ஈழ அரசியலில் ஒரு கட்டுடைப்பு சோலை…!

சோலையூரான்…., இவனைப் பத்திப் பேசுகிறதிற்கு என்ன இருக்கிறது என்போர் பல பேர் இருக்க…, இன்டைக்கு ஈழ அரசியலில் ஒரு கட்டுடைப்பு அவசியம் என்போர் கட்டாயம் அவரைப் பேச வேண்டுமெனச் சொல்வதைக் காணலாம்.

ஒரு நாள் EROS கிருபாவோட…, அதுதான் ஈழ அரசியலில் இடதுசாரிய ஆயுதப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களில் அது சேதிலமைடைந்து தமிழ்த்தேசியத்தோடு கரைந்து சாக்கடையாகத் தேங்கிய பொழுதும் தன் இடதுசாரிய சித்தாந்தத்தின் மீதான பற்றுதலிலும் நம்பிக்கையிலும் தொடர்ந்து அதில் பயணிப்பதற்காக முன்னிலை சோசலிசக் கட்சியோடு இணைத்துக் கொண்டு இலங்கை தேசிய அரசியல் மனிதனாக இருப்பவரோடு பேசுகிற பொழுது ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.

“ஒடுக்கப்படுகிற வர்க்கத்திற்குள் இருந்துதான் அதற்கான தலைமை உருக்கொள்ள வேண்டும்; உருவாக வேண்டும்.”

EROS கிருபா, இரத்தினசபாபதி தலைவராக இருந்த EROS இல் பத்மநாபா, டக்ளஸ், சுரேஷ் போன்றவர்களோட காலத்தில் அங்கு இருந்திருக்கிறார்; தொடர்ந்து இயங்கியிருக்கிறார். பாலகுமார் தலைமையிலான வடக்கு EROS புலிகளோடு சங்கமித்த பின் அம்முடிவை நிராகரித்த கிழக்கு EROS யை கலைத்துவிட்டு ஊருக்குள் இருப்பதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாததால் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு வேலைக்காகச் சென்றிருந்தார்.

ஒரு சில வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு திரும்பி வந்த பொழுது தமிழ் கட்சிகளின் போக்கைப் பார்த்து அதிருப்தி கொண்டார். அதே நேரம் டக்ளஸ் போன்றவர்களிடம் இருந்து வந்த அழைப்பை நிராகரித்தும் இருந்தார்.

இவர்களின் அரசியல் வக்குரோத்துத்தனத்தாலும் பிழைப்புவாத போக்காலும் சென்றடையக் கூடிய தூரம் பற்றித் தெளிவாகப் புரிந்திருந்தபடியால் தமிழ் வெகுசனப் பரப்பில் முதல் நபராக முதலில் இம்முடிவை எடுத்திருந்தார். இதன் தொடர்ச்சியே இன்றைய வடக்கு கிழக்கு அரசியல் தட்ப வெப்ப சூழலாக மாற்றமடைந்திருக்கிறது எனத் தயக்கமெதுவுமின்றிப் பதிவு செய்யலாம்.

வரலாற்றுப் பக்கங்களும் சாமானியனுக்குமுண்டு. அதை நாம் யாருமே பொருட்படுத்துவதில்லை என்பதே உண்மை.

அதுவும் யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனைச் சமூகத்தில் இருந்து மேலெழுகிற அரசியல் தலைமைகளெல்லாம் சித்தாந்தம் கொள்கைகளைத் தாண்டி ஒருமித்து அதிகார வர்க்கத்தின் பக்கங்களையே வரலாறெனச் சொல்லி நிற்கிறது.

ஓராயிரமென்ன…, இலட்சம் இலட்சங்களான ஈழ ஆயுதப் போராட்ட மனங்களும் கனத்து தொண்டையும் அடைத்து கண்ணீரும் திரள்கிற சீவன்களில் நானுமொருவனாக சாட்சியாக இருக்கிறேன்.

இராமலிங்கம் சந்திரசேகர்…, சொல்கிறதிற்கு ஏதுமற்று இருப்பதனால்தானோ என்னவோ இன்றைய யாழ்ப்பாணத்தின் King Maker ஆக அதிகாரமிக்கவராக இருக்கும் இவரைப் பற்றி யாருமே பேசுவதில்லையோ…?

இராமலிங்கம் சந்திரசேகரின் அரசியலையோ அல்லது அவரையோ நாமெல்லாம் வடக்கில் இருந்துதான் பார்க்கிறோம்.

