ஊமைக்குரல் – 1

முன்னுரை

‘பட்டாம்பூச்சி’ நாவலை 2001 ஆம் ஆண்டில் வாசிக்கிற பொழுதுதான் எனக்குள், என் இயக்க வாழ்வியலை நாவலாக எழுத வேண்டுமென்கிற எண்ணம் உருக்கொண்டது. ஆனால், அந்த எண்ணத்தோடு பயமும் கூடவே தோன்றி பயணிக்கத் தொடங்கியது. அப்படித்தான் என் இயக்க வாழ்வியல் இருக்கிறது.

நான் சொல்லப் போகும் நிகழ்வுகள் பல பேருடைய முகமூடிகளை கிழிக்கலாம் அல்லது அவர்கள், தங்களைப் பொதுவெளியில் அசிங்கப்படுத்தி விட்டேனென்றும், தம் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கி விட்டேனென்று கோபப்படுவதற்கான சந்தர்ப்பங்களை நானே வலிந்து கொடுப்பதாக இருக்கிறது. ஏனென்றால், நானொரு அரசியல் மரபை, என் உரையாடல் வழியே கட்டுடைக்கிறேன்.

இது எவ்வாறு நிகழ்ந்தென்றால் என் அவதானிப்புகள், எனக்குள் உண்டாக்கிய சிந்தித்தலில் நான் கண்டடையும் தர்க்கங்களை சீலன் போன்றவர்களோடு நடாத்துகிற உரையாடல், தர்க்கம், விவாதம் என்பற்றிற்கு கூடாக, என்னைத் தயார்படுத்த முடிந்தது.

அச்சூழலிலும் அந்தப்பயம், பயமாகவே இன்றுவரைக்கும் தொடர்கிறது. அப்படித்தான் இயக்க அரசியலும் தன்னைக் கட்டமைத்திருக்கிறது. இதைத்தாண்டித்தான் என்னைச் சுற்றி நடந்த நிகழ்வுகளை மட்டுமில்லாமல் எனக்குள் கொட்டப்பட்டிருக்கும் தரவுகளையும் இந்தப் படைப்பில் சொல்ல வேண்டியிருக்கிறது.

சாண்டில்யனின் நாவல்கள் அனைத்தும் வாசித்திருக்கிறேன், சாண்டில்யனின் பின் தொடர்பாளனெனவும் சொல்லிக் கொள்ளக்கூடிய மனநிலையையும் கொண்டவன். அப்படியிருந்தும் ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’ நாவல் என்பதுதான் சமூகம் பற்றிய கதைகளைச் சொல்ல வேண்டுமென்கிற மனச்சூழலையும் சமூக அவதானிப்பையும் உண்டாக்கிறது.

இது நாவல் அல்ல. ஆனால், நாவலுக்கான கதாபாத்திரங்களையும், அதனது வாழ்வியலையும், வாழ்வியலுக்கான களத்தையும் சொல்வதாக இருக்கிறது. அந்தக் கதாபாத்திரங்கள் இன்றும் வாழ்பவையாகவே இருக்கிறது. அதைவிட நானும் இரத்தமும் சதையுமாக சாட்சியாக இருந்து இத்தரவுகளைச் சொல்கிறேன்.

இங்கு சொல்லப்படுகிற கதாபாத்திரங்களும் நிகழ்வு களமும் காலமும் உண்மைகளான தரவுகளாக இருந்து விடுகின்றது. அதைச்சுற்றி சொல்லப்படுபவை எதற்கும் சரியான,  தகுந்த அத்தாட்சிகளைக் கொண்ட ஆதாரங்கள் கிடையாது. ஆனால், அந்த ஆதாரங்களுக்கான குறிப்புகளை, என்னால் வழங்க முடியும். ஆகவே, இச்சூழலைப் புரிந்து கொள்வது இதை வாசிப்பனுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

இச்சிக்கலைக் கருத்தில் கொண்டு, இதைப் புனைவு தளத்தில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. அதை வாசகனுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய கடமையும் கதை சொல்லியாக எனக்கிருக்கிறது.

எனக்கு தொலைதூரப்புள்ளியாக, சாத்தியப்படுத்த முடியாத விசயமாக இருந்து விடுகிற ஒரு விசயம் நெருக்கமாக இழுத்து வரப்படுவதும் மேலும் அதைச் செய்வதற்கான என் மீதான நெருக்குவாரத்தையும் அழுத்தத்தையும் கொடுத்ததென்பது ‘யாழ்ப்பாண புலனாய்வு’ என்கிற முகநூல் தளத்தில் பார்த்த ஒரு பதிவாகும்.

