நிராசையாகும் ஒடுக்கப்படும் மக்களின் அதிகாரக்கனவு…?

“…ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து எங்களை அனுசரிப்பவர்…” என்கிற சொற்களின் இரயில் வண்டித் தொடரைக் கடக்கிற பொழுது ‘அப்பா’ என்பது அழுத்தமாகச் சொல்லப்படுவதாக உணர்ந்தேன்.

என் உள்ளூணர்வு ஏதொன்றை நினைவுக்குள் இருந்து புதிய அரசியல் உரையாடலுக்காக வெளித்தள்ள முயன்று கொண்டிருந்தது.

என் மூளை, என் நினைவடுக்கில் இருந்து இந்த ‘அப்பா’ எனும் சொல்லின் அரசியல் பயன்பாடு பற்றிய செய்திகளைத் தொகுப்பாக்குவதற்காக படு வேகமாகத் தொழில்ப்பட தொடங்கியது.

இந்த ‘அப்பா’ என்கிற சொல்லுக்கும் ‘ஐயா’ என்கிற சொல்லுக்கும் இருக்கிற அரசியல் பயன்பாடும் மற்றும் யாழ்மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையில், நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையில் சமூக பொருளாதார அரசியல் பயன்பாடும் என்னவாக இருக்கிறதென்பதன் இன்றைக்கான ஆய்வு மிக முக்கியமானது.

இந்த ‘அப்பா’ என்கிற சொல் அரசியலை தேசிய மக்கள் சக்தி (NPP) க்குள் கண்ணுற்றேன்; அதிர்ச்சியடைந்தேன். 

இங்கு ‘அதிர்ச்சியடைந்தேன்’ என்பது மிகைப்படுத்தலாகத் தோன்றலாம். ஆனால் உண்மை அதுதான்; ஏனென்றால், நானே இன்னமும் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையில் இருந்து விடுபடவில்லை.

நான் முதன் முதலில் எனக்கு விபரம் தெரிந்த நாட்களில் அல்லது எனக்கு புறச்சூழல் மீதான அவதானிப்பு தொடங்கிய காலத்தில் இருந்து அரசியலுக்குள் தன் தலைமையை ‘அப்பா’ என்கிற சொல்லின் மூலம் விழித்தலென்பதை 1987 இல் EPDP இற்குள் பார்க்கிறேன்.

பின்னாடி 2020 இன் பின் EPRLF சேகரனோடு ஏற்படுகிற அரசியல் உரையாடலுக்குள் ‘அப்பா’ வின் அரசியல் கட்டுமானத்தின் நதிமூலத்தை அவருக்குக் கூடாக அறிந்து கொள்ள முடிகிறது.

மட்டக்களப்பு சிறை உடைப்புக் கூடாக இந்தியா தமிழகம் செல்கிற டக்ளஸ், EPRLF இன் இராணுவத் தளபதியாக யாழ்ப்பாணம் திரும்புகிறார்.

யாழ்ப்பாணத்தில் EPRLF இன் பெண்கள் முகாமுக்குள் தன் அலுவலகத்தை அந்தப் பெண்களின் பாதுகாப்பு நலனில் திறக்கிற டக்ளஸ் மீதான ‘அப்பா’ கதாபாத்திர அரசியல் விம்பக் கட்டுமானம் அங்கிருந்துதான் தொடங்குகிறதெனச் சேகரன் கூறுகிறார்.

சென்னையில் சூளைமேட்டுப் பகுதியில் EPDP க்கான பெண்கள் தங்கியிருக்கும் வீடொன்று இருந்தது. அங்கு சில பெண் உறுப்பினர்களும் சில  ஆண் உறுப்பினர்களின் மனைவிகளும் இருந்தனர்.

முதன் முதலில் அந்த வீட்டுக்கு நான் போவதென்பது ஒரு மோட்டார் சயிக்கிளுக்குப் புதிய இலக்கத் தகடு எழுதுவதற்காகச் சென்றிருந்தேன்.

அஃதொரு இரவுப் பொழுதாகும்; என்னைக் கூட்டிச் சென்ற ஜீவன் ஒரு மோட்டார் சயிக்கிளைக் காட்டி அதில் இருக்கும் தகடு மாற்றி எழுதப்பட வேண்டுமென்றும் அந்த எழுதப்பட வேண்டிய இலக்கத்தையும் தந்து விட்டுச் சென்றிருந்தார்.

