‘தேசம் திரை’ இல் முல்லை மதியின் உரையாடல் காணொளி, வைரலாக முகநூலில் விசிறப்பட்டுக் கொண்டிருக்கிறது. WhatsApp இலும் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பகிர்தலைச் செய்வதற்கு யார் அக்கறை எடுத்துக் கொண்டார்கள் என்பது மிக முக்கியமானதாக, நான் கருதுகிறேன். ஏனென்றால், அவர்களுக்காகவே, முல்லை மதியும் தன் உரையாடலைத் திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள்.
யாழ் மையவாத அதிகார மேலாதிக்க சிந்தனையின் மன நிலை கொண்டவர்களிடத்தில் இரு விடயங்களுக்காக ஒரு விசயத்தைச் செய்வதென்பது எதார்த்தனமான போக்காகும்.
இதை பிரதிபலிக்கும் முகமாக, ‘ மலையை மயிரால் கட்டியிழுக்கிறேன், வந்தால் மலை இல்லையென்றால் மயிர்தான்’ என்பதாகவும், ‘ஒரு கல்லில் இரு மாங்காய்’ என்பதாகவும் பேச்சு பயன்படுத்தலில் மொழிப்படுத்தப்படுகிறது.
இந்த மொழிப்படுத்தலெல்லாம் சுழிச்சோடி தன் காரியமாற்றும் மனப்போக்கின் விருத்தியை, யாழ் மையவாத சமூகத்திற்குள் வாழ்வியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து பேணுகிற மரபார்ந்த போக்கை வைத்திருக்கிறது.
வெகுசன ஊடகங்களான YouTube காணொளிகள், TIKTOK போன்றவைகள் Feedback யைப்பற்றிக் கவலைப்படாத பதிவுகளாகும்.
பொதுவாக, வெகுசன ஊடகங்கள் என்பது ‘நீ பேசாதே, நீ வாயே திறக்கூடாது, நான் சொல்றதை மட்டும் கேள்’ என்பவைகளின் களச்சூழலை மீள் கொண்டு வருதல், மீளுருவாக்கம் செய்பவைகளாகவே இருக்கிறது.
சினிமாக்களில் கணவனுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் வருகிற பொழுது கணவன், இந்த மொழிப்படுத்தல்கள் அனைத்தையும் பயன்படுத்துவார். நாமெல்லாம் சிரியோ சிரியென்று வீழ்ந்து, வீழ்ந்து சிரிப்போம். ஆனால், மறுக்கப்படுகிற ஜனநாயகம் பற்றி எந்தவொரு சிந்தனையும் எமக்கிருந்ததில்லை. அதைக் கடந்து அந்த நடிகரின் விசிறியாக, எம்மை மாற்றிக் கொண்டிருப்போம். தொடர்ந்து அவரது காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்போம்.
இதொரு மனித மனங்களுக்கான எதார்த்தம். அதையே அரசியலெனக் கற்பிதம் செய்வதென்பது சரியானதென்கிற நிறுவலை வெகுசன ஊடகங்களும் இவ்விதமான பதிவுகளுக்குக் கூடாக செய்கின்றன. அதை விரும்பி அரசியல் தரப்பினர்களும் ஆமோதிக்கிறார்கள். ஏனென்றால், இன்றைய அரசியல் களச்சூழலுக்குள், இது அரசியல் பரப்புரைக்கு சாதகமாக அமைகிறது. இது குழுநிலை திரட்சியை விருத்தி செய்கிறது.
இன்றைக்கு இன்டர்நெட்டே பெரும் மக்கள் கூடுகிற உலகளாவிய பெரும் சந்தைப்பகுதியாக மாறிவிட்டிருக்கிறது. இங்கு ஒவ்வொன்றும் சிரத்தையோடு ஒழுங்கமைக்கப்பட்டு தனித்துவமான கடைத்தொகுதிகளைக் கொண்டிருக்கிறது.
தரகுத்தொழிலில் இருந்து ஏஜண்ட்டுகளெனத்தெளிவாக வரையறுத்து விற்றல், வாங்குதல், Banking, School, ,சினிமா, விளையாட்டென மக்கள் கூட்டம் அலைமோதுகிற சந்தைப்பகுதியாக வளர்ந்து வருகிறது.