இதுதான் உண்மையும் எதார்த்தமும் என்பதைத்தான் நாமெல்லாம் உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கில் இருந்து தாம் அழைத்து வந்த பிரதிநிதித்துவம் தோல்வியைச் சந்தித்து பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிற கட்டாயம் ஏற்படுகிற பொழுது அத்தரப்பினால் யாழ்ப்பாணத்தானின் மன நிலைக் கதையாடல்களெனச் சொல்லி வெளிப்படுத்தியவையும் சான்றாக இருக்கிறது.

வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் போகிற கீழ் நிலைப்படுத்தலென்கிற பிரதேசவாதத்திலும் யாழ் மையவாத வெள்ளாளிய மேலாதிக்கச் சிந்தனையானது மலையகம் சார்ந்த வடக்கத்தையான் என்பதைக் குறித்தொதுக்குவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு தமிழர்களைச் சொல்வதாக இருக்கிறது. இதற்கு மேலும் யாழ்ப்பாணத்தவர்களின் திருமணத்தால் வந்திருக்கிற உறவு நிலைகளை வைத்துப் பார்க்கிற பொழுது இது பற்றிய அவர்களின் மன நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

அந்த மன நிலையே எம்மிடம் எதார்த்தமாகி நிற்கிறது. ஏனென்றால், நாமெல்லாம் ஒன்றுமில்லாத ஏழைகளாகவும், நசுக்கப்படுகிறவர்களாகவும், ஒடுக்கப்படுபவர்களாக இருந்தாலும் பிரபுத்துவ மன நிலையைக் கொண்டவர்களாக இருக்கிறோம். அதனால், வெள்ளைக்காரர்களாக அடையாளப்படுத்துவதையே வாழ்வின் பிறவிப்பயனென நினைத்து விடுபவர்களாக இருந்து விடுகிறோம். அதைவிட சாதீய வர்க்க விடுதலையென்பது கல்விச்சமூகமாக மாறுவதும் பொருளாதார அடையாளங்களைக் கட்டமைப்பதுவும்தான் என்பதான பிரபுத்துவ கருதுகோளில் இருக்கிறோம். ஆனால், ஒடுக்குகிற, நசுக்குகிற காரணிகள், காரணங்களிலிருந்து கருத்தியல் ரீதியாக வெளியேறி வருவதைச் செய்வதில்லை.

இதன் பின்னணியில்தான் இராமலிங்கம் சந்திரசேகரின் யாழ்ப்பாணத்திற்கான பயணம் 2010 இல் நிகழ்கிறது. இதுவொன்றும் சர்வ சாதாரண விசயமல்ல. ஆனால், தமிழ்க்கசிகள் குறிப்பாக, யாழ்ப்பாணத்தை மையமாக வைத்தியங்கிய தமிழ்க்கட்சிகள் அனைத்தும் தமிழ்த்தேசியவாத மமதையில் கணக்கிலேயே எடுக்கவில்லை. ஒரு தோட்டக்காட்டான் இங்கு என்னத்தைச் சாதிக்கப்போறானென்கிற யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்க அடிப்படைவாதத்தில் கவனிக்காமலே விட்டு விடுகிறார்கள். இது ஜனாதிபதித் தேர்தலில் அநுராவுக்கு 27 ஆயிரம் வாக்குகளை பெற்றுக் கொடுக்கிறது.

“வாக்கு அரசியலுக்காக இராமலிங்கம் சந்திரசேகரை வெறுமனே கொண்டு வந்து யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) நிறுத்தவில்லை. அப்படி வாக்கு அரசியலை JVP நினைத்திருந்தால் மலையகத்தில் அவர் சமூகத்தில் நிறுத்தியிருக்கும். அதைவிட, யாழ்ப்பாணத்தின் சாதீய வர்க்க அரசியலை நன்குணர்ந்தே கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது” என்கிறார் சீலன் இராமமூர்த்தி.

இதைச் சரியெனச் சொல்லிக் கொள்கிற யாழ்ப்பாணத்தின் அதிகாரச் சூழலில் நிகழ்ந்த நிகழ்வொன்றைச் சொல்ல நான் விரும்புகிறேன்.

