நீதியின் குரல் அரசியல் செல்ல வேண்டும் என்பது கேட்பதற்கு சர்க்கரை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையென இனிமையாக இருக்கும்; நல்லாவும் இருக்கும். அதைவிட நீதி, தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளத் தேர்வு செய்கிற வாகனம் எதுவென்பது முக்கியமல்லவா?
“நாங்கள் வீரத்தில் எப்பொழுதும் சளைத்தவர்கள் அல்ல என்பதை எப்பொழுதும் எங்களுடைய மண் காட்டிக் கொடுத்தது.”
மேடையில் மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் குரல் ஒலிக்கிறது. அரங்கத்தில் கை தட்டலும் வீசில் அடித்தலும் ஆக்ரோஷத்தையும் ஆர்பரிப்பையும் ஏற்படுத்துகிறது.
காணொளி தொடங்குகிறது.
மாகாண சபைக்கான முன்னுரையொன்று நாபாவின் முகத்தைக் காட்டிக் கொண்டு பெண் குரலில் தொடர்கிறது.
தோழர் நாபா, மாகாண சபை ஆட்சி முறையை ஏற்றுக் கொண்டதன் ஈழ அரசியலின் எதிர்கால நலனில் இருந்து இந்த முடிவென்பது மிகச்சரியானதாக மாறுமென்பதை மட்டக்களப்பு மாவட்டத்தில் திருபெருந்துறை எனும் ஊரில் நிகழ்த்திய முதல் உரையில் தெரிவித்ததாக அப்பெண் குரல் உரைக்கக் காணொளி கடந்து கொண்டிருக்கிறது.
காட்டாற்று வெள்ளமாகக் காணொளி ஒடிக்கொண்டிருக்கிற பொழுது அடித்து வரும் வெள்ளத்தில் சிறு துரும்பு நாணலினால் தடுத்து நிறுத்தப்படுகிறதாக நாபாவிற்கு பின்னால் ஜனநாயக தமிழரசுக்கூட்டமைப்பு (DTAA) இன் பொதுச்செயலாளர் அகிலன் குமாரசாமியின் முகம் தெரிகிறது.
அங்கு தொடர்கிற குயிலினும் இனிமையான அந்த பெண் குரல் அகிலனின் சொற்களுக்கு உயிர் கொடுக்கிறது.
சுதுமலை என்பதற்கு இணையாக திருபெருந்துறை எனும் சொல் உருவேற்றப்படுவதாக என் மனம் சொல்லியது. ஆனால், அந்த அந்தப்பெண் குரல், “இல்லையில்லை.., அவையிரண்டும் ஈழ அரசியல் வரலாற்றில் மாகாண சபை எனும் பேறுபேற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது” என்கிறது.

ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு (DTAA) இன் பொதுச்செயலாளர் அகிலன் முத்துக்குமாரசாமி, //… உரிமையுடனும் தன்மானத் தமிழர்களாக வாழ வேண்டுமாயின் இதுவரை காலமும் தமிழ் மக்களை ஏமாற்றி வரும் போலித் தமிழ்த்தேசிய சாக்கடை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
…. தமிழர்களின் தந்தையெனப் போற்றப்படும் தந்தை செல்வா அவர்களின் அறவழிப்பாதையில் சென்று இழந்த எம்முடைய உரிமைகளை மீட்டிடவும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவும் ….. அனைத்து தமிழ்த்தேசியக்கட்சிகளும் ஒன்றிணைந்து….//
அகிலன் குமாரசாமிக்கு ஒரு உண்மை தெரிந்திருக்கிறது; அது தனித்து ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு (DTAA) என்பது நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியனை, வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக promote பண்ணினால் வேலைக்காகாது என்பதாகும். அதற்கேற்ப நீதியரசர் இளஞ்செழியனும் மண், வீரமெனப் பேசி வைக்கிறார்.
இத்தருணத்தில் சீலன் இராமமூர்த்தி இன்னொரு விசயத்தை நினைவுபடுத்துகிறார். அது நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலில் இலங்கை தமிழரசு கட்சி (ITAK) தான் போய்ப் பார்த்ததாம். ஆனால், அவர், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு (TNA) இல் உள்ள கட்சிகளும் சேர்ந்து வந்து பார்க்க வேண்டுமென்று கூறிவிட்டாராம்.
