கைவிட்டுப்போன கதையாடல்களும் சிந்தனைகளுமென போருக்குப் பிந்திய தமிழ்ச்சமூகம்…!

கிழக்கின் தென்கோடி கிராமங்களில் சிலவற்றுக்கு குறிப்பாக அக்கரைப்பற்று, ஆலையடி வேம்பு, தம்புவில், பொத்துவில் ஆகிய ஊர்களுக்குச் சென்றிருந்தேன்.

அலுத்து சலித்துப்போன மனிதர்களைக் காண்பதென்பது வாழ்க்கையில் சாதாரணமானதாக இருப்பதைச் சரியென வலியுறுத்துவதையே இக்கிராம வாழ்வியல் கொண்டிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது.

போருக்குப்பிந்திய வாழ்வியலென்பதில் அக்கறை கொண்டு, அது எப்படி திருத்திச் சீர்செய்து மறுசீரமைப்புக்க்குள் கொண்டு வந்திருக்க வேண்டுமென்பதில் ஒரிரு குரல்கள் தனித்துவமாக எழுந்திருந்தாலும் பொதுப்படையில் அறிவியல் தொழில்நுட்ப பின்னணியில் எந்த வாழ்வியல் சிந்தனையும் அதற்குள் இருப்பதாக, எனக்குத் தெரியவில்லை.

கஷ்டப்படுகிறவனை ஏதொரு விதத்தில் தூக்கி விடனுமென்கிற அடிப்படை உளவியல் நிலைப்பாட்டில் இருந்து மேலெழுகிற வாழ்வியல் சிந்தனையென்பதே தொடர்ந்தும் கெட்டியாகப் பேணப்படுகிறது.

போருக்குப்பிந்திய காலவோட்டத்தில் காணாமல்போன அரசியல் கட்சிகளின் கோட்பாட்டுச் சிந்தனையே இவ்வாழ்வியல் சிந்தனையை கொண்டாடுகிறது.

இது கெட்டிப்படுகிற தன்மையைக் கூட்டியிருப்பதாகக் கண்டடைய நிறைய வாழ்வியல் தரவுகளை, ஒவ்வொருவரிடமென்றில்லாமல் ஒட்டுமொத்தச் சமூகத்திடமிருந்தும் பொதுவெளியில் பொதுப்புத்திக்கானதாகக் கிடைக்கிறது.

சமூகப் பொருளாதாரத்திற்குப் பாதுகாவலரணாக இருந்து விடவேண்டிய கட்சி அரசியல் மனிதர்களிடத்தில் போருக்குப்பிந்திய காலமென்றில்லாமல் பாராளுமன்ற தேர்தல் ஜனநாயக அரசியலுக்குள்ளும் நேற்றும் இன்றும் பொருளாதார அரசியலைக் கட்சி தலைமை மற்றும் கட்சியின் நம்பிக்கை நட்ஷத்திர மனிதர்களும் பிரதானமானதாகக் கொண்டிருக்கிறார்களென்பதில் எனக்கு எவ்விதமான ஐயமும் கிடையாது.

அக்கட்சி மனிதர்களின் நிலைப்பாடு சார்ந்தே சமூகமும் ‘கொண்டு வா தின்று பார்ப்போம்’ என்கிற ரீதியில் அடிப்படை மாற்றத்தைக் காலத்தின் முன்நிபந்தனையில் உலகளாவிய ரீதியாக இசைந்து போகிற தத்துவக்கோட்பாட்டு ரீதியாகக் கோருவதைத் தவிர்த்து விடுகிறது.

போருக்குப்பிந்திய காலத்தில் அரசியலில் பெண்கள், முற்று முழுதாக ஒதுக்கப்பட்டதாக அல்லது கை விடப்பட்டதாக அல்லது புறக்கணிக்கப்பட்டதாக இருந்து விடுவதை, நாம் யாரும் பேசாமல் கடந்து போகிறோம். அது பற்றி எள்ளளவும் சிந்திக்கத் தயாராக இல்லை. இதொரு நவீன ஆணாதிக்கச் சூழலாக அரசியல், சமூகம், பொருளாதாரமென மேவிப்பரவிக் கிடக்கிறது.