அப்பதிவு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) யின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளரும் Ex.MP யுமான V.K.ஜெகன் பற்றியதானதாக இருக்கிறது.

இது எனக்குள் இருந்த எங்கிருந்து, எப்படி தொடங்குவதென்கிற தயக்கத்தையும் அதிலிருந்து உருக்கொண்ட தவிப்பையும் தேடலையும் முற்றுப்பெற வைத்து விடுகிறது.

இதை…, ‘யாழ்ப்பாண புலனாய்வு’ என்கிற முகநூலை யார்,  எதற்காக நடத்துகிறார்கள் என்பதை உரிமை கோராத அனோமோதய முகநூல் தளமாகவே யாழ்ப்பாண புலனாய்வு முகநூல் தளம் காணப்படுகிறது. ஆனால், எனக்குள் யார், எதற்காக நடந்துகிறார்கள் என்பது தெரிந்திருந்திருக்கிறது. ஆனாலும் அதை எப்படி தெரிந்து கொண்டேன் என்பது தெரிந்திருப்பதை முன்வைக்கக்கூடிய ஆதாரங்களாக அவை உருமாற்றப்பட்ட சாட்சியங்களாக கிடையாதென்றாலும் அதை முன்வைப்பதில் தகவல் வழங்குபவர்களுக்கு உருவாகக் கூடிய   சிக்கலுக்காக அதைத் தவிர்த்துக் கொள்கிறேன்.

யாழ்ப்பாண புலனாய்வு முகநூல் தளத்தின் உரிமையை தேடிச்செல்வதற்கான தொழில்நுட்ப, சட்ட ரீதியான உதவியை நாடுவதென்பது இன்றைக்கு அது சாத்தியமான காலமென்றாலும் அப்பதிவிலின் பின்னால் இருக்கிற, குறிக்கப்படும் நபரின் விசயம் என்பதால் அதில் அக்கறை காட்டுவதை தவிர்த்து விடுகிறேன். ஏனென்றால், அம்முகநூல் தளம் தேவையா, தேவையில்லையா என்பதை வெகுமக்கள் விசயமாக வைத்து அதைக் கடந்து செல்கிறேன்.

அதுவும் இந்தக் கதைக்கு அவசியமற்றிருப்பதால் அதை நோக்கி நகராமல் கதையைச் சொல்வதன் மூலம் பல கேள்விகளோடு என்னுள் கொட்டப்பட்டிருக்கும் இத்தரவுகளை பொதுவெளிக்குக் கொண்டு செல்வதென்பது என்னளவில் சிறப்பானதாகக் கருதுகிறேன்.

மேலும்…, என்னை மையப்படுத்திய ஒரு அரசியல் சண்டைக் களத்தையும் சண்டையையும் திறக்கவும் ‘வேட்டையன்’ YouTube தளத்தோடு ‘யாழ்ப்பாண புலனாய்வு’ முகநூல் தளத்தையும் அதுபாட்டுக்கு விட்டு விடுகிறேன்.

இன்னொரு விசயம்…, நானே மூத்திரக் குழவிக்கூட்டிற்கு கல்லெறிந்து குத்து வாங்கிக் கொண்டு அதை எரித்தழிக்க நினைப்பதைவிட அம்மூத்திரக்குழவியால் அக்கம் பக்கத்தார் குத்து வாங்கிக் கொளுத்துவதற்கு தயாராகும் சூழல் வரையும் நானும் பொறுமையைக் காத்திடுவோமென்கிற கள்ளச் சிந்தனையும் பொதுவெளியில் பொதுப்புத்தியின் மெளனத்தைக் கலைத்து உரையாடல்களைத் தொடங்கும் நல்லெண்ணமும்கூட இதை மறுபுறம் வைத்துக் கொண்டு நகர்கிறேன்.

எல்லோருக்குமான பொதுவான கேள்வியொன்று எல்லோரிடமும் தொங்கிக் கொண்டிருப்பதைப் பொதுவெளியில் காணலாம்.

இக்கேள்விக்கூடாக பல தரப்பட்ட எண்ணங்கள் என் மீது பலரால் சுவற்றில் பீய்ச்சி அடிக்கப்பட்ட மூத்திரம் மாதிரி பீய்ச்சி அடிக்கப்பட்டதைக் காணலாம்.