இங்கு அப்படி நடக்கிறதுக்கு வாய்ப்பில்லை சரி பிழைக்கு மேலே நீதியரசர் இளஞ்செழியனை, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) யோ, சுமத்திரனோ promote செய்தால் நாளைக்கு மற்ற தமிழ்த்தேசியவாதிகள் இணைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதுதான் எங்கட வழமையும்கூட.
இப்பொழுது Noeal Nadesan இன் முகநூல் பதிவொன்றுதான் ஞாபகம் வந்து போகிறது. அது என்ன சொல்கிறதை கீழே பார்க்கலாம்.
//ஈழம் கேட்டோம் – பிரபாகரன் வந்தது போல் 13 கேட்டு விக்கி என்ற பேய்
வந்தது.
மீண்டும் தேர்தல் பிள்ளையார் பிடிக்க குரங்கு

வராது என்று என்ன நிட்சயம்?
நீங்கள் வருவீர்களா? யாரோ ஒரு விக்கி தேவையா?
இப்படி இனவாதமில்லாத அரசு கழுவின கக்கூஸ் போல் மணக்காது இருக்குறது நல்லது நண்பரே.//
இதன் கள நிலையைப் பார்க்க வேண்டாமோ; அதையும் சொல்ல வேண்டாமோ…?
வீரகேசரி சமகாலம் Oct 03, 2025 நிகழ்வுக் காணொளியில் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளின் நேர்காணலுக்குப் பதிலளிக்கும் முகமாக இக்கருத்தினை நோயல் நடேசன் சொல்லியிருந்தார்.
நோயல் நடேசனின் நண்பனென்கிற கதாபாத்திர வர்ணனையும் அதில் நின்று சீற்றமும் கோபமும் நியாயமானதா என்பதில் எனக்கு எந்தக் கேள்வியும் கிடையாது. எனென்றால், முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனின் அரசியல் வருகையும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியும் அதன் ஆட்சிக்காலமும் தன்மானத் தமிழர்களுக்குத் தெரிந்தது.
மாகாண சபை என்கிற அதிகாரப் பகிர்வை சாத்தியப்படுத்தியதில் EPRLF இன் அரசியலையும் தியாகத்தையும் மறுத்து விட முடியாது. ஆனால், பின்னாளில் EPRLF இன் அரசியல் என்பது யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனை பிரபுகக்களின் தயவில் பயணிக்கத் தொடங்குகிறது. இதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
நீதியரசர் விக்கினேஸ்வரனின் வருகையை ஏற்றுக் கொள்வதும் அதனூடாக வடக்கு மாகாண சபையைச் செயலற்றதாக்கும் தமிழ்த்தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்குள் அடக்கமாக இருந்தும் விடுவதுமே EPRLF இன் அரசியல் மனிதர்களின் அடிப்படை சிந்தனை மனதை வெளிப்படுத்துகிறது.
அதற்கேற்பவே EPRLF இன் கடந்த கால அரசியல் இருப்பதை அவதானிக்கலாம். அதிலிருந்துதான் இங்கும் நோயல் நடேசனின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த விசயம் நோயல் நடேசனுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு (DTAA) இன் பொதுச்செயலாளர் அகிலன் குமாரசாமிக்கு தெரிந்திருக்கவில்லை. அதைவிட, முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளுக்கு நோயல் நடேசனின் குத்தல் நையாண்டி உறைத்திருக்குமா என்பது எனக்குத் தெரியாது.
இந்தத் தேர்தலில் நீதியரசர் விக்கினேஸ்வரன் போலவே புதிய முகமொன்று தேவைப்படுகிறது. அதற்கு நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பொருத்தமானவராக இருந்து விடுவாரென்பது யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையின் சாக்கடை அரசியல் கட்சியான ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு (DTAA) க்கு தெரிந்திருக்கிறது. ஆனால், தனித்தும் தங்களால் முடியாதது என்பதும் தெரிந்திருக்கிறது.