அந்த மோட்டார் சயிக்கிள் வீட்டுக்கு முன்னாடி நிறுத்தப்பட்டிருந்தது. நானும் ஜீவனும் கேட்டை திறந்து கொண்டு நுழைகிற பொழுது வீட்டு முன் வாசல் கதவைத் திறந்து கொண்டு பெண் தோழர் வெளியே வருகிறார்.

அவரை நான் கே.கே.நகர் வீட்டுக்கு வருகிற பொழுது பார்த்திருக்கிறேன். அந்தப் பெண் தோழரின் பெயர் கல்பனா. நான் முன் பின் இருந்த இலக்கத் தகடுகளைக் கழட்டி பழைய எழுத்துக்களை இல்லாதொழிக்க தகடு முழுவதையும் சுரண்டத் தொடங்கியிருந்தேன்.

அப்பொழுது தேநீர் தருவதற்காக வெளியே வந்த மற்றொரு பெண் தோழர் “அப்பாத்தோழர்” என்கிற சொல்லாடலைக் கொண்டு டக்ளஸ் அங்கு நிற்கிறாரா என்ற விசயத்தை அறிய முற்படுகிறார்.

86 இல் யாழ்ப்பாணத்தில் பயிற்சி முடித்துக் கொண்டு தீவகத்திற்கு திரும்பிய பெண் தோழரிடம் ‘அப்பாத்தோழர்’ என்கிற சொல் பயன்பாட்டை முதன் முதலில் சீலன் இராமமூர்த்தி தான் பார்த்ததாகக் கூறுகிறார்.

டக்ளஸ் டெல்லி போன்ற இடங்களுக்குச் சென்று திரும்புகிற பொழுது முறுக்கு, மிக்சர் போன்ற தின்பண்டங்களோடு வருவதை நான் அவதானித்திருக்கிறேன்.

ஒரு தடவை சிங்கப்பூருக்கு டக்ளஸ் போய் வந்ததாக ஞாபகம் வருகிறது. அப்பொழுது வித விதமான அமெரிக்கா இராணுவம் பயன்படுத்துகிற காம்பளக்ஸ் கலர் டிசைனோடு கூடிய ரோச் லைட்டுக்கள் சைஸ்களிலும் சின்னது பெரிதென வாங்கி வந்திருந்தார்.

அமெரிக்கா இராணுவம் இந்த விதமான ரோச் லைட்டுக்களை பயன்படுத்துகிறதென்பதை ஆங்கில சினிமாப் படங்களைப் பார்ப்பதால் கிடைத்திருந்த தரவாகும்.

அந்த ரோச் லைட்டுக்களை தன்னை மையப்புள்ளியாக வைத்துக் கொண்டு கீழ் நோக்கிய வரிசைப்படுத்தலில் சைஸ் அளவில் பெரிதில் இருந்து கீழ் நோக்கியும் தான் தனித்தனியாகக் கூப்பிட்டு கொடுத்துக் கொண்டிருப்பார்.

27 வருடங்களாக என்னை வளர்த்து ஆளாக்கிய எனது ‘வளர்ப்பு தகப்பனார்’… என்பதாக EPDP இன் 2K தலைமுறை பெண் அரசியலாளர்  Anu Chandru தர்க்கமொன்றில் முன்வைப்பதைக் காண்கிறேன்.

இது ஒரு விதமென்றால் ‘தோழமைத்தலைமை’ என்கிற சொல் அரசியலை 80 இன் தலைமுறைச் சேர்ந்தவர் கண்டெடுக்கிறார் என்றால் எவ்வளவு தூரம் EPDP கட்சியென்பது எந்தவிதமான அரசியல்உரையாடலை அகவயமாகச் செய்யவில்லையென்பது புலனாகிறது.

‘தோழமை’ என்பதற்குள் ‘தோழமைத்தலைமை’ என்கிற இப்படியான சொல்லாடல் இருக்க முடியாதென EROS இன் ஆரம்ப செயல்பாட்டாளரான கிருபா கூறுகிறார்.