இது என் அரசியலுக்குள்ளும் அந்த அரசியல் பயணத்தின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டவர்களும் சம்பந்தப்படாதவர்களுமென இரு தரப்பாலும் செய்யப்பட்டிருக்கின்றன.

அது வேறு கதையாக இருந்தாலும் இந்த உரையாடல் புனைவு அல்லது புதினம் எதற்கானதென்பதை நான் சொல்ல வேண்டுமல்லவா?

அதொரு கோபம்தான். அது யார் மீதான கோபம் என்பதும் அதற்கான காலமும், அது எதற்காக என்பதும் இங்கு முக்கியமானது. அந்த கோபத்தின் விரிவு தளப்பரப்புதான் என் உரையாடலின் களமாக மாறியிருக்கிறது.

அந்தக் கோபம் டக்ளஸில் மையம் கொண்டதும் மற்றும் குவியப்படுத்துவதற்கான காரணமாக இருந்து விடுவது, நான் பயணித்த அல்லது என் அரசியலுக்காக தேர்த்தெடுத்த கட்சியை தலைமையாக இருந்து வழி நடத்தும் பொறுப்பை எடுத்துக் கொண்டதால்தான் டக்ளஸ் மீதான கோபமாக மாறிவிடுகிறது. ஏனென்றால், நான், என் அரசியலில் இருந்து தப்பி ஒடுவதற்கான நெருக்குவாரத்தையும் பயத்தையும் என் மீது வலிந்து தினித்ததாக இருக்கிறது.

அதெப்படி டக்ளஸ் என்கிற தனிநபர் மீதான கோபமாக இருந்துவிட முடியும்?

ஏனென்றால், கட்சி ரீதியான களச்சூழலில் எப்படி என் உரையாடல் ஊடாக ‘டக்ளஸ்’ என்கிற தனிநபர் மீது குற்றம் சுமத்த முடியுமென்பது நான் எதிர் கொண்ட மிக முக்கியமானதாக இருக்கிறது.

இந்தக் கேள்விக்கான பதிலை இப்படியும் விளங்கப்படுத்த முடியுமென நம்புகிறேன். நான் தீவகத்தில் பொறுப்பாளராக இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின் கொழும்புக்கு வருகிறேன். டக்ளஸ், கட்சியின் தலைமையாக என்னை எதிர் கொள்கிற விதம் எனக்கான கட்சியின் நிலையைச் அங்கீகரித்துச் சொல்வதாக இருக்கிறதாக நினைத்திருந்தேன். ஆனால், டக்ளஸ், தான் ஒருவரை சந்தித்து அவருக்கு தான் கொடுக்கிற உணவு உபசரிப்புக்கு என்னையும் அழைத்து செல்வதாகத்தான் என் நிலை கட்சிக்குள் இருந்தது. அது மட்டுமல்ல கட்சியின் தலைமையாக இருந்த டக்ளஸின் அக மன நிலையும் அதுவே நடைமுறையாகவும் இருக்கிறது. இங்கொரு வெளிப்படுத்தலொன்று இருப்பதாக உணர்ந்தேன். அது என்னுள் பல கேள்வியை மேலும் தோன்றுவிக்கிறது. ஏனென்றால், டக்ளஸின் நடைமுறை, செயல்பாடுகளில் ஏலவே என்னிடம் கேள்விகள் உண்டு. அது சாதீயக் கட்டுமானத்தின் செயல் வடிவமாகவும் இருந்ததாக கருதினேன்.

இப்படியான டக்ளஸின் பிறத்தியாருக்கான உணவு உபசரிப்புகளில் கலந்து கொண்டு உணவைத் தின்கிற டக்ளஸின் அழைப்பைப் பெரிதாக நினைக்கிற நிலையும் கூட்டமும் இருந்தது. இதைச் சாதீய சமூகக்கட்டுமானத்தின் உணர்வாகவும் இருப்பதாகக் கருதினேன். அவ்வளவுதான் டக்ளஸ்  கட்சியின் அரசியல் கொள்ளளவாக இருந்தது. டக்ளஸைத் தாண்டி ஏதுவுமே அரசியல் சிந்தனையாக EPDP க்குள் இருந்ததில்லை. டக்ளஸிடம் இருந்து பொறுப்புகளும் மாதாந்த கொடுப்பனவுகள் தொடங்கி தேவைகளின் தீர்வுகளும் பெறுவதாகவே இருந்தது அல்லது டக்ளஸால் மட்டும் சாத்தியமாகும் சிந்தனையாகவே இருந்தது.

