கல்முனை வடக்கு பிரதேச தொடருமொரு  உளவியல் அரசியல்…!

மதியம் (Augu 26, 2025) 12 மணி, வீட்டின் முன் போர்டிகோவின் கீழ் கொஞ்சம் சாய்ந்ததாக இருக்கக்கூடிய பிளாஸ்டிக் கதிரையில், கதிரையின் சாய்வுக்கேற்ப சாய்ந்து படுத்த நிலையில் உட்கார்ந்திருந்தேன்.

போர்டிகோவை மேலால் மேவி, பக்கத்தில் நின்ற மாமரம் தன் கிளைகளைப் பரப்பி, தன் செழுமையை வெளிப்படுத்தி வளர்ந்திருந்தது.

வெளியில் சூரியன் சுட்டெரித்தாலும் மெலிதாகத் தாலாட்டும் கணக்கில் காற்றும் தொட்டு மேவிக் கடந்து செல்கிற பொழுது வெக்கையை உத்தித் தள்ளிச் சென்று விடுகிறது.

அந்தத் தென்றலின் தாலாட்டில் மெய்மறந்த மனசு, இளநீர் குடிக்க ஆசைப்பட்டது. வெளியிலுள்ள தணலாய் கொதிக்கும் வெக்கையை அடியோடு மனசு மறந்தே போய்விட்டது.

மூளைகூட மனசின் தப்பான முடிவை மறுதலிக்க மறுத்து விடுகிறது. தென்றலின் சுகமென்பதில் மூளையும் சொர்க்கம் போகக் கனவில் திளைக்கத் தொடங்கியது.

மூளைக்குப் புத்தி மத்திமப்பட்டால் மனசு புண்ணாகிறதுக்கு நிறையவே சந்தர்ப்பம் உண்டென்பதில் இயக்கங்களுக்கு எடுபட்டுப் போனதில் மட்டும் நமக்குப் பட்டறிவு கிடைத்ததென்றில்லைத்தானே…?

சின்னச்சின்ன விசயங்களில் மட்டுமா? அவனவன் கத்திச் சொன்ன பட்டறிவுகளை, அறிவாக எடுத்துக் கொள்ளாத தொட்டில் பழக்கமென்பது தீ சுட்டுவிடுமெனச் சொன்ன பொழுதும் தன் கை விரலைத் தீக்குள் வைத்துச் சுட்டுக் கொண்ட மரபு சார்ந்த பரம்பரையில் நானுமொருவன் என்பதால் இரண்டாவது மகனையும் துணைக்கழைத்துக் கொண்டு இளநீர் கடைக்கு ஒழுங்கையில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். வெயில் பளார், பளாரென வெக்கையை அள்ளித் தெளிக்கத் தொடங்கினான். மகன் தொப்பியும் கூலிங்கிளாஸ்சும் அணிந்திருந்தான்.

கொஞ்சம் ஆங்காங்கே விழிம்புகள் உடைவுகளைக் கண்டிருந்தாலும் புழுதியும் குப்பைகளும் அதற்குள் ஒதுங்கியிருந்தாலும் கறுப்பைத் தொலைத்துக் கொண்டிருக்கும் தார் ரோட்டில் இடது பக்கமாகத் திரும்பி மெயின் ரோட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

கல்முனை ஆசுபத்திரிக்கு முன்னால் ‘T’ சந்தியாக மாறுகிற கை ரோட்டின் வலது பக்கத்தில் மெயின் ரோடு வரைக்கும் Pre School ம் கொன்வென்ட் ஸ்கூலும் ஒன்றன் பின் ஒன்றாக அடைத்துக் கொண்டிருந்தன.

Pre School விடுகிற நேரமாதலால் அந்த ரோடு ஆட்டோக்களாலும், ஸ்கூட்டிகளாலும், மோட்டார் சயிக்கிளாலும் நிரம்பியிருந்தன. அதொரு சன நெரிசலொன்றைத் தற்காலிகமாக உருக்கொண்டு மாநகரத்திற்கான பரபரப்பைத் தன்னில் கிளைவிடச் செய்து கொண்டிருந்தது.

ஆட்டோக்களும் ஸ்கூட்டிகளும் குறுக்காலையும் நெடுக்காலையும் மாறிக் கொண்டிருந்ததைக் கண்ட என்ரை இரண்டாவது பொடியன் வெருளத் தொடங்கினான். ரோட்டின் கரைக்குள் ஒதுக்கத் தொடங்கியவனை இழுத்து ரோட்டுக்குள் விட வேண்டியதாயிற்று.