“மேற்குலக நாடுகளைப்போல தனிநபரொருவரை உறவு முறைச் சொல்லாடலைத் தாண்டி பெயரைச் சொல்லி அழைப்பதுபோல டக்ளஸை அழைக்க இந்த நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையின் எச்சங்களைக் காவிக் கொள்ளும் இவர்களுக்குப் புதிய சொல்லொன்றுதேவைப்படுக்கிறது. அதற்காக இச்சொல்லை கண்டெடுத்து வருகிறார்கள்” எனச் சீலன் இராமமூர்த்தி கூறுகிறார்.

இங்கு ‘அப்பா’ என்பது தலைமுறையைக் கடந்து செல்கிற பொழுது ‘பெரிய அப்பா’ ஆக அனிச்சையாக உரையாடலில் மாறுவதை உற்று நோக்கலாம்.

2K தலைமுறையின் மூத்தவர்களெனச் சுட்டிச் சொல்லக்கூடிய இன்றைய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் மக்களதிகாரப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்கிற யாழ் கல்விச்சமூகத்தைச் சார்ந்த Rajeevan Jeyachandramoorthy தன் Mar 16, 2025 முகநூல் பதிவில், //… தோழர் சந்திரசேகரம் ஐயா. மிகவும் மனித நேயம் மிக்கவர். குழந்தை மனம் கொண்டவர். ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து எங்களை அனுசரிப்பவர்…// என்கிற உரையாடலுக்குள் ‘அப்பா’ என்கிற சொல் அரசியலைப் பயன்படுத்துகிறார்.

Rajeevan Jeyachandramoorthy தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். ஆனால், இந்தச் சொல்லாடல் அரசியல் மனநிலை தேசிய மக்கள் சசக்தி NPP) க்குரியதல்ல; ஆனால், இவரிடம் எவ்வாறு வெளிப்படுகிறதென்கிற கேள்வி எழுகிறது. ஏனென்றால், ‘Comrade’ அரசியலுக்குள் ‘அப்பா’ அரசியல் எப்படி சாத்தியமாகுமென்கிற கேள்விதான் எனக்குள் எழுகிறது. இந்தக் கேள்வியை என்னுடைய ‘தோழர்’ கட்சி அரசியல் அனுபவமே கொடுக்கிறது.

இந்தக் கேள்வியோடு Rajeevan Jeyachandramoorthy யின் முகநூலைத் துளாவி மேய்ந்த பொழுது ஒரு விசயம் கண்ணுற்றேன். அதுவே இந்தச் சொல்லாடல் அரசியல் இவரிடம் தொத்திக் கொண்டு வந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

//…தலைமைப் பதவியை பொறுப்பெடுத்து கட்சியை துரிதமாக வளர்த்தெடுத்து, பல இளையோரை உள்வாங்கி கட்சிக்கு நீடித்து நிலைத்து வேலை செய்யும் ஆற்றல் மிக்க இளம் தலைவர்களை உருவாக்கி அவர்களிடம் கட்சியை ஒப்படைத்துச் செல்லுங்கள்…// என்பதாக, Rajeevan Jeyachandramoorthy தன் Jan 18, 2024 முகநூல் பதிவில் ‘சுமந்திரன் அவர்களிடம் ஒரு வேண்டு கோள்’ என்பதற்கு கீழ் இக்கோரிக்கையை Jan 21, 2024 இல் நடக்கவிருந்த தமிழரசுக்கட்சியின் தலைவருக்கான தேர்தலுக்கு முன்னதாக முன்வைத்திருக்கிறார்.

தமிழரசுக்கட்சி MA.சுமந்திரனை அரசியல் குருவாக, ஆதர்ச புருஷனாக, முன்மாதிரியாகக் கொள்கிற மனநிலைக்கும் அரசியலுக்கும் மாற்றமென்பதைவிட மாற்றீடாக இருந்து விடுவதில் தமிழ் மக்களின் குறிப்பாக யாழ்ப்பாணத்து மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவதில்இந்தச் சொல்லாடல் அரசியல் நிகழ்த்தப்படுகிறது.