இது இயக்கமா, கட்சியா எதுவுமே இல்லாமல் வியாபார நிறுவனம் என்பதற்கான அடையாளப்படுத்தல் நிறையவே இருந்தாலும் ஆண்டவன் பக்தன், ஆள்பவன் அடிமை என்பதாக நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சமான யாழ் மையவாத வெள்ளாளிய மேலாதிக்க மேட்டுக்குடி சிந்தனையைக் கொண்ட அரசியல் அமைப்பு கட்டுமானத்தையே காண முடிந்தது.

90 இன் பிற்பகுதியில் சென்னையில் இருந்து கொழும்புக்கு வந்திருந்தேன். பெரும் எதிர்பார்ப்போடு வந்திருந்த எனக்கு ஏமாற்றமே மிச்சமாகியிருந்தது.

ஒரு சம்பவத்தைச் சொல்லி விடலாம். இலங்கை அரசினால் ஒரு பச்சை நிற ‘ஜீப்’ வகை வாகனமொன்று கட்சி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

கொழும்பு சிறிபால லேன் அலுவலகத்தில் ஒரு நாள் அந்த பச்சை ஜீப்பின் முன் பக்கத்தில் உள்ள passenger seat/பயணி இருக்கையில் பின்னாளில் தினமுரசு ஆசிரியர் அற்புதனென அழைக்கப்பட இருக்கிற கட்சியின் அரசியல் செயலாளரெனக் குறிக்கப்பட்ட ரமேஷ் உட்கார்ந்திருந்தார்.

கையில் ரிவோல்வர் வகை கைத்துப்பாக்கியோடு பின் கதவால் நான் உள்ளே ஏறிக்கொண்டேன். ஏலவே, ‘தடியன்’ கருணா என மூன்று பேர் உட்கார்ந்திருந்தனர். ஜீப் சிறிபால லேன் அலுவலகத்தைவிட்டு வெளியே பறந்தது.

ஜீப் எங்கு போகுது, எதற்காகப் போகுது என்பது தெரிந்திருக்காவிட்டாலும் யாரையோ அள்ளப் போகிறோமென்பது தெரிந்திருந்தது.

ஐலண்ட் லொட்ஜ்க்கு கிட்டக்க நெருங்கிற பொழுது ரமேஷ் “அதோ போறான்” வெளியே தன் கையை நீட்டியவாறு கத்தினார்.

வாகனம் ஒடிக் கொண்டிருந்தது. ரமேஷின் கை யாரைக் கை காட்டுகிறது தெரியாத நிலையிலும் பின் பக்கமாகக் காற்சட்டைக்குள் செருகியிருந்த ரிவோல்வரை எடுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த ஜீப்பில் குதித்து வெளியே ரமேஷின் கை காட்டும் திசையை நோக்கி இலக்கு தெரியாமல் ஓடத் தொடங்கவும் ஜீப் சறுக்கென்ற சத்தத்துடன் சடரெலென நின்றது.

முன் பின் குலுக்கலோடு ரமேஷ் Seat இல் நிலை கொள்கிற பொழுது மற்ற மூவரும் இறங்கி வெளியே வந்திருந்தனர்.

வீதியில் போவோர் பக்கவாட்டில் திரும்பி பார்ப்பதும் வேகமாக நடப்பதுமாக ஜலண்ட் லொட்ஜ் முன் பக்க வீதி ஒரு சில நிமிடங்களில் வெறிச்சோடிப் போயிருந்தது.

அன்றிரவு என்னுள் சில கேள்விகளை என் இயக்க, கட்சி வாழ்க்கை சார்ந்தெழுந்திருந்தன. அதில் மரணம் சார்ந்த பயமோ, சமூகம் சார்ந்த பயமோ, அவமானம் பற்றிய எந்தவொரு சிந்தனை கிடையாது. மாறாக, என்னுடைய இருப்பும் வளர்ச்சி பற்றியதாகவே இருந்தது. என் வாழ்வியலில்கூட வெகுமக்கள் சார்ந்த சிந்தனையையொட்டிய பார்வை இருந்ததா என்றால் இல்லை. எல்லாமே என்னை மையமாக வைத்தே முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதுகூட இன்று நான் பேசுவதற்கான களத்தை காலம் கடந்தும் கொடுத்ததாக நம்புகிறேன். என் உயிர் வாழ்தலும் அதனால்கூடவெனச் சொல்ல முடியும். நான் தீவகம் நோக்கிப் பயணமாவதைத் தீர்மானிக்கும் கணப்பொழுதில் நித்திரைக்குள் அமிழ்கிப்போய் விடுகிறேன்.

