யாழ்மையவாத அரசியல்வாதியின் புறம்போக்குத்தனம்….! பிற்போக்குத்தனம்…!

‘நாதாதாரி’; இப்படித்தான் என்னால் இவரைச் சொல்ல முடிகிறது. ஏனென்றால், தன்னிடமிருந்த வளங்கள் அனைத்தையும் மனித வலுக்களையும் தன் குருட்டுப் புத்தியில் தானென்ற யாழ்மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி சிந்தனையின் ஆகங்காரம், தலைக்கணத்தில் நாசமாக்கிப்போட்டு நாதியற்ற தனிநபராக,  லோ…, லோவென்று அலையிறதைப் பார்க்கிற தருணத்தில் அதைவிட வேறொன்றும் என்னால் கண்டடைய முடியவில்லை.

இடதுசாரியென்றோ, EROSக்காரனென்றோ, EPRLF யை பத்மநாபாவோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, விழிம்புநிலை மக்களுக்காக, கைவிடப்பட்டு நாதியற்று நலிவடைந்த மக்களுக்காக, சாதீய வர்க்க ரீதியாக நசுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடங்கிய புரட்சியாளனெனச் சொல்ல எந்தவொரு அருகதையற்ற நபர்…!

போன வாரக்கடைசியில் நெடுந்தீவுக்கு உள்ளூராட்சி தேர்தல் பரப்புரைக்குச் சென்றிருந்த டக்ளஸ், தனக்காக, தன் விசுவாசியான மதன் மீதொரு குற்றச்சாட்டை நெடுந்தீவு மக்கள் மத்தியில் யாழ்மையவாத சமூகப் பொதுப்புத்திக்கு முன்வைத்திருக்கிறார்.

அரசியலில் சித்தாந்த ரீதியாக, கொள்கை ரீதியாக, கட்சி ரீதியாக கதையாட வக்குரோந்து நிலைக்குத் தள்ளப்பட்ட டக்ளஸ், தனக்காக தீவகத்தில் நம்பிக்கையாகச் செயல்படக்கூடிய நபராகக் கருதிய மதனையே மீண்டும் பலிகடாவாக்கத் துணியும் ஈனச்செயலென்பது அரசியல் தர்மமாக இருக்காது.

தான் நெடுந்தீவுக்கு வருவதற்கு முடிவெடுத்த பொழுது மதன் அதை மறுத்து கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தியதாகவும் அதையும் மீறி தான் வந்ததாகவும் டக்ளஸ் அந்தக் குற்றச்சாட்டைச் சொல்கிறார்.

87 களிலோ அல்லது அதற்கு முன் EPRLF இல் மதனைத் தெரிந்தவர்கள் யாரும் இந்த உப்பு சப்பற்ற டக்ளஸின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதை ஜீரணித்துக் கொள்ளத் திண்டாடுவார்கள்.

EPRLF இல் இராணுவ பயிற்சியாளராக இருந்த பொழுது வவுனியாவில் றேகனின் படுகொலைக்குப் பிறகு அப்பொறுப்பைப் பொறுப்பெடுக்கும் மதன், ஒமந்தையில் இராணுவத்திற்கெதிராக நடாத்திய கண்ணிவெடித் தாக்குதல் EPRLF இன் இராணுவக் கட்டுமானத்தில் ஒரு மைல் கல்லாகும்.

இப்படியொரு நபரான மதன் மீது இந்த அபாண்டமான டக்ளஸின் குற்றச்சாட்டு சுயநலமிக்கதொன்றாகும். இது கண்டிக்கப்பட வேண்டிய விடயமும்கூட. இதை டக்ளஸ் திரும்பப் பெற்றாக வேண்டும்.

நெடுந்தீவுக்கு EPDP வந்ததென்ற குழுவுக்குள் என்னுடைய கதாபாத்திரமும் பங்கும் யாவரும் அறிந்ததொன்று; அதே மாதிரி நான் பொறுப்பாளராக இருந்து அடிப்படை அரசியல் கட்டுமானமொன்றை நெடுந்தீவில் EPDP க்கும் செய்திருந்தவன் என்கிற ரீதியில் டக்ளஸின் இக்குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு உள்ளவனாக இருக்கிறேன்.