போருக்குப்பிந்திய அரசியலில் பெண்களென்பது தலைமைத்துவ மனிதனில் மையம் கொண்ட தேவைகளுக்கானவர்களாகவே தகவமைத்துக் கொண்டிருக்கிறதாக, ஆயுதப் போராட்டத்தில் இருந்து ஜனநாயக பாராளுமன்ற தேர்தல் அரசியலுக்கு மாறிய கட்சி மனிதர்களும் இருந்து விடுவதும் அரசியல் களத்தைத் தாண்டிச் சமூகத்திலும் பெண்கள் மெளனிகளாக ஆக்கப்பட்டவர்களாகுகிறார்கள்.

அது சமூகத்திலும் பெண்களைப் பெரும் சிக்கலுக்குள் தள்ளி விட்டுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

கொஞ்சுண்டு முதியவர்களான பெண்கள் பெண்ணீயவாதிகளாக, இலக்கியவாதிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள், என் தலைமுறையினராகவே இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் அரசியல் செய்வதில்லை; இன்றைய கட்சிகளில், அவர்களின் வயதுக்கு பெண் ஆளுமைகளாக, முன்னணித் தலைவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களால் முடியவில்லையோ அல்லது அவர்களைக் கட்டி ஆள, இன்றைய கட்சி மனிதர்களால் முடியேல்லையோ என்பது கேள்வியாகவும், விமர்சனத்துக்குரியதாகவும் என்னில் இருக்கிறது. அவர்களும் புலம்பெயர் தேசத்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இதைத் தாண்டி ஊருக்குள் வயதில் இவர்களை ஒத்தவர்களாகவும், குணாம்சத்திலும் பண்பியலிலும் ஒத்தவர்களாகக் காணப்படும் ஒரு சில பெண்கள் இருக்கிறார்கள். இவர்களும் அரசியல் கட்சிகளென்றால் நூறடி தள்ளியே அவர்களைப் போலவே நிற்கிறார்கள். இதுவும் கட்சியின் தலைமை மனிதனின் மையத் தேவை மனிதர்களாகக் குறிப்பாக பெண்கள் தகவமைக்கப்பட்டிருப்பதென்பதே இதற்கான காரணமாக இருக்கிறது. இது சமூகத்தின் முதுகுக்குப் பின்னால் புறம் சொல்லும் குணாம்சமும் பண்பியலென்பதுமொரு காரணமாகச் சொல்லிக் கொள்ளும் அரசியல் மனிதர்களின் சப்பைக் கட்டலும் மலிந்து கிடக்கிறது.

இச்சூழலென்பது எவ்வாறு சமூகத்தில் பெண்களைப் பாதிக்கிறதென்பதை என்னால் இந்த அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கடல் கரையைப் பூர்வீகமாகக் கொண்டிருக்கும் தமிழ் கிராமங்களுக்குச் சென்ற பொழுது உணர்ந்து கொள்ள முடிந்தது.

இக்கிராமங்களிலொன்றான சம்மாந்துறையில் என் தலைமுறைப் பெண்ணின் வாழ்க்கையை, இங்கு முன்னுதாரணப்படுத்துவதென்பது சிறப்பானதாக இருக்குமென, நான் நம்புகிறேன். அது சமூகத்திலோ அல்லது பெண்களிலோ 80 களில் நான் பார்த்த மாற்றங்களென்பது கருத்தியல் ரீதியானதாக இருந்ததில்லையென்பதும் அது வர்க்கக் குணாம்சமாகவும் இருக்கத் தன்னில் கலாசாரமாகவும் பண்பாடாகவும் நிகழ்ந்திருக்கிறது. இதனால், மனதளவில் உளவியலிலும், அறிவு ரீதியாகவும், பட்டறிவு அனுபவ அறிவுத்தளத்திலும் வைத்து தனிமனித மாற்றமாக நிகழ்த்தப்படாதினால் அது பின்னோக்கிச் செல்லும் தன்மையைக் கொண்டதாக இருந்து விடுகிறதென்பதைத் தெளிவுறக் காண்பிக்கக்கூடியக் கதையைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அதற்கு இது சரியான முன்னுதாரணமாக இருக்கும்.