இந்தச் சாக்கடை அரசியலுக்குள் நாத்தமெடுக்கும் காரணிகளைக்கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அதுவே மரபெனப் பீத்திக் கொள்கிற மற்றவர்களும் தங்கள் தெரிவை ஆமோதிப்பார்களென நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாதென்பதைத்தான் யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையின் சாக்கடை அரசியல் தாய் வீடான இலங்கை தமிழரசு கட்சி (ITAK) க்கு அன்றைக்கு நீதியரசர் விக்கினேஸ்வரனை விட்டால் யாருமில்லையெனக் கொண்டு வரேக்கை தலையாட்டிக் கொண்டு அவரது அமைச்சரவையில் அமைச்சர்களான இக்கட்சி மனிதர்களின் மன நிலையைத் தெளிவாகச் சொல்கிறது.
மீண்டும் சீலன் இராமமூர்த்தியின் கதையாடலைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது.
அது அன்றைக்கு இலங்கை தமிழரசு கட்சி (ITAK) க்கு நீதியரசர் விக்கினேஸ்வரன் தெரிவாக இருக்கவில்லை. மாறாக, அவர், கம்பவாரதி ஜெயராஜோடு பொது மேடைக்கு பெரும் பரிச்சயமாக இருந்தார்.
அத்தோடு, 2015 டிசம்பரில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தாலும் இதன் அடிப்படை என்பது 2013 இல் வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னமே நீதியரசர் விக்கினேஸ்வரனைச் சுற்றி முகிழத் தொடங்கியிருந்தது. இந்தத் தாக்கமே இலங்கை தமிழரசு கட்சி (ITAK) யை இவர் நோக்கித் திரும்ப வைத்ததெனத் தன் கருத்தை சீலன் இராமமூர்த்தி முன்வைக்கிறார்.
இங்கு போலித்தமிழ்த்தேசியம் என்பது எதென்று சொல்லத் தெரியாத அகிலன் குமாரசாமி, தந்தை செல்வாவை துணைக்கழைத்து வருகிறார். ஆனால், பொது இணக்கத்தைக் கோருகிற அவர், சட்டத்தரணி M.A.சுமத்திரனுக்கும் சட்டத்தரணி சோ.தவராசாவுக்கும் இடையிலான தகராறைத் தீர்க்க வழியெதும் கண்டடைய மெனக்கிடுகிற மாதிரித் தெரியலை. அச்சூழலில் வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராகத் தமிழ்த்தேசியத்தின் பொதுவேட்பாளராக நீதியரசர் இளஞ்செழியனைச் சிக்கலைத் தாண்டிக் கொண்டு வந்து விடலாமென DTAA இன் பொதுச்செயலாளர் அகிலன் குமாரசாமி பகல் கனவு காண்கிறாரா?
அகிலன் குமாரசாமி சா.ஜே.செல்வநாயகத்தின் அரசியலை அறப்போராட்டமெனச் சொல்லிக் கொள்வதில் மஹாத்மா காந்தியின் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் படித்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது.
யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனைச் சாக்கடை அரசியல் சிற்பியான சா.ஜே.செ இன் துரோகி சித்தாந்தத்தில் அவருடைய கைப்பிள்ளை பிரபாகரன், மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவை, தமிழினத் துரோகியென, 1975 ஆம் ஆண்டு ஜூலை 27 இல் சுட்டுக் கொன்ற பின் அதிலிருந்து கிளை விட்டு தனித்து மேலெழுகிற ஆயுதப் போராட்ட அரசியயலின் பேறுபேறுகளைக் கையகப்படுத்தவே கூட்டணி நியாய தத்துவங்களைத் தாண்டி 1976 மே 14 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அவசர அவசரமாக சா.ஜே.செ நிறைவேற்றுகிறார். அத்தோடு தமிழர் விடுதலைக்கூட்டணி (TULF) யைத் தனதாக்கிக் கொள்கிறார். செளமீய மூர்த்தி தொண்டமானும் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் தமது கட்சிகளுக்குத் திரும்பி நடை விடுகிறார்கள்.
இதெல்லாம் அடுத்து 1977 இல் வந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலுக்காகவே என்பதையும் அகிலன் குமாரசாமி அறிவாரா?