சந்தையை அடுத்து ரோடுகளின் இணைப்பில் உருவாகிவிட்டிருக்கும் முக்கில் மேடை போட்டு இரு ரோடுகளிலும் சனத்திரளைத் திரட்சியாக்கிக் கொண்ட அரசியல் கட்சிகளின் கூட்டங்களை 70 களின் தலைமுறைதான் கடைசியாக பார்த்திருக்கிறார்கள்.
இன்றைக்கு அந்த வாய்ப்பை Internet Market பகுதி அரசியல் கூட்டங்களை நடாத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதற்காகவும் தன்னை தகவமைத்துக் கொண்டு வருகிறது.
அப்படியான பெரிய மையப்படுத்தலில் இந்தச் சின்னச்சின்ன மையப்படுத்தல்கள் தம் அரசியல் கூட்டங்களை, கலந்துரையாடல்களை, வியாக்கியானங்களை, தர்க்கங்களை, விவாதங்களை நடாத்துவதற்கான களமும் தளமுமாக, தம்மை வெகுசன ஊடகங்களென குறித்து அடையாளப்படுத்திக் கொண்டும், Club House, Zoom, YouTube தளங்கள், இவ்வாறான நிகழ்வுக்களுக்கான தளமாக மாறியிருக்கின்றன.
கணணியைத் திறக்கிற பொழுதே மக்கள் நெரிசல் கொண்ட தி.நகர் மாம்பலம் புகையிர நிலைய ரோட்டுக்குள் நுழைகிற உணர்வுதான் தோன்றுகிறது
இந்த அடிப்படையில் ‘முல்லை’ மதி மட்டுமென்ன டக்ளஸ்சும் உண்மையைப் புரிந்து கொண்டு தம் பிரச்சாரங்களுக்கான முக்கிய தளமாக இந்த வெகுசனச் சந்தைப்பகுதியைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.
அதற்கான காரணங்களும் வெகுசன ஊடகங்களென்றாலும் இன்றுவரைக்கும் அக்காரணங்களையும் தரவுகளாகக் கூவி விக்கிற சூழலால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களாக இவர்கள் மாறிவிட்டிருப்பதால் பயங்கரவாத அமைப்பெனக் கைவிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் பயன்படுத்துவதற்கான சாத்தியப்படுகிற சூழலை நோக்கி நகர்த்துவதே முல்லை மதியின் புலிகள் எதிர்பரசியலுக்கான உரையாடல் அமைகிறது. புலிகள் அமைப்புக்கூட புலிகளைச் சார்ந்தவர்களாலே பயன்படுத்த முடியாத அமைப்பெனக் கைவிடப்பட்டிருந்த சூழலே இருந்தது. ஆனால், புலிகளை வைத்து அரசியல் செய்வோர் பல்கிப்பெருகிக் கொண்டிருப்பதென்பதே எதார்த்தமாக இருப்பது அவதானிக்கப்பட்டதே முல்லை மதியின் அரசியல் உரையாடலுக்கான தேவையைத் தீர்மானித்திருக்கிறது.
அரசியல் ஆத்தாக்கொடுமையென்பது டக்ளஸ்சும் கடைசியில் பிரபாகரனையும் புலிகள் மாவீரர்களையும் தன் கட்சி சக வேட்பாளர் சட்டத்தரணி செலஸ்டீனை வைத்துப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் முல்லை மதியின் உரையாடலுக்கான கனதியைக் கொடுத்திருக்கிறது.
Walmart, Metro போன்ற பெரும் வணிக அங்காடிகள்கூட Self Service அறிமுகத்தை, Customers, consumers தன் வணிக வளாகத்திற்குள் பொருட்களைத் தேர்வு செய்வதற்கு நேரிடையாக அனுமதிக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் successful business ஆக பரிணாமிக்கிறது. அது இன்னொரு புதிய வியாபாரக் களத்தையும் சிந்திக்க வைக்கிறது. ஆனால், அப்புதிய சூழலைப் புரிந்து கொள்வதென்பது அல்லது புரிய வைப்பதென்பது சும்மா நடந்து விடுவதுமில்லை. அதற்கொரு விலை கொடுக்க வேண்டுமென் காலத்தின் நியதி, விதி என்பதாகும்.