தமிழ்க் குடும்பமாக இருந்தாலும் அவர்கள் ஆங்கிலோ – சிறிலங்கன் குடும்பமாக இருந்தார்கள். அவளைப் பாப் கட் வெட்டிக் கொள்ள அனுமதித்திருந்தார்கள். அவளும் அப்படித்தான் இருந்தாள். மினிஸ்கேட் போடுபவளாகவும் காதல் செய்யவும் துணிந்திருந்தாள். காதலனுக்கு காதலில் சங்கடமிடறப் போராட்டத்திற்குக் கிளம்பிப்போனான். காத்திருப்புப் போராட்டத்தில் கார்ல் மாக்ஸ் நாட்டுக்குக் காதலனை மீட்டுக் கூடவே சென்றிருந்தாள்.

இவ்வளவும் மூன்றாம் நாடுகளான வளர்ந்து வரும் நாடொன்றில் உலகளாவிய அறிவியல் தொழில் நுட்ப சித்தாந்தக் கேள்விகளுக்குக் கூடாக நிகழ்ந்தப்பட்ட சமூக மாற்றத்தில் பெண்ணொன்றின் மீதான மாற்றங்களும் நாகரீகப் போக்கில் ஏற்படுத்தப்பட்டதாகும்.

இல்லையேல்…, ஆணாதிக்கச் சமூகத்தின் சமூகக் கட்டுமானத்தில் உடைத்தெடுக்கப்பட்டவையாக இருக்கக்கூடியதெனச் சொல்ல முடியாமல் ஆணின் தன் தலைமைத்துவச் சிந்தாந்த ஆணாதிக்க மனப்போக்கில் பொருளாதார நெருக்கடிகளால் சில விட்டுக் கொடுப்புக்களாகவே இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஆனால், வளர்ந்த நாடான கார்ல் மாக்ஸ் நாட்டில் 30 வருடங்களாக, தன் இரண்டு தலைமுறைகளை உருவாக்கிய அப்பெண், தன்னில் விளைந்த மாற்றங்களின் தாய் நிலத்தோடு தன்னை இணைத்துக் கொள்ளாமல் U Turn அடித்து திரும்பியிருக்கிறாள். அதற்குக்கூட ஈழத்தமிழ் சமூகத்தின் அரசியலும் அதன் பரிணாமக் கூறாகி நிற்கும் ஆயுதப்போராட்டமும் காரணமாகி நிற்கின்றன. அதிலும், ஈழத்தமிழ் அரசியலின் தலைமைத்துவத்தைத் தன்னகத்தே வலிந்து வைத்திருக்கும் யாழ் மையவாதமும் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றது. அரசியல் ரீதியாக, இதைக் கேள்விக்குட்படுத்திய கிழக்குவாதமும் தற்குறித்தனமாக அதிகாரத்திற்காக இக்கேள்வியைக் கேட்கத் தொடங்குகிறது. அது யாழ் மையவாதத்தின் பிரதி விம்பமாகவே தன்னை தகவமைக்க முயல்கிறது. இதனால், எண்ணெய் தார்ச்சிக்குள் இருந்து எரியும் அடுப்புக்குள் வீழ்ந்த மீன் துண்டின் கதையாகிப் போனது.

இப்பொழுது அவள் எப்படி இருக்கிறாள்?

முன்னோக்கி நடந்தாளா, இல்லை பின்னோக்கி நடக்கிறளா என்பதை அவளது வாழ்வியல் சிந்தனையை வைத்துத்தான் நான் தீர்மானிக்க முயன்றிருக்கிறேன்.