தமிழ்த்தேசியத்தின் இச்சந்தர்ப்பவாத போக்கு அங்கிருந்து தொடங்கிறதென்பதாவது ஜனநாயக தமிழரசுக்கூட்டமைப்பு (DTAA) இன் பொதுச்செயலாளர் அகிலன் குமாரசாமிக்கு தெரிந்திருக்கிறதா?
இன்று வரை இச்சந்தர்ப்பவாத போக்கு தொடர்கிறது. அதைக் கை விடவும் தயாராக இல்லை. ஏனென்றால், பதவியின் மோகமும் காமமும் போலவே சுட்டெரித்து விடுமல்லவோ..?
சரி அதை விடுவோம் என்றாலும் பிரபாகரனால் தன் தலைமைக்குக் கீழ் படிந்து நடப்பார்களென நம்பிக்கையில் தொடங்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு (TNA) இன் பிங்கல் பிடுங்கல்களையாவது தெரிந்திருக்கிறாரா?
பிரபாகரன் உயிரோடு இருந்த காலத்திலேயே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு (TNA) இன் அச்சாணியாக இருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி (TULF) யைத் தக்க வைக்க முடியாமல் இலங்கை தமிழரசு கட்சி (ITAK) யைத் தூசி தட்டி மாற்றீடு செய்ததுகூடவா அவர், விஜய் சேதுபதியின் “நடுவில சில பக்கங்களைக் காணோம்” என்ற பேமஸ் சினிமா வசனம் மாதிரி மறந்துதான் போய்விட்டாரா?
இல்லை.., கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரசியலுக்கு நடந்த தமிழ்த்தேசியக்கட்சிகளின் களேபரங்களாவது ஞாபகத்தில் அவர் வைத்திருக்கிறாரா?
அதன் கிளைமாக்ஸ் காட்சியைக்கூட நினைத்துப் பார்க்க அவருக்கு இருக்கிற ஞாபக மறதி வியாதி இடம் கொடுக்குமா என்பது தெரியாது?
இவை அனைத்தையும் தாண்டிக் கொஞ்சம் கட்சிகளை நம்பி தம் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து கீழ் இருந்து மேல் நோக்கி தம்மாலும் சென்றுவிட முடியுமென்கிற நப்பாசையில் கொளுத்தும் வெய்யிலிலும் மழையிலும் புயலிலும் வறுமையிலும் எதிர்கால நம்பிக்கையோடு காத்திருக்கும் விழிம்பு நிலை மக்களின் பிரதிநிதிகளின் கரிசனையில் சில பார்வைகளைப் பேசலாமென நினைக்கிறேன்.
Chinnaih Rajeshkumar/இராகவனின் கருத்தொன்றப் பதிவு செய்வது சிறப்பாக இருக்குமென நம்புகிறேன். ஏனென்றால், தமிழ்த்தேசியவாத கட்சிகள் மட்டுமல்ல அனைத்து தமிழ் கட்சிகளின் தலைமைகளும் தம்முடைய கட்சிகளுடைய முன் பக்கக் கதவை இறுக மூடி வைத்துக் கொண்டு பின் கதவு வழியாகத் தமக்குத் தேவையானவர்களை காலத்திற்கு காலம் உள் வாங்கிக் கொள்ளுகிறார்கள் என்பதை யாழ் மையவாத மரபில் நாகரீகமாக இவர் முன்னிறுத்துவதை இதில் காணலாம்.
//…சட்டத்தரணியாக இருப்பவர் சமூக அக்கறை கொண்டவராக, அரசியல் ஞானம் கொண்டவராக அரசியலில் ஈடுபடுவது என்பது வேறு. சட்டத்தரணியாக அல்லது நீதிபதியாக இருப்பவர் என்ற தகுதி மட்டுமே அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான லைசென்ஸ் என்பது மிக தவறான பார்வை…//
இராகவனைக் கண்டவுடன் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. அது வெள்ளாள பிரபுக்கள் அதாவது கல்விச்சமூகம் என்பது இயக்கங்களின் மேல் தட்டுப் பொறுப்புகளிலும், மத்திய குழுக்களிலும், ஆலோசகர்களாகவும் எவ்வாறு, எந்த மன நிலையில் கொண்டு வரப்பட்டார்கள் என்பதைச் சிந்திக்க வைக்கிறது.