‘அப்பா’ என்பது போலவே இன்னுமொரு சொல்லான ‘அம்மான்’ என்பதும் தமிழ்த்தேசிய அரசியலில் பிரபலமானது. இன்னொருவருரோடு உரையாடுகிற பொழுது ‘பெரிய ஜயா’ என்ற சொல் அரசியல் PLOTE க்குள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

இந்த சொல் அரசியல் என்பது வால் பிடிக்கும் அரசியலாகத்தான் தமிழ்த்தேசிய அரசியலுக்குள் இருந்து வருகிறது. அதெப்படி தேசிய மக்கள் சக்தி(NPP) க்குள்ளும் வந்து நிற்கிறதென்பதற்கு பெரிய விஞ்ஞான விளக்கமெல்லாம் அவசியமற்றதென்பதே என் வாதமாகும்.

டக்ளஸ், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், MA.சுமத்திரனை நிராகரிக்கிற யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் NPP யையும் அதற்கு நிகராக கஜேந்திரகுமார், டொக்டர்  அர்ச்சுனா, சிறிதரன் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையின் எச்சமாக இருக்கக்கூடிய யாழ்மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையின் குடும்பக் கட்டுமானத்தின் ‘அப்பா’ என்கிற விம்ப அரசியலை நிராகரிப்பதாகத்தான் NPP யின் தெரிவு இருக்கிறதெனலாம்.

இங்கு நிராகரிக்கப்பட்ட சூழலுக்கும் முற்போக்கு பாத்திரம் வகிப்பார்கள் என்கிற தெரிவு செய்யப்பட்ட சூழலுக்கும் எந்தவித வேறுபாட்டையும் காண முடியாமல் போய் விடுகிறது.

‘தோட்டக்காட்டான்’, ‘வடக்கத்தையான்’, ‘கப்பலில் வந்தவன்’, ‘வயித்து வலியை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக்கூடாது’ என்பதாகச் சொல்லும் யாழ்மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனைக் கட்டுமானம் எதற்காக தன் ‘அப்பா’ என்கிற அரசியல் முதல் மரியாதையை Ramalingam Chandrasegar கொடுக்கிறதென்கிற இயல்பான அரசியல் கேள்வியை எழுப்புவதில் எனக்கு காத்திரமான வெகுமக்கள் அரசியல் கேள்வி ஞானம் இருப்பதாகக் கருதுகிறேன்.

தமிழ் சிறுபான்மைச் சமூகத்திற்கான அரசியல் தீர்வைப் பற்றி இலங்கைக்குள் பேசத் தயங்கும் யாழ்மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையானது தமிழ்த்தேசியத்துக்குள் யாழ்மையவாத தலைமைக்கான தீர்வொன்றை வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்குக் காண இந்த ‘அப்பா’ என்கிற அரசியல் முதல் மரியாதையை தங்களுடைய காழ்ப்புணர்வுகளை மூடி மறைத்துக் கொண்டு Ramalingam Chandrasegar க்கு வழங்குகிறது.

மக்களதிகாரப் பிரதிநிதித்துவத்தில் கல்விச்சமூகத்தின் பங்கெடுத்தலென்பதே இலங்கை அரசுக்குள் புரையோடிப் போயிருக்கும் ஊழலை ஒழித்துவிடுமென்கிற JVP மற்றும் NPP இன் கருத்தோடு உடன்படும் யாழ்மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையில் அப்புகாத்துமாரே பாராளுமன்றம் போகத் தகுதியானவர் என்கிற போக்கும் மிக மிக இலகுவாக NPP க்குள் தன் மாற்றீட்டைச் செய்ய முடிகிறது.

தேசிய மக்கள் சக்தி(NPP) யும் அகவயமாக தமிழ்ச் சமூகத்தில் இருக்கக்கூடிய சாதீய, பிரதேச, வர்க்க, கட்சி விடயங்களைப் பேச மறுத்து வாக்கு அரசியலை முன்னகர்த்தி தமிழ் அதிகாரத்தைக் கைப்பற்றும் போக்கில் தமிழ் தோழமை அரசியலுக்குள் காவு கொடுக்கப்பட்டதுபோலவே ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரக்கனவும் இங்கும் ‘அப்பா’ அரசியலுக்குள் நிராசையாக்கப்படுகிறது.
                                  – Nixson / Mar 18, 2025