போருக்குள் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்ட பொழுது தன் சுய கலாசார பண்பாட்டை நோக்கித் திரும்புவதாக, தக்க வைக்கப் போராடுவதாகக் காட்சிப்படுத்தலைச் செய்ய எத்தனிக்கிறது. அதுதான் அரசியலென்பதைத் தாண்டி Civilization, Styles, Fashion என்பதாகக் கருதப்பட்டது. அவளும் விதி விலக்கல்ல என்பதைத்தான் அவளது கருத்தியல் பிடிமானமற்ற செயல்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இன்றைக்கு அவள், ஷிரடி சாய்பாவோடு ஊருக்குள் உலாவுகிறாள்; காளி கோயிலில் தீக்குள் நடக்கிறாள்; யாரோ நைந்து போயிருக்கும் வாழ்வியல் கூறுகளைக் கண்ணுற்று கண்ணீர் வடிக்கிறாள்; ஏதோ தன்னால் நாலு வயிறுகள் நிறைகிறதென நிம்மதி பெரு மூச்செறிகிறாள். ஆனால், ஊருக்குள் வீடற்றவளாக, தாயை இருந்து பாராமரிக்க முடியாதவளாக, மற்ற புலம்பெயர்வாளர்களின் குடும்பங்களைப்போலெதுவும் மாடமாளிகை அசையும் அசையா சொத்துகளும் இல்லாதிருப்பதை உணர்ந்தாளா அல்லது அது எதுவும் தன்னைத் தீர்மானிப்பதில்லையென்கிறளா என்பதைக்கூட குழப்பத்துள் ஆழ்த்துவதாகவே அவளின் மேட்டிமைத்தனத்தின் பண்பியல் நடையும் நடைமுறைச் செயல்பாடும் சொல்கின்றன. ஏனென்றால், தன் வட்டத்தைவிட்டு வெளியே சென்றதான எந்தவிதமான காலடித் தடங்களின் காய்ந்துபோன சுவடுகளை எங்குமே காண முடியவில்லை. காலம்தான் உருண்டோடுகின்றது. அவள் ஊரையும் உறவையும் விட்டுத் தாண்ட முடியவில்லை. இடப்பெயர்வில் சிதறிப்போன உறவுகளின் தொடர்பில் மட்டுமே நிகழ்ந்திருக்கும் அகலமென்பதோடு அதுவும் முடிந்து விடுகிறது. இதைத்தானோ அவள், தன்னை சமூகப்பொதுவெளியில் இருத்தியதாக நினைக்கிறளோ…?

இன்னுமொரு விடயமாக நான் பார்ப்பது பெண்கள் நிலையை, இருப்பு நிலையை, மன நிலையைத்தான்.

இதில் ஆரோக்கியம். அதில் உளமும் உடலுமும் முக்கியமாக இருக்கிறது. இதற்கு குடும்பச் சூழல் இருக்கிறதென்பதோடு சமூகப்பொதுவெளியும் எப்படி முதன்மைக் காரணியாக இருக்கிறதென்பதைக் கவனம் எடுக்கிறோமா?

ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். அக்குடும்பத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஆக இரண்டு பேர். அதில் தகப்பன் போஸ்ட் ஒபிஸில் ஸ்ரோர் கீப்பர் இன்றைக்கு ரிட்டயர்; அத்தோடு நெல் விவசாயம் செய்பவராக இருக்கிறார். தாய், தேசியப் பாடசாலை ஆசிரியர்; மகன், பல்கலைக்கழகத்தைப் பூர்த்தி செய்தவராக இருக்கிறார்; மகள், A/L வகுப்பு படிக்கிறார்; வரும் பரீட்சைக்கு தேற்றக்கூடியவராக இருக்கிறார்.

இவர்கள் வசிக்கும் வீடு, தாய்க்கு அவர் வீட்டில் இருந்து கொடுக்கப்பட்டது. அவர்கள் அப்படிச் சொன்னார்கள். பக்கத்தில் இருந்த வளவு வாங்கப்பட்டு அங்கொரு கீழே ஐந்து Rooms மேலே ஐந்து Roomsகளென மாடி வீடொன்று கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது முழுமை பெறவில்லை.