தீவகச்சூழலென்பது இராணுவ முகமாகவே இருந்தது. ஊர்காவற்றுறையின் துறைமுகத்தோடு கிழக்கில் Hospital லும் மேற்கில் Camp Road  மாக தெற்கில் சண்முகானந்தா வித்தியாலயம், கரம்பன் சந்தி வெளியாலுமாக இருந்த இராணுவ முகாம் பின்னாளில் Kayts, மண்டைதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, ஏழுவைதீவு, காரைநகர் என கடல் படை, இராணுவம், EPDP துணை இராணுவமென்பதாக கட்டுப்பாட்டுச் சூழலாக மாறிவிட்டிருந்தது.

நிறைய திருமணமான தோழர்களும் குடும்பத்தோடு அந்த தீவக இராணுவ முகாமுக்குள் குடியேறிகளாக மாறிவிட்டிருந்தனர்.

இந்தக் குடும்ப தோழர்களுக்கான குடும்பங்களைப் பாராமரிப்பதற்கான எந்தவொரு சரியான திட்டமிடல் எதுவுமிருந்ததில்லை. ஆனால், பாதுகாப்புக்கான இராணுவ செயல்பாடுகள் முதன்மைப்படுத்தி சாராசரி திருமணமான ஆண், பெண் சார்ந்த உணர்வு, உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவமற்று ஏதோச்சதிகாரப் போக்கே காணப்பட்டது.

சற்று முரண்பாடான நடைமுறைச் சிக்கல் பாலியல், காதல், திருமணம், பெண் போன்ற சொற்களின் அடையாளப்படுத்தலில் அமைப்பென்பதைவிட தலைமைத்துவ வட்டாரத்தில் காணப்பட்டது.

இது பற்றிப் பேசத் தொடங்குகிற பொழுது கல்பனா, மகேஸ்வரி வேலாயும் போன்று நீளும் பெண் அடையாளங்களைத் தாண்டி உரையாடலை நகர்த்திவிட முடியாது. ஏனென்றால் பட்டவர்த்தமான தலைமைக்குள் சாக்கடையாகத் தேங்கிக் கிடந்த பூர்சுவா குணபண்பியலை எப்படி அனுசரித்திருந்தோமென்கிற மனப்புழுக்கத்திற்குள் வந்து நிற்க வேண்டியிருக்கிறது.

எங்கட அமைப்பிலும் ‘பொட்டம்மான்’ இருந்தார். அவரோட செயல்பாடு எதுவெனப் பேசுவதைவிட களுத்துறை சிறைச்சாலைச் சம்பவத்திற்குப் பின்னாடி அந்த எதிர்காலம் இருட்டாகிப்போன பிழைப்பாரா என்ற தவித்த இரு நாளில் பார்க் ரோட் அலுவலகத்தின் மேல் மாடி அறையில் பொட்டம்மான் கொட்டித் தீர்த்த கதைகள் நிறைய இருக்கின்றன.

அதன் பின் அவர், அதுதான் பொட்டம்மான், தன் Duty Free MP வாகனமான டயோட்டா லங்குரோஷரில் கர்ப்பினிப் பெண்ணொருவரை ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்குச் செல்லப் போவதாகச் சொல்லிப் போனார். அதற்கான மூலக்கதையையும் சொல்லியிருந்தார். அந்தக் கதை ஏழுமலை சொன்ன கதையின் தொடர்ச்சியாக இருந்தது. அதுகூட 2000 ஆம் ஆண்டளவில் கொழும்பின் புறநகரொன்றின் வீட்டோடு தொடர்புபடுத்துவதாக இருக்கிறது.

கார்த்திக், குழுவுக்கான பொறுப்பாளராக இருந்தாலும் கார்த்திக்  மண்டையன் குழுவின் பெயரால் இங்கு அறியவும் அடையாளப்படுத்தவும் செய்கிறார்.

இவ்வடையாளப்படுத்தலென்பது இங்கும் கார்த்திக்கின் கையில் பனையோலையால் பின்னப்பட்ட பைக்குள் பனையோலை வெட்டும் தீட்டிய கூரான வெட்டுக்கத்தியோடு காணப்படுபவராகச் செய்கிறது.