முல்லை மதியும், டக்ளஸ்சும் ஒரு விலை கொடுத்துதான் இச்சந்தைப் பகுதிக்குள் தம் வியாபாரத்தை நகர்த்தியிருக்கிறார்கள். தம் வாடிக்கையாளர்களையும், நுகர்வோரையும் சந்திப்பது மட்டுமல்லாமல் தம் அரசியல் எதிராளிகளையும் சந்திக்கச் சிறந்த இடமாகவும் தீர்மானிக்கிறார்கள். ஏனென்றால், மண்டபக் கூட்டங்களோ, தெருமுனைக்கூட்டங்களோ மக்களைக் கூட்டுவது பெரும் சிரமமாக மாறிவிட்டிருந்தாலும் பெரும் பொருளாதாரச் செலவையும் கொடுப்பதாக மாறிவிட்டிருக்கின்றன.
இதைத்தாண்டி டக்ளஸ், ஸ்ரீதர் தியேட்டருக்குள் ஒரு விலை கொடுத்து கூட்டத்தைக் கூட்டினாலும் அதைச் சந்தைப் படுத்த இன்டர்நெட் சந்தைக்குத்தான் போக வேண்டியிருந்தது.
பெரும் பொருளாதாரச் செலவும் ஆளணியும் தேவைப்படுகிற இந்த சந்தைக்கு விற்பனைக்காகச் செல்லும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டிய பெரும் நெருக்கடிக்குள் பெரும் ஆளணிப் பற்றாக்குறையும் பொருளாதார வரவு வழிச்சறுக்கல்களும் டக்ஸை, இந்த Internet Market யை நோக்கி தள்ளுகிறது.
இதே சூழ்நிலை நெருக்கடியென்பது 2009 இற்குப் பின்னான காலப்பகுதியென்பதன் கற்றுக் கொள்ளல் வெளிப்பாடென்பதே முல்லை மதியின் செல்லும் வழித்தெரிவாக இருக்கக்கூடிய மாற்றுக்கருத்து ஊடகப் பரப்பைப் பயன்படுத்திக் கொண்டு இந்த Internet சந்தைப் பகுதிக்குள் தன் சரக்கை விற்பனைக்குக் கொண்டு வருகிறார்.
கையேறு நிலைக்குத் தள்ளப்படுகிற பொழுது முல்லை மதிக்கு மட்டுமல்ல டக்ளஸ்க்கும் தமக்கெதிரான அரசியல் எதிர்நிலைக்குரல்களின் விளைவுகளுக்குக் கூடாக தம் மீட்சியைத் தேடுகிற தந்திரோபாய அனுகுமுறையென்பதே இங்கு இவர்களால் கைக் கொள்ளப்படுகிறது.
முல்லை மதியென்றால் புலிகள் பலமாக இருக்கிற பொழுது துணுக்காய் போன்ற வதைமுகாம் போன்ற சிறைச்சாலைகளாலும், கொன்றொழிப்பது மட்டுமென்றில்லாமல் ஊடக பொதுவெளித் தாக்குதல்களையும் செய்து கொண்டதாக இருக்கிறது.
டக்ளஸ்சும் அதே பாணிக்குள் அரசு அதிகார வளங்கள் மற்றும் பலத்தையும் வைத்துக் கொண்டு அடக்கிக் கொண்டதாக இருக்கிறது. ஆனால், இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக மேலெழும் திரட்சிகள் எல்லாம் ஒன்றிணைகிற புள்ளியில் இப்படியான கையேறு நிலைகள் தோன்றுகின்றன. ஆனால், முல்லை மதியின் உரையாடலும், டக்ளஸின் பவ்வியமான உடல்மொழியும் கால அளவில் முன்னே பின்னாக இருந்தாலும் யாரும் ஒருத்தர் ஒருத்தரை அடிப்படையில் வேறுபடுத்தவும் முயலாமலும் நடைமுறைச் செயல்பாட்டிலும் வேறுபடுத்த முயலாமலும் யாழ் மையவாத சிந்தனையைப் பிரதிநிதித்துவதில் ஒத்துப் போகிறார்கள்.