ஆட்டோக்களும் ஸ்கூட்டிகளும் அப்பிடியும்இப்படியுமாகப் போனாலும் ஒரு டிசிப்பிளினும் கொன்ரோலும் இருந்ததாக எண்ணத் தோன்றியது.

‘T’ ஜங்ஷனில் இடது பக்கத்திலுள்ள இளநீர் கடைக்குள் சென்றோம். அக்கடை முன்பக்கத்தில் இரு அடுக்கு தள அமைப்பைக் கொண்டிருந்து. அதொரு சிறிய பல்பொருள் அங்காடியாகவே இருந்தது. அங்கிருந்த ஸ்டூலில் நாமிருவரும் உட்கார்ந்திருந்தோம்.

சற்று இளநீருக்குச் சொன்ன பின்னாடி ஆசுவாசமாகக் கடையை அவதானிக்கத் தொடங்கினேன். அங்கு சீமெந்து தரையில் வைக்கப்பட்டிருந்த காசெட் ரேடியோவில் பாட்டு போய்க் கொண்டிருந்தது.

அக்கடைக்காரத் தம்பியிடம் விசாரித்த பொழுது ரேடியோ சிலோன் அலைவரிசையெனத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதொரு காலத்தின் பின் நகர்வொன்றைச் சடுதியாக மனதளவில் செய்தது.

அப்பத்தான் எனக்குள், இந்தக் காணொளியொன்றைப் பதிவு செய்கிற எண்ணம் தோன்றியது. அதுவும், குறைகளாகப் பேசுவதென்பதைவிட ஊக்கம் கொடுப்பதாக இருப்பதுதான் நல்லதாகவும் இருக்குமென்கிற சிந்தனையும் சேர்ந்து வந்தது. ஆனால், அது சாத்தியமற்றதென்பதைப் புரிந்து கொள்ளவும் தொடர்ந்து வலியுறுத்துவதுபோல்த்தான் அரசியலும் சமூகமும் இருந்து விடுகிறது.

கல்முனை மாநகர சபை இரண்டு DS / பிரதேச செயலகப் பிரிவைக்  கொண்டிருக்கிறது. அது  தமிழர்களுக்கான பிரதேச செயலக நடவடிக்கைகளை வடக்கு பிரதேச செயலக பிரிவு என்கிற நிர்வாக பிரிவொன்றை கல்முனை பிரதேச செயலகத்தின் உப பிரிவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால், கல்முனை பிரதேச செயலகம் என்பது சோனகர்களுக்கானதாக இருக்கிறது. ஆனால், அரசியல் மேலாதிக்கத் தன்மையைக் கட்டமைத்தும் வைத்திருக்கிறது. இவ்விவகாரமானது அரசியல் அதிகார விசயமாக இருந்தாலும் சமூகங்களுக்கிடையான பிரச்சினையாக மாறிவிட்டிருக்கிறது.

கல்முனை மாநகர சபை அதிகார வரம்புக்குள் வருகின்ற சாய்ந்தமருது என்கிற சோனகர் கிராமம் தனி பிரதேச செயலகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு தனித்து செயல்படுவதில் சோனகர்கள் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது. அது கல்முனை பிரதேச செயலகத்தின் அதிகார ஆளுமையும் அரசியல் ரீதியாகவும், அரசு நிர்வாக ரீதியாகவும் சோனகர்களிடம் இருந்து விடுவதால் தாம் புறக்கணிக்கப்படுவதாகத் தமிழர்கள் சார்பு விவாதமாக இருக்கிறது. அப்படித்தான் நிலவரம் இருப்பதாக கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் நிர்வாக ரீதியான அதிகார செயல்பாட்டு நடைமுறைகள் இருக்கின்றன.

இந்த இரு நிர்வாக அலகாகப் பிரிக்கப்பட்டதென்பது எதற்காக என்பது பெரிய்யய வினாவாக இருக்கிறது. ஆனால், வடக்கு தமிழ் பிரதேச செயலக பிரிவு தனித்து பிரதேச செயலகமாக இயங்க வைக்க, எந்தவொரு நிர்வாக அதிகார ரீதியாக பிரித்தொதுக்காமல் கல்முனை பிரதேச செயலகத்தின் உப அலுவலமாகவே இயங்க வைத்திருப்பதன் அரசியலின் உள் நோக்கம் எதுவென்பதும் பெரிய்யய வினாதான்.