ரணில் விக்கிரமசிங்காவோ, சஜீத் பிரேமதாஸாவோ ஜனாதிபதியாகாமல் போன விரக்தியில் யாழ் மையவாத அதிகாரம் திகைத்து நிற்கிற தருணத்தில் தமிழ்த்தேசியத்திற்கும் தமிழ் இடதுசாரியத்திற்கும் வடக்கு ஆளுநர், பனை அபிவிருத்தி சபை தலைவர் என அதிகாரம் வழங்க தேசிய மக்கள் சக்தி (NPP) தீர்மானிக்கிறது. ஆனால், இவையிரண்டும் முழுமை பெற்றதாக முடியவில்லை. கால தாமதத்தில் பனை அபிவிருத்தி சபை தலைவர் கதிரை நிறைகிறது. அதிலும் சடுதியாக வெற்றிடமாக்கப்பட்டு புதியதொரு நபர் நியமிக்கப்படுகிறார்.

நிராகரிக்கப்பட்ட நபர், இச்சம்பவத்திற்கு பின்னாடி பொதுவெளியில் ஊடகக் காணொளியில் “அப்படியே நேரமிருக்கிற பொழுது வீட்டுப் பக்கம் வந்தீர்களானால் தேத்தண்ணி குடித்துக் கொண்டு பேசலாம்” என்று NPP யாழ்ப்பாண அதிகார நபரிடம் சொன்னதாக உண்மையை போட்டுடைத்திருந்தார். இதுதான் யாழ் மையவாத அதிகார மன நிலையைக் காட்டுவதாகும். தமிழ்த்தேசியவாதம் தொடர்ந்தும் அதிகாரத்தோடு விட்டுக்கொடுப்பு, அனுசரிப்பு, நெகிழ்வுத்தன்மை, ஏற்றுக்கொள்ளுதல் என இன்னோரன்ன விசயங்களைத் தனி நபர் சார்ந்து செய்து கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ் இடதுசாரியமென்போரும் தாம் எதில் பயணிக்கிறோமென்பதில் தமிழ்த்தேசியவாதத்தைக் கெட்டியாகப் பிடிக்க முற்படுகிறார்கள். இதில் தமிழ்த்தேசியமென்பது பரிணாமக் கூறென்பதை உணரத் தவறுகிறார்கள். இதனால் சிலர் இதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது இயல்பாகி விடுகிறது. இங்கு நாம் இன்னொரு விசயத்தையும் பார்க்கனும். அதாவது, இப்படியானதொரு பொறுப்புக்கான அழைப்பை வேறொரு யாழ் மையவாத நபரோ அல்லது சிங்கள தேசிய நபரோ விடுக்கிற பொழுது இதே நபர் இதைச் சொல்லியிருப்பாரா அல்லது ஓடோடிப் போய் பார்த்திருப்பாரா என்கிற கேள்வி எழுகிறதல்லவா?

இப்படித்தான் 2010 இலிருந்து அயலவர்களாக NPP இன் யாழ்ப்பாண அதிகார நபருக்கு இருந்து விடுகிற யாழ்ப்பாணத்தமிழ் இடதுசாரிகள், தொடர்ந்தும் உலக்கையில் மயிர் பிடுங்குகிற கதையாக நின்றால் குற்றம் உட்கார்ந்தால் குறையெனச் சொல்லிக் கொண்டிருந்ததையும் நாம் அவதானிப்புக்குள் எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது.

யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையானது தன்னை எந்நேரமும் எல்லா இடத்திலும் முதன்மைப்படுத்த வேண்டுமென வலியுறுத்துவதைக் காணலாம். இது மரபு வழியாக கலாசாரமாகவும் பண்பியலாகவும் எம்மோடு கூடப்பயணிக்கிறது.

யாழ்குடா நாட்டுக்குள் சாதீய ரீதியான அரசியல் அக சண்டையொன்று உண்டு. இது இன்றுவரைக்கும் NPP இன் யாழ்ப்பாண அரசியலைத் தனித்து இலங்கை மைய அரசியலில் இருந்து பார்க்க சூழலைக் கொண்டிருப்பதுவும் அக்கட்சியை வறுத்தெடுப்பதாகவும் இருக்கிறது.

இது யாரால் செய்யப்பட்டு வருகிறதென்பது மிக முக்கியமானதொன்று. முதலில் யாழ்ப்பாணத் தமிழ் இடதுசாரியத் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இதைப் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னாடி சாதீய ரீதியாக வெள்ளாளர் அல்லாதோரின் கல்விச்சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஜனாதிபதி அநுரா, தன் மூன்று எம்.பிக்களை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளின் எதிர்வு கூறலையும் எதிர்ப்புக்களையும் பொய்ப்பித்துக் கொண்டு இடைக்கால அரசையும் நிறுவிக் கொண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதியையும் அறிவிக்கிறார்.