இதொரு இராணுவ வல்லமை மற்றும் செயல்பாடு பற்றிய கட்சி ரீதியான அகவயமான ஆலோசனை உரையாடலாகும். கட்சி கட்டுப்பாடுகள், விதிகள், நடைமுறை, புரிந்துணர்வு என்பனவற்றை உதாசீணப்படுத்திக் கொண்டு கட்சிக்குள் இராணுவ செயல்பாட்டுக்காக பேசப்பட்ட/உரையாடப்பட்ட/ஆலோசிக்கப்பட்ட விசயத்தை பொதுவெளியில் வைத்ததில் டக்ளஸின் இராணுவ கட்சி அரசியலில் கேள்வியெழுகிறது.

87 களில் சென்னை கே.கே.நகர் EPDP அலுவலகத்திற்கு வந்திருந்தவர்களும், அன்றைய காலத்தில் EPDP உறுப்பினராக இருந்தவர்களுக்கும் மதனின் நிலையைத் தெரிந்திருப்பார்கள்.

அப்படியான தன் சக ஆளுமையைக் கொச்சைப்படுத்தி தன் சுய இலாபத்திற்கு டக்ளஸ் இக்குற்றச்சாட்டைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. மேலும், டக்ளஸ் ‘தோழர்’ என்கிற சொல்லுக்கு அருகதையற்றவர் என்பதே என் நிலைப்பாடாகும்.

91 டிசம்பரில் நெடுந்தீவுக்கு வருவதற்கு முன்னாடி நயினாதீவில் தீவக O/L மாணவர்களுக்கு பரீட்சை நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்படுகிறது.

டக்ளஸோடு புரட்சிமணி மற்றும் நானும் சில தோழர்களோடு நயினாதீவுக்குச் சென்றிருந்தோம்.

அங்கு வந்திருந்த நெடுந்தீவு மாணவர்களோடு அரியம் மாஸ்டரோடும் கலந்துரையாடலொன்றை டக்ளஸ் செய்கிறார். அதில் டக்ளஸ், என்னைக் காட்டி “இவர்தான் நெடுந்தீவுக்குப் பொறுப்பாளர்” எனச் சொல்லி தான் வருவதைத் தெரியப்படுத்துகிறார்.

இங்கு டக்ளஸ் யாரையும் கலந்தாலோசித்து நெடுந்தீவுக்குப் போவதான முடிவை எடுக்கவில்லை. ஊர்காவற்துறைக்குத் திரும்பிய டக்ளஸ் இதை மதனுக்குச் சொல்கிறார். அப்பொழுதுதான் மதன் இந்த விசயத்துக்குள் வருகிறார். அப்பொழுதுதான் தன் கருத்தை முன்வைக்கிறார்.

அது இராணுவ ரீதியான அணுகலாகவே இருந்தது. அதில் தன் தோழர்களை அநியாயமாக இழக்க விரும்பாத தோழமையே அதற்குள் இருந்தது.

அந்த தோழமையை தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்க முயன்றதே டக்ளஸின் சமீபத்திய நெடுந்தீவு உரையாடலுக்குள் மதனின்   கதையாடலை வலிந்து டக்ளஸால் இழுத்து வரப்பட்டதாகும்.

இது டக்ளஸின் பாராளுமன்றப் பொதுத்தேர்தலின் தோல்வியின் வெப்புசாரமாகும். இதனூடாக டக்ளஸ் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவராகக் காணப்படுகிறார்.

டக்ளஸைப் பற்றி மதனுக்குத் தெரியுமென்பதல்ல எங்கள் எல்லோருக்கும் தெரியும்; டக்ளஸ் விடாக்கண்டன் பேர்வழி, தான் நினைத்தாலே அதைச் செய்ய வேண்டுமென்கிற நபர். இதற்காக யாரையும் காவு கொடுக்க தயங்காதவரென்பது உண்டு. இதில் வெற்றி தோல்வியென்கிற இரு பக்கங்களும் உண்டு. அதற்கு டக்ளஸின் அரசியலே சாட்சி. ஆனால், காவு டக்ளஸின் வரலாற்றில் நிறைய உண்டு.