இந்நிலையென்பது கல்முனை வடக்கு தமிழர்களிடத்தில் ஆறாத மன ஊளைச்சலைக் கொடுத்து வருவதாக இருக்கிறதை, நான் உரையாடிய தமிழர்களிடத்தில் காணக்கூடியதாக இருந்தது.

பொதுவாக, அம்பாறை மாவட்டத்தில்  தமிழர்களிடத்தில் மண் மீட்பு அரசியலைக் கட்டமைத்துத் தொடர்ந்தும் மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பேணுகிற தமிழ் கட்சியின் அரசியலென்பதும் வேடிக்கையும் விநோதமாகவும் இருக்கிறது. ஆனாலும், தமிழர்களின் நிலைப்பாடும், செயல்பாடும் வேடிக்கையாகவும், விநோதமாகவும்தான் இருக்கிறது.

இன்று மாலையும் ஒருவரின் அழைப்பின் பேரில் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

என்னைக் கண்டவுடன், என்னை அழைத்து முன்கூடத்து ஷோபாவில் உட்கார வைத்துவிட்டு கடைக்குப் போய் வடையும், மரவள்ளிக்கிழங்கு அவியல் துண்டுகளும், சிவல் பொரியலும் வாங்கி வந்திருந்தார். அவரொரு சிறு கட்டிட ஒப்பந்தக்காரர்.

அவர் கடைக்குப் போயிருந்த சமயம் அவரது மனைவியும், கொன்வென்டில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளும் என்னோடு உரையாடத் தொடங்கியிருந்தார்கள். அதிலும், அம்மாக்காரிதான் மகளின் படிப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அம்மாவின் கவலை தோய்ந்த கருத்தாடலில் மகளின் கல்வி கற்கும் திறனின் இறங்கு முகமே பிரதான கருப்பொருளாக இருந்தது.

அவரும் திரும்பியிருந்த பொழுது பருப்பு வடையோடு தொடங்கிய உரையாடலென்பது அரசியல் உரையாடலாக மாறுகிற பொழுது தேத்தண்ணியை மகள் கொண்டு வந்து ரீப்போவில் வைத்துவிட்டு நகருகிற பொழுது அம்மாவும் வந்து பக்கத்திலுள்ள கதிரையில் உட்கார்ந்து கொண்டு உரையாடலுக்குள் கலந்து கொண்டார். மகள் உரையாடலை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியிருந்தார்.

பொதுவாக, அம்பாறை மாவட்டத்தின் தமிழ் கிராமங்களில், நான் சென்றிருந்த வீடுகளில் இளைய தலைமுறையினர்களுக்கு பாடசாலைக் கல்வியைத் தாண்டி உலக விசயங்களையும், உள்ளூர் சமூக விசயங்களையும் அறிந்து கொள்ளவும், உரையாடவும் ஆர்வம் இருப்பதை அவதானிக்க முடிந்தது. ஆனால், அது மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதென்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.

அவரையும் அவரது மனைவியையும் நோக்கித்தான் என் கேள்வியைப் பொதுவாக வைத்திருந்தேன்.

“சோனகர்களோடு இணைந்து வாழ்கிற மன நிலைமை தமிழர்களுக்கு இருக்கிறதா?”

“இல்லை” அந்த சிறு கட்டிட ஒப்பந்தக்காரர், ஒற்றை வரியில் பதிலளித்தார்.

மனைவியோ, தமிழர்கள் நடாத்தியிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஞாபகப்படுத்தினார். அவையெல்லாம் சோனகர்களுக்கெதிராகச் செய்யப்பட்டதாகச் காட்சிப்படுத்துகிறார். அதற்கு மிக முக்கிய காரணமாகக் கல்முனை பிரதேச செயலகம் என்பது சோனகர்களுடையது; அவர்கள்தான் தமக்கானதைத் தரமால் வைத்திருக்கிறார்கள், தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அரசியலாக மாறிவிட்ட கருப்பொருளாகவும் இருக்கிறது.

“யாருக்கெதிராக அந்த உண்ணாவிரதப் போராட்டத்தைச் செய்தீர்கள்?” என்பது என் கேள்வியாக இருந்தது.

“மூஸ்லீம்களுக்கெதிராக…”

அவள் சொன்னாள்; அதற்குள் அவளின் அரசியல் அறியாமையும், பற்றாக்குறையும், தமிழ் அரசியல்வாதிகள் கட்டமைத்திருக்கும் இனவாத அரசியலின் ஆத்மாவும் கலந்திருப்பதை உணர்ந்திருந்தேன்.

