் களம் நோக்கி நகர்வதை கவனிக்கலாம் மச்சான்…, Npp க்கு  இருந்த 3% வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலுக்கு போதுமானதாக இருக்கவில்லை. இதற்காக மக்களை நேரிடையாகச் சந்திப்பதுதான் சரியான ஜனநாயக வழியென NPP நினைக்கிறதென்றும் அதனாலே கோத்தாவின் அழைப்பை அநுரா நிராகரிப்பதாகவும் சொல்லியிருந்தேன் மச்சான்.

இங்கு NPP கவலைப்படாமல் ரணிலுக்கான கதவு திறக்கப்படுவதை அமைதியாக அனுமதிக்கிறது. இதில் குறைந்தபட்சம் காத்திரமான எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் NPP யை நிறுத்தி விடலாமென்பது அவர்களது இலக்காகவும் அதற்காக காலத்தைக் கோர வேண்டிய நெருக்கடிக்குள் NPP க்கு இருப்பதாகவும் அவர்கள் நினைப்பதாகவும் கூறியிருந்தேன். அதைத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிற பொதுவெளிச் சந்தர்ப்பத்தில் கூறி வந்தேன் மச்சான்…, அதற்கு மேலே NPP யை அதிகாரத்தில் உட்கார வைப்பது வெகுமக்களின் பொறுப்பும் தேவையும் கடமையுமென விட்டு விடுகிறார்கள். இதுதான் NPP இல் வன்முறை மீதான காதல் அற்ற அனுபவத்தின் முதிர்ச்சியைப் பார்க்கலாம்.

பின்னாடி தேர்தல் காலத்தில் அநுரா  ஜனாதிபதியாக வருவார் என்பதை முன்வைத்திருந்தேன்.

இதில் ரணில் ஜனாதிபதியாக வருவதற்கு நிறைய வாய்ப்பு தெற்கில் இருந்திருந்து ஜனாதிபதியாகியிருந்தால் கதை வேறு விதமாகப் போயிருக்கும் மச்சான். ஏனென்றால், யாழ்ப்பாணத்தில டக்ளஸின் தலைமையில 85 ஆயிரம் வாக்குகள் ரணிலுக்கு வீழ்ந்திருக்கிறதைப் பார்த்தாலே தெரிகிறது.

அப்படி ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தால் யாழ்ப்பாணத்தில் பாராளுமன்றத் தேர்தலில் டக்ளஸ்க்கு 85 ஆயிரத்துக்கு மேலே வாக்குகள் வீழ்ந்திருக்கிறதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். ஏனென்றால், ரணில் ஜனாதிபதியாக வந்த பின் அதற்கு சரியான தலைமை டக்ளஸ்தானென்கிற முடிவுக்கு வாக்காளர்கள் வந்திருப்பார்கள். இதொரு ஆபத்தான சூழலை தோன்றுவிக்குமென்பது என்னுடைய பார்வையாக இருந்தது.

அது மறுபக்கத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த ஆவாக்குரூப், கந்து வட்டி, ஐஸ் போதை, கஞ்சா கடத்தல் என்கிற மாபியா மேலும் செழிப்பாகக் கொடிகட்டி பறக்க வாய்ப்புதான் ஏற்படுமென்கிற சமூக சார்ந்த பெரும் கவலையும் அனுதாபமே அதில் என்னிடம் இருந்தது மச்சான்…, அதைவிட மாபியா அரசியலொன்றின் தலைமைத்துவமாக இருக்க டக்ளஸ்தான் பொருத்தமானவரென்கிற முடிவுக்கு யாழ்ப்பாண பொருளாதார மாபியா வலையமைப்பும் அதனுடைய ஆதரவுத்தளமும் ஏன் இதன் சல்லி வேர்களாக இருந்துவிடும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தரப்பும் வந்திருக்கும். ஆகவே, டக்ளஸ் நச்சரித்துக் கொண்டிருந்த 5 பாராளுமன்ற கதிரையென்பதைத் தாண்டி கூடுதலாகக்கூட சாத்தியப்பட்டிருக்குமடா மச்சான்”

மெல்ல ஏதுமற்று வாய் கசகசக்க ‘இச்’ கொண்டிருந்த அவனுக்கு, தனக்கு சரியான சந்தர்ப்பம் இதுவெனக் கருதி அவசர அவசரமாக இடைமறித்து குறுக்காலே புகுந்தான்.