யாழ் மையவாத அரசியலில் சிறிது கால இடைவெளியில் மீண்டும் புதிய அவதாரம் எடுத்திருக்கும் அருண் சித்தார்த், இங்கு முக்கிய அவதானிப்புக்குள் வருகிறார். ஏனென்றால், புலிகள் எதிர்ப்பு அரசியலின் முக்கிய தலைவராகக் கருதப்பட்ட டக்ளஸ், ‘நமது தமிழ்த்தேசியம்’ என்பதில் தாய்வீடு திரும்பியிருக்கிறார். தன்னை தெற்கின் தரகு அரசியலாளர் என்பதில் இருந்து விடுவித்து கொள்ளவே இந்த தமிழ்த்தேசியம் முகமூடியை அணிந்து கொள்கிறார். இதனால், புலிகள் எதிர்ப்பு அரசியலின் தலைமைத்துவத்தை டக்ளஸ் இழந்து விடுகிறார்.
புலிகளின் துணுக்காய் வதை முகாமைப் பேசுபொருளாக்கிக் கொண்ட அருண் சித்தார்த், புலிகள் எதிர்ப்பு அரசியலின் தலைமைமைத்துவத்தை நோக்கி தன்னை நகர்த்தத் தொடங்குகிறார்.
டக்ளஸின் மக்களதிகாரப் பிரதிநிதித்துவ இழப்பும், அப்புள்ளியை டக்ளஸ் வந்தடைவதற்கான டக்ளஸின் புலிகள் எதிர்ப்பு அரசியலின் வழுவல் போக்கும், இன்றைய டக்ளஸின் நமது தமிழ்த்தேசிய அரசியலையும் கவனத்தில் எடுத்துக் கொண்ட புலிகள் எதிர்ப்பு அரசியலாளர்கள், புலிகளின் துணுக்காய் வதைமுகாம் வெளிபடுத்தலில் அருண் சித்தார்த் நடந்து கொண்ட முறையில் மனக்கசப்பும் முரண்பாடும் கொண்டிருந்தாலும் பொதுவெளியில் அருண் சித்தார்த்தை விமர்சிப்பதைத் தவிர்த்து விடுகிறார்கள். ஏனென்றால், புலிகள் எதிர்ப்பு அரசியலின் தலைமைத்துவத்திற்கு இன்றைக்கு இந்த புலி எதிர்ப்பு அரசியலின் புலம்பெயர் தரப்பிற்கு அருண் சித்தார்த்தை விட்டால் யாருமே இல்லையென்கிற கையேறு நிலையே காணப்படுகிறது.
இந்தப் புலம்பெயர் புலிகள் எதிர்ப்பு அரசியலுக்கு முகத்தில் அறைந்தது போலான ஒரு நிலைமை, இந்த வாரத்தில் நடந்த புஸ்பராணியின் நினைவு நாள் கருத்தமர்வில் ஏற்பட்டிருக்கிறது.
முறையே, 2009 இல் புலிகளும், 2024 இல் டக்ளஸ்சும் மெளனிக்கப்படுகிறார்கள். இது வெவ்வேறான நிகழ்வுகளாக இருந்தாலும் புலிகளோடு இணைக்கப்படுகிற அரசியலும் தோல்வியைத்தான் சந்திக்குமென்கிறதை காலம் வரலாற்றுப் பக்கங்களால் சுட்டி நிற்கிறது.
இன்று புதிய பரிணாமத்தைத் தொட்டிருக்கும் இலங்கை தமிழ் அரசியலில் செம்மணி மனிதப்புதைகுழியும், புலிகளின் துணுக்காய் வதைமுகாமும் எதைச் சொல்கிறதென்றால் கறுப்பு வெள்ளை கண்ணாடியைக் கழட்டி வைத்துவிட்டுச் சொந்தக்கண்ணால் பார்க்க வேண்டுமென்பதைச் சொல்வதாகவே நான் கருதுகிறேன்.
– Nixson / July 07, 2025