அந்த வெட்டுக்கத்தி நனைந்திருந்த குருதியில் காற்றில் கரைக்கப்பட்ட மூச்சுக்காற்றின் கதைக்குள் கார்த்திக்கும் திருகோணமலையில் ஒரு பின்னிரவில் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதால் மூடி மறைக்கப்பட்ட கதைகளாக மாறி விடுகின்றன.

இக்கொலைகள்…, கட்சிக்குள் தலைமை அதிகாரத்தின் மீதான கேள்விகளற்ற ஸ்தரத்தன்மையை உறுதிப்படுத்தின. ஆனால், தலைமையின் ஏதோச்சதிகார ஜனநாயக மறுப்புகள் பற்றிப் பேசுகிற மறுக்கிற நிலையையும் சேர்ந்து கட்டமைக்கின்றன. இவைதான் பின்னாடி தலைமையின் அனைத்து நடைமுறைகளையும் தீர்மானிக்கின்றன.

எனக்கும் காதல் இல்லையென்று சொல்லி நகர்ந்துவிட முடியும். ஏனென்றால், அது என்னைக் காதல் செய்தவர்களாகவே இருந்து விடுகிறார்கள். அதில் நானும் உண்மையாகக் காதலித்தேனா என்பதைவிட இயக்கத்தைவிட்டு வெளியேறும் வழியாகப் பயன்படுத்த முயன்ற முயற்சியாக அமைக்கிறேன். 

இதுகூட என்னுள்…, என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி சிந்தனையே காரணமென்பதை நான் மறுக்க மாட்டேன். அது பற்றித் தெளிவாகப் பேசுவேன்.

கட்சியினதும் என்னுடையதுமான பெரும் பலகீனமென்பது காதலை வாழ்வியலின் ஓர் அங்கமென்பதையும் போராட்டத்தின் அடிநாதமான மென் நுண் உணர்வுகளின் ஈரலிப்பான விளைநிலைமென்பதை ஒத்துக் கொள்ள மறுத்ததாகும். 

இது கட்சிக்குள் காதல் வெற்றியாக்குவதற்கான காரணிகளை இல்லாதாக்குகிறது. அந்த வினைதிறன் கொள்ளளவு என்னிடமோ கட்சியிடமோ இருந்ததில்லை; மாறாக, முழுமையும் தலைமையிடமே இருக்கக் காணப்படுகிறது. அது தலைமை தன்னை ஒரு எம்.ஜி.ஆராகவோ, மக்கள் திலகமாகவோ, கட்டை பிரமச்சாரியாகவோ கட்டமைக்க அச்சூழலைப் பயன்படுத்துகிறார். அதற்கு தலைமை தன்னைத் தயாராக்கினாரோ என்பதே சுவரசியமான பெரும் கதையாடல் பகுதியாக இருக்கிறது.

அதே நேரத்தில் கட்சியின் தலைமையிடம் அது இல்லையென்றால் காதலுக்கான அனுகூலமான கட்டமைப்பும் உரையாடலும் மனநிலையும் கட்சியின் அடிப்படையில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி சிந்தனை என்பது தன் பாலியல் இச்சையை, வேட்கையை அதை உடல் வெக்கையைத் தணிப்பதான கள்ளப்போக்கொன்றை இங்கும் காணலாம். அதில் விட்டில் பூச்சிகளாக தேவையென்கிற இருட்டில் விம்ப அரசியலெனும் விளக்கின் ஒளியில் தங்களை மாய்த்துக் கொள்வதான பெண்களின் நிலையைப் பேசாமல் சென்றுவிட முடியாது.

மாறாக, இப்போக்கு ஒரு புள்ளியில் உடைக்கப்படுகிறது. ஆனால், அதைக் கையாள கட்சி திரணியற்று திகைக்கிறது. ஏனென்றால், கட்சிக்குள் கட்டமைத்திருக்கிற தூய்மைவாதமென்பதைவிட ஆணாதிக்கச் சிந்தனையென்பது பெண் இரண்டாம் பட்சமாகவும் பாலியல் பற்றிச் சிந்திப்பவன் பெண் சுக விரும்பியென்கிற ஆணாதிக்க பிற்போக்குவாதம் மேலோக்கிய நிலை காணப்பட்டது.