யாழ் மையவாத அரசியலென்பதைவிட வடக்கு மாகாண தமிழ் அரசியலும் அப்பவும் தேசிய மக்கள் சக்தி (NPP) யைப் பொருட்ப்படுத்தவில்லை. தனித்தனியே தேர்தலைச் சந்திக்கத் தயாராகுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைக்கும் தமிழ் கட்சிகள் அனைத்தும் தேசிய மக்கள் சக்தி (NPP) க்கு பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தெரிவே பெரும் நெருக்கடியாக இருக்குமென நம்பினார்கள். அதுவே ஏதார்த்தமாகவும் இருந்தது.

இந்த வெற்றிடத்தை யார் நிறைக்கப் போகிறார்கள் என்பதைவிட யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) பெருபான்மை ஆசனங்களைப் பெறுமென்கிற நம்பிக்கை யாருக்கும் இருந்ததில்லை. அதுவும், யாழ்ப்பாணத்தமிழ் இடதுசாரிகளுக்கும் இருந்ததில்லை.

இதைவிட ஆளுந்தரப்போடு கூட்டு வைத்திருப்பதில் கில்லாடியான டக்ளஸ்கூட மைய அரசில் NPP பாதியைத் தாண்டாது; தான் குறை நிரப்பு செய்து மீண்டும் அமைச்சராகி வருவேனெனச் சொன்னார். அதுவும், தன் உள்ளக வட்டாரத்தில் அநுரா ஜனாதிபதி தான் பிரதமரெனச் சொன்னதாகக் கதையாடலும் இருந்தது.

டக்ளஸ் அதிகாரத்தில் இருந்த பொழுது அந்த அதிகாரத்தில் பங்கெடுத்தும் அவர்கூட இருந்தவரும் அந்த அதிகாரம் நிர்மூலமான பின் வெளியேறிய இடதுசாரியெனச் சொல்கிறவர்கூட தேசிய மக்கள் சக்தி (NPP) இல் தெரிவான எம்.பிக்களை வலதுசாரிகளெனச் சொல்லி இடதுசாரிகளான NPP க்கு இழுக்கென்பதாகச் சொல்லிக் கொண்டார். ஆனால், அவரும் கதையாடல் நடுவே தானும் NPP இவ்வளவுக்கு வெற்றி வாகை சூடுமென நினைத்திருக்கவில்லையெனச் சொன்னார். இதுதான் அவர்களது அரசியல் ஞானமாக இருந்திருக்கிறது என்பது வியப்பேதுமில்லை என்றாலும் அவர்களது அடிப்படைச் சிந்தனை எதென்பதிலே பதிலும் தங்கியிருக்கிறது.

வெள்ளளார்களால் தாம் ஒடுக்கப்படுவதாகவும், நசுக்கப்படுவதாகவும் சொல்கிற சாதீயச் சமூகத்தின் கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் இந்த NPP க்கான இயலாமையும் வெற்றிடமும் கட்டாயம் நிரப்படுமென்பதை அசட்டை செய்கிறார்கள். இது ஏன் என்பது யாருக்கும் விளங்காமல் இருந்து விடுகிறதோ என்கிற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் இவர்களிடம் காணப்படுகிற வாழ் மண்ணின் அடிப்படைவாதமாகத்தான் இருக்கிறது. இது யாழ்ப்பாணத் தமிழ் இடதுசாரிகளிடத்திலும் காணப்படுவதையும் இங்கு திரும்பவும் நினைவுபடுத்துகிறேன். இங்கு NPP இன்னொரு வாதமும் யாழ்ப்பாணக் கல்விச்சமூகத்திற்கு வாய்ப்பாக அமைகிறது. அது என்னவென்றால் படித்தவர்கள் பாராளுமன்றம் சென்றால் ஊழலற்ற தன்னலமற்ற வெகுசன அரசும் ஆட்சியும் அமையும் என்பதாகும். இதைத்தான் யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடிகளும் தமக்கிருந்த கல்விக்கான வசதிகளையும் வாய்ப்புகளையும் வைத்து தம்மைத்தாமே கல்விச்சமூக நிறுவிக் கொண்டு சட்டம் படித்தவர்கள்தான் சட்டத்தை உருவாக்கும் பாராளுமன்றத்திற்குள் நுழையத் தகுதியானவர்களென வரையறுத்தார்கள். அதை நடைமுறைப்படுத்துவதில் தம் கட்சிகளுக்குள் அப்புகாத்துமாருக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். அந்த அடிப்படைவாதத்தில் ஆயுத போராட்டங்களிலும் கல்விச்சமூக மேல் தட்டுகளிலும் இருந்தார்கள். இவர்களுக்குக் கிடைத்த மக்களதிகார வாய்ப்புகளிலும் அவர்கள் உட்கார வைக்கப்பட்டார்கள்.