தேத்தண்ணி குடித்துக் கொண்டு உரையாடல் தொடங்குகிறது. ரீச்சரும் மகளும் அங்கிருக்கிறார்; மகன் தன் நண்பரொருவரைப் பார்க்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு ஹெல்மட்டை எடுத்துக் கொண்டு வெளியே போய் விடுகிறார்.

தேத்தண்ணி ஊத்துகிற பொழுதென்றாலும் பலகாரங்களை எடுத்து வைப்பதில் இருந்தும் பரிமாறுவதில் இருந்தும் ரீச்சர் அம்மாவோட கூடவே கட்டளைகளை உள்வாங்கிச் செயல்படும் இயந்திரத்தனமான மகளாகவே இருக்கிறார்.

பெண் என்பவளின் வேலைகளை, கடமைகளை முடித்துக் கொண்டு தேசியப் பாடசாலை ரீச்சர் அம்மாவோட பக்கத்தில் உள்ள கதிரையில் அப்பெண் உட்காருகிற பொழுது பாதி உரையாடல் கடந்து விடுகிறது.

அவளுக்கு இந்த உரையாடலில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது உரையாடலைக் கேட்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் விரும்பத்தையும் அவளின் வேலைகளை அவசரமாக முடிக்கிற பாங்கில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

97களில் நான் பார்க்கிற பொழுது தகப்பனை இழந்ததாகவும், அக்காவின் கணவரை இராணுவ சுற்றிவளைப்புக்குள் காணாமல் ஆக்கப்பட்டோராக இழந்ததும் பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டத்திற்குள் தள்ளப்பட்டிருந்த குடும்பத்தில் ஏழு பிள்ளைகளில் 3 ஆண் பிள்ளைகளில் மூத்தவராக இருக்கக்கூடியவர். தன் தம்பியோடு இணைந்து கடைசி தம்பியை கெமிக்கல் என்ஜினீயராகக் கட்டபெத்தயில் இருந்து வெளிக்கொண்டாந்திருந்தனர். தொடர்ந்து சகோதரிகளின் பிள்ளைகளின் படிப்பும் அரசு வேலையுமென வாழ்க்கையை செட்டில் செய்திருந்தார்கள்.

மகளுக்காக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடு முழுமையாகவில்லை. எனக்கு வீட்டைச் சுற்றிக் காட்டினார். அப்பொழுது Roomsகளைப் பார்த்து “என்ன மகள் ஏழு எட்டு பெத்துக்க போறளா?” என வினாவினேன்.

அவர் சிரித்துக் கொண்டார். மரங்கள் கொண்டு வந்து அக்கறையோடு கதவுகள், ஜன்னல்கள் செய்திருந்தார். இதில் இருந்து அவரது தலைமுறை மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

மூத்தவர் மகனென்றாலும் அவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முடித்திருந்தார். அதைத்தாண்டி மகளுக்கான படிப்புச் செலவும் ஒரு ரிட்டையர் போஸ்ட் ஓபிஸ் ஸ்ரோர் கீப்பருக்கும் தேசிய பாடசாலை ஆசிரியருக்கும் பெரும் பொருளாதாரச் சுமையைக் கொடுக்கும் என்பது தெரியாததொன்றல்ல. ஏழு எட்டு ஏக்கர் நெல் வயலில் இரு போகமும் செய்து வருகிற வருவாயில்தான் மகளுக்கான வீட்டுக் கனவு நனவாக்கம் செய்து கொண்டிருந்தார். அதிலொரு களைப்பு அவரில் தெரிந்தது. அது என்னில் அவர் மீதொரு பச்சாதாபத்தை உண்டாக்கியது.

“பொண்ணு வீடு கொண்டு வாறவா என்கிறதை வாறவன் எதிர்பார்க்கிறான். இதுதான் இங்கத்த நிலவரம் மச்சான். நானும் அதைத்தானே செய்ய வேண்டும். அதவிட்டுட்டு மோளின்ட வாழ்க்கையைப் பாழாக்க முடியாதுதானே மச்சான்.., என்னால் இயன்டதைச் செய்யிறேன்.”