வடலி வளர்த்து பனையாக்கிக் கள்ளு குடிக்கிறதென்கிற கதைக்கு ஏற்ப நடைமுறைச் செயலையும் கொண்ட நபர்களை தனக்கு நெருக்கமாக வைத்திருந்த தலைமைத்துவத்தைக் கொண்ட கட்சியென்பதுதான் இதைவிட வேறெங்கு சென்றுவிட முடியும்?

சினிமாவில் பார்த்த கிராமத்து பாண்ணையார் தன் பாலியல் தொடுப்புகளை தன்னோடு கையாட்களுக்கு கல்யாணம் கட்டி வைக்கிறதான காட்சிகளை அச்சொட்டாக பார்க்கக் கூடியதாக இருந்தது. அதைவிட தன் தொடரும் உறவுக்கு பங்கம் விளைவிக்கிற அல்லது தெரிந்து கொண்டு அலுப்புக் கொடுக்கிறவனைத் தீர்த்து கட்டி விடுவதுமான சம்பவங்களைக் கேட்கிற பொழுது திகைப்பாக இருந்தது. இவைகளைப் பேசுவதும் கதைக்கு சுவாரசியத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையென்பது சாதீயச் சமூகக் கட்டுமானத்திற்குக் கூடாக தன் அதிகார மையப்படுத்தலை பெண் என்பதில் தொடங்கி கீழ் நிலைச் சாதீய மனிதர்களை அடிமைகளாகவும் அடியாட்களாகவும், சேவகர்களாகவும் கட்டுமான அளவிலும் படுகொலைகள் செய்பவர்களுமாக மெளனிகளாக ஏற்றுக் கொள்ளுதலையும் செய்தது போலவே கட்சிக்குள்ளும் அதே சிந்தனை அதே செயல்பாட்டில் மையப்படுத்தப்பட்ட தலைமையாக உருவாக்குவது அவர் மனதளவில் நடாத்தப்படுகிறது. இதுவே, 97 களுக்குப் பின்னான கட்சியின் போக்கு நிலைப்படுத்திச் செல்கிறது.

இதில் சேதாரப்படுத்தப்படுகிற, சுரண்டப்படுகிற உழைப்பென்பதைத் தாண்டி மற்றவர்களை அங்கீகரிக்க மறுக்கும் யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்க மனோநிலை மற்றும் அதற்கான கூறுகளின் வடிவங்களைப் பேசுவதுதான் என்னுடைய படைப்புக்கான களமாகப் பார்க்கிறேன்.

இதில் கட்சி அரசியலைத் தாண்டி சமூக பொதுவெளியே இக்கூறுகளாக நிறைய இருக்கின்றன. அவைகளைப் பேசாமல் கட்சி மற்றும் இயக்க சூழலை நான் பேச முற்படுவதில்தான் என் சக அரசியல் பயணிகளோடு எனக்கு ஏற்படுகிற முரண்பாட்டின் தொடக்கமாக அமைகிறது.

இவையே அவர்களிடம் இருக்கக்கூடிய கேள்விகளாக இருக்கலாம். ஆனால், கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ எனும் படைப்புக்குப் பின்னாடி 40 வருடங்களுக்குப்பின் ஓர் அமைப்புக்குள் எதிர் நிலை விமர்சனத்தில் உரையாடும் படைப்பாக ‘வேட்டையனின் படுகொலை அரசியல்’ என்கிற படைப்பாக வெளிவருகிற பொழுது எல்லோராலும் உணரப்படலாம். மாறாக, இயக்க சூழலையும் ஆயுதப் போராட்டத்தையும்  அப்போராட்டம் உருவாக்கிய போருக்குள் மக்களுமென்கிற தளத்தில் போராட்ட சார்பு நிலை படைப்புகளாக வந்திருக்கின்றன. இல்லையென்றால் எதிர் முகாமைப் பற்றிப் பேசுபவையாகவே வெளிக் கொணரப்பட்டிருக்கின்றன.

சமூகப் பொதுவெளியில் சாதீய மேலாதிக்கம் தன் பாலியல் இச்சையை, தேவையை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்கிறதென்பது செம்பாட்டு சிறு நிலப்பிரபுத்துவ சூழலில் நிறைய உண்டு.

இந்த செம்பாட்டு சிறு நிலப்பிரத்துவ சூழலில் நிலமற்ற சாதீய ஒடுக்குமுறைக்குள் தவிக்கும் பனையேறிச் சமூகத்தில் தனிமனிதனாக 80 களில் அரசு உத்தியோகத்தைப் பெற்றுவிட போராடிய அந்த இளைஞனைப் பற்றிப் பேசப்படுவதென்பதுதான் அதிகாரத்திற்கெதிரான குரலாக இருந்து விடுகிறது.