இக்களச்சூழலுக்குள் தன் உரையாடலுக்குக் கூடாக பெரும் வெடிப்பொன்றை இந்த மேலாதிக்க அரசியலுக்குள் சோலையூரான் செய்கிறார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத் தமிழ் இடதுசாரியத்துக்குள் இருந்து NPP இன் ஜனாதிபதி வேட்பாளர் AKD இன் மேடையில் தோழர் சுகு சிறிதரன் திருநாவுக்கரசு, தன் தார்மீகக் கடமையென்று தன் கருத்துகளை முன்வைக்க உட்கார்ந்திருக்க்கிறார். இது ஒரு இரவில் நடந்துவிடவில்லை.

அரகலிய தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ஓர் இடதுசாரிய சூழலுக்குள் இலங்கை மைய அரசின் அதிகாரம் மாறுமெனத் தீர்க்கமாக நம்பியிருந்தவர்களில் முதன்மையானவர் சோலையூரான்தான். அதனிலும் தெற்கில் இப்படி மாறுகிற சந்தர்ப்பத்தில் வடக்கு கிழக்கின் தார்மீக வரலாற்றுக் கடமையெதுவெனச் சிந்திக்கத் தொடங்கியவர்களுக்குள் இவரும் மிக முக்கியமானவராக இருக்கிறார்.

ஆத்மார்த்தமாக இம்மாற்றத்தை ஆராதிக்கிற மனிதர்களுள் ஒருவரான சோலையூரானின் அரசியல் வெறுமனே மென்மையாக இருந்ததில்லை; அது கரடு முரடாக இருந்து விடுகிறது.

தமிழரசுக்கட்சிக்குரிய குடும்பமாக இருந்து விடுகிற சூழலிலும் இடதுசாரியத்தின் மீதான பற்றுதலும் தேடலும் ஈடுபாடும் சமூக பிரதேச அரசியல் சூழலினால் அவர் மீது வலிந்து தினிக்கப்படுகிறது. தன்னை EPRLF க்கு ஒப்புக் கொடுக்கிறார். இது அவரைத் தொடர்ந்தும் EPRLF இல் ஏற்ற இறக்கக் காலங்களிலும் பயணிக்க வைக்கிறது. இதில் யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி சிந்தனைக்குள் பயணிக்கத் தொடங்கும் EPRLF இன் கூறுகளின் அரசியலில் அதற்கு எதிரான எதிர்நிலை விமர்சனப் போக்கைக் கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார். அதில் அரகலய தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தின் போக்கின் அவதானிப்புகள் அவருக்குள் தேசிய அளவிலானதொரு அரசியலை நோக்கித் திருப்பும் சிந்தனையைத் தோன்றுவிக்கிறது. இச்சூழலில் தன் சிந்தனைக்கான ஊடு சக்தியாக ‘பத்மநாபா அறிவாற்றுக்கழகம்’ என்பதைக் கட்டமைக்கிறார். இதற்குள் பல இளைய தலைமுறையும் அதற்குள் கல்விப்புலமும் கலந்து திரட்சி கொண்டிருக்கிறது.

கிழக்குவாதமெனும் புதியதொரு அரசியல் ஈழத்தமிழ் சமூக தேசிய அரசியலுக்குள் முகிழ்ந்திருந்தாலும் கட்சி அமைப்புச் சூழலிலும் ஏக போகத் தலைமைத்துவமென யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனையை பிரதியீட்டுக்குள் தன்னைத் தொலைக்கிற வலதுசாரிய சூழலிலும் இடதுசாரியச் சூழலைப் பற்றிச் சிந்திக்கிறதில் கட்சி அமைப்புக்குள் கிழக்கு வடக்கு இணைவையும் தனித்தனியாக கிழக்கும் வடக்கும் மாகாண அரசியல் தலைமைத்துவத்தையும் செயல்பாட்டையும் கொண்டு இயங்குவதும் மைய அரசியலை இரண்டும் இணைந்தும் அதுவும் மாகாணத்தின் சீரான நிர்வாக ஆளுமைக்குமாகவும் political support தளத்தில் புதிய அரசியலைச் சிந்திக்கிற மனச்சூழலுக்குள்ளும் சோலையின் செயல்பாடு அகலமானது. இதன் அடிப்படையில் சோலையின் யாழ்ப்பாணத்திற்கான பயணம் அமைந்தது.