நிர்வாக ரீதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தனித்து இயங்குவதற்கான அனைத்துச் செயல்பாடுகளும் மைய அரசு மற்றும் அரசு நிர்வாகத்திற்கும் உரியது. ஆனால், அது கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கானதாக குறுக்கப்பட்டதென்பது இனவாத அரசியலின் செயலூக்கமாகும். அது கட்சி அரசியல் போட்டியென்பதில் முதன்மைப்படத் தொடங்குகிறது. இவைகளெல்லாம் தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கிறது.

“நல்லாட்சிக் காலத்தில் இப்பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும்; ஆனால், அதைச் செய்யாமல் தமிழ் தரப்பு தவற விட்டிருக்கிறது.” அந்த சிறு ஒப்பந்தக்காரர் சொன்னார்.

எனக்கோர் உண்மை உறைத்தது: அது, இந்தப் பிரதேச செயலக விவகாரம் ஓர் இன முரண்பாட்டைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

“இந்த விவகாரத்தை இன்றைய NPP மைய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம்தானே?” என்றேன்.

“இல்லை. இப்ப இந்தப் பிரதேச செயலக விவகாரம் நீதிமன்றில் இருக்கிறது” என்றார் சிறு கட்டிட ஒப்பந்தக்காரர்.

“யார் நீதிமன்றுக் கொண்டு போனார்கள்?” என்று விழி உயர்த்தினேன்.

“சுமத்திரன்தான் நீதிமன்றுக்கு இவ்விவகாரத்தை எடுத்துச் சென்றார். அடுத்த நீதிமன்றத் தவணைகூட அடுத்த வருடம்தான். தவணைகள்கூட ஒரு வருடக்கணக்கில்தான் இருக்கிறது” என்றார் சிறு கட்டிட ஒப்பந்தக்காரர். அதில் தமிழர்களின் ஆற்றாமையையும் இயலாமையையும் அவர், தன் குரலில் வெளிப்படுத்தியிருந்தார்.

கல்முனை மாநகர சபைக்குள் கல்முனை பிரதேச செயலகம், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு, சாய்ந்தமருது பிரதேச செயலகம் என்பன அடங்குகின்றன. உள்ளூராட்சி தேர்தல் சட்ட திருத்தம் 2018 இன் கலப்பு தேர்தல் முறை மூலம் 41 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான கல்முனை மாநகர சபை வல்லமை பெற்றிருக்கிறது.

நான் உரையாடிய தமிழர்களின் ஒரே கேள்வியென்பது சாய்ந்தமருது தனிப்பிரதேச செயலகமாக இயங்க முடிகிற பொழுது கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு ஏன் தனித்து பிரதேச செயலகமாக இயங்க முடியாதா? என்பதாகும்.

சோனகர்கள், தம் அரசியல் செல்வாக்கில்தான் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள். அதே அரசியல் செல்வாக்கை வைத்துதான் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரவு தனித்து இயங்குவதையும் தடுத்து வருகிறார்கள். இந்த முடிவைத்தான் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

என் அவதானிப்பாகக் கூறக்கூடியதென்றால் கல்முனை மாநகர சபைக்குள் வலுக்கட்டாயமாக இன முரண்பாடொன்று அரசியல் ரீதியாக அரசியல் தேவைக்காக, கட்சிகளின் அரசியல் நலன்களுக்காகவும் பேணப்பட்டு வருவதை என்னால் உணர முடிகிறது. இதில் இனவாத அரசியலை எதிர்க்கிற அநுரா தலைமையிலான NPP அரசு கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே, உள்ளூர்  NPP சார்ந்தவர்கள், தம் மைய அரசின் கவனத்திற்கும், ஜனாதிபதி அநுராவின் முடிவுக்கும் இவ்விவகாரத்தை எடுத்துச் செல்வதன் ஊடாக இரு சமூக இன முரண்பாட்டைத் தீர்வுக்குக் கொண்டுவர முடியுமென நம்புகிறேன்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தல் விவகாரமும் நீதிமன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டதன் மூலம் அவ்விவகாரத்தைக் கிடப்பில் போட்ட மாதிரியே கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு விவகாரமும் நீதிமன்றுக்கு எடுத்துச் சென்று கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
        – Nixson / கல்முனை / Augu 27, 2025

Leave a Reply