அரசியல் விழிப்புணர்வு அற்ற சமூகமொன்றை தமிழ் ஆயுதப் போராட்ட அரசியல் எம்மிடையே உருவாக்கிவிட்டிருக்கிறது. இது கட்சி அரசியலை மட்டுமல்ல சமூக தனிநபர் வாழ்வியல் தளங்களில் பெரும் மாற்றத்தை சுய நலனின் முன்நிபந்தனையாக பிற்போக்குத்தனங்களையும் பிழைப்புவாத போக்கையும் சமூகத்திற்குள் சுதந்திரமாக உலாத்தித்திரிய கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

தமிழ் அரசியலில் இருந்தோருக்கும் இருப்போருக்கும் அரசியல் விழிப்புணர்வு இருந்ததா என்பதில் எனக்கு முரண் எண்ணப்பாடே இன்றைக்கு இருக்கிறது.

ஒரிரு சில பேர்களைச் சித்தாந்தம், பொருளாதாரம், அரசு அமைப்புச் சட்டம், ஆட்சி முறைகள், மாக்ஸிசம், கம்யூனிஸம் எனக் கற்றவர்கள், படித்தவர்கள், தெரிந்தவர்கள், உணர்ந்தவர்களெனப் பார்த்திருக்கிறோம், பார்க்கிறோம். ஆனால், இவர்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வு இருந்ததா என்றால் இல்லையென்பேன். மாறாக, மற்றவர்களுக்குப் போதிக்கிறவர்களாகவும், தனக்கு இதெல்லாம் தெரியுமென பறை சாற்றுபவர்களாகவும், தன் தொழிலுக்காக உபயோகிப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

வாழ்க்கையின் அனைத்து கூறுகளிலும் அரசியல் இருக்கிறது. இதைப் புரிந்திருந்தார்களா என்றாலும்கூட இல்லையென்பதாகவே எனக்குப் படுகிறது. ஏனென்றால், நான் உட்பட கட்சியொன்றுக்குள் சகதிக்குள், அது சமூக சாக்கடையின் தொடர்ச்சியென்பதை புரிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லாமல், குரலெழுப்புவதற்கான அரசியலும் இல்லாமல் இருந்திருக்கிறோமென்றால் எங்கட அரசியல் விழிப்புணர்வின் மீதான கேள்வியைத்தானே எழுப்ப வேண்டும்…?

சமூக அடக்குமுறை, ஒடுக்குமுறை என்பதை எங்கனம்,எவ்வாறு இயக்க ஆயுதப் போராட்ட அரசியலில் பயன்படுத்துகிறோம் என்பதைக் கேட்கிற பொழுதுதான் எங்கட அரசியல் விழிப்புணர்வு சந்தி சிரிக்கிறதாகிறது.

எங்களிட்ட ஒரு விசயம் இருக்கிறது. அது என்னவென்றால் மனச்சாட்சி, இந்த மனச்சாட்சியைப் பற்றி யாருமே இன்றைக்குப் பேசுவதில்லை. ஆனால், இன்றைக்கு இந்த மனச்சாட்சி அவசியமாக இருக்கிறது. ஏனென்றால், நாங்கள், எங்களை சுயவிமர்சனம் செய்து கொள்கிறதிற்கு அத்தியாவசியமாக, இன்றியமையாததாக இருக்கிறது. ஆகவே, ஒவ்வொருவருடைய மனச்சாட்சிகளைத் தட்டியெழுப்புவதும், பேச வைப்பதுமே இந்த உரையாடலின் நோக்கமாக இருக்கிறது. இதைவிட வேறொரு காரணமும் நோக்கமும் கிடையாது. ஆனால், நீங்கள் எடுத்துக் கொள்ளும் தப்பிதமான முடிவுகளுக்கு நான் பொறுப்பாளியுமல்ல. உங்களில் எதாவது மாற்றத்தை, இந்த புனைவு ஏற்படுத்துமாயின் அது எதுவென்றும், என்னவென்றும் பார்த்து உங்களைச் சரி செய்வதோ, எதிர்வினை செய்வதோ உங்களுடைய அரசியல். ஆனால், அதற்காக, என்னை மெளனமாக இருக்கச் சொல்வதோ, மெளனிக்கச் செய்வதோ ஜனநாயகமாக இருக்காது.

Leave a Reply