இப்படியான தருணங்கள் எங்களுடைய உரையாடலுக்குள் கிடைத்து விடுவதாலும் அதை எதொரு இடத்தில் சரியாக நிக்சன் குறிப்பிடுவானென்கிற நம்பிக்கையும் இவனும் தன்னுடைய கருத்தைச் சொல்லத் தயங்குவதில்லை.

“டேய் மச்சான் இப்படிப் பாரேன்?”

சிறு மெளனிப்புக்குப் பிறகு அவன் தொடர்ந்தான்.

“இதுதான் கடந்த தேர்தலில் தன்னால் கைவிடப்படுகிறவர்களை நோக்கி டக்ளஸ் நம்பிக்கையோடு திரும்புகிற மனநிலையைக் கெடுத்திருக்கிறது எனப் பார்க்கலாம்தானே மச்சான்.?”

“அதுதான்…, சரியாச் சொன்னாய் மச்சான்.., இந்த மனநிலைதான்டா டக்ளஸ் எதொரு சலிக்காசுக்கும் பிரயோசனமில்லாத தன் கையாட்களான புவி, சட்டத்தரணி செலஸ்டீன் போன்றவர்களைக் களம் இறக்கிறார்டா.”

“அப்படிச் சொல்லடா மச்சான்.. நீயும் சோலையும்தான் கடைசி வரைக்கும் டக்கிக்கு சீட் கிடையாதென்று சொன்னீங்க. நான்கூட டக்கி கட்டாயம் பார்லிமெண்ட் போகுமெண்டு சொன்னனான். ஆனா, எனக்கொரு ஆசை இருந்தது.

அது தன் வாழ் நாளில் டக்கி அதிகாரமில்லாமல் இருக்கிறதை என் கண்ணால் பார்க்க வேண்டுமென்பதுதான் மச்சான்” என்று சொல்லிப் போட்டு டக்கியின் வெடிச்சிரிப்பைக் கொஞ்சம் ஆக்ரோஷமாக மேலெழுகிற கடல் அலைகளாக மாற்றிக் கொண்டான்.

ஆனா, சடாரென்று அந்த ஆக்ரோஷமான ஏக்காள டக்கி சிரிப்பு நெற்றிப்பொட்டில் துப்பாக்கி ரவையை உள்வாங்கிக் கொண்ட மனிதனின் சாவாக மாறிக் கொண்டது.

டக்கி மெளனமாக கதிரைக்குள் சாய்ந்து கொண்டு மூக்கை வலக்கையால் சொறிந்து கொள்ளத் தொடங்குகிற ஒரு நிசப்த சூழலொன்று எதிர்முனையில் உருவாக்கி இருப்பதை நினைக்கத் தோன்றியது.

இது அவனின் குரலில் தெரிந்தது. அது ஓர் ஆதங்கத்தை வெளிப்படுத்துறதா, என்னதான் செய்தாலும் டக்ளஸ்க்கான இழப்பின் சோகமா, டக்ளஸோட சேர்ந்து சுரேஷ், சித்தார்த்தன், சந்திரகுமார், சுமத்திரனென யாழ் மையவாத ஈழ அரசியலில் ஏற்பட்ட வெறுமையை வெளிப்படுத்துகிற மனநிலையை வெளிப்படுத்தியதா என்பதைக் கண்டறிய முடியாத ஓர் குழப்பமானதாக அச்சூழல் இருந்ததென்று என் மனதில் தோன்றம் பெற்றது.