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. 21ம் நூற்றாண்டு…, பல்கலைக்கழகம் போகப்போறாளென்ற நம்பிக்கை நிறைய வைத்திருக்கிறார்கள்; தன் எதிர்காலத்தைத்தானே தீர்மானிக்கக் கூடிய கல்வி அறிவைக் கொடுக்கிறோம்; அவள் தன் வாழ்வைத் தீர்மானிப்பாளென்ற நம்பிக்கையற்று இருக்கிறார்களோவெனக் கவலை மேலெழுந்தது. அதுதான் மிச்சமாகியும் போனது.

“என்ன மச்சான்.., மோளைப் படிக்க வைக்காமல் நல்ல சமையல் கத்துக் கொடுக்கிறதுதானே…?

அவளுக்குப் போற வழிக்குத் துணையாக இருக்குமே… இப்ப பள்ளிக்கு அனுப்புறது வீண் செலவுதானே.., அவளும் அங்கு போய் சமையலோடுதானே மாரடிக்க போறான்”

நக்கல் பண்ணிவிடத்தான் நான் முயன்றேன். அது கூடாதென ஒரிரு கணப் பொழுதில் என் மண்டைக்கு உறைத்தது.

“இல்லை மச்சான் அவளும் படிச்சிருக்கிறாள்; வேலைக்கும் போவாள்; அவனைப் போலவே கை நிறைய சம்பாதிப்பாள். அதனென்ன அவள் மட்டும் வீட்டோட வரனுமென எதிர்பார்க்கிறது நியாயமா?

அவங்க இரண்டு பேரும் அவங்க வாழ்க்கையை தீர்மானிப்பாங்கள்; உங்க வாழ்க்கையை நீங்க வாழ வேண்டாமா?

ஏன் அவள்கூட தனக்கான பார்டனரைத் தெரிவு செய்யலாம்தானே…?

அவளோட சுயம் என்ன..?

அவளுக்கு சிந்திக்கிறதுக்கான இடைவெளி ஏதாவது கொடுக்கிறீங்களா?

அவள் எவ்வாறு பிரச்சினைகளை எதிர் கொள்வாள்?”

“தம்பி…” என்கிற சொல்லோடு அவரிடம் சிரிப்புத்தான் எல்லாவற்றுக்கும் பதிலாக இருந்தது.

என்னுள் எழுந்த கோபம் பெரும் மெளனத்தை உண்ண்டாக்கியது. இன்றும் அதிகாரம் தன் கைகளை பெண்கள் மீது அழுத்திப் பிடித்திருக்கிறது. அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. 80 களில் நான் பார்த்த சமூகம் முன்னோக்கி நகர்ந்ததா என்றால் இல்லை; அப்படியே தருக்கணித்துப் போக ஆயுதப் போராட்ட அரசியல் செய்திருக்கிறது. ஆனால், போருக்குப் பிந்திய சூழலைச் சமூகம் தன்னை மீளாய்வுக்கும் சீரமைவுக்கும் எடுத்துக் கொண்டதா என்றால் இல்லை. இதற்கு எது காரணமென்றால் அரசியல்தானென்று அழுத்தமாகச் சொல்லவிட முடியும்; ஏனென்றால் அது நானுமொரு இயக்கம், கட்சி அரசியலுக்குள் இருந்திருக்கிறேன். அவ்வளவுக்கு எந்த உரையாடலும் கட்சிக்குள் சமூகம் பற்றி இருந்ததில்லை. மாறாக, என்ன செய்தால் எத்தனை சீட்டு அடுத்த தேர்தலில் கிடைக்குமென்பதற்கான உரையாடலைத்தானே பார்த்தோம். இதைவிட வேறெதைப் பேசியிருப்போம்; செய்திருப்போம்.