“இந்த 75 வருட காலமும் யாழ் மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு தலைமையென்பது சாதீய வர்க்க கல்வி மேட்டுக்குடிச்சமூகத்தவர்களே இருந்து ஆளுமை செலுத்தியவர்களாகவும் மற்றவர்கள் கை கட்டி ‘SIR’ ‘ஐயா- போடுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், NPP கட்சியும் அரசும் மலையகத்தைச் சேர்ந்த இராமலிங்கம் சந்திரசேகரனை யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவராக வழமை மரபை மீறி நியமித்திருக்கிறார்கள். இது யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதீய பிரதேச தரப்படுத்தலை தெரிந்து கொண்டு அதன் மீதான சம்மாட்டி கொண்டு அடிப்பதான கட்டுடைப்பே ஆகும்.

இன்றைக்கு அப்புக்காத்துமாரே யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் Sir போட்டு அழைக்கிறதைப் பார்க்க முடிகிறது. இதுதான் இன்றைக்கல்ல நான் எதிர்பார்த்த அரசியல் மாற்றமாகும்” எனச் சீலன் இராமமூர்த்தி உணர்ச்சி வயப்பட்டுச் சொல்வதைப் பல முறை பார்த்திருக்கிறேன்.

இனவாதிகளாக இன்றும் தம்மை அடையாளப்படுத்தும் அரசியலை மேற்கொள்ளும் ஈழத்தமிழ் கட்சித் தலைமைகள் அனைத்தும் இனவாதமற்ற அரசியலையும் அரசையும் கொண்டிருக்கும் NPP இன் ஆட்சியைப் பயனுறு வகையில் பயன்படுத்தத் தயாரில்லாமல் தம் இருப்பு நலனுக்காக NPP யை எதிர்நிலையில் வைத்து நல்லதொரு வாய்ப்பைக் கெடுத்துக் கொள்வதாகத் தொடர்ந்தும் சோலையூரான் கவலையை வெளிப்படுத்துவதைக் காணலாம். அவரும் அச்சந்தர்ப்பத்திற்கான வாய்ப்பைப் பத்மநாபா அறிவாற்றுக் கழகம் தவற விட்டுடக்கூடாதென்கின்றதில் கவனமாக இருக்கிறார்.

இச்சூழலில் யாழ்ப்பாணத்துக்கு தோழர் திவானின் சகோதரின் இறப்பு நிகழ்வுக்குச் சென்றிருந்த சோலை, தோழர் சுகு சிறிதரன் திருநாவுக்கரசை தோழமை நிமித்தம் சந்திக்கிறார். அவரது ஆலோசனை அடிப்படையில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரைச் சந்திக்கிறார். அமைச்சரோடு உரையாடுகிற பொழுது தான் NPP க்குள் வெகுவாக அறியப்பட்ட நபரென்கிற உணர்வுக்குள் நிறுத்தப்படுகிறதை மனப்பூர்வமாக உணர்கிறார். அந்நிலையில் தன் அரசியல் பார்வையையும் நிலைப்பாட்டையும் தெளிவாக முன்வைக்கிறார். அங்கு வந்திருந்த NPP இன் வடக்கு மாகாண அமைப்பாளரோடும் உரையாடக்கூடிய வாய்ப்பு கிடைத்ததாக சோலை கூறுகிறார்.

ஈழத்தமிழ் வெகுசன பொதுப்புத்தியில் ஏற்பட்டு வருகிற மன மாற்றமென்பதில் சோலையின் முயற்சியும் தேடலும் உழைப்பும் கடலில் வீழ்கிற மழைத்துளியாக இருப்பது வரலாற்றுப் பக்கத்தில் பதிவாகிறது. இதில் நாமும் சோலைக்கான வாழ்த்துகளைத் தெரிவிப்போமாக..!
– Nixson / Nov 12, 2025

Leave a Reply