அதில் டக்ளஸின் பிரேமின் கதையும் அடங்கும். அன்று EPDPக்குள் மதன், அசோக், கட்டை’ ராஜூ போன்றவர்கள் தடுத்தும் ” சொன்னால் கேட்கிறாரில்லை, அடம்பிடிக்கேக்கை நான் என்ன செய்ய..? பட்டுத்தெளியட்டும்” எனச் சொல்லியே பிரேமும் இப்ராகீமும் யாழ்ப்பாணம் போக டக்ளஸ் அனுமதிக்கிறார்.

EPRLF க்குள்ளும் EPDP க்குள்ளும் டக்ளஸால் கட்டுப்படுத்த முடியாத நபராக விளங்கும் பிரேம் எதிர் காலத்தில் கட்சிக்குள் தனக்கெதிராக மாறுவது மட்டுமல்லாது கட்சிக்குள் அமைதியின்மைக்கும் வழி வைப்பாரென்பதைப் புரிந்து கொண்ட டக்ளஸ் ‘பட்டுத்தெளியட்டும்’ என்கிற வழியைத் தேர்ந்தெடுக்கிறார்.

மதன் இராணுவ ரீதியான அறிவோடு இராணுவக் கட்டுமானம் மற்றும் நகர்வுகளை பார்க்கிற நபர். டக்ளஸ் அப்படியல்ல; தன்னுடைய காரியம் முக்கியமென நினைக்கிற நபர்.

இதற்கு முதல் காரைநகர் களபூமியில் இருந்து புலிகள் EPDP முகாமுக்கு ஷெல் அடித்ததில் கபில், விமல் இறக்க இராணுவமும் முன்னேறி சுருவில், புளியங்கூடலென அகலமாக்கினார்கள்.

பின்னர் புங்குடுதீவில் தங்கியிருந்து புலிகள் தற்கொலைத் தாக்குதலென நயினாதீவுக்கும், ஊர்காவற்துறை இராணுவ முகாமுக்கும் பெரும் குடைச்சலை, சிக்கலைக் கொடுக்க புங்குடுதீவைக் கைப்பற்றுகிற இராணுவம் EPDP யை புங்குடுதீவைப் பொறுப்பெடுக்க வற்புறுத்துகிறது.

இந்த வற்புறுத்தலைக் கொழும்பில் டக்ளஸ் தன்னிச்சையாக இராணுவத் தளபதியாக இருந்த மதனோடு ஆலோசிக்காமல் ஒத்துக் கொள்கிறார்.

இந்த ஒப்புக்கொள்ளலென்பது டக்ளஸின் பணத்தாசைக்குத் தீனி போடுவதாக மட்டும் குறிக்கோளைக் கொண்டதாக இருந்தது. இராணுவ ரீதியான ஆளணி பற்றிய எந்தவொரு சிந்தனையுமின்றியதாக இருந்ததை அப்பவும் சுட்டிக் காட்டுகிறார்.

புங்குடுதீவு வேலணையோடு நிலத்தொடர்பும் நயினாதீவு மற்றும் குறிகட்டுவானில் கடல் படையும் சாதகமான சூழலை வைத்து டக்ளஸின் அரசியலுக்கானதாக மனித வலுவுக்கு மீறி புங்குடுதீவை மதன் பொறுப்பெடுத்திருந்ததார்.