முன்னாள் நீதியரசர் ஒருவர்தான் மாகாண முதலமைச்சர் பதவிக்கு தேவையென்பதை வலியுறுத்துவதில் French Revolution பற்றியும் அகிலன் குமாரசாமி தெரிந்திருக்கவில்லை என்பது மிக மிக தெளிவாகுகிறது.
இந்த French Revolution இன் மகத்துவம்தான் சாதாரண கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பணிபுரிந்த Napoleon Bonaparte கூட ஆட்சியாளராக நிறுத்தியிருக்கிறது.
இதைக்கூட சொல்லிக் கொடுக்க முன்னாள் வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையிலான மந்திரி சபையில் அங்கம் வகித்த யாழ் வெள்ளாள பிரபுக்கள் முயலவில்லையோ என்கிற கேள்வி சாதாரணமாக எழத்தான் செய்யும்?
டக்ளஸ்சும் போலித்தமிழ்த்தேசியவாதிகளெனச் சொன்னார். அவர் யாரைப் பார்த்துச் சொன்னாரென்று எனக்கு இன்றுவரைக்கும் விளங்கவில்லை. ஏனென்றால், டக்ளஸ் எங்கு நிற்கிறாரென்பது எனக்கு மட்டுமல்ல யாருக்கும் தெரியவில்லை. ஆனால், டக்ளஸ் அதிகாரத்திற்குப் பின்னால் ஒடுகிறார் என்று மட்டும் தெரிந்தது; தெரிகிறது. அது எந்தச் சாக்கடையாக இருந்தாலும் பரவாயில்லை. தன்னால் கழுவிக் கழுவி ஊத்தியிருந்தாலும் பல்லிழித்துக் கொண்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்பார். இது அகிலன் குமாரசாமிக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. அதையே அவரும் தமிழ் அரசியல் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறார். இதனால், டக்ளஸின் கூட்டாளிகளையும் அப்படித்தான் பார்க்கிறார் போல் தெரிகிறது.
அகிலன் குமாரசாமியின் முன்னோர்கள் துரோகியெனச் சொல்கிற பொழுது அதைத் தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். துரோகிகளுக்கு நல்ல சாவும் வராதென்றார்கள். அதை நடைமுறையிலும் செய்து காட்டியிருந்தார்கள். அந்த வகையில் டக்ளஸையும் துரோகியென்றார்கள். அதற்கான காரணத்தையும் சொன்னார்கள். அதற்கான முயற்சிகளையும் செய்தார்கள். அது எனக்கும் விளங்கியிருந்தது.
அது என்னவென்றால், டக்ளஸ் சிங்கள இராணுவத்தோட இணைந்து இயங்கினார்; சிங்கள ஆட்சியாளர்களோடு நட்புறவு கொண்டிருந்தார்; சிங்கள ஆட்சியாளர்களின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். இவையெல்லாம் தமிழ்த்தேசியத்திற்கெதிரானதென்றார்கள்; அதனால், டக்ளஸை துரோகியென ஒதுக்கி வைத்தார்கள். அதற்கு டக்ளஸ் நேர்மையாக இருந்தாரென்கிற பாராட்டுகளும் தமிழ்த்தேசியவாத அகக் குத்துச்சண்டைக்குள் இருந்து இப்ப வெளி வருகிறதைக் காணலாம்.
இப்ப என்னுடைய கேள்வி என்னவென்றால் நீதித்துறையைப் போன்றுதானே பாதுகாப்புத்துறையும் சிங்கள ஆட்சியாளர்களின் அரசுத்துறைதானே…?
நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியனும் 05.02.1997 நீதிபதியாக நியமனம் பெற்று வவுனியாவில் தனது முதல் தொடக்கத்தை ஆரம்பித்து 05.02.2024 வரையான 27 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார்.