மோளுக்கு எந்தவொரு சிந்திக்கிறததற்கும் முடிவொன்றைத் தீர்மானிப்பதற்கும் எந்தவொரு இடைவெளியையும் கொடுக்காத தந்தையையும் அவனுக்குப் பின்னால் இவையெல்லாவற்றுக்கும் துணையாகத் தோளோடு நிற்கிற மனைவி, அம்மாவென்கிற பெண் மோளோட உணர்வை, உணர்வுள்ள ஜீவனென்கிறத எப்ப புரிந்து கொள்ளப் போகிறார்கள்…?

மூன்று சகோதரிகள் ஐம்பது வயதை நெருங்கியும் துணையொன்றைத் தேடிட முடியாத சூழலிலும் தானும் துணையைத்தேடாத தம்பி என்பதும் வீட்டுக்கு மூன்று பெண் பிள்ளைகள், அக்காளுக்களுக்கெல்லாம் திருமணமாகி தான் திருமணம் செய்வதென்கிற பயம் கோயில் பூசகரோடு காதலாகி வீட்டுக்குத் தெரியாமல் ஊரைவிட்டு இரவோடு இரவாக ஒடிப்போதலென்பதும் கிராமத்துச் சினிமாக்கதையல்ல. இன்டைக்கு அது நிஜக்கதையாக இருக்கிறது.

மலைகளில் இருந்து இறங்கி வந்த மனிதர்களைக் காணக்கூடியதாக இருந்தது. இவர்கள் பொருளாதாரத் தேடலுக்காக இடப்பெயர்வைச் செய்திருந்தாலும் அங்கேயே தங்கி விடுபவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆனால், நான் 80 களின் தொடக்கத்தில் பார்த்த என் கிராமச் சூழலின் பிரதியீடாக இருப்பதை உணர முடிந்தது. எந்தவித எள்ளளவு மாற்றமும் இன்றி இருக்கிறது. அது எப்படியென்பது விரிவாகப் பேசப்பட வேண்டியதொன்றாகும்.

அதிகாரம் ஒரு புறமாகச் சமூகக் கட்டுமானத்தில் உடைப்பேற்பட்டு விட்டுடக்கூடாதென்பதில் கவனமாக இருந்து விடுகிறது. ஆனால், தமிழ்ச் சமூகம் என்பது நியாயத்தின் வழியேயும் அறத்தின் பாலும் தீர்மானங்களை முடிவெடுப்பது என்பதை விடுத்து கல்விப் பக்கத்தில் இருந்தும் சந்தைப் பக்கத்தில் இருந்தும் வியாபார நோக்கில் முடிவெடுப்பதைச் சுட்டிக் காட்டத் தவறுகிற அரசியலும் சமூகமும் பெண்களை தனித்தியங்க என்றைக்கும் தயாராக இருக்காது. எதொரு தளத்தில் எதொரு விசாரணையைச் செய்து கொண்டுதான் இருக்கும். குற்ற மனிதர்களும் அதில் குறிப்பாக பெண்கள தப்பு தவறெதும் தெரியாமல் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். என்டைக்கு இவர்களுக்கு தாம் சுமக்கும் வாழ்க்கை சட்ட வரைபுகள் அபத்தமானதென்பதைப் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

கால் நூற்றாண்டுக்குப் பின்னான என்னுடைய இலங்கைப் பயணம் இந்த விதத்தில் என்னை சிந்திக்க வைக்க அமைந்திருந்தது. நான் என்றைக்குமே Toronto மாநகர அமைப்பைத் தேடி இலங்கைக்குப் பயணித்ததில்லை. அவர்களுடைய நகரத்திற்குள் அவர்களோடு என் நகரம் பற்றியும் அந்த நகரத்தால் எனக்கமைந்த வாழ்வியல் பற்றியும் உரையாடலை செய்யவே சென்றிருந்தேன். அதில் நல்லது கெட்டதென இரு பக்கங்களையும் அவர்களைத் தொந்தரவு செய்யாமலே செய்ய முயன்றேன்.

– Nixson / Oct 07, 2025 / Toronto