இச்சூழலில் நயீனாதீவுக்குப்போன டக்ளஸ் குஷியில் எல்லாத்தையும் செய்திட்டு வந்ததில் தனக்குள்ள மனித வலுப் பற்றாக்குறையும் நெடுந்தீவுக்கும் தனக்குமுள்ள நில அமைப்பு சிக்கலை மதன் விளங்கப்படுத்தியிருந்தார். ஆனால், டக்ளஸ் அதைக் காதில் வாங்காது தொடர்ந்து பத்து பேர் போதுமென்று சொல்லி அடம் பிடித்தது மட்டுமன்றி தான் அரியம் மாஸ்டருக்கு வாக்குக் கொடுத்து விட்டேன் தன்ரை மரியாதை என்னாகிறதென அழு மூச்சியாய் மதனை சம்மதிக்க வைத்ததுதான் உண்மை.

டக்ளஸ்சுக்கு இராணுவ ரீதியான அறிவு, பட்டறிவு எனக்குத் தெரிந்த மட்டில் கிடையாது. ‘த்ரில்’ ஒன்றுதான் டக்ளஸின் இராணுவம முதலீடாகும்.

நெடுந்தீவுக்கு வந்து நடுக்குறிச்சி வரைக்கும் பாதுகாப்போடு சுத்திப்போட்டு பெரும் த்ரில் காட்டிப் போட்டு நான் உட்பட பத்துப் பேரை விட்டுட்டுப்போன போனவர்கள் கதை நெடுந்தீவுக்கே தெரியும்.

அதன் பின் மூன்று நாளைக்குப் பிறகுதான் ஊர்காவற்துறையில் இருந்து வள்ளம் வந்தது.

இதில் மதன் முரண்பட்டிருந்தால் பின்னாடி இவர் சொல்லும் நங்கூரக்கதை வந்திருக்குமா?

நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றில்லை. 95 இல் புலிகள் தாக்குதல் செய்த பொழுதும் டக்ளஸ் வந்துதானே பார்த்தார்?

இந்த இராணுவச் சமநிலைக்காக ஊர்காவற்துறை கண்ணகியம்மன் கோயில் கரையில் புதிதாக இறங்குதுறையும் கடல் அணியொன்றையும் மதன் தயார்ப்படுத்தியிருந்தார். 

இந்த கண்ணகியம்மன் இறங்குதுறை தீவக மக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டிருக்கிறது. அப்படியான மண்ணின் மைந்தன் நெடுந்தீவு மக்களின் துயர் கண்டெழாமல் இருந்திருப்பாரா?

இதன் காரணமாகவே 95 இல் சந்திரன் தலைமையிலான நெடுந்தீவு EPDP முகாம் மீது புலிகள் தாக்குதல் நடாத்திய பொழுது சின்னாபின்னமான EPDP இன் செட் பொறுப்பாளர் நெப்போலியனின் தொடர்பு கிடைத்து மிகக்குறுகிய நேரத்தில் நெடுந்தீவு மீண்டும் EPDP இன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதில் ஈஸ்வரன் என்கிற தோழர் மட்டும் மரணமடைந்திருந்தார்.

கட்சி என்பது கூட்டுழைப்பு. இதை ஏற்றுக் கொள்ளாத டக்ளஸ் ஒரு கட்சிக்குத் தலைமையாக இருக்க முடியாது. அப்படி தலைமையென்று சொல்வதெல்லாம் கட்சி என்கிற வியாபார நிறுவனத்தில்தான் சாத்தியமாகும்.

ஆகவே, டக்ளஸிடம் எங்களுடைய உழைப்புக்கான பாராட்டுக்களையோ நற்சான்றிதழ் பத்திரத்தையோ எதிர்பார்க்க முடியாது. அது எனக்கு நன்றாகவே தெரியும். நெடுந்தீவு மக்களுக்கும் நல்லாவே தெரியும். அதனால்தான் என்னைப் பற்றி கடந்து போகிற பொழுது டக்ளஸ்க்கே ஞாபகப்படுத்தினீர்கள். நன்றென்பது அம்மண்ணின் உயிர்.

அரசியல் ஆதாயத்திற்காக வார்த்தைகளைத் தேடிக் கண்டடையும் டக்ளஸின் வக்குரோந்து அரசியலில் நாளைக்கு யாரென்பதே எனக்குள் எழும் கேள்வியாகும்.
                                   – Nixson / May 01, 2025