“டேய் மச்சான்…, டக்ளஸ் மட்டுமல்ல யாருமே இந்தப் பக்கத்தைக் கணக்கிலை எடுக்கலை. அதொரு பெரிய மலை போன்ற குப்பை மேடு. கிளற கிளற நிறைய வந்து கொண்டிருக்கும். அதொரு சுகத்தை பேசுகிற மனசுக் கொடுக்குமடா. ஆனால், நடைமுறையில் எந்த மாற்றத்தையும் செய்யாது மச்சான்…”

“சரி நீ இப்பவாது மெயின் மேட்டருக்கு வாறீயா?

அதெப்படி உன்னால முடியும் மச்சான்…, நீ மேட்டரையும் மெயின் மேட்டராக வச்சுத்தானே கதைப்பாய்?”

“சரி… சரி இப்ப மெயின் மேட்டருக்கே வருவோம்…, சதா சொல்ற மாதிரி 90 இலிருந்து தீவகத்தில கிடந்து செத்ததையும் சேர்த்து பார்த்தால் EPF என்று எவ்வளவு வருமடா?”

அவன் மறுத்துப் பேசினான்.

“போடா சதா சொல்றது உண்மையாக இருக்குமா?

அவன் தனக்கேத்த மாதிரி கதை விடுறான். நீ பாரு மச்சான்.., இரண்டு வருடமென்றால் 24 மாதம்.., அப்படி பாரேன் அறுபதாயிரத்தை இரண்டாலே பிரிச்சால் 2708 ரூபா வருகுது. இது சாத்தியமா மச்சான்?”

எனக்குச் சற்று யோசனை தோன்றியது…,

“ஏன் இல்லையென்று நினைக்கிறாய்? அப்ப ஆர்மிக்கு எவ்வளவு மாதச்சம்பளமென்றும் எங்களுக்குத் தெரியாது. அதைக் கேட்டு தெரிஞ்சு கொள்ளுகிற மனநிலையும் அரசியலும் இல்லைத்தானே மச்சான்?

மற்றது EPF க்காக எவ்வளவு வெட்டுறாங்க. அந்த வெட்டுத் தொகைக்கு Employer சைட்டில் எவ்வளவு போடுகிறாங்கவென்றும் பார்த்தால் இது சாத்தியமா, சாத்தியம் இல்லையா என்று தெரிஞ்சு போயிடும் மச்சான்.

அதைவிட இந்தத் தொகைக்கு வருகிற வட்டித் தொகையும் இதற்குள் வருகிறதால் இது சாத்தியமென்றுதான் நினைக்கிறேன்.

அப்ப எனக்கே எம்பி அலவான்ஸாக 19 ஆயிரம் வந்தது. அதனாலே ஆர்மிக்கும் பதினைஞ்சு இருவது கொடுத்திருப்பாங்களென நினைக்கிறேன்டா மச்சான்?

டேய் மச்சான்.., அன்டைக்கு ஒருத்தரோடு பேசுகிற பொழுது அவர் சொல்கிறார்; எங்கடை சம்பளத்தில 8% வெட்டினினவாம் அவர்களும் 12 % சேர்த்து 20 % ஆக EPF இல் போடுவீனமாம். இப்ப நீ பாரேன் 1000 ரூபாயில் 20% என்பது 200 ரூபாதானே மச்சான்?”

“அப்ப சதா சொல்றது சரியாத்தான் இருக்குது. இதை ஏன் எல்லாரும் சேர்ந்து செய்யிறதுதானே மச்சான்?”

“அப்படியென்றால் மச்சான் இப்ப டக்ளஸ் கட்சியைவிட்டு துரத்தியல்லோ இருப்பாங்க?

அது ஏன் நடக்கேலை என்பதுதான் இதுக்கும் என்னுடைய பதில் மச்சான்.”

“டேய் மச்சான் மாடு கத்துற மாதிரி இருக்குது. நாளைக்கு எடுக்கிறேன்” என்று டக்ளஸைப்போலவே நழுவிக் கொண்டான்.

“சாப்பிட வாறிங்களா, சாப்பாடு போடவா..?”

‘என் இனிய பொன் நிலவே….’ பாடலை மகன் பாடிக் கொண்டிருந்தான்.