இலங்கையில் அமைகிற ஆட்சிகளைச் சிங்கள ஆட்சியெனச் சுட்டி நிற்கும் தமிழ்த்தேசியவாத அரசியல் பார்வையை வைத்துப் பார்க்கிற பொழுது நீதித்துறைக்கான சட்டங்களும் நீதி பரிபாலன அமைப்பு முறையும் சிங்களவர்களுக்கானதாகத்தான் இருக்கிறது. அதற்காக வேலை செய்பவர்களும் சிங்களவர்களுக்காகவே வேலை செய்கிறார்கள் எனப் பொருள் படுகிறது.
குறிப்பாகச் சொல்வதென்றால் டக்ளஸ் போன்றே முன்னாள் நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியனும் சிங்கள ஆட்சியாளருக்கு வேலை செய்திருக்கிறார்.
இப்ப தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது; அது என்னவென்றால் பணமென்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது எதார்த்தம்; உண்மை என்பதாகும்.
மாகாண சபைத் தேர்தல் என்று வருகிற பொழுது கிழக்கைப் பற்றி வடக்கில் இருந்து யாரும் அலட்டிக் கொள்வதில்லை. அதே நேரத்தில் கிழக்கிலும் வடக்கை மீறி எந்தவொரு துரும்பையும் நகர்த்த மாட்டார்கள். வடக்கின் கையசைவுக்காக காத்திருப்பார்கள்.
கடை வாய்க்கால் நீரில் விவசாயம் செய்வதென்பது எவ்வளவு கஷ்டமென்று எழுவைதீவு நோயல் நடேசனுக்கும் தெரிந்திருக்கும். ஆனால், கிட்லருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரொரு ஒவியக் கலைஞனாக இருந்திருக்கிறார் என்பதில் இருந்து இந்த முடிவுக்கு வருகிறேன்.
பிரிட்டிஷைப் பொறுத்தவரைக்கும் மேல் தட்டுப்பதவிகளுக்கு சாமானியன் வந்துவிட முடியாது. அது படைகளாக இருந்தால் சிப்பாய்களாகவும் அரசு என்று வருகிற பொழுது கீழ் நிலை பொறுப்புகளிலும்தான் இருக்க முடிகிறது. அந்த மேற்குலக மனநிலையை உள் இருப்பாகக் கொண்டிருக்கும் யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையின் வலதுசாரி தமிழ்த்தேசியவாத அரசியலுக்குள் Retirement Political Power என்பது பாசிசக் கூறென்பதைத்தான் கிட்லர் சொல்லிட்டுப் போயிருக்கிறார்.
நோயல் நடேசன் சொன்னதும் தெரிந்து போச்சுது; கிட்லரும் என்ன செய்து காட்டினாரென்பதும் தெரிந்து போச்சுது. மாகாண சபைத் தேர்தலொன்று மைய அரசு அறிவிக்குமாயின் துரோகி, போலித்தமிழ்த்தேசியம், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு (TNA), ஜனநாயக தமிழரசுக்கூட்டமை (DTAA), ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி (DTNA), புலிகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPA), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (TPNA), ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP), சமத்துவ கட்சி,
தமிழ்த் தேசியக் கட்சி (TNP), சனநாயகப் போராளிகள் கட்சி என அனுமார் வால் போல் வளரும் இவைகளுக்கான DNA Genetic Testing Report யைக் கேட்டுச் சரி பார்த்து விடவும். ஏனென்றால், நோயல் நடேசன் சொன்ன மாதிரி பேயொன்றைத் தேர்ந்தெடுத்த குற்றவாளியாகக் கை கட்டி நிற்க வேண்டிய நிலை வராதெல்லோ மக்கள்…?
வடக்கு மாகாண சபைக்கு யார் முதலமைச்சர் பதவிக்கு ஏற்றவரென்கிறதைவிட இப்போதைக்கு ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி (DTNA) இன் முக்கிய பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) இன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மீதான வெகுசன சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் எதிர்மறை கருத்துகளுக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஜனநாயக தமிழரசுக்கூட்டமைப்பு (DTAA) இன் பொதுச்செயலாளர் அகிலன் குமாரசாமிக்கு இருக்குதல்லோ மக்காள்…!
இது மாகாண சபை தேர்தலுக்கு மட்டுமல்ல ஈழ அரசியலின் எதிர்காலத்திற்கும் அவசியமானது.
– Nixson /Nov